பணமரம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 54 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

அது நவம்பர் மாதம் தொடங்கிவிட இன்னும் ஓரிரு நாட்கள் காணப்பட்ட சூழல். நெடுநாட்கள் கழித்து என்னைக் காணவந்தான் என் நண்பனொருவன்.

நெடுநாட்களின் தெரியாத சங்கதிகளை சுவை சேர்த்து குறுகிய நேரத்திற்குள் பகிர்ந்து கொண்டோம். விடைபெறும் நேரத்தில், “உனக்கொரு கிப்ஃட் கொண்டு வந்திருக்கேன்” என்றவாறு என்னிடம் ஒரு பொதியைத் தந்தான்.

பொதியைப் பெற்று, அவனையும் வழியனுப்பிவிட்டு, வீட்டினுள் வந்தேன்.

பொதியில் தந்த பரிசு என்னவாயிருக்கும் என்ற ஆர்வக்கேள்விக்கு விடை தேட, வேகமாக பொதியைப் பிரிக்கலானேன்.

treeofmoney

பொதிக்குள் ஒரு குட்டி மரம் — ஆமாம், அது பணமரம்.

இது சீனர்களின் பாரம்பரியத்தில் வருகின்ற பணமரமல்ல. இது உண்மையான பணமரம்.

அணுக்களால் பிரபஞ்சம் ஆக்கப்பட்டதல்ல, அது பணமரத்தின் கிளைகளின் நிழல்களால் தாக்கப்பட்டது என்பதாய் விசாலமாய் விரிந்து வளரத்துடித்த அந்த பணமரத்தின் கிளையொன்று சொல்லியது எனக்குப் புரிந்தது.

“விருட்சமாய் வியாபிக்க நினைக்கும் உன் கனவின் தொடக்கத்திற்கு நான் தரக்கூடியது என் ஜன்னலோரக் கண்ணாடியின் முகம்தான்” என்றவாறாய் பணமரத்திற்கு வீடு தருகிறேன்.

தொடர்ச்சியாக நீருற்றி பராமரிக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு விடயங்கள் சொல்லப்பட்டன.

காலைநேரத்தின் கதிரவனைக் காணும் என் ஜன்னல் கண்ணாடியின் தோழனாய் பணமரம் இரவோடிரவாக மாறிக் கொண்டது.

என் கரம் பற்றிக் கொண்ட போதெல்லாம், அது மெல்ல மெல்ல முளைத்துக் கொண்டுவிடுவதைக் கண்டு உவகை கொள்வேன்.

அதன் மெதுவான முன்னேற்றம் அதன் கிளைகளுக்கு வலிமை கொடுத்தாலும், என் எண்ணங்களுக்கு வானமும் கொடுத்தது.

பணி முடித்து பல மணிகளுக்கு பின்னர் வீடு வந்து அந்த மரத்தைக் காண்கின்ற போது, சோர்ந்து போய் இருக்கும். என் ஸ்பரிசத்தில் புத்துணர்ச்சி பெற்றுக் கொள்ளும்.

பணமரத்தின் இயல்பான வாழ்வையும் அதன் ஒவ்வொரு கிளையும் கொண்ட பிரபஞ்சத்தின் விலாசங்களையும் கண்டு வியந்திருந்திருக்கிறேன். ஒரு விஞ்ஞானமும் இந்த விலாசங்களுக்கு விலாசம் கொடுத்ததில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அது காலை வேளை, சூரியனும் அற்புதமாய் ஒளி தந்து சூழலை ரம்மியமாக்கியது. காற்று வரட்டுமே என்று ஜன்னலை திறந்து விட்டு, வெளியே சென்று விட்டேன்.

அன்று பணமரத்திற்கு மகிழ்ச்சி அலாதியாய் இருந்திருக்க வேண்டும்.

நிலைகளை மாற்றிக் கொள்வதில் காலநிலைக்கு எப்போதுமே இருக்கும் பிரியம் அன்றும் தொடர்ந்தது. பெய்யெனப் பெய்த மழை ஜன்னலையும் தாண்டி பணமரத்தையும் துவம்சம் செய்து விட்டுள்ளதை வீடு திரும்பியதும் கண்டேன்.

கவலை — மௌனம்.

விழுந்தாலும், எழுவேன் என்ற நம்பிக்கையோடு பணமரம் தரையில் ‘வியாபித்துக்’ கிடந்தது. கையில் அதனைப் பற்றிக் கொண்டு அதன் கண்ணீரைத் துடைக்கலானேன்.

“உன்னைவிட, நீ வேறொன்றை நேசித்து, பின் அதனை இழக்கும் போதே, நீ இழப்பின் உண்மையான வலியை உணர்ந்து கொள்கிறாய்” — அதன் ஒரு கிளை உரக்கச் சொல்லியது.

அதன் கிளைகள் சொல்லிய ஒவ்வொரு விடயத்தையும் கேட்டு, தூங்கிய எனக்கு எழும்பிய போதெல்லாம், அவை சொன்ன அத்தனை உணர்வுகளோடு என்னோடு ஒட்டிக் கொண்டு பயணிப்பதான உணர்வு தோன்றியது.

இந்தக் கிளைகளின் உணர்வு ஒட்டிப் போன கதையை யாரிடம் தான் சொல்லலாம். யார்தான் கேட்கப் போகிறார்கள் என்ற முடிவெடுக்கப்பட்ட அனுமானங்களின் தொடக்கங்கள் எனக்குள் நிலை கொண்டாலும், நான் கிளைகளோடு ஐக்கியமாயிருந்தேன்.

நிஜச்சூழலில் நடப்பது பற்றிய துலங்களைத் தரக்கூட எனக்கு முடியவில்லை. இந்த கிளைகளின் உணர்வுகள் அப்படி ஒட்டிக் கொண்டுவிட்டது.

ஜன்னல் கண்ணாடிக்கருகில் இருந்த பணமரத்தை நான் இப்போது, என் கைகளுக்கு எட்டிய தூரத்தில் வைத்து அழகு பார்க்கிறேன். கிளைகளோடு சிலாகித்துக் கொள்கிறேன்.

இப்போது நான் தலையணைக்கடியில் வைத்து அந்த மரத்தை வளர்க்கின்றேன். என் காதோரமாய் அது பாடும் தாலாட்டுப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. கூடவே கனவின் ஓரத்தில் பணமரம் நின்று, உதிரும் இலைகள் விழுகின்ற ஓசைகளையும் என்னால் கேட்க முடிகிறது.

பணமரங்களோடு நேசம் வைத்திருப்பது, மற்றையவற்றுடன் நேசம் வைத்திருப்பதைக் காட்டிலும் விஷேசமானது. உங்கள் கவனத்தை அதற்கு வழங்க வேண்டும். மன ஓர்மையாய் இருக்க வேண்டும். நேரத்தை அதற்காகத் தர வேண்டும். அதனோடு உன்னிப்பாக இருக்க வேண்டும். உலகத்திலே இத்தனையும் வேண்டிநிற்கும் ஒரு நேசம் பணமரத்தின் நேசமாகத்தான் இருக்க வேண்டும்.

“இந்த நேசம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

(யாவும் கற்பனை அல்ல)

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s