தேடக்கூடாதது!

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  51 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

அவனுக்கு வயது, எத்தனை என்று வேண்டாம். ஆனால், வண்ணத்துப்பூச்சியைப் பிடித்துவிட வேண்டுமென்ற ஆர்வமும் ஆசையும் நெஞ்செல்லாம் நிறைந்திருந்தது.

போகும் இடமெல்லாம், வண்ணத்துப்பூச்சிகளையே அவன் துரத்திக் கொண்டிருந்தான்.

அவனால், செய்யப்படுகின்ற காரியங்கள் எப்போதும், வண்ணத்துப்பூச்சியை துரத்திக் கொண்டு அதைப்பிடிக்காமல் போய்விடுகின்ற தோல்வியிலேயே முடிந்து போயின.

சிலவேளைகளில், வண்ணத்துப்பூச்சியை பிடிப்பான். அடுத்த கணம் அது அப்படியே அது தப்பித்துப் பறந்து போய்விடும்.

வண்ணத்துப்பூச்சியைத் தேடிக் களைத்துப் போனவன், அதனைத் துரத்துவதை இனி நிறுத்திவிட வேண்டுமென முடிவெடுத்து, தனது ஏனைய காரியங்களில் கண்ணும் கருத்துமாய் கருமமாற்றத் தொடங்கினான்.

வண்ணத்துப்பூச்சியை துரத்திப் பிடித்துக் கொள்ள வேண்டுமென அவனுக்கிருந்த எண்ணத்தை அவன் தொலைத்த நாளிலிருந்து, அவன் ஆர்வமாய் அவனது ஏனைய காரியங்கள் செய்யும் போது, தனது தோளில் வண்ணத்துப்பூச்சி வந்து அமர்ந்து கொள்வதைக் கண்டான்.

வண்ணத்துப்பூச்சியை துரத்துவதை நிறுத்தி, வேறு வேளைகளில் திளைத்திருந்த அவனை, வண்ணத்துப்பூச்சிக்கு பிடித்துப்போனது ஆச்சரியமாகத் தான் அவனுக்கு இருந்திருக்க வேண்டும்.

மகிழ்ச்சிதான் இந்த வண்ணத்துப்பூச்சி. மகிழ்ச்சியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென நீங்கள் அதனைத் தேடித் தேடித் துரத்திக் கொண்டிருந்தால், அது உங்களைக் கிட்டிவிடுவதை விட எட்டிக் கொள்ளாத இடத்தை நோக்கி ஏகிவிடுவது நடப்பதை தவிர்க்க முடியாது.

நீங்கள் உங்கள் கருமங்களை விருப்பிச் செய்து, அதில் திளைத்திருந்தால், உங்கள் பக்கம் மகிழ்ச்சி தன்பாட்டிலேயே கவரப்பட்டு, தோள் மீது தங்கிவிட தோழமையோடு வந்து சேரும்.

அண்மையில் வாசித்த ஒரு ஜென் கதைதான் இது. இதனை இப்படி பதிவு செய்யலாம் என்ற ஏற்பாட்டில் தான் இந்தப் பதிவு.

“நீங்கள் வண்ணத்துப்பூச்சியை தேடிப் பிடித்துவிட, அதனை இன்னும் துரத்துகிறீர்களா?” — கோபாலு கேட்கச் சொன்னான்.

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

நீலம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 42 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

வானத்தைக் காட்டி மட்டுந்தான் நீ, நீல நிறம் பற்றிக் கதைக்கிறாய். ஆகாயம் தொலைக்கின்ற நிறமும் நீலம் தான். பரந்து விரிந்து வானம் தாண்டி நீலத்தைச் சொல்லும் வேறு நிலைகள் இல்லையா?

நள்ளிரவின் நிழலுக்கும் நீலம் தான் நிறம்.

ராச்சாப்பாடு சமைக்கும் போது, அடுக்களையில் எரியும் அடுப்பின் மையத்தை மையல் கொண்டுள்ளதும் நீலம் தான்.

எல்லோரும் நீலம் என்றால் எதைச் சொல்லிக் காட்டுகிறாரோ, அவை மட்டுந்தான் உனக்கும் நீலமா?

நீ காண்கின்ற நீல வர்ணத்தின் கலவையை இந்தப் பூமியில் அப்படியே கண்டுணர்ந்தவர் யாராய் இருக்கலாம்? நீ மட்டுந்தான்.

பவளங்களுக்கு நீலம் பொருந்திப்போகின்ற நிறம் — கண்களுக்குள் கதிராளி எட்டிப் பார்க்கும் நிறம். மாணிக்கங்களில் மனதைக் கொள்ளையடிக்கும் வண்ணம் – அது நீலம்.

