மெல்லக் கிழிந்த வானம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 2 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

இன்று மின்னல் வெகுவாய் சாலையோரத்து விளக்குகளையும் தாண்டி, ஒளித்துக் கொண்டிருந்தது. அந்த சிறுகோட்டுப் போல் தோன்றிய ஒளியின் பிரமிப்பில் அவனிருக்க, அதற்கு விளம்பரம் செய்வதாய் இடி, முரசுகெழுவாய் இருந்தது.

நீ பொழிகிறாய். மெல்ல மெல்லப் பொழிகிறாய். அடுக்கடுக்காய் பொழிகிறாய். ஆனந்தமாய் பொழிகிறாய்.

தளவம் பூவின் மணத்தை என் அறையில் செயற்கையாக சேர்த்து வைத்திருந்தேன். வானம் கிழிந்ததால், அந்த மணத்தைக் கௌவிக் கொள்ள மண்ணின் வாசம் வந்துவிட்டதாக, காற்று வந்து புலனுக்குள் புகுந்து சொல்லியது.

rain--2

இங்கு எங்கு சென்றாலும், வரிசையாக நின்று கொண்டுதான் விடயங்களைப் பெற்றுக் கொள்ள யாரும் முனைவர். நீயும் வரிசையாக, துளி துளியாக அணிவகுத்து மண் தொடுகின்ற வனப்பை வியக்காமல் இருக்க முடியாது.

நீ நிரலாகப் பொழிகின்ற அழகை, தெருவிளக்குகள் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

நள்ளென் யாமத்திலும், பொன்னென விழும் உன் நிரல்களை ரசிக்காமல் இருக்க யாரால்தான் முடியும். இருட்டிலும் நீ அழகு என்று உனக்குத் தெரியுமா?

எல்லாமே மெல்ல மெல்ல குளிர்ச்சி கண்டு கொள்கிறது. வெப்பம் திணறிக் கொண்டு, வந்த திசை ஏகிவிட்டதோ என்ற ஐயமும் அவனுக்குள் உண்டு.

உன் நிமிர்ந்த விலா என்புகளைச் சேர்த்து, ஒரு கட்டுமரம் செய்து சவாரி செய்ய வேண்டும். அதில் நீருக்குள் இருக்கும் அதிசயங்கள் எல்லாமே தெளிவாய்த் தோன்றலாம்.

உன்னைக் கொண்டுதான் உலகமே இருக்கிறது என்ற உண்மையை பலரும் மறந்துவிட்டனரோ என நீ கேட்பதும் அவனுக்குப் புரிகிறது. என்னதான் நடந்த போதிலும், பூமிக்கு வந்து போகும் உன் வழக்கம் மாறாதது பற்றிய நல்லொழுக்கம் யாருமே காணாதது. நீ நட்பில் தூமணி.

உன் பெயரின் ஒரு சொட்டுச் சேர்த்து, அத்தனை மரங்களுக்கும் மறுபெயர் வைக்க அவனுக்கு ஆசை.

நீ இன்னும் பொழிந்து கொண்டிருக்கிறாய். நீ இப்போதும் பொழிவதாய், சத்தம் போட்டு முழக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது. உங்களுக்குள் எத்துணை ஒற்றுமை!

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் இருபத்துமூன்றாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

இது தண்ணீர்!

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 6 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

நீருக்குள் உல்லாசமாக உலா வந்து கொண்டிருந்தன இரண்டு வாலிப மீன்கள். இவை இடையில் எதிர்த்திசையில் வந்தவொரு வயோதிப மீனைச் சந்தித்தன.

வாலிப மீன்களை நோக்கி, “வணக்கம் பசங்களே, எப்படி இந்தத் தண்ணீர் இருக்கிறது?” என வயோதிப மீன் கேட்டது.

இதைக் கேட்ட வாலிப மீன்கள், கொஞ்சம் தூரம் நீந்திச் சென்று, ஒரு வாலிப மீன், மற்றைய வாலிப மீனைப் பார்த்து “தண்ணீர் என்றால் என்னடா?” என்று கேட்டது.

நாம் வாழ்கின்ற உலகில் காணப்படுகின்ற பல விடயங்கள் எங்கள் புலன்களுக்குள் தங்கிக் கொண்டிருக்காவிட்டாலும், அவை தான் எமது வாழ்வின் முக்கியமான அச்சாணிகள், அத்தோடு யதார்த்தங்களின் தொடக்கங்களாக இருந்துவிடுகின்றன.

வெளிப்படையாக காணப்படும் விடயங்களைப் பற்றிய புரிதல்கள் தோன்றுவது தான் இங்கு கடினமாயிருக்கிறது.

