உணர்விழக்கும் மொழியாடல்கள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  2 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

நாகரிகத்தின் வளர்ச்சி என்பது ஒரு சமூகத்தின் பரிணாம வளர்ச்சியின் அளவு கோளாகவே இருந்து வருகிறது. கருவியை மனிதன் கண்டுபிடித்து அதன் வாயிலாகக் கண்டு கொண்ட விசித்திரங்களை பகிர்ந்து கொள்ள, ஆவணப்படுத்த இன்னொரு கருவி தேவையென உணர்ந்து அதைக் கண்டுபிடிக்கத் தொடங்கினான்.

அவனின் கண்டுபிடிப்பின் வருவிளைவுதான் மொழி. கருவிக் கையாட்சியும் மொழியின் பயன்பாடும் தான் ஒரு சமூகத்தின் நாகரிக வளர்ச்சியின் ஆணிவேராகத் திளைத்தது.

இந்த மொழியின் தயவால் இலக்கியம் தோன்றியது, இதிகாசம் பதிவாகியது. இன்னும் பல சாத்தியங்கள் உருவாக்கம் பெற்றன. ஆயிரக்கணக்கான மொழிகள் நவீன உலகில் வழக்கத்தில் காணப்படுகின்றன.

அதேவேளை, பலமொழிகள் பாவனையிலிருந்து அழிந்தும் போய்க் கொண்டிருக்கின்றன. மொழிகள் வெறுமனே எண்ணங்களை பரிமாறிக் கொள்வதற்கான ஊடகங்களாக மட்டுமல்லாது, அம்மொழி சார்ந்த கலாச்சார, சமூக நிலைகளை வெளிப்படுத்தும் அங்கங்களாகவும் இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் பழங்குடிமக்களில், கூகு திமித்ர் என்ற மொழியை பாவிப்பவர்களின் மொழியில் இடது, வலது, முன்னால், பின்னால் என்ற சொற்கள் இல்லை. அவர்கள் இந்த நிலைகளைக் குறிப்பதற்காக திசைகாட்டியின் திசைகளைக் குறிப்பிடுவர்.

“நான், நூலகத்திற்கு வலது புறமாக நிற்கிறேன்” என்பதை, “நான், நூலகத்திற்கு தென்கிழக்காக நிற்கிறேன்” என்று அந்த பழங்குடி மக்கள் திட்டவட்டமாக திசைகளைக் குறிப்பிடுவர்.

ஒரு மொழியில் காணப்படும் பல சொற்களில் தோற்றத்தின் பின்னணியில் ஒவ்வொரு வரலாறு இருக்கும். கர்வம் இருக்கும். வீரம் இருக்கும். கலாச்சாரம் இருக்கும். சமூக அடையாளம் இருக்கும். விவேகம் இருக்கும்.

தனது சூழல் சார்ந்த உணர்வின் பதிவாகத்தான் மொழியை மனிதன் உபயோகப்படுத்தி வந்திருக்கிறான். பல சமூகங்களில் காணப்படும் உணர்வுகளுக்கான அந்த மொழிச் சொற்களுக்கு, பொருத்தமான ஒரு சொல் பல மொழிகளில் கிடைப்பதில்லை. இது அந்தச் சமூகச்சூழலின் உணர்வுச் செல்வத்தைக் காட்டுகின்ற நிலை.

ஒரு சில மொழிகளில் ஒரு சொல் சொல்கின்ற விடயத்தை, பல சொற்கள் கொண்டு மட்டுந்தான் இன்னொரு மொழியில் விளக்க முடியும். மொழியோடு ஒரு சமூகத்தின் அடையாளமே நகர்த்தப்படுகிறது. பிணைந்துவிடுகிறது.

Kyoikumama என்ற ஜப்பானிய சொல் சொல்கின்ற விடயத்தை ஒரு சொல்லில் மொழிமாற்றம் செய்ய முடியாது. “தனது பிள்ளையை, கல்வியில் அதிகம் சாதனை படைக்க வேண்டுமென்று தொடர்ச்சியாக நச்சரித்துக் கொண்டிருக்கும் தாய்” என்பதுதான் அதன் பொருள்.

இன்றைய சூழலில் மொழியின் பரிமாற்றம் எழுத்து வடிவம், ஒலி வடிவம் என பல வகைகளில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஊடகங்களின் வழியாக மொழியின் அடையாளம் மிக உன்னதமாக வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மொழியும் அதன் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான தமது ஆயத்தங்களையும் ஆர்வங்களையும் இணையம், இயல்பு வாழ்வு என்பவற்றிலே விசாலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நிலை எமது மொழி தமிழிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இணையம், அன்றாட வாழ்க்கை என்பவற்றில் இதற்கான ஆர்வங்கள் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பது சுவையான நிகழ்வே.

