(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
நாளாந்தம் நாம் பலரைக் காண்கிறோம். சந்திக்கிறோம். ஒவ்வொருவரும் சொல்லுகின்ற கதைகளோடு பயணிக்கிறோம். அவர்களின் கதைகளை கடத்த நம் காதுகளை இரவல் தருகிறோம்.
இந்த நிலை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
இந்தக் கதை சொல்லும், கதை கேட்கும் பாத்திரங்களை ஏற்றுக் கொள்ளும் அத்தனை பேரும் ஒவ்வொரு நாளும் புதிய விடயங்களைப் படிக்கிறார்கள். அல்லது பழைய விடயங்களைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள்
சொல்கின்ற பாங்கில் கதைகள் கனமிழக்கின்றன. இன்னும் சில கதைகளோ கனம் கொள்கின்றன. கதையொன்றின் வலிமை என்ற பதிவில் இது பற்றி நான் நிறத்தில் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
இன்று நான் கதைகளின் தொடக்கத்தில் தோன்றும் யோசணைகள் பற்றி யோசிக்கலாம் என்று யோசிக்கலானேன். இப்பதிவு உருவாயிற்று.
பாடசாலைக் கல்வி தொடக்கம் நாளாந்தம் நாம் அறிந்து கொள்கின்ற விடயங்கள் யாவும் நாம் எவ்வாறு யோசனை செய்ய வேண்டும் என்பதை சொல்லித் தருவதாகவே இருக்க வேண்டும். அல்லது அவ்வாறு அவற்றை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.
எப்படி யோசிப்பதென்பது, மாயஜால வித்தை அன்று.
எதை யோசிப்பது? எவ்வாறு யோசிப்பது என்பது பற்றிய தீர்க்கமான வரையறைகள் தான் எப்படி யோசிப்பதென்பதை புடம் போடுகின்ற ஆணிப்பொன்.
பல நேரங்கள் நாம் கேள்விப்படுகின்ற அல்லது நமக்குச் சொல்லப்படுகின்ற கதைகள், செய்திகள் என பலதும் எமது யோசணையின் தொடக்கமாகிவிடுகிறது.
எதை யோசிப்பது, எவ்வாறு யோசிப்பது என்ற எமது வரையறைக்குள் நாம் சென்று வர வேண்டியிருக்கிறது. உங்களை இன்னொன்றாக மாற்றிவிட தொடர்ச்சியாக உலகம் முயன்று கொண்டுதான் இருக்கும். யோசிப்பது பற்றிய தெளிவு அற்றுப் போனால், இன்னொன்றாக மாறிவிடும் நிலை நடப்பது நிச்சயமாகிவிடும்.
கேட்டதெல்லாம் அமுத வாக்குகள், சொல்லப்பட்டதெல்லாம் அற்புதங்கள் என ஏற்றுக் கொள்வதில் யோசணைக்கான களம் இல்லை. யோசணை என்பது ஆய்வது. அறிவது. தெளிவது.
ஆய்ந்தறிதல் இல்லாமலேயே பல விடயங்கள் இன்றளவில் இயல்பாகவே செய்தியாக்கப்பட்டு விடுகின்றன. கடந்த வருடம், சந்திரனைத் தொட்ட நீல் ஆம்ஸ்ரோங் இறந்த செய்தியை மிகப்பெரிய ஊடகங்கள் கூட, எட்வின் அல்ட்ரினின் நிழற்படத்தை பிரசுரித்து செய்தியாக்கி வெளியிட்டன.
கொஞ்சம் யோசிப்பதென்பது, மிகப்பெரிய ஆழமான செயல். ஆழ்மனதின் ஆற்றலோடு நெருக்கம் கொண்டது. உங்களோடு நீங்கள் பேசிக்கொள்கின்ற உன்னதமான நிமிடங்கள் அவை. தீர்மானம் எடுத்தலின் ஒத்திகை நடக்கும் இடம் அது.
எவற்றைப் பற்றி நான் அக்கறை கொள்ள வேண்டும் என்பது பற்றிய யோசணையில் பல பிரச்சனைகள் மறைந்து போகின்றன. நீங்கள் அறிந்து கொள்வது பற்றிய ஒவ்வொரு விடயம் தொடர்பாகவும் யோசிக்க கொஞ்சம் நேரம் கொடுங்கள்.
ஒருவர் யோசிக்காமல் ஒரு விடயத்தைச் சொன்னாலும், அதைக் கேட்பவர் யோசிப்பதால், அந்த விடயம் தொடக்கம் காண பகிர்ந்து கொள்ளப்பட வேண்டுமா இல்லையா என்ற கேள்விக்கு விடை கிடைக்கிறது. உங்களால், வேண்டப்படாத செய்தியொன்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதால், நிம்மதியடைவோரை நீங்கள் எண்ண வேண்டும்.
சின்னச் சின்ன விடயங்களால் சஞ்சலப்படுவோர் தொகை அதிகம். கேட்பது பற்றிய கரிசணையில், சொல்பவர் பற்றிய நம்பிக்கையில் பலரின் மனதுகளுக்கு சஞ்சலங்கள் பரிசளிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. கொஞ்சம் யோசிக்கலாமே!
“கூண்டுக்குள் பிறக்கும் குருவி, பறப்பது ஒரு நோயென்றே நம்பிக் கொள்ளும்” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.
– உதய தாரகை
இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu
பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.
Pingback: எது உண்மை? | நிறம்