யாரைத்தான் நம்புவது?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  2 நிமிடங்களும் 8 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

ஒவ்வொரு பொழுதும் வித்தியாசமாகவே விடியும். விடிகின்ற பொழுது கொண்டு வரும் நிகழ்