வெல்டன்ஸ்வாங்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 4 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

வாழ்க்கை என்பது ஒவ்வொரு நாளும் விடிகின்ற பொழுதோடு ஆரம்பிக்கிறது. வாழ்வின் அற்புதம், அதனை நினைத்த போதெல்லாம் புதிதாகக் தொடங்க முடிவதுதான்.

வாழ்க்கையை ஒரு தனிநபர் காண்கின்ற கோலத்திற்கு ஜேர்மன் மொழியில் ஒரு பெயர் இருக்கிறது. அதுதான் வெல்டன்ஸ்வாங் (Weltanschauung).

நீ உன் வாழ்வின் எல்லையை உன் மனதின் எல்லையோடு மட்டுப்படுத்திக் கொள்கிறாய். அது சாதாரணமானது தான். உன் நம்பிக்கையின் பெறுதியாகவே, உனது உலகம் பற்றியதான் பார்வை இருந்து விடுகிறது.

trapped-mind

வெல்டன்ஸ்வாங்கிற்குள் சிக்கித் தவிக்கின்ற சோகம், உனக்கு யாராலும் ஏற்படுத்தப்படவில்லை. நீயே அதுவாகிவிடுகிறாய். உன்னாலே உன் உலகம் குறுகிவிடுகிறது.

நீ குறிப்பிட்ட தொழிலைச் செய்கின்றாய் என்று வைத்துக் கொள். உன்னைப் போன்று அதே தொழிலைச் செய்யும் மற்றவர்களோடான உன் நெருக்கம் அதீதமாக இருக்கும். உனது அபிலாஷைகள், எதிர்பார்ப்புகள், ஆர்வங்கள் எல்லாமே நீ பழகின்ற அந்த வட்டத்தோடு, நின்று விடும்.

இருந்த போதிலும், நீ பழகின்ற வட்டத்திலுள்ளவர்கள் பணம் கொண்டவராய் இருந்தால், உன்னிடமும் அதிக மனம் வந்து சேர வேண்டுமென எண்ணிக் கொள்வாய். அவர்கள் ஆடம்பரமாக வாழ்ந்தால், நீயும் ஆடம்பரமாக வாழ வேண்டும் என ஆசை கொள்வாய். உன் வாழ்வின் தெரிவுகள், அவர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும்.

ஆனாலும், இத்தனை ஆசைகளைக் கொண்டும், அவர்கள் போல ஆக வேண்டுமென்ற ஆசை மட்டும் மிஞ்ச, ஒவ்வொரு நாளும் ஒரே, வித்தியாசங்கள் எதுவுமற்ற நாட்களாய் உனக்கு விடிந்திருக்கும். ஒவ்வொரு நாளும் உன் எண்ணங்கள் ஒன்றாகவே இருக்கும். காலம் ஓடியிருக்கும். நீ இருந்த இடத்திலேயே இருப்பாய்.

உன்னைப் போன்றவர்களோடு மட்டும் நீ பழகுவதால், உன் உலகம் சுருங்கியிருக்கும். வெல்டன்ஸ்வாங்க்கிற்குள் பொறியாகிவிடுவாய்.

வித்தியாசமான உலகப் பார்வை கொண்டவர்களோடு உன் உறவு பலப்படுகையில், உன் வாழ்வு பற்றி புரிதல் தெளிவாகும். நீ காணும் உலகம் மட்டும் அற்புதமாய் விடிந்திருக்கும்.

உன் பாதையால், கூவிக் கொண்டு காய் கறி விற்பவனோடு எப்போது நீ கடைசியாகப் பேசினாய்? தேனீக்களை வளர்த்து தேன் சேர்க்கும் அந்த விவசாயியோடு நீ எப்போதாவது பேச முனைந்ததுண்டா? காலநிலைகளைக் கூட கவனிக்காது, வயல் நிலங்களில் வாழ்வைக் களிக்கும் நிலவிஞ்ஞானியோடு நீ பேச நினைத்ததுண்டா?

“உன் உலகம் விரிய வேண்டும். அதற்கு நீ என்ன செய்யப்போகிறாய்?” என்று கோபாலு கேட்கச் சொன்னான்.

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.