அனுமானவியல்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 12 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

இங்கு எல்லாமுமே வினோதமாகவே பார்க்கப்படுகின்றன என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும், எல்லா விடயங்களுக்குள்ளும் அனுமானம் என்ற அடிப்படையொன்று தொற்றிக் கொண்டுவிடுகிறது என்று சொல்லி விடலாம்.

அனுமானத்தின் அடியார்களாக அனைவரும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் தங்களை நெறிப்படுத்திக் கொள்கின்றனர். தங்கள் அனுமானத்தின் தோன்றலை மற்றவருக்கும் கற்றுத்தர முனைகின்றனர்.

“அனுமானவியல்” என்றொரு கற்கைநெறியின் சிறப்புத் தேர்ச்சி பெற்றதான அமைவை தங்களின் இருப்பின் மூலம் உறுதி செய்கின்றனர்.

assumptions

டொன் மிகுஎல் ருயிஸ், தனது The Four Agreements என்ற நூலில், அனுமானம் தோன்றுவதற்கான காரணத்தைச் சொல்கிறார்.

“மனித மனம் செயற்படுகின்ற நிலை மிகவும் சுவாரசியமிக்கது. எதனையும் நாம் விளங்கப்படுத்துவதற்கு அவற்றை நாம் நியாயப்படுத்த வேண்டியிருக்கிறது. அதுபோலவே, பாதுகாப்பாய் உணர்ந்து கொள்வதற்கு அவற்றை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. எம்மிடம் விடை தேடும் வினாக்கள் கோடிக்கணக்கில் மலிந்து கிடக்கின்றன. ஏனெனில், காரணங்களை கனதியாகக் கொண்ட மனதால் அத்தனை கேள்விகளுக்கு விடை கொண்டு விளக்க முடியாது. விடை சரியானதா இல்லையா என்பது முக்கியமில்லை; நாம் பாதுகாப்பாய் உணர்ந்து கொள்ள விடை மட்டுமே போதுமானது. இதனால் தான் நாம் அனுமானங்களை எமக்குள் உருவாக்கிக் கொள்கிறோம்”

எடுத்துக்காட்டாக காட்சி ஒன்று: பிரியத்திற்குரிய நண்பணொருவன் அயல் நாட்டிலிருந்து நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு வந்து, மீண்டும் திரும்பி விட்டதாக கேள்விப்படுகிறீர்கள்.

இதைக் கேள்விப்பட்ட கணத்திலிருந்தே, “அவனுக்கு என் மேலே ரொம்பக் கோபம். என்னை தொடர்பு கொள்ள அவனுக்கு நான் முக்கியமாகத் தெரியவில்லை, அவனுக்கு பொறாமையாயிருக்கும்” என ஆயிரம் அனுமானங்கள் உங்கள் மனதென்கின்ற மைதானத்தில் குடிகொண்டுவிட தோன்றிக் கொண்டிருக்கும்.

காட்சியில் தோன்றிய சம்பவத்தை நிதானமாகப் பார்த்தால், உங்கள் நண்பன் நீங்கள் வசித்த நாட்டிற்கு வந்துள்ளான். உங்களைத் தொடர்பு கொள்ளவில்லை. அவ்வளவுதான்.

இந்த எளிமையான காட்சியை “அனுமானம்” என்கின்ற சங்கீரணத்தால் காட்சியாக்க நினைக்கையில், உலகத்தின் எந்தக் கலைஞனும் நினைக்காத கற்பனை எண்ணவோட்டங்கள் உங்கள் மனதை “அனுமானங்களாய்” அலங்கரிக்கும்.

இங்கு நண்பன் தொடர்பு கொள்ளாமல் போனதற்கான காரணங்களை, அனுமானங்கள் மூலம் நிரப்பிவிடுகிறீர்கள்.

44 செக்கன்கள் மாத்திரம் கொண்ட இந்தக் காணொளியைக் கொஞ்சம் காணுங்கள். உங்களின் மனதின் நிலையை அது உங்களுக்கு புரிய வைக்கும்.

நீங்கள் அனுமானங்களை இன்னுமா உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?

“எல்லா அனுமானங்களும் உண்மையானவை அல்ல” என கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.