நீ, நீராகவிருக்க வேண்டும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

அழியும் உலகமும் அழியாத ஆசைகளும் என்ற பதிவில் நிரம்பி வழிகின்ற கோப்பை பற்றிய கதையொன்றைச் சொல்லியிருப்பேன்.

இன்றளவில் அதிகமானோர் தாம் கேள்விப்பட்டவையெல்லாம், அவை பற்றிய எந்த ஆய்தலும் இல்லாமல் நிஜமானதென நம்பி செயலிலீடுபடுகின்றனர்.

ஆய்தறியப்படாத விடயங்களின் தொட்டிகளாக, அவர்களின் மனது நிரம்பி வழிந்து கொண்டிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை போன்றே தோன்றுகிறது.

ஒரு முக்கோணமொன்றை உருவாக்கி, அதனுள்ளே தம்மை பொருத்திக் கொண்டால், உலகமே சுபீட்சம் கண்டுவிடுமென எண்ணிக் கொள்வது பலரின் வழியாகிவிட்டது.

கொஞ்சம் முக்கோணத்தைத் தாண்டியும் வரலாம். அதைத் தாண்டியும் இன்னொரு விலாசம் இருக்கிறது என்பது பற்றி யாரும் சொல்ல முடியாதுள்ளது. முக்கோணத்திற்குள் முழுக்காதுகளையும் அவர்கள் இரவல் கொடுத்துவிட்டே வெளியே எட்டிப் பார்க்கின்றனர்.

முக்கோணத்திற்குள் தம்மைப் பொருத்திக் கொண்டு, அந்த வடிவத்தை ஏற்கும் பலர், தாம் யார் என்பதையே மறந்து போவதுதான் கொடூரம்.

be-yourself

நீ, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான வடிவங்கள் பற்றிய விடயங்களை அறிந்து கொண்டபோதும், முக்கோணம் மட்டுந்தான் வடிவம் என்று முக்கியச் செய்தி போல் ஒவ்வொரு போது சொல்கிற போது, நான் உனது கண்ணாடியாக இருப்பேன். அதை நீ கவனிக்கவில்லையா?

ஒரு வடிவத்திற்குள் பொருத்தி அதுவாகவே மாறிய நீ, உன் இயல்புகளையும் தொலைத்துவிட்டிருக்கிறாய் என்பதைச் சொல்லவே நான் கண்ணாடியாகி நிற்பேன். கண்டு கொள்ளமாட்டாயா?

உன் புலன்களைக் கூடவா, அந்த முக்கோணத்திற்குள் முடக்கி வைத்திருக்கிறாய்?

13ஆம் நூற்றாண்டின் அற்புதக் கவிஞர் ரூமி சொன்னவொரு விடயத்தை உன்னிடம் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. “நான் நேற்றுவரை கெட்டிக்காரனாக இருந்தேன். உலகத்தை மாற்றிவிட வேண்டுமென எண்ணினேன். இன்று நான் ஞானமுள்ளவனாய் இருக்கிறேன். என்னில் மாற்றங்களை கொண்டுவர எண்ணுகிறேன்”

குட்டி யானையின் காலில் கட்டிய கயிறு போன்று உன் மனதின் எண்ணங்கள் மாறிட வழிசெய்யாதே!

உனக்குள்ளே ஆய்ந்தறிதல் பற்றிய ஆசை தோன்ற வேண்டும். நீ நடனமாடி அனுபவம் காண வேண்டும். உனக்காக உன்னைச் சுற்றி நடனமாட ஆட்கள் தேடாதே! அனுபவம் கால்கிலோ கணக்கில் விற்பதில்லை.

போகும் இடமெல்லாம், அந்த இடத்தைப் போன்றே தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளும் நீர் பற்றி நீ அறிவாயல்லவா? அது ஒருபோதும் அதன் தன்மையை, இயல்பை இழப்பதில்லை.

நீரைப் போல் நீ வளைந்து செல்ல வேண்டியிருக்கிறது. நீ எந்த வகையில் உன் வடிவங்களை மாற்றிக் கொண்டாலும், உன் உண்மையான “உன்னை” தொலைத்துவிடக்கூடாது.

நீர், தன் வடிவத்தோடு தன் குணத்தையும் மாற்றிக் கொண்டால், அது அத்தருணம் முதல் நீராகாது. அதற்கு வேறு பெயர் வைப்பார்கள்.

எதுவோ, அதுவாகவிருத்தல் பற்றிய விஞ்ஞானத்தை நீ அறிய வேண்டும். ஒரு விடயத்தில் நாம் கொள்கின்ற இயைபாக்கம் பற்றிய நிலைகளை நீ புதுப்பிக்க வேண்டும்.

நீ நீராகவிருந்தால், எத்தனை பாத்திரங்களும் ஏற்கலாம், எத்தனை வடிவங்களும் கொள்ளலாம். ஆனால், இயல்புகளின் மாற்றங்கள் தோன்றாது.

நீ இயல்பிலேயே ஆய்ந்தறியும் ஆற்றல் உள்ளவன்தான் — உன் முக்கோண வலயம் உன்னை அதைச் செய்யாமல் முடக்கிவிட்டிருக்கிறது.

நீ இந்தக் கணத்திலிருந்து செய்யும் ஒவ்வொரு செயலும், ஆய்ந்தறிந்ததாய் இருக்கட்டும். என்னதான் பாத்திரம் கொண்டாலும், உன் செயல்கள் உன் உண்மையான இயல்பைக் கொண்டிருக்கட்டும் மகனே!

— உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s