புழுதிச் சிக்கல்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

விடிகின்ற காலையில் உன் பார்வைப் புலத்திற்குள் தோன்றுகின்ற காட்சிகளில் மனிதர்களும் வந்துவிடுவது வழக்கம் தான். அவர்கள் உன் பார்வையில், புதியவராய் இருக்கலாம். பழையவராய் இருக்கலாம். எதுவாகவும் இருக்கலாம்.

ஆனால், அலர்கள் உனக்கு எப்படித் தோன்றினாலும், அவர்களின் பார்வையில் நீ எப்படித் தோன்றினாலும் — ஒரேயொரு உண்மைதான் மிக மிக உண்மையானது. நீ வாசிக்கின்ற இந்தக் கணம் இனி எப்போதுமே திரும்பி வராது.

உடைந்த கண்ணாடிக் கோப்பைகளை துண்டு துண்டங்களாய் ஒட்டிக் கொண்டு, அதனுள் நீருற்றி அருந்துகின்ற ஆசை, உனக்கு இருக்கிறதா? உடைந்தது என்பது இறந்தகாலம். இன்னும் நீ அந்தக் காலத்தில் உன்னைத் தக்கவைத்துக் கொண்டிருக்க முடியாது. அங்கிருந்து நீ முன்னேறி நடக்க வேண்டியிருக்கிறது.

உன்னிடம் தான் சொல்கிறேன். புழுதிகளை தட்டியகற்றிக் கொண்டு, முன்னேறிச் செல்ல முதலில் முற்படு!

நீ எண்ணியதெல்லாம் நடக்காது போனாலும், நிகழ்காலத்தின் நிஜத்தை மறைக்கின்ற உன் மேல் படர்ந்துள்ள புழுதியை நீ அகற்ற வேண்டும்.

யாரை நீ வெறுத்தாலும், உன் யார் விரும்பினாலும், உன்னைச் சுற்றிக் கொண்டிருந்து, நீ யாரென்ற அற்புதத்தை மறைக்கின்ற அந்தப் புழுதியை நீ போக்க வேண்டும்.

நீ தனித்திருக்கிறாய் என்று எல்லோரும் சொன்ன போதும், உன் தனிமைதான் அத்தனை சோகத்திற்கும் மூலதனம் என அவள் சுட்டிக் காட்டிய போதும், உன் முகம் மறைக்கும் புழுதியை நீ அகற்ற முனைய வேண்டும்.

now

நீ கனவு காணலாம், உன்னைப் பாராட்டுவதில் அவர்கள் மகிழ்ச்சி கொள்ளலாம். நீ சொல்ல நினைத்ததை உன் மூளையின் ஒரு பகுதி திடீரென மறந்து போய்விடலாம். கனவிலும் களைப்படைந்து போகலாம். உன் வார்த்தைகள் தங்களுக்குள்ளேயே தணிக்கை செய்யலாம். ஆனாலும், நீ உன்மீது, படர்ந்த புழுதியை போக்க முயல வேண்டியிருக்கிறது.

நீ தான் இங்கு எல்லாமே! உன்னைச் சூழ்ந்துள்ள புழுதி என்பது நீயன்று.

ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான தடவைகள், நீயறியாமலேயே உன் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது. சமுத்திர அளவு குருதியை அப்படியே பம்பிக் கொண்டிருக்கிறது. இந்தக் கணத்தை நீ தொலைத்துவிடக் கூடாது. இதுதான் உண்மையான தருணம்.

உன் மனத்தில் நிலைகொண்டுள்ள புழுதியைப் போக்கிட, என்ன செய்ய வேண்டுமோ அவை அத்தனையையும் நீ செய்ய வேண்டியிருக்கிறது.

புழுதி அகற்றிட அரிய நல் மருந்தொன்று இருக்கிறது. அது இந்தத் தருணம் தான் எல்லாமுமே என்று வாழ்க்கையின் அழகியலை ரசித்திருப்பது. நேற்று பற்றிய நினைவும் நாளை பற்றிய கனவும் தான் மனதிலும் உடலிலும் தேவையற்ற புழுதியை தோற்றுவிக்கும் தகவுடையன.

இந்தப் பதிவை வாசித்து முடிக்கப் போகிறாய் இப்போது, நீ செய்ய வேண்டியதெல்லாம் இந்தக் கணத்தில் என்ன செய்யலாம் என்று எண்ணி, அந்த விடயத்தைச் செய்து, காலங்கடந்திருக்க வழி செய்வதுதான்.

“நீ இந்தக் கணத்தில் என்ன செய்யப் போகிறாய்? — உன் ஆயுளின் மணிக்கூடு, ஒவ்வொரு நொடியாய் உன் நேரத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறது. நீ காலங் கடந்திருக்க காரியம் செய்யத் தொடங்கு” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.