வெளிச்சம் வேண்டாம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  2 நிமிடங்களும் 9 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

கடந்த வாரம் முழுக்க, என் பேருந்துப் பயணங்களின் துணையாக Brené Brown இன் The Gifts of Imperfection என்ற நூல் இருந்தது. வெறும் வார்த்தைகளால் உளவியல் பேசாமல் வாழ்க்கையின் நிகழ்வுகளால் விடயங்கள் சொன்ன பாங்கு பிடித்திருந்தது.

இந்த நூலை, வெறும் மகிழ்ச்சிக்கான வழிகளைச் சொல்லுகின்ற இன்னொரு நூலாக கண்டு கொள்ள முடியாது. மாறுபட்டதும் சொல்லவந்த விடயத்தை தெளிவாகச் சொல்லிருப்பதும் தான் சுவை.

ஒருவன் தன் குறைகளை பற்றிய புரிதல்களோடு, அவற்றை தைரியமாக தன் நிலை என புரிந்து கொண்டு, தன்னோடு அன்பாகப் பரிவோடு நடந்து கொள்ளும் நிலையில் தான் அவனால், மற்றவர்கள் தொடர்பான அன்பு பற்றிய புலன் தோன்ற முடியும் என்கிறார் Brené Brown.

happiness-tower

ஒரு தசாப்த காலத்தின் ஆய்வுகளின் ஆதாரங்களைக் கொண்டு மனவள ஆரோக்கியம் முதல் உளவியல் சமநிலை என இந்தப் புத்தகம் தொட்டுச் செல்கின்ற பரப்பு விசாலமானது. நேரம் வாங்கி, இந்த நூலை வாசியுங்கள். ஆனால், இந்தப் பதிவின் நோக்கம் அந்தப் புத்தகத்தைப் பற்றி மட்டும் சொல்வதல்ல.

இன்றளவில் அதிகமானோரின் மூச்சாகியிருப்பது முறைப்பாடு தான். “மொறப்பாட்டுத் தாள்” என்று foolscap கடதாசியை விழிக்கின்ற அளவிற்கு ஒரு சமூக நிலைக் காலங்கள் இருந்தது என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னும் தொடர்கிறதா எனத் தெரியாது.

மகிழ்ச்சி தொலைந்து போய்விட்டது. அதுபற்றி முறைப்பட்டுக் கொள்கிறோம். கேட்பவர் ஆறுதல் சொல்கிறார். ஆதரவாய் வருகிறார். மாற்றங்கள் தோன்றுகிறது. மீண்டும், மகிழ்ச்சி தொலைந்து போய்விட்டது. அதுபற்றி முறைப்பட வேண்டும். இவ்வாறு முறைப்பாட்டுச் சக்கரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இங்கு உங்கள் கவனத்தை இந்த முறைப்பாட்டுப் படலம் தோன்றுவதற்கான மூலம் பக்கம் கொண்டுவர விரும்புகிறேன். பல நிலைகளில் முறைப்பாடுகளின் முக்கியமான மூலமாக, கடந்து போன நிகழ்வுகளின் நினைவுகள், வரப்போகின்ற வருங்காலத்தின் அனுமானங்கள் கலந்த எண்ணங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

அலைபாயும் மனத்தின் பெறுதிகளாகத்தான் இந்த நினைவுகளும் எண்ணங்களும் தோன்றுகின்றன. மனத்தின் பண்பு அலைபாய்வதுதான் என்பது பிரபஞ்ச மெய்.

ஆக, முறைப்பாடு செய்ய முடியாத, கவலைகள் மறந்த, மகிழ்ச்சியே கொண்ட நிலைகளை எம்மால் பெற்றுக் கொள்ள முடியுமா? என்ற கேள்வி பலமாகவே எழுகிறது.

எமது அலைபாயும் மனதின் எண்ணங்களின் ஓட்டத்தோடு நாமும் பயணிப்பதால், இந்தக் கணத்தில் இடம்பெறும் எம்சூழல் பற்றிய நிலைகளை மறந்துவிடுகிறோம். இந்தக் கணத்தில் இருக்க உங்களால் முடியுமென்றால் அதுதான் மகிழ்ச்சி.

வாழ்க்கை என்பது இந்தக் கணத்தின் நுகர்விலும் அந்த நுகர்வின் நிலையில் தோன்றும் அனுபவங்களின் சேர்மானங்களிலும் தான் வலுப் பெறுகிறது.

நாளைக்கான ஆயத்தம் செய்து கொண்டு பலர், பல இன்றுகளைத் தொலைத்து விடுகின்றனர். நாளை என்பதும் ஒரு இன்றாகும், அன்று அவர்கள் அந்த “நாளையைக்” கூட தொலைத்திருப்பார்கள்.

வேகமாகச் சுற்றிச் செல்லும் இந்தப்பூமிக் கோளின் நிலை, தனது ஒவ்வொரு கணத்தையும் ரசித்துக் கொண்டிருக்க, அதிலிருப்பவர்கள் இந்தக் கணங்களை சென்ற கணங்கள் பற்றியும் வரும் வயது பற்றியும் மனதோடு மணந்து போய்விடுகின்றனர். மன ஒப்பாரி வைக்கின்றனர்.

இந்தக் கணத்தின் நிலையோடு மொத்தக் கவனத்தையும் செலுத்திக் கருமங்கள் செய்ய மகிழ்ச்சி தானே வந்து குடிகொண்டுவிடும். இதைத் தேடக்கூடாததில் நான் முன்னர் நிறத்தில் சொல்லியிருக்கிறேன்.

பூமி என்பது ஒரு சடப்பொருளால் அமைந்த ஒரு நிலையான பொருளல்ல. அது அசைந்து கொண்டிருக்கிறது. மாறிக்கொண்டிருக்கிறது. நீங்கள் வாசிக்கின்ற இந்தக் கணம் என்பது பூமியில் திரும்ப வராது. பூமி என்பது பொருளல்ல. ஒரு செயற்பாடு. அந்த செயற்பாட்டில் உங்களை நீங்கள் ஒவ்வொரு கணமாக திளைத்திருக்கச் செய்வதால் உங்களுக்கு முறைப்பாடு செய்வதற்கான தேவை தோன்றாது.

அப்போது மகிழ்ச்சி கதவைத் தட்டும். அலைபாய முடியாத மனது தன் தலையைத் தானே கொட்டும்.

மகிழ்ச்சியை நுகரச் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான், என்ன கருமம் செய்தாலும் அந்தக் கருமத்தோடும் அந்தக் கணத்தோடும் ஒன்றித்து முழு அவதானத்தையும் கொடுக்க வேண்டும். அந்நிலையில் துக்கம் இருக்காது. துயரம் துணை வராது. வெளிச்சம் உண்டாகும். மகிழ்ச்சி மேலோங்கும்.

ஆனால், பிளேட்டோ, சொன்ன ஒரு விடயத்தை கோபாலு ஞாபகப்படுத்தச் சொல்கிறான். “ஒரு குழந்தை, இருட்டைக் கண்டு பயப்படுவதை மன்னித்துவிடலாம். ஆனால், வளர்ந்த மனிதர்கள் வெளிச்சத்தைக் கண்டு பயப்படுவதுதான் வாழ்க்கையின் மிகக் கொடிய நிலை.”

— உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s