அறிவு என்பது ஒன்றுமேயில்லை. விழிப்புணர்ச்சி என்பதுதான் சர்வமும் ஆகும்.

விழிப்புணர்ச்சியின் வினையால் தான், அறிவு வளர்க்க முடிகிறது. அறிவால் வளர முடிகிறது. ஆய்வுகள் நிகழ்த்த முடிகிறது. வாழ்கின்ற சூழலின் வெளிகளைப் பற்றிய தெளிவு உண்டாகிறது.

எமது வெற்றுக்கண் புலனின் தோற்றத்திற்கு அகப்படாமல் போயுள்ள, வெளிப்படையான விடயங்கள் பலதும் தான் நம் வாழ்தலின் ஆதாரங்கள். அவை எப்போதும் எம் பக்கமாய் இருக்கின்றது என்பதை நாம் நினைவு படுத்திக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது.

“இது தண்ணீர்… இது தண்ணீர்.. இது தண்ணீர்!”

அப்போதுதான், விதிகளை வெல்ல, வினை செய்யும் களம் வெளிப்படையாக தோன்றும். அத்தருணத்தில், விழிப்புணர்ச்சி, பூத்துக் குலுங்கி புன்னகைப்பூ பூக்கும்.

water

2005 ஆம் ஆண்டு, நாவலாசிரியர் டேவிட் பொஸ்டர் வலஸ், கென்யொன் கல்லூரியின் நுண்கலை பட்டமளிப்பு விழாவில் நிகழ்த்திய சொற்பொழிவில் குறிப்பிட்ட ஒரு விடயத்தை, நிறத்தின் வாசகர்களோடு, பகிர்ந்து கொள்ள வேண்டுமென எண்ணினேன். அதுவே இப்பதிவாயிற்று.

அந்தச் சொற்பொழிவில் இடம்பெற்ற அற்புதமான பல விடயங்களைத் தொகுத்து ஒரு குறும்படமாகவும் வெளியிடப்பட்டிருந்தது. அந்தக் காணொளி உங்கள் பார்வைக்கு.

எம்மைச்சுற்றி, வெளிப்படையாகக் காணப்படுகின்ற அற்புதங்களை மறந்து, இல்லாதது பற்றிய தேடல்கள், அதனால் தோன்றும் கக்கிசங்கள் தான் பலரினதும் மகிழ்ச்சிகளைக் கொள்ளையடிக்கும் கூறாகியிருக்கிறது.

இந்தக் குறும்படத்தைப் பார்ப்பது பலனளிக்கும் என கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

மொத்த சொற்பொழிவும் எழுத்து வடிவில்: http://web.ics.purdue.edu/~drkelly/DFWKenyonAddress2005.pdf

மொத்த சொற்பொழிவும் ஒலி வடிவில்: http://www.youtube.com/watch?v=PhhC_N6Bm_s

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் இருபத்திரண்டாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

வாழ்வின் அற்புதமான நாள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 28 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

நீ பாடசாலையில் தமிழ்தினப் போட்டியில் வெற்றி பெற்ற நாளா? தொலைபேசியில் குரல் எப்படிக் கேட்குமென எண்ணி நீ முதன் முதலாக தொலைபேசியில் கதைத்த நாளா?

புகையிரத வண்டியில் செல்ல வேண்டுமென்ற ஆர்வத்தின் உச்சத்தில், பல ஆண்டுகள் காத்திருப்பின் பின், புகைவண்டியில் நீ பயணித்த நாளா? சூரிய கிரகணகத்தை புகைப்படச்சுருளை வைத்து பார்க்க எத்தணித்த நாளா?

பரீட்சைகளின் பெறுபேறுகளை மிகச்சிறப்பாகப் பெற்றுக் கொண்ட நாளா? ருசிக்க ருசிக்க சோறும் கரியும் முதன் முதலாகச் சாப்பிட்ட நாளா?

பூமியில் நீ பிறந்திட்ட பிறந்த நாளா? சொந்தமாக வாகனம் வாங்கவேண்டுமென நம்பிக்கை கொண்டு அதை வாங்கிவிட்ட நாளா? மாமரமொன்று நட்டு, அந்த மரம், பழங்களை நிறையத் தந்த நாளா?

day

நீ கதைக்க வேண்டுமென எண்ணியவர்கள், உன்னை அழைத்துக் கதைத்த நாளா? உலகம் சுற்ற வேண்டுமென்ற கனவின் ஒரு பகுதியேனும் நனவான நாளா?

எதுதான் உன் வாழ்வின் அற்புதமான நாள்?

எப்போதோ கேட்ட பாடலின் வரிகளை, திடீரென முணுமுணுக்க முடிந்த உன் ஞாபகத்தை நீ அறிந்த நாளா? உன்னை, அவர்கள் “அழகாய் இருக்கீங்க” என்று மெச்சிய நாளா?

ஆயிரம் பேர் கொண்ட மண்டபமொன்றில், நீ உரை நிகழ்த்திய நாளா? ஆனந்தம் தரும் அழகிய நூலொன்றை நீ வாசித்து முடித்த நாளா?

பல ஆண்டுகள் உன் கனவாயிருந்த பொருளொன்றை நீ பெற்றுக் கொண்ட நாளா? உனக்கு வெகுமதியாய்க் கிடைத்த பரிசுப்பொதியை ஆர்வத்தோடு என்னவென்று பிரித்துப் பார்த்த நாளா?

கடலுக்குள் நீ, நீச்சல் கற்றுக் கொண்ட நாளா? மண்ணுக்குள் பாதங்கள் புதைத்து உன் உடலுக்கு, பிரபஞ்ச அன்பு ஏற்றிய நாளா? கையெழுத்தால் முதன் முதலாக கடிதம் எழுதிய நாளா?

எழுதிய கவிதை, பத்திரிகையில் முதலில் பிரசுரமான நாளா? நீயெழுதிய முதல் புத்தகம் வெளியிடப்பட்ட நாளா? முதன் முதலாக நீ சம்பளம் பெற்ற நாளா?

இவை எதுவுமே அல்ல.

உன் வாழ்க்கையின் அத்தனையும் உன்னாலேயே ஆகிறது என்பதாக நீ தீர்மானம் எடுத்துக் கொள்கின்ற நாள் தான், உன் வாழ்வின் அற்புதமான நாள்.

அப்போது, அங்கு யாரையும் பற்றி முறைப்பாடு செய்ய முடியாது. யாரையும் குறை கூற முடியாது. யாரிடமும் தங்கியிருக்கவும் முடியாது. எல்லாமே நீதான். நீ மட்டுந்தான்.

உன் வாழ்க்கையின் தரத்தின் மொத்தப் பொறுப்பும் உன்னுடையது. வாழ்வின் பயணத்தின் அற்புதமான பாதையில் நீதான் பொறுப்பெடுத்து பயணிக்க வேண்டியிருக்கும்

உன் வாழ்வின் அத்தனை விடயங்களும் உன் தீர்மானத்திலேயே தங்கியிருக்கிறது என நீ முடிவெடுக்கும் இந்த அற்புதமான நாளில் தான் உன் வாழ்வே தொடங்குகிறது.

“நீ, உன் வாழ்வைத் தொடங்கிவிட்டாயா?” என கோபாலு கேட்கச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் இருபத்தோராவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

மரங்கொத்தியானோம்!

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 8 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

மரங்கொத்தி பற்றிய நினைவுகள் எனக்கு அதிகமிருக்கிறது. தென்னை மரத்தில் தன்னை இருத்திக் கொண்டு, எல்லோரும் “என்ன சத்தம் கேட்கிறது?” என்றளவிற்கு அதனை பார்க்கும் அளவிற்கு வசீகரமான வலிமை கொண்டது.

ஒவ்வொரு நாளும், மரத்தில் தன்னை இருத்திக் கொண்டு, அதனைக் கொத்துவதை இலக்காகக் கொண்டிருப்பதை அது வழக்கமாக்கிக் கொள்ளும். சிலசமயங்களில், மொத்த மரமுமே அதிர்ந்து போகுமளவில், அதன் வேலை அங்கு அபாரமாகவிருக்கும்.

மரங்கொத்தி, கொத்தியதனால் இந்த மரம் விழப்போகிறது, என்ற சம்பாஷணைகளையும் நான் கேட்டிருக்கிறேன். சூழலில் எந்த சத்தமுமே இல்லாத நேரத்தில், மரங்கொத்தி, கொத்துகின்ற சத்தத்தின் வடிவு அழகிய கவிதை.

“டொக்.. டொக்.. டக்.. டக்..” என்றவாறு தொடர்ந்து செல்கின்ற மரங்கொத்தியின் ஒலி வித்தியாசமானது தான். கிராமச்சூழலின் அழகுக்கு எழில் சேர்ப்பதற்கு மரங்கொத்தியின் ஒலிக்கு அதிக பலமுண்டு.

wood-ii

இங்கு மரங்கொத்திகள் போலவே, நாமும் இப்படியான சத்தங்களை எல்லாச் சூழலிலும் கேட்கத் தொடங்கியிருக்கிறோம். கையடக்கத் தொலைபேசி தொட்டு கணினி மட்டும் விசைப்பலகைகளின் ஆதிக்கம் அதிகமென்றே சொல்ல வேண்டும். குறித்த சாதனங்களுக்கான அறிவுறுத்தல்களை உட்செலுத்த அவை ஆதாரங்களாகிவிடுகின்றன.

ஒலி கேட்காத விசைப்பலகைகளிலும் கூட, குறித்த கருவியின் அமைவுகளின் அடிப்படையில், இந்தச் சத்தங்கள் தோற்றம் செய்யப்படுகின்றன. இந்தச் சத்தங்கள் சொல்வதெல்லாம், எல்லோரும் எதையோ ஒன்றை எழுதிக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான். இங்கு எழுதுதல் என்பது கணக்கெடுக்கப்படாத ஒரு காரியமாகச் சென்றுவிட்டது போன்ற எண்ணம் காணப்படுகிறது.

ஆனாலும், எல்லோரும்தான் எழுதிக் கொண்டிருக்கின்றனர். எப்படியோ யாருக்கோ எழுதிக் கொண்டேயிருக்கின்றனர்.

இந்த எழுத்துக்கள் எல்லாமே, குறித்த கணப்பொழுதின் உணர்ச்சிகளை தன்னகம் பொதித்து வைத்ததாகக் காணப்படுவது என்னமோ உண்மைதான். இப்படி தங்கள் எண்ணங்களை அந்தச் சந்தர்ப்பத்தின் அழகிய நிலைக்குள் எழுத்துக்களால் பரிவர்த்தனை செய்துவிட எல்லோராலும் தான் முடிகிறது.

இந்தத்திறன் அவர்களை அறியாமலேயே அவர்களிடம் குடிகொண்டிருப்பதை யாருமே கண்டு கொள்வதில்லை. கண்டு கொள்ளப்பட்டு, காரியம் செய்ய வேண்டிய தேவையை இந்தக் காலம் உணர்த்துகின்றது.

ஆனாலும், இங்கு எழுத்துக்களால் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள அவ்வளவு சிரத்தை யாரும் எடுப்பதாகத் தெரியவில்லை. அத்தனை பேரும் மரங்கொத்தி போலே, சத்தம் எழுப்பிக் கொண்டு, தங்கள் உலகத்தில் மட்டுமே சஞ்சரிக்கிறார்கள். இது பிழையானது என்று சொல்வதற்குமில்லை.

இப்போதெல்லாம், என்னால் என்னைச்சுற்றி எப்போதுமே மரங்கொத்திகளைக் காணமுடிகிறது. நான் கிராமத்திற்கு சென்று மரங்கொத்தி பார்க்க வேண்டுமென்ற ஆசைகளை மறக்கச் செய்துவிடுமளவிற்கு இந்த மரங்கொத்திகள் வலிமை பெற்றிருக்கின்றன.

“மரங்கொத்திகளை நான் ரசிக்கிறேன்,” என கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் இருபதாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

வெற்றுக்கடதாசியின் மனம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 21 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

எழுதுவது என்பது ஒரு குழப்பமான குதூகலம் என்றே சொல்லத் தோன்றுகிறது. அதுவொரு புரியாத புதிரின் புலன். பலன் என்றும் சொல்லிவிடலாம்.

உன்னை நீ எழுத்தோடு இணைக்கும் போதுதான் வரிகள் உருவாகும். பந்திகள் உருவாகும். சந்தங்கள் உருவாகும். அது பேனாவாக இருந்தாலும் சரி, கணினியின் விசைப்பலகையாக இருந்தாலும் சரி. எழுதுவது என்பது உன்னோடு இணைந்துவிட்ட ஒரு கூறின் வெளிப்பாடு.

உன்னைப் பிரித்துவிட்டு எழுதிவிட முடியாது. நீ சொல்வதைக் கேட்டு, தன்னியக்கமாக எழுதும் செய்நிரல்களிலும் நீ சொன்னால்தான் எழுத முடியும். எழுத்து, நீ அதனோடு ஐக்கியமாகவிருக்கின்ற நிலையில் தான் சாத்தியம் ஆகிறது.

