கூச்சமா? யாருக்கு?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

எனக்கு அலாதியான கூச்சமிருப்பதாகச் சொல்கிறாய். நீ சொல்லும் போதெல்லாம் உன் தோளை ஒரு குலுக்குக் குலுக்கி, எனக்கு அப்படியொரு கூச்சமும் இல்லை என்று எனக்குச் சொல்ல வேண்டும் போலிருக்கும்.

நீ என் முன் தோன்றி இப்படிச் சொல்கையில், என் உணர்வுகளின் ஒரு பாதி, முதுகெலும்பின் வழியே வழிந்து கொண்டிருப்பதை உன்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன்.

இத்தனையும் சொல்ல நினைக்கும் எனக்கோ, எப்படி இவற்றையெல்லாம் சொல்வதென்று இன்னும் தெரியாதிருப்பதையும் உன்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். அதைக் கூட எப்படிச் சொல்வதெனத் தெரியாது எனக்கு.

என் தோலின் உள்ளே, சூரியன் உறைவது பற்றி உனக்குத் தெரியாது. என் விரல் நுனிகளில் அடிக்கடி எட்டிப் பார்க்கும் சந்திரன் பற்றியும் உனக்கு தெரிய வாய்ப்பில்லை.

shy

என் வியர்வையை தோலின் அடியிலுள்ள சூரியன் தின்றுவிடுகின்ற சுவை பற்றி உனக்கு என்ன தெரியும்? ஆன்மாவின் சூட்டின் ரகசிய மூலமாய் சூரியன் இருப்பது பற்றி யாராவது உனக்குச் சொன்னதுண்டா?

விரலின் நுனி வழியே வழியும் அந்த பால் போன்ற ஒளிக்கு சொந்தக்காரன் யார் என்பது பற்றி நீ என்னிடம் கேட்கவேயில்லை. முடிந்தால் நீ நிலவிடமாவது போய்க் கேட்டுப்பார்!

எனக்குக் கூச்சமில்லை. உன் கண்ணை நான் நேராகப் பார்க்கும் போது கூடவா இது உனக்குத் தெரியவில்லை.

எனக்கு உன்னைப் பார்த்து நிறைய விடயங்கள் சொல்லத் தெரியும். உலகம் தெரியும், வாழ்க்கை தெரியும். வழக்கங்கள் தெரியும். கவிதை தெரியும். பாட்டுத் தெரியும். கூத்துத் தெரியும். பொறாமை தெரியும். போட்டி தெரியும்.

வானவில்லைப் பிடிக்கத் தெரியும். வந்த விருந்தினரை உபசரிக்கத் தெரியும். விரும்பத் தெரியும். வெறுக்கத் தெரியும். துக்கம் தெரியும். மகிழ்ச்சி புரியும். இவை எல்லாம் தெரிந்தும் இவற்றைச் சொல்லிவிடத் தெரியாது என்பதும் எனக்குத் தெரியும்.

உனக்குத் தெரியாது. எனக்குக் கூச்சமில்லை.

ஆதரவில்லாத சக மனிதனைக் கண்டால் வரும் இனம் புரியாத கவலை எனக்குள் வரும். பிரிவைக் கண்டால் அழுகை வரும். இழப்பை கண்டவனுக்கு ஆறுதல் சொல்ல எனக்கு மனசு வரும். எல்லாம் வந்தாலும், இதைச் சொல்ல எனக்குத் தெரியாது. எனக்குக் கூச்சமில்லை.

என் மனம் பறக்கின்ற வானம் பற்றி உனக்கு எதுவும் தெரியாது. எனக்கும் சிலவேளைகளில் வியப்பாய் இருக்கின்றது, இப்படியொரு பிரபஞ்சத்தைக் காண முடிந்திருப்பது பற்றி நினைக்கையில்.

என்னோடு நீ நடந்து வா. எதுவும் புரியாது உனக்கு. எனக்கு சொல்லவும் தெரியாது. எனக்குக் கூச்சமில்லை.

குளிர்காலப் பனியின் வெப்பத்தைக் கொப்பளிக்கும் என் மேனியின் பண்பு பற்றி உனக்குத் தெரிந்தாலும், பனியில் படரும் உடுக்கள் பற்றிய உண்மை உனக்குத் தெரியாது. உன்னிடம் சொல்லவும் முடியாது. எனக்குக் கூச்சமில்லை.

நிச்சயமாக எனக்குக் கூச்சமில்லை. பிரபஞ்சத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் அத்தனை உணர்வுகளும் எனக்குள்ளே இருப்பதை உன்னிடம் சொல்ல வேண்டும் என்று தோன்றினாலும், என்னால் முடியவில்லை. எனக்குக் கூச்சமில்லை. மொழிகளால் சொல்ல முடியாத பாரமான உணர்வுகள் என்னகம் உள்ளன. இருக்கும் மொழியால் புரியும் படி உன்னிடமும் சொல்ல முடியாது. எனக்குக் கூச்சமில்லை.

“கூச்சமானவனுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் தான் உண்டு. எனக்குக் கூச்சமில்லை,” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.