ஆனாலும், இந்த ஆர்வங்களின் வெளிப்பாட்டின் உள்ளடக்கத்தில் அதிக மொழியாடலுக்கான ஈடுபாடு தெரியாமலேயே தவிர்க்கப்படுகிறது என்பது போல் தோன்றுகிறது. “மொக்கை பெற்ற பெருவாழ்வு” (பாடசாலையில், “கள் பெற்ற பெருவாழ்வு” என்று பன்மையைக் குறிக்க வரும் கள் பற்றிய கட்டுரை படித்ததுண்டு) என்று பெரியதொரு கட்டுரை வரையுமளவில் “மொக்கை” என்ற சொல் அத்தனை ஊடகங்களையும் ஆட்கொண்டுவிட்டது.

உண்மையில் இந்தச் சொல்லைச் சொல்வதனால், சொல்பவர் எதைச் சொல்ல வருகிறார் என்ற கேள்வி எப்போதுமே எனக்குள் தோன்றுவதுண்டு. அதற்கு விளக்கம் கேட்டால், அதற்கான விடையும், “ஏன்ப்பா, மொக்கையா கேள்வி கேட்கிற?” என்றவாறு முடிவது கவலை.

நமது மொழியில் ஒரு விடயத்தை அப்படியே சுட்டிக் காட்ட சொற்கள் இல்லையா? ஒரு விடயத்தை பாராட்டுவதற்குக்கூட “மொக்கை போடம செய்தீங்க!” என்றவகையில் மொழியாடல் வரையறுக்கப்பட்டுள்ளது.

இங்கு சொற்களின் வறுமைக்கு என்ன காரணமென்றால், எதுவுமே அல்ல — நாம் மற்றும் நாம் வாழும் சூழல். இந்தச் சூழலில் அதிக விழுக்காடுகளை தொலைக்காட்சி, சினிமா, இணையம் என்பன நிரப்பிவிடுகின்றன.

ஒரு நிறைவான சம்பாஷணை ஒன்றை வானொலியில் கேட்க வேண்டிய ஆர்வத்தின் நிலை, ஈற்றில் “மொக்கை, மொக்கை” எனக் கேட்டுக் கொள்கின்ற மொழியின் வறுமையை உணர்வதாய் முடிந்து போய்விடுகிறது.

சங்ககால இலக்கியத் தமிழ் வேண்டாம். நவீன காலத்தில் உணர்வுகளைப் பதியச் செய்யும் ஊடகமாக மொழி இருக்கின்ற நிலையில், மொழி என்பது வெறும் “மொக்கை” என்பதாகவே மட்டுப்படுத்தப்பட்டு விட்டதா? என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.

உணர்வுகளை செழிப்பாகச் சொல்லிவிட தமிழில் பல சொற்கள் இருக்கின்றன. அவை அத்தனையும் இயல்பான சொற்கள், இலகுத் தமிழ்ச் சொற்கள். “மொக்கை” பெற்ற பெருவாழ்வு — அவற்றை மறந்து போய்விடச் செய்திருக்கலாம். ஆனால், அதுவல்ல ஒரு மொழியின் சிறப்பு.

நாம் சொல்கின்ற கருத்துக்கள், பதிவுகள் இணையமெங்கும் ஏதோவொரு வகையில் ஆவணமாகிவிடுகிறது. எதிர்காலத்தில் மொழியின் வளம் பற்றி நாளைய சந்ததியினர் இணையத்தில் தேடுகின்ற போது, வெறும் “மொக்கை” என்ற சொல்லை மட்டும் எல்லா உணர்வுகளையும் வெளிக்கொணர பாவிக்கப்பட்டதா? என்ற சந்தேகத்திற்கான உறுதிப்பாடாக மாற்றிவிடுவதா என்பதை நீங்கள் கட்டாயம் தீர்மானிக்க வேண்டும்.

“அற்புதமாயிருக்கிறது” என்பதை “மொக்கையாயில்லை” என்று சொல்வதை எப்படி ஜீரணிக்க முடியும்?

“இணையத்தில் பதியும் உங்கள் ஒவ்வொரு எழுத்தும் ஒலியும் ஒளியும் வருங்காலத்தின் வரலாறுகள். வரலாறு படைப்பதற்கான வாய்ப்பு உங்களிடம் இருக்கின்ற இந்த நிலையில் அதை விவேகமாய் பாவிக்க வேண்டியது, உங்களின் கடமை,” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

  • உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.