தீயிற்கான தேடல்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 02 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

நெருப்பு பற்றிய கதைகள், அனுபவங்கள் என பல நிலைகள் ஒவ்வொரு தனிநபரின் வாழ்விலும் ஏதாவதொரு கட்டத்தில் வந்து போகும். போகாமலேயே தங்கி நிற்கும்.

நெருப்பைப் பற்றி அதன் சுடும் தன்மை பற்றி தன் பேரனுக்கோ, பேத்திக்கோ சொல்லிக் கொடுக்காத பாட்டிகள் இல்லையென்றும் சொல்லிவிடலாம். தீயின் குணாதிசயங்கள் பற்றிய மனிதனின் ஈடுபாட்டுடனான இந்த தகவல் கடத்துகை என்றும் போல் இன்றும் தொடர்கிறது.

மெழுகுதிரிக்கு அருகில் செல்லும், சின்னக் குழந்தைக்கு — “அது சுட்டிடும்.. போகாதீங்க.. சொல்லிட்டன்” என்றவாறான எச்சரிக்கையான கட்டளைகள் இன்றும் தொடர்கிறது.

fire

அண்மையில் Quest for Fire என்ற திரைக்காவியம் காணக் கிடைத்தது. நமது முன்னையோர் எவ்வாறு இயற்கையின் அபூர்வங்களைக் கண்டுபிடித்தார்கள். அவற்றைக் காண தமது தேடல்களை எப்படி உருவாக்கிக் கொண்டார்கள் என்பதையெல்லாம் இயல்பாகச் சொல்லிச் செல்லியது அந்தக் காவியம்.

நியன்டதால் மனிதனின் உணர்வுகளின் பரிணாம வளர்ச்சியிலிருந்து, மனிதனின் ஆரம்ப கால இயற்கையின் மொத்த அனுபவங்களையும் மொழியாடல்களையும் தாண்டி திரையில் விரித்துக் காட்டியுள்ள விதம் — அபூர்வம்.

நெருப்பை தனது சமூகத்தின் நிலைப்பின் நாதமென நம்பிய அந்த நாள் மனிதன் நெருப்பைத் தேடிக் கொண்டு செல்கிறான். நெருப்பை தம்வசம் தக்க வைத்துக் கொள்ள பல விடயங்களை செய்கிறான்.

எப்படி நெருப்பு தோன்றுகிறது? என்பதை ஆயாமல், எங்கிருந்து அதை கைப்பற்றி கொண்டுவரலாம் என ஒரு கோத்திரம் முன்னேறுகிறது. இன்னொரு கூட்டமோ, நெருப்பின் மூலத்தைக் கண்டறிந்து அதை உருவாக்கும் நுட்பங்கள் பற்றிய தெளிவைக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கிறது.

அயல் தேசம் சென்றேனும் நம் சூழலிற்குத் தேவையான பொருளை கொண்டு வந்து நம்மைச் சார்ந்த மனிதர்களுக்கு உதவ வேண்டுமென்கின்ற அவர்களின் அவா ரசிக்கச் செய்தது. அதுதான் தொன்மையாக கடத்தப்படும் உணர்வின் அடிநாதமாய் விளங்குகின்றது.

அனுபவங்கள், அவதானங்கள் என மனிதனின் அறிவின் விசாலத்தன்மை விலாசம் பெற்றுக் கொள்ளும் அழகைக் காட்டுகின்ற காட்சிகள் — வாழ்வின் மறக்க முடியாத காலச் சுவடுகள்.

நெருப்பைத் தேடிய மனிதனின் தாகம் பிடித்திருந்தது. இன்னும் தேடலை விடாத மனிதனின் பரம்பரைத் தொடக்கம் இன்னும் பிடித்திருக்கிறது.

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.