நீருக்கும் நீல நிறம் தான் என்று அவர்களோடு சேர்ந்து நீயுந்தான் சொல்கிறாய். நீர் நீலம் தான் என்பதை நிஜமாகவே நீ அறிவாயா?

ஒரு மாதத்தில் இரண்டு தடவை பௌர்ணமி வந்தால், “நீலநிலா” என்றுதான் சொல்வார்கள். அதற்காக நீ நிலாவை நீலம் என்று எப்போதாவது சொல்லியதுண்டா?

நிறங்களை பிரித்தறியும் திறனிழந்த கண்களுக்குக் கூட தெரியும் நிறம், நீலம் என்பதை நீ அறிய வேண்டும்.

ஆனால், இத்தனை நீலம் கொண்டு நிலைகள் இருக்க, வானத்தை மட்டுந்தான் நீ, நீலம் என்று சொல்கிறாய்? ஏன் என்றுதான் புரியவில்லை.

வானம் தான் இருளிற்கு முகவரி கொடுப்பது. இருள் அதனோடு சேர்ந்தது, வானமும் இருளோடு வாழ்வது.

கரிய நிறமான வானத்தை, ஏன் நீ இன்னும் நீல நிறம் என்று நிச்சயமாகச் சொல்கிறாய்?

நீ கேட்டதெல்லாம் உண்மையென உணர்ந்தால் அந்த உண்மைக்கு உன் விழிகளால் எப்படிப் பொய் சொல்லித் தரமுடிகிறது?

நீலம் நிறம் — பொதுவாக உன் தேடல் விரிவாக வேண்டும். பொதுவாக விழிகள் காணும் காட்சிகள் பற்றிய விவரம் தோன்ற வேண்டும். கண்களின் மொழியில், நீ தேர வேண்டும்.

நீ நினைத்திராத பல நிலைகளில் நீலம் பாவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்டார் ட்ரெக் அறிவியல் புனைவின் வேற்றுக்கிரக மனிதப்போலிகளான அன்டோரியன்களின் ரத்தத்தின் நிறம் நீலம்.

நீல நிறம் தன்னகம் கொண்ட உணர்வின் சுவாசங்கள் ஏராளம். தனிமை, வெறுமை, கவலை என விரியும் அத்தனை உணர்வுகளையும் சொல்ல ஆங்கிலக்காரன் நீலம் என்ற நிறத்தை சொற்களோடு சேர்க்கிறான்.

நீ மெய்யென நம்பியுள்ள பொய்கள் பற்றி நிறத்தில் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

மலரொன்று, “என்னை மறவாதே!” என்று சொல்லும், அதன் நிறமும் நீலந்தான். நிறத்தில் அந்த மலர் பற்றி சொல்லியிருக்கிறேன். மறந்துவிட்டாயா?

தன் பெயருக்குள் மகிழ்ச்சியைக் கொண்ட அந்த bluebird of happiness பறவையின் நிறமும் நீலந்தான்.

கலைகளுக்குள் பொதிந்து வீசும், சுவையின் மணமும் நீலந்தான். காற்றின் நிறமும் நீலந்தான். கவி செய்யும், அந்தக் காகிதத்தின் கிழிந்த நுண்ணிய விளிம்பை உற்றுப்பார், அதுவும் நீலந்தான்.

இத்தனை இயல்பான மாதிரிகள் நீலத்தை விழிகளுக்குச் சேர்க்க, உலகத்தில் வானத்தில் மட்டுந்தான் நீலம் உண்டு என நீ சொல்வது வறுமையல்லவா?

பிரபஞ்சம் விசாலமானது — ஃபீலிக்ஸ் போம்கார்ட்னர் விண்வெளியின் விளிம்பில் நின்று பூமிக்குக் குதிக்க எண்ணிய கணத்தில், அவருக்குத் தோன்றிய உணர்வு, அடக்கம் ஒன்றுதான். விழிகளில் தோன்றிய அந்த தோற்றமும் நீலந்தான். அடக்க குணமும் நீலந்தான்.

உன் உவமைகளை நீ தூசுதட்ட வேண்டியிருக்கிறது. நீலத்தை நீ எல்லாவிடத்திலும் தேட வேண்டியிருக்கிறது. ஒரு பொருளை நீ கூர்ந்து நோக்கினால், நீலமென உணர்வாய்.

நீ, அது நீலந்தான் என எதை எண்ணிக் காண்கிறாயோ, அவையெல்லாம் உன் விழிகளுக்கு நீலமாய்த் தோன்றுவது, மூளையின் விஞ்ஞானம்.

நீ கட்டாயம் நீயல்லாத நிலைகள் பற்றி தெளிய வேண்டுமென, கோபாலு விரும்புகிறான்.

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம்