இந்தப் பதிவை ஒலி வடிவில் கேட்க: iTunes இல் நிறம் Podcast ![]() |
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 16 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
இது குளிர்காலம். விண்வெளிக்கு செல்வது போன்று, உடையணிந்து வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் இன்னும் கொஞ்ச நாளில் வந்துவிடும்.
மழைபெய்யும் மத்தியானத்தில் போர்வைக்குள் போர்த்தி கிடந்திருப்பது எப்படியோ, பனிவிழும் இரவில் மெளனமாய், பனி விழும் மௌனத்தைக் கேட்பதும் அற்புதம் தான்.
புகைகள் நிரம்பிய கனவு. பூராய் மழைபொழியும் காட்சி. தடுக்கிவிழுவதாய் நெஞ்சு கணத்து திடுக்கிட்டு நினைவுக்கு வரும் கனவின் விளிம்பு. மறந்து போகும் முக்கியமான கனவின் முகவரி.
ஞாயிற்றுக்கிழமை. விடிகின்ற காலை. வித்தியாசமான வானம். மெல்லியதாய் காற்று. அடுத்த அடிக்கு அப்பால் இருக்கும் உன்னை காணமுடியாத பனிமூட்டம். கண்களை ஆவியால் வாட்டும் சுடும் தேநீர்க் கோப்பை.
இறுதிச் சொட்டுவரை நக்கி உண்ணப்பட்ட பனிக்கூழின் ரப்பர்க் கரண்டி. பனிக்கூழ் தொலைத்து ரப்பரின் சுவையைக் கண்டு விழிக்கும் நாக்கு. முடிவில்லாத பாதைகளின் முனைகளை நோக்கிப் பாயும் சைக்கிள் சக்கரங்கள்.
ஐபோனின் அழைப்பு மணியின் அதிர்வு. “அடிப்பதை நிப்பாட்டிடு” எனக் கட்டளையிட்டு அடித்தடித்தே ஓய்ந்து போகும் அலாரம்.
காலை நேர முகத்தில் படும், சுடுநீரின் குளிர். கண்ணாடியில் சரிசெய்து கொள்ளக் கேட்கும் தலைமுடி. பசையாய் ஒட்டி வாழ வேண்டுமென நினைத்தும் பட்டுவிட்டு வெளியே துப்பித் தொலைக்கப்படும் பற்பசை.
காகிதத்தோடு காதலாகிப் போன, அந்தப் பேனாவின் முத்தம். “ஒரு சொல்லால் முத்தம் தா, நான் பதிலுக்கு ஒரு பந்தியாய் முத்தம் தருகிறேன்” — என்ற காகிதத்தின் ஆசை.
அவன் விரல்களின் ஸ்பரிசத்தில் அழகாய் கானமிசைக்கும் கணினி. கணினியோடு சேர்ந்து அழாமலே கண்ணீர் சொட்டும் அவன் கண்கள்.
புயலின் வலிமைக்கு பொத்துப்போன அந்தக் குடிசையின் கதவு. விடிகின்ற வேளையில் ஒப்பாரி வைக்கும், அக்கதவின் அகலப்பிழந்த வாய். நிலவைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வரும் கோபாலு. நிலவோடு கண்சிமிட்டிக் காதல் செய்யும் உடுக்கள்.
பாய்ந்து பாய்ந்து மரம் தாவும், குரங்கின் குதூகலம். தான் காயப்படுத்தப்பட்டேன் என்றே நிலத்தில் விழுந்து ஆயுள் இழக்கும் குரங்கின் வாயகன்ற மாங்காய். இது பழமென்று தெரிந்திருந்தால் குரங்கிற்கு முன்னரே குறிவைத்திருக்கலாமே — பள்ளிச் சிறுவனின் கவலை.
உணர்வுகள், உயிர்கள், உண்மைகள் என எல்லாமுமே சேமிக்கக்கூடிய நிமிடங்களைத் தந்துவிடுகிறது. நிம்மதிகளாய் சேர்ந்துவிடுகிறது.
தபாலில் பரிசுப்பொதியொன்று எதிர்பாராததாய் வந்து தரும் பூரிப்பை, இன்று தபாலில் அனுப்பியிருக்கிறேன்.
இப்படி இத்தனையாய்ச் சேமிக்க முடிந்த நிமிடங்கள் எப்போதும் நிலைத்திருப்பதில்லை. உங்களோடு நிமிடங்கள் நிம்மதி தருகையில் சேகரித்துக் கொள்ளுங்கள். வறட்சியிலும் மழை தரும். மாரியிலும் வெயில் தரும்.
“நல்லவைகள் எப்போதும் நிலைப்பதில்லை,” — கோபாலு சொல்கிறான். 2012 உம் அப்படித்தான்.
அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்.
– உதய தாரகை
மறுமொழி சொல்லி ட்விட்டரில் தொடர நான் இங்கே. 🙂 – Follow @enathu
பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.