அன்புள்ள மகனுக்கு

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 33 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

கடிதங்கள் பற்றி நிறத்தில் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். கடிதங்கள் எப்போதும் பொக்கிசங்கள்.

பெற்றோரின் பாத்திரத்தை ஏற்றுக் கொள்தல் மிகப் பெரிய பொறுப்பு. கடினமான வாழ்வின் அத்தியாயம் என்றும் சொல்லலாம். சுகமான சுமை என்றும் சொல்லலாம். பெற்றோர்கள் எப்போதும் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு வாய்ப்பில்லை.

அல்பர்ட் ஐன்ஸ்டைன் பற்றி அறியாதவர் யாருமில்லை. என்னை மிகவும் கவர்ந்த ஆளுமை அவர். அவர் பற்றி நிறத்தில் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேன்.

1915 ஆம் ஆண்டு, தனது 11 வயதான மகன் ஹான்ஸ் அல்பர்ட்டுக்கு, ஐன்ஸ்டைன் எழுதிய கடிதம் ஒரு தந்தையின் அளவிலா அன்பினதும் அக்கறையினதும் அத்தோடு அறிவுரைப் பாணி கொண்ட உத்வேகம் வழங்கும் தளங்களினதும் வடிவமாய் இருக்கிறது.

letter

தனது உலகப்பிரசித்தி பெற்ற சார்புப் கொள்கை பற்றிய ஆய்வுப் பத்திரத்தை எழுதி முடித்த மாத்திரத்தில் தன் மகனுக்கு அவர் எழுதிய இந்தக் கடிதம் ஆழமானது. இந்தக் கடிதம் எழுதுகையில் சில மனக்கசப்புகள் காரணமாக தன் மனைவியிடமிருந்து பிரிந்திருந்தார். ஐன்ஸ்டைனின் மனைவியோடே அவரின் பிள்ளைகள் அந்தக் கட்டத்தில் வளர்ந்தன.

இந்தப் பதிவின் தேவை கருதி, ஐன்ஸ்டைன் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தை தமிழாக்கம் செய்கிறேன்.

அன்புள்ள அல்பர்ட்,

எனக்கு நேற்று உனது கடிதம் கிடைத்தது, அதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். நீ எனக்கு ஒருபோதும் இனிமேல் கடிதம் எழுதமாட்டாய் என நான் பயந்திருந்தேன். நான் சுரிசுக்கு வருவது, உனக்கு அவ்வளவு இஷ்டமில்லை என நான் சுரிசுக்கு வந்த வேளையில், என்னிடம் சொல்லியிருந்தாய். அதனால், நாம் வேறு இடங்களில் இருந்து கொண்டு இணைந்திருப்பதுதான் உசிதமானது. அப்போதுதான் எமது சௌகரியத்தை எதுவும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு வருடமும் ஒரு மாதமேனும் நாம் ஒன்றாக இருக்க வேண்டும், அப்போது உன்னால், உன்னை விரும்பும் அன்பு செலுத்தும் தந்தை இருப்பதைக் கண்டுணர முடியும். என்னிடமிருந்து நீ பல அழகான விடயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். அவை வேறு எங்கிருந்தும் உனக்கு கிடைக்காது. நான் கடின உழைப்பால் சாதித்த விடயங்கள் யாவும், ஊராருக்கு மட்டுமானதல்ல, விசேடமான என் ஆண் மக்களுக்கு அவை உரியன. இந்த நாட்களில் நான் எனது ஆயுளின் மிக அழகான அற்புதமான விடயமொன்றை கண்டறிந்து முடித்துள்ளேன். நீ பெரியாளானதும், உனக்கு அதுபற்றி விரிவாகச் சொல்கிறேன்.

உனக்கு பியானோவை நன்றாக பிடித்திருக்கும் ஆர்வம் பற்றி அறிந்து மகிழ்ச்சி கொண்டேன். என் எண்ணப்படி, பாடசாலையைக் காட்டிலும், பியானோவும் தச்சு வேலையும் தான் உன்னுடைய வயதுக்கு மிகவும் பொருத்தமான விடயங்கள் என்பேன். ஏனெனில், அவை இளையோரோடு நன்றாக பொருந்திப் போகிறது, உன்னைப் போன்று. உனக்கு மகிழ்ச்சி தருகின்ற அத்தனை விதமாகவும் பியானோவை வாசித்து இசையாக்கு, உனது ஆசிரியர் அதுபற்றி சொல்லித் தராவிட்டாலும் பரவாயில்லை. அப்போதுதான் உன்னால் பல விடயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். அதீத மகிழ்ச்சியோடு நீயொரு விடயத்தைச் செய்து கொண்டிருந்தால், நேரம் செல்வதைக்கூட உன்னால் அவதானிக்க முடியாமலிருக்கும். நானும் சிலவேளைகளில், என் வேலைகளில் திளைத்திருந்து பகல் சாப்பாட்டைக்கூட மறந்திருக்கிறேன்…

உன் தம்பி டிடி உடன் அன்பாயிரு.

என்றும் அன்புடன்

அப்பா.

அம்மாவைக் கேட்டதாகச் சொல்.

என்னதான் காலங்கள் மாறி, நுட்பங்கள் கூடி வந்தாலும், பேனா எடுத்து கடதாசியில் எழுதும் கடிதங்களுக்கான மௌசும் குறையவில்லை. அது தரும் ஆனந்தமும் குறையவில்லை.

எப்போதாவது, நீங்கள் அன்பாய்க் காணும் உங்களின் சக மனிதர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்புங்கள். அது அவர்களைச் சென்றடைகையில் அவர்களுக்கு ஏற்படும் ஆனந்தம், நீங்கள் ஒரு கடிதத்தை பெறுகின்ற ஆனந்தத்தை நிகர்த்தது. அவர்களுக்கு அது இன்பமயமான ஆச்சரியமாகவும் அது இருக்கும். பின்னாளில் அதுவொரு பொக்கிசமாகவும் உணரப்படும்.

“நீ, இன்றே ஒரு கடிதம் எழுது!” — கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் பதின்நான்காவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s