இந்தப் பதிவை ஒலி வடிவில் கேட்க: iTunes இல் நிறம் Podcast ![]() |
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 9 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
என் மகனே!
திண்மம். திரவம். வாயு. நீ. உன் கனவுகள் அத்தனையும் உன் எண்ணங்களுக்குள் படர்ந்திருக்கிறது. உன் நம்பிக்கை தன் கால்களை நிலைநிறுத்திக் கொள்ளும்.
உன் ஆசைகள் விலாசம் பெறவுள்ளன. நீ எதிர்பார்த்தவையெல்லாம் உன்னை எட்டித்தொட பாய்ந்து கொண்டும்வரும். உன் பயத்தைக் கூட பயமறியாது. மனவுளைச்சல் என்பதைப் பற்றி உனக்கு எண்ணங்கள் சொல்லித்தரக்கூடும். ஆனாலும், இது எல்லாமும் தான் நீ.
உன்னைப் போல உலகத்தில் வேறொன்றும் கிடையாது. உனக்கும் தனித்துவமாய் நீ இருப்பதுபோலவே, மற்றவரும் உன்னைத் தனித்துவமாகக் காண வேண்டும்.
நீயல்லாத இன்னொன்றால் உலகம் முழுமை அடையாது. உன் பங்களிப்பில் அது உயிர்ப்புக் கொள்ளும்.
அன்பைப் பொக்கிசமாக்கிக் கொள்ள நீ உருவாகியிருக்கிறாய். உன் பொக்கிசத்தை உலகமெலாம் விதைக்க நீ வழி சமைக்கலாம். உன் அன்பினால் இந்தக் கணம் உயிர் கொள்வதும் நாளை விடிவதும் நடக்க வேண்டியிருக்கிறது.
அன்பை நீ தேடித் திரியக்கூடாது. உனக்குள் நீயே கட்டியிருக்கும் வெறுப்பு வேலிகளைத் தேடிப்பிடித்து துவம்சம் செய்ய வேண்டியிருக்கிறது.
உனக்கு தேவையானதைப் பெற, வழியை உருவாக்குவாய் என நம்புகிறேன். பெற முடியாமல் போச்சே என்பதற்கு சாட்டுப்போக்குகளை நீ தேடித் திரியக்கூடாது.
மகிழ்ச்சிக்கு நீ முகவரி தர வேண்டும். மகிழ்ச்சியே உன் உருவாக வேண்டும். உன் கனவின் நோக்கம், பறந்து திரியும் பறவைகளாலோ, கூவித் திரியும் குயில்களாலோ அல்லது எத்தித் திரியும் மனிதர்களாலோ திரிபு கண்டுவிடக்கூடாது.
உன் சின்னச் சின்ன அசைவுகளைக்கூட இந்த உலகம் ரசிக்கத் தொடங்கலாம். ஆனாலும், திடமாகவே நீயெதுவோ அதுவாகவே இருக்க வேண்டுகிறேன்.
உன் வானத்தின் நட்சத்திரங்களைப் பற்றி அவர்களுக்கு நீ சொல்லிக் கொடுக்க வேண்டும். உன் வானச்சூரியனும் இன்னொரு நட்சத்திரம் தான் என்ற உண்மையை அவர்கள் உணரச் செய்ய வேண்டும்.
அர்த்தப்படும் வாழ்வின் சுவைகளை ரசிக்க உனக்கு கணங்கள் நிறையத் தேவைப்படலாம். ஆனால், அர்த்தங்களைத் தேடித் திரியாமல் நீ வாழ்வை ரசிக்க வேண்டியிருக்கிறது. அதனாலேயே வாழ்வு இயல்பிலேயே அர்த்தப்பட்டுவிடும்.
நீ ரசிக்கின்ற விடயங்களை செய்து கொண்டேயிரு. மகிழ்ச்சிக்கு விலை கேட்டு மற்றவர்கள் வாங்கிட முயன்றிடட்டும்.
எதுவுமே நிரந்தரமானதல்ல என்பதை நீ தெரிந்திருக்கலாம். ஆனால் எல்லாமும் உன்னதமானவையுமல்ல என்பதையும் நீ தெரிய வேண்டும். மாற்றங்கள் மட்டும் தான் மாறாதது என்பதை நீ உணர வேண்டும்.
நீ ஒரு பரிசு. உன்னை யார் வெறுத்தாலும், ஒருபோதும் உன்னை நீ மட்டும் வெறுத்துவிடாதே! இங்கு எல்லாமும் நீதான்.
உன்னை நேசிக்கும்,
உதய தாரகை
இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu
பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.
ஒலிக்கோப்பிற்கான இசை வழங்கியது Kevin McLeod. நன்றி.