எட்டும் வானமும் எட்டாவது வருடமும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 47 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

எழுதுவதற்கு உசிதமான நேரம் வரவேண்டுமென காத்திருத்தல் என்பதன் வருவிளைவு, எதுவுமே எழுதாமல் வெற்றுத்தாளோடு இருக்கின்ற நிலையைத் தான் தோற்றுவிக்கும்.

எழுத வேண்டுமென்ற உத்வேகம் வருகின்ற போதுதான் எழுதலாம் என்று இருந்தால், நீ இருப்பாய் — எழுத வேண்டிய சொற்கள் அந்த நேரத்திற்காகக் காத்திருக்காது.

எழுதுவதற்கு இதுதான் தருணம். எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் எழுத வேண்டும். எழுதுவதெல்லாம் அகிலம் முழுக்க காண்பிக்க வேண்டுமென்பதில்லை, ஆனால் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.

சொற்கள், உன் பக்கம் நேசத்தோடு வந்து இருப்பிடம் கேட்க, நேரம் வரட்டும் என்று அதற்கு பதில் சொல்வது எந்த வகையில் பொருந்தும்?

எழுதுவது என்பது மந்திரம் போன்ற வித்தை. நீ, உன் வீட்டின் ஜன்னல் வழியாக காலை நேரத்தில் காணும் காட்சி, பேருந்தின் ஜன்னலோரம் போசிக்கின்ற உத்வேகம், மழை பெய்கின்ற நாளில் மழையில் நடக்கையில் தோன்றும் எண்ணம், வீட்டிற்குள் வந்து இருக்கையில் தோன்றும் நினைவு, காணும் மனிதர்கள் தரும் வாழ்வின் அடையாளம் என எழுத்தின் தோற்றுவாய்கள் ஆயிரம் உள.

காட்சிப்புலத்தின் தோன்றல்கள், மனதில் தருகின்ற தென்றலையும் புயலையும் எண்ணத்தின் நிழலாக்கி, ஒவ்வொரு சொல்லாக செதுக்கித் செய்வதுதான் எழுதும் நிலை. ஒரு சொல்லோடு சிநேகம் கொண்டு, இன்னொரு சொல் அதன் அருகே அமர்ந்து கொள்கின்ற நிலையில் உயிர் கொள்ளும் எழுத்தின் நிலை – ஆத்மா.

ஒரு வாக்கியம் பூரணம் காண்கையில் சொற்கள் அடைகின்ற மகிழ்ச்சியும், நீ அடையும் களிப்பும் இரண்டல்ல. அவை ஒன்று.

நீ, ஒரு சொல்லாய் தொடங்கியதை பல சொற்கள் கோர்த்து நிறைவு செய்கிறாய். அர்த்தம் பெற்ற சொற்கள் மகிழ்கின்றன. நீ தொடங்கியதை நிறைவு செய்ய வேண்டும். நீ, தொடங்கியதை நிறைவு செய்கின்ற போதுதான், மகிழ்ச்சியை மனதோடு பூசிக் கொள்வாய்; புதிதாய் பலதும் கற்றும் கொள்வாய்.

நீ எழுதுகின்ற எழுத்தினால் எங்கு விரும்புகிறாயோ அங்கெல்லாம் செல்லலாம். விண்ணுக்கு ஏகியதாய் ஒருவன், எழுத்தின் மூலம் சொன்னதன் விளைவுதான், மனிதன் விண்ணுக்குச் செல்கின்ற முயற்சிக்கு வித்திட்டது. உன் எழுத்தின் மூலம் எட்டாதது எதுவுமில்லை. எல்லாமே எட்டும். வானமும் வசப்படும் — வானத்தையும் நீ எட்டிப்பிடித்து விளையாடலாம்.

உன் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் அத்துணை எண்ணங்களையும் பாரபட்சமின்ற கேட்டுக் கொள்கின்ற ஆவலோடு எப்போதும் இருக்கும் யாரையும் உன்னால் ஒருபோதும் எங்கேயும் தேடிப்பிடிக்க முடியாது. முடியவே முடியாது. ஆனால், எழுத்து மட்டும், உன் எண்ணங்களை எல்லாவற்றையும் கேட்பதற்காக, உன்னோடு எப்போதும் இருக்கும்.

உன்னையும் வாசித்துக் கொண்டு, உன் எண்ணங்களையும் நேசித்துக் கொண்டு இருக்கும் ஆத்மா தான் எழுத்து.

இன்று — இப்போது நீ எதை எழுதப் போகிறாய்? — நீ சொல்! வேண்டாம். சொல்லாதே, எழுதிவிடு.

8th-year

இன்றோடு, நிறம் தனது எட்டாவது ஆண்டில் தடம் பதிக்கிறது. இந்த நிறத்தில் இருக்கும் ஒவ்வொரு பதிவும், என் எண்ணங்களுக்குள் நிழலாடும் காட்சிகளையும் கருக்களையும் ஒவ்வொரு சொல்லாகக் கோர்த்துச் செய்தது.

நான் வாசிக்க விரும்புகின்ற பதிவுகளைத்தான், நான் நிறத்தில் எழுதுவேன். உங்களுக்கும் அந்தப் பதிவுகள் பிடித்தது பற்றி பேருவகை எனக்குண்டு.

உங்கள் எண்ணங்களுக்கு, இந்தப் பதிவுகள் வசந்தம் கொண்டு தருவதாய் நான் எண்ணிக் கொள்கிறேன். எண்ணத்தில் வசந்தம் வந்தால், உங்கள் வாழ்வில் அழகிய மாற்றம் காணத் தொடங்கியிருக்கும்.

நிறத்தோடு பயணிக்கும் உங்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் எண்ணங்களுக்கு நிறத்தின் மூலமாய் நான் வசந்தம் சேர்ப்பேன். அப்போதும் நீங்கள் அந்த நிறங்களை பூசிக் கொள்ள ஆர்வத்தோடு இணைவீர்கள் என நம்புகிறேன்.

நிறங்கள் பூசப்படும்…

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –