வெற்றுக்கடதாசியின் மனம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 21 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

எழுதுவது என்பது ஒரு குழப்பமான குதூகலம் என்றே சொல்லத் தோன்றுகிறது. அதுவொரு புரியாத புதிரின் புலன். பலன் என்றும் சொல்லிவிடலாம்.

உன்னை நீ எழுத்தோடு இணைக்கும் போதுதான் வரிகள் உருவாகும். பந்திகள் உருவாகும். சந்தங்கள் உருவாகும். அது பேனாவாக இருந்தாலும் சரி, கணினியின் விசைப்பலகையாக இருந்தாலும் சரி. எழுதுவது என்பது உன்னோடு இணைந்துவிட்ட ஒரு கூறின் வெளிப்பாடு.

உன்னைப் பிரித்துவிட்டு எழுதிவிட முடியாது. நீ சொல்வதைக் கேட்டு, தன்னியக்கமாக எழுதும் செய்நிரல்களிலும் நீ சொன்னால்தான் எழுத முடியும். எழுத்து, நீ அதனோடு ஐக்கியமாகவிருக்கின்ற நிலையில் தான் சாத்தியம் ஆகிறது.

உன்னைத் தூரமாக்கி, படர்க்கையாக எழுத்தால் வெற்றுத் தாளை நிரப்ப முனைந்தாலும், நீ எழுத்தோடு இருந்தால் தான் அங்கு கலை தோன்றும்.

write

உன் எழுத்தின் மூலம், உனக்கு நீயே எழுதிக் கொள்கிறாய். தபாலிடப்படாத கடிதங்களாய் அவை உன் குறிப்புப் புத்தகத்தின் சுவையைக் கூட்டுகின்றன. நீ எழுதுகையில், உன் இதயம் நிறங்களைப் பூசிக் கொள்கிறது. உன் ஆன்மாவை கொஞ்சமாக உன்னால் கண்டுகொள்ள அவகாசம் கிடைக்கிறது.

நான் முந்தைய எழுத்தும் ஏழாம் வருடமும் என்ற பதிவில் சொன்னது போல், எழுதுவது வலிக்கும். வலிதான் அதன் அழகு. முட்களுக்கு முத்தம் கொடுத்து ரத்தம் சிந்துகின்ற சுவை அது.

நீ எழுதுகின்ற போது, வேறுபட்ட திறன் கொண்டவனாய் மாறிவிடுகிறாய். சொற்களைச் சேர்த்து பின்னர் அவற்றைக் கோர்த்துச் செய்யும் வித்தைகளாய் மட்டும் நீ திறனாளியில்லை. உன் சொற்களோடு பொருந்தும் சந்தங்கள், உலக தத்துவத்தின் உண்மைகளைச் சொல்வதாலும் நீ வித்தியாசமாவன் தான்.

எழுத்துக்களை நீ வாசிக்கின்ற போது, உன்னால் எழுதியவரின் யாரும் பார்க்காத ஆன்மாவின் பக்கத்தை எட்டிப் பார்க்க முடிகிறது. உன்னால் அவர்களின் மனதின் இதத்தை ஸ்பரிசித்துக் கொள்ளவும் முடிகிறது. நீ எழுதுகின்ற போதும், மற்றவர்களையும் உன் ஆன்மாவின் ஒரு பகுதியை பார்க்க வழி செய்கின்ற உன் அழகு தான் நீ எழுதுவதன் சுவை.

எழுத்துக்களை வாசிக்கையில் உனக்கு கவலை வரலாம். ஆனந்தம் வரலாம். கண்ணீர் வரலாம். கடதாசியில் உணர்வுகளைப் பதிவும் செய்யும் ஆற்றல் எழுதுபவனுக்கு மட்டுந்தான் இருக்க முடியும். அவனின் எழுத்துக்களால், வெற்றுக் கடதாசி, மனமொன்றைப் பெற்று வாழத் தொடங்குகிறது.

எழுத்துக்களை வாசிக்கின்ற காரணத்தால், உன் அறையின் குளிர் போய், வெப்பம் கூடும். மாரிகாலத்தின் மழைப் பொழுதில் குளிர்போக்கும் போர்வையாய் எழுத்துக்கள் இருக்கலாம். இத்தனையும் செய்யும் வலிமை இந்த எழுத்துக்கு உண்டு.

எல்லோரும் அறிய வேண்டுமென்ற ஆர்வத்தில் எழுத்தாளர்கள் பகிர்ந்து கொள்ளும் விடயங்கள் தான் இன்றளவிலும் உலகை போசித்துக் கொண்டிருக்கிறது.

எழுதுவதால் என்ன எய்தப்படலாம் என்பதை விட தம் அறிவின் ஒரு சொட்டை உலகோடு பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தில் எழுதிப் பகிர்ந்து கொண்டிருக்கும் அத்தனை எழுத்தாளர்களையும் நினைவு கூர்ந்து நன்றி சொல்ல வேண்டுமென்று தோன்றியது. அதுவே இப்பதிவாயிற்று.

“எழுதும் எல்லோருக்கும் நன்றிகள் கோடி” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் பத்தொன்பதாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s