உன்னைத் தூரமாக்கி, படர்க்கையாக எழுத்தால் வெற்றுத் தாளை நிரப்ப முனைந்தாலும், நீ எழுத்தோடு இருந்தால் தான் அங்கு கலை தோன்றும்.

write

உன் எழுத்தின் மூலம், உனக்கு நீயே எழுதிக் கொள்கிறாய். தபாலிடப்படாத கடிதங்களாய் அவை உன் குறிப்புப் புத்தகத்தின் சுவையைக் கூட்டுகின்றன. நீ எழுதுகையில், உன் இதயம் நிறங்களைப் பூசிக் கொள்கிறது. உன் ஆன்மாவை கொஞ்சமாக உன்னால் கண்டுகொள்ள அவகாசம் கிடைக்கிறது.

நான் முந்தைய எழுத்தும் ஏழாம் வருடமும் என்ற பதிவில் சொன்னது போல், எழுதுவது வலிக்கும். வலிதான் அதன் அழகு. முட்களுக்கு முத்தம் கொடுத்து ரத்தம் சிந்துகின்ற சுவை அது.

நீ எழுதுகின்ற போது, வேறுபட்ட திறன் கொண்டவனாய் மாறிவிடுகிறாய். சொற்களைச் சேர்த்து பின்னர் அவற்றைக் கோர்த்துச் செய்யும் வித்தைகளாய் மட்டும் நீ திறனாளியில்லை. உன் சொற்களோடு பொருந்தும் சந்தங்கள், உலக தத்துவத்தின் உண்மைகளைச் சொல்வதாலும் நீ வித்தியாசமாவன் தான்.

எழுத்துக்களை நீ வாசிக்கின்ற போது, உன்னால் எழுதியவரின் யாரும் பார்க்காத ஆன்மாவின் பக்கத்தை எட்டிப் பார்க்க முடிகிறது. உன்னால் அவர்களின் மனதின் இதத்தை ஸ்பரிசித்துக் கொள்ளவும் முடிகிறது. நீ எழுதுகின்ற போதும், மற்றவர்களையும் உன் ஆன்மாவின் ஒரு பகுதியை பார்க்க வழி செய்கின்ற உன் அழகு தான் நீ எழுதுவதன் சுவை.

எழுத்துக்களை வாசிக்கையில் உனக்கு கவலை வரலாம். ஆனந்தம் வரலாம். கண்ணீர் வரலாம். கடதாசியில் உணர்வுகளைப் பதிவும் செய்யும் ஆற்றல் எழுதுபவனுக்கு மட்டுந்தான் இருக்க முடியும். அவனின் எழுத்துக்களால், வெற்றுக் கடதாசி, மனமொன்றைப் பெற்று வாழத் தொடங்குகிறது.

எழுத்துக்களை வாசிக்கின்ற காரணத்தால், உன் அறையின் குளிர் போய், வெப்பம் கூடும். மாரிகாலத்தின் மழைப் பொழுதில் குளிர்போக்கும் போர்வையாய் எழுத்துக்கள் இருக்கலாம். இத்தனையும் செய்யும் வலிமை இந்த எழுத்துக்கு உண்டு.

எல்லோரும் அறிய வேண்டுமென்ற ஆர்வத்தில் எழுத்தாளர்கள் பகிர்ந்து கொள்ளும் விடயங்கள் தான் இன்றளவிலும் உலகை போசித்துக் கொண்டிருக்கிறது.

எழுதுவதால் என்ன எய்தப்படலாம் என்பதை விட தம் அறிவின் ஒரு சொட்டை உலகோடு பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தில் எழுதிப் பகிர்ந்து கொண்டிருக்கும் அத்தனை எழுத்தாளர்களையும் நினைவு கூர்ந்து நன்றி சொல்ல வேண்டுமென்று தோன்றியது. அதுவே இப்பதிவாயிற்று.

“எழுதும் எல்லோருக்கும் நன்றிகள் கோடி” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் பத்தொன்பதாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

வெயிலில் மழை தேடுகிறான்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 44 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

பேரூந்து நிலையத்தின் வாசலில் அவனின் பயணம் தொடங்குவதற்கான ஏற்பாட்டில் பேரூந்திற்காய் காத்திருந்தான்.

அவன் கண்களுக்கு எட்டிய தூரத்தில் பூமியின் மேற்பரப்பில் நீர் நிற்பதாய் தோன்றியது. சரி, அது நீங்கள் நினைப்பது போன்று கானல் நீர் தான் என்பதைப் புரிந்தும் கொண்டான்.

சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தின் மத்தியில் அவனின் எண்ணமெல்லாம், அந்தக் கானல் நீரின் நினைவுகளோடு, மழையைத் தேடிச் செல்லலாயிற்று.

“குடை பிடித்து செருப்புமிட்டு, புத்தகமும் ஏந்தி குடுகுடுவென நடந்து வரும் குழந்தைகளே கேளீர்..” என மழை பற்றி அவன் பாடசாலையில் இரண்டாம் வகுப்பில் படித்த அறிவுரைப் பாட்டும் அவன் எண்ணத்திற்குள் வந்து தொங்கிக் கொண்டிருந்தது.

மழை என்பது இயற்கையின் அற்புதமான பரிசு என அவனிடம் பல நேரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

rain

ஆனாலும், “மழை பூமியைத் தொடாதா?” என ஏங்குபவர்கள் இருந்தாலும், “ஏன் தான் இப்படி மழை பெய்யுதோ?” என அங்கலாய்ப்பவர்கள் தொகை இங்கு அதிகமாய் இருப்பதை அவனால், ஏனென்று நியாயப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

குடையைத் தாண்டி, மழை வந்து மேனி தொட்டால், குடையோடு கடிந்து கொள்வோர் இங்கு யாருமில்லை. மழையோடே கடிந்து கொள்கின்றனர். வீழ்கின்ற ஒவ்வொரு மழைத்துளிக்கும் சோக நிறம் பூசியும் விடுகின்றனர். கவலைகளை அது தொடுமிடமெல்லாம் பரப்ப வேண்டும் என்ற ஆவலின் தேவையா இது என்று அவனுக்கு தெரியவில்லை.

மழையை, துக்கம் தரும் தூறலாகவோ — கவலை கொண்டு வரும், கருமேகத்தின் பெருதியாகவோ கண்டு கொள்ள வேண்டுமென இவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்திருக்க முடியும்?

மழை கொண்ட கலையின் அழகைக் காண இங்கு யாருக்கும் புலன்கள் திறக்கவில்லையா?

நிலத்திலுள்ள விதைகளின் காதுகளுக்குள் மழை முணுமுணுக்கும் செய்தியால் தான் அதனால், விர்ரென வளர்ந்து கொள்ள முடிகிறது.

யாருக்குமே கேட்காமல், குருதி சொட்டும் இதழ்களை விரித்துக் கொள்கின்ற அந்தச் செடியின் வனப்பும் மழையின் ஸ்பரிசலில் தான் முழுமை கொள்கிறது.

கடலைத் தொட்டு, மழை முத்தமிடுகின்ற வேளையில், கடலும் தன்னை விட்டு பிரிந்த உயிரின் பகுதியொன்று தனக்குள்ளே மீண்டும் வந்து சேர்வது பற்றி அகமகிழ்ச்சி கொள்ளும். அலைகளும் மகிழ்ச்சியை ஆடிப்பாடிக் கொண்டாடிக் கொண்டிருக்கும்.

மழை பூமிக்கு வரும்போது அதன் குரலில் கூட மெல்லிய புன்னகையின் சுவாசம் தெறிக்கும். அந்தக் குரலின் தொடர்ச்சியாய் காகிதக் கப்பல் செய்து கடல் போல பரவசமடையும் சிறுவர்களின் புன்னகையும் சேர்ந்து கொள்ளும்.

மழை, பூமி தொடுகின்ற வசந்தத்தில் அவனைச் சுற்றி என்ன நடந்தாலும் அதனை அவன் நினைவுக்குள் பூட்டிக் கொண்டு காத்துக் கொள்ள முடிகிறது. மழைக்கும் நினைவுகளுக்கு அவ்வளவு பிரியமா என்று யாரும் வியந்ததுண்டோ?

மழைக்குள்ளே சென்று மூழ்கிவிட்டால், உலகின் சந்தோசப் புலன்களின் ஸ்பரிசத்தை உணரலாம் என்ற நம்பிக்கை அவனிடம் உண்டு.

மழைக்குள் இன்னும் மூழ்கிப்பார்த்தால், உழவனின் மகிழ்ச்சி அதில் விதைக்கப்பட்டிருக்கும். வரட்சியின் கூக்குரல்கள் அங்கு அடக்கப்பட்டிருக்கும். தாகம் தொலைத்த கணத்தின் சுவாசங்களின் தொகுப்புகள் மூச்செடுத்துக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு மழைத்துளியுள்ளும் ஓராயிரம் கனவுகள் நிரம்பியிருக்கின்றன. ஒரு உயிருக்காகவேனும் நாம் உதவ வேண்டும் என்றே அது ஜனனம் எடுக்கிறது. நீ பிறந்தாயா? அல்லது வானத்திலிருந்து விழுந்தாயா? என்று இனி நீங்கள் மழையைப் பார்த்துக் கேட்கலாம்.

மழைத்துளிகளின் குரலை உங்களால் கேட்க முடிவது போல், மழைத்துளிகளும் உங்களின் குரலை தனக்குள்ளே சேமித்துக் கொள்கிறது. மழைக்கு உணர்வுகளைக் காவும் திறனிருக்கிறது என்பதாக அவன் எண்ணிக் கொள்கிறான்.

வீட்டுக்குச் செல்ல வேண்டிய பேரூந்து வந்துவிட்டது. அவனும் அதில் ஏறிக் கொண்டான்.

அன்று மழை பெய்யவில்லை. ஆனால், அவன் எண்ணக்கடலுக்குள் மழை பெய்யெனப் பெய்ந்து கொண்டேயிருந்தது.

(யாவும் கற்பனையல்ல)

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் பதினெட்டாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

அவன் மரங்களை வாசிக்கிறான்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

வெளியே முழுக்க வெளிச்சம் நிரம்பிக் கொண்டிருந்தது. கொஞ்சம் இருட்டு, அவன் அறைக்குள் சென்று வெளிச்சத்திற்குப் பயத்தில் ஒளிந்து கொண்டது.

அடிக்கடி அவன் அறை வழியாகச் செல்லும் காற்று, அவன் அறையின் யன்னலின் திரைச்சீலையை விலக்கி, வெளிச்சத்திற்கு உதவிக் கொண்டிருந்தது. ஆனாலும், கொஞ்சமாய் ஒளித்திருந்த இருட்டை திரைச்சீலையை விலக்கி வந்த வெளிச்சத்தால் பிடிக்க முடியவில்லை.

tree-human-1

வெளிச்சம் முயன்று கொண்டேயிருந்தது. தொடர்ந்து தோற்றுக் கொண்டுமிருந்தது.

யன்னலின் வழியேயிருந்த பூக்கன்று மட்டும், இருட்டைப் பிடிக்க எத்தணிக்கும் வெளிச்சத்தின் பக்கம் தன் தலை சாய்த்து அதன் முயற்சிகளைப் பாராட்டிக் கொண்டிருந்தது.

வெளிச்சத்தை நேசிக்கும் மரங்கள் போலத்தான் அவனை, அவன் நினைத்துக் கொள்வான். மரங்களை அவன் வெளிச்சத்திலும் இருட்டிலும் வாசித்துக் கொண்டேயிருந்தான்.

மரங்கள் அவனைப் போன்று ஒன்றாகவிருப்பதால் மட்டும் அவனுக்கு மரங்களைப் பிடிக்கவில்லை. அவனைப் போன்று வித்தியாசமாக இருப்பதாலும் அவனுக்கு அவற்றை பிடிந்திருந்தது.

மரங்களின் அசைவுகளோடு சம்மதம் தெரிவிப்பது, அதன் ஒலிக்கும் நளினத்துக்கும் மட்டுமல்ல — எவ்வளவு தான் அசைவுகள் போட்டாலும் தன் நிலையில் நின்று நிலைப்பதாலும் தான் அவனுக்கு அதனோடு சம்மதம் தோன்றியிருக்க வேண்டும்.

வானவில்லின் தோற்றத்தை காணத் துடிக்கின்ற அவனின் ஆசையைப் போல், மரங்களும் ஆசை கொள்வது அவனுக்கும் தெரியும். வெளிச்சத்தைப் பாராட்டினாலும் இருட்டின் மீதும் மரங்களைப் போல், அவனுக்கும் ஈர்ப்பு உண்டு.

அதனால் தான், அவன் வெளிச்சத்தில் வானவில் பார்த்தாலும், அப்பாவியான நிழலுக்கு வடிவம் கொடுக்கும் இருட்டையும் அவன் நேசித்துக் கொண்டே இருக்கிறான்.

வலிகளை மரங்கொத்தி தந்தாலும், மனிதர்கள் தந்தாலும் பொறுத்திருந்து வாழ்வைக் தொடர்வதில் மரங்களுக்கும் அவனுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

மகிழ்ச்சியை இழப்பினால் தான் அதிகம் புரிந்து கொள்ள முடிகிறது. இலைகள் உதிருகின்ற நேரமும் கேசம் உதிருகின்ற நேரமும் மகிழ்ச்சி பற்றிய நினைவின் விம்பங்கள் மரங்களுக்குள்ளும் அவனுக்குள்ளும் தோன்றுவதை இயற்கையின் ஏற்பாடு என்பான்.

மரங்களின் வலிகளை சேர்த்து வைக்க, அவனிடமே வானமே இருக்கிறது. மரங்களிடம், அவனின் வலிகளைக் கோர்த்து வைக்க, விரிகின்ற கிளைகள் இருக்கின்றன.

வார்த்தைகளை அடிக்கடி விழுங்கிவிட்டால், அது காது வழியாக விருட்சகமாய் தோன்றிவிடும் என அவன் எண்ணுவது போல், மரங்களும் தாம் பழங்களை தின்றுவிடுவதால், அது வேர்கள் வழியாக பூத்துக் குலுங்கிவிடும் எனவும் நம்பிக் கொள்கின்றன.

தனித்திருத்தலின் சுகத்தையும் வலியையும் அவனைப் போலவே, மரங்களும் நேசிக்கின்றதாக அவனிடம் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

துயரங்கள் வந்த போதும், பட்டினியாய் இருந்த போதும் பொறுமையாய் இருந்து வாழ்வைத் தொடர்ந்தால் வழிகள் பிறக்கும் எனக் காட்டும் மரங்களின் வாழ்வை அவனால் நகலெடுத்துக் கொள்ள முடியுமாயிருக்கிறது.

என்னதான் மரம் தனித்திருந்தாலும், தோப்பின் ஒரு பகுதியாய் நின்றாலும், அந்த மரம் இயற்கையில் மிகப்பெரிய அற்புதமான படைப்பென்பதில் அவனுக்கு மிகப் பெரிய நம்பிக்கை உண்டு. மரமும் அவனை, இயற்கையின் மிகப்பெரிய அற்புதமான படைப்பாக நம்புவதை, மரத்தால் இன்று வரைக்கும் அவனிடம் சொல்ல முடியவில்லை.

திடீரென அலாரம் அடித்தது. எழுந்து நின்றவன், யன்னல் திரைச்சீலையை மெல்ல நகர்த்தினான்.

அறையுள்ளே, வேகமாக வந்த வெளிச்சம், இருளை அப்படியே கௌவிக் கொண்டது.

ஈற்றில் வெளிச்சம் வென்றது.

(யாவும் கற்பனையல்ல)

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் பதினேழாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

ஆன்மாக்களின் வானம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  42 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

கோடை காலத்தின் வெயிலைக் கண்ட போதுதான், மறைந்திருக்கும் கோடை காலத்தின் குளிரையும் கண்டு கொள்கிறேன்.

கோடை காலத்தின் குணாதிசயங்கள் எமக்குள் இருப்பது போல், தோற்கடிக்க முடியாத குளிர் காலத்தின் குணாதிசயங்களும் எம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கின்றன.

நமக்குள்ளே பருவங்கள் மாறுகின்ற நிலைக்கு இதுகூட காரணமாகலாம். “வெறும் கோடை காலத்தை மட்டும் நீ கொண்டிருக்கவில்லை.உனக்குள் ஒரு பிரபஞ்சத்தையே கொண்டிருக்கிறாய்” என்று கோபாலு எப்போதும் திடமாகச் சொல்வான்.

soul

பிரபஞ்ச வேட்கையின் வெளிப்பாடு தான் நீ — இங்கே இருக்கிறாய். ஒரு விநாடிக்குள் ஒடுக்கற்பிரிவடைந்து, நகலெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான கலங்களும் நீயும் பிரியாதவைகள் தாம். நீயும் பிரபஞ்சமும் போல.

நீயிங்கு இருப்பதற்கு காரணமுண்டு. நீ பேயுமல்ல, பிசாசுமல்ல. ஒருபோதும் அப்படி ஆகவும் மாட்டாய்.

உன்னாலேயே காற்றும் தன் திசைக்கு திட்டமில்லா கோணம் போடுகிறது. நீ செல்கின்ற நிலையோடு அது தன்னை மாற்றிக் கொள்கிறது. நீரும் அப்படித்தான். உன்னிடம் நிறையப் பொறுப்புக்கள் உள்ளன.

ஒருநாளில் ஆகாயத்தைக் காணுகையில், அங்கிருக்கும் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் ஓர் ஆன்மா என்றவாறு உணர உனக்குள் ஞானம் வெளிக்கும்.

அத்தனை ஆன்மாக்களும் மொத்தமாய் வானில் இருந்து கொண்டிருக்க, உன்னால் எப்படி தனிமையாக எப்போதுமே இருக்க முடியும்?

நீ பிரபஞ்சத்தின் ஒரு பகுதி — பிரபஞ்சமும் உனது இன்னொரு பகுதி. இன்று நீ தனிமையாய் இருக்கலாம், என்றும் நீ தனித்திருக்கமாட்டாய்.

“இது உண்மையென நீ உணர்வாய்,” என கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் பதினாறாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.