புன்னகைப்பூமி

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 35 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

இங்கு தன்னை அற்புதமாக எண்ணிக் கொண்டு, வாழ்வை நகர்த்துபவர்களின் தொகை ஏராளம். இது பலரினதும் அடிப்படை ஆசையாகக் கூட இருக்கிறது. இது ஓர் அற்புதமான மனித எண்ணத்தின் வெளிப்பாடுதான்.

தன்னைப் பற்றிய அற்புதங்கள் சார்பான புரிதல்களை ஒருவன் பெற்றுக் கொள்கின்ற நிலையில், வாழ்க்கை மீதான அவனின் பார்வை தெளிவு கொள்கிறது.

உன்னோடு கதைக்கும் ஒவ்வொரு மனிதர்களும் ஆறுதல் தருகின்ற வார்த்தைகளைக் கேட்க ஆவலாயிருக்கின்றனர். அவர்களின் ஆர்வம் பற்றிய அறிவிப்பு இல்லாவிட்டாலும் மனங்குளிரும் வார்த்தைகளில் தங்களைப் புதைத்துக் கொள்வதற்கான ஆசை அவர்களிடமுண்டு.

அவர்களுக்கு, உன் அழகிய சொற்களால், ஆனந்தம் – ஆறுதல் நீ தருகின்ற போது, உன் பலத்தின் வியாபிப்பைப் பற்றி அறிந்து, நீ வியப்புமடைவாய்.

அப்படியான அழகிய சொற்களில் முதன்மையானது, புன்னகை என்பேன்.

smile

சொல்லாயும் செயலாயும் வருகின்ற வனப்பு, புன்னகைக்கு மட்டுந்தான் இருக்க வேண்டும் என்று ஒரு பொது விதி செய்துவிடுவோம்.

புன்னகையை, சொல் என்பதை விட, வாக்கியம் என்று சொல்லிவிடலாம். வாயின் மலர்ச்சியின் வடிவத்தோடு அது ஐக்கியமாவதால் மட்டுமல்ல, முகம் அணிந்து கொள்கின்ற ஒள் இழையுமாவதால் அதை அப்படி வழங்கலாம்.

நீ, புன்னகைக்கும் போது, காற்று, மென்மையாய் தன் தன்மையைக் மாற்றிக் கொள்கிறது. காற்றின் அணுக்கள் தங்களுக்குள் அரவணைத்துக் கொண்டு, வெப்பம் கொள்கிறது.

பூமிக்கு வியர்வை தருகின்ற தகவாய், உன் புன்னகையின் தொடக்கம் நிற்கிறது. மலர்களைத் தரும் மரங்களும், இருட்டிலும் வளரத் தொடங்கிவிடுகின்றன.

மண்ணோடு விழுகின்ற மழையினால், மண் சந்தோசம் கொள்வதாய், உன் புன்னகையின் தண் தகவால், விண்ணிலும் மேகங்கள் கோலம் போட்டுக் கொள்கின்றன.

மாரிகாலத்தில் அடிக்கடி காணாமல் போகும் கதிரவனும் தன் நிறம் சேர்த்து நிலை கொள்ளச் செய்கின்ற வகையில் உன் புன்னகை உயர்ச்சி கொண்டது. தொலைவதும், மீளத் தோன்றுவதும் தான் சூரியனின் புன்னகை.

இங்கு புன்னகையால், பிணிகள் அகலும்.

நீ, நிறங்களைச் சுவாசிப்பதால், உன் புன்னகைக்கும் உனக்கென்றே ஒரு நிறமுண்டு. என்ன நிறம் உன் புன்னகை கொண்டாலும், அது அனைவரையும் ஈர்க்கும் நிறமாய் இருப்பதுதான் இயற்கை ஈத்த மந்திரம்.

நீண்டு, விரிந்து, பரந்து எழும் சுவாசக்காற்றின் மகுடமாய், காற்றுடனேயே முணுமுணுத்துக் கொண்டு, பரவசம் தரும் உன் புன்னகைக்கு ஈடு இங்கு ஏது?

முகத்தில் நகைகள் கொண்டு ஒப்பனை செய்வோர் இங்கு பலர், அதில் நகைமுகமாய் உன் தோற்றத்தை செதுக்கி வைத்துக் கொள்ளவதே மேல்.

உன் புன்னகைப்பூக்களின் சுவாசம் தோய்த்த காற்றை ரசிக்க இங்கு எண்ணற்ற உயிர்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன. எங்கெல்லாம் செல்கிறாயோ அங்கெல்லாம் புன்னகையால் பூங்காவொன்றைச் செய்து விடு. அங்குள்ள பூக்களை ரசிக்க வருபவர்கள் தங்களையே மகிழ்ச்சியின் பரவசத்தில் புன்னகைக்குள் தொலைத்துக் கொள்ளட்டும்.

“அந்நிலையில், புன்னகைப்பூமி, தன்னாலேயே தோன்றும்” என கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் இருபத்துநான்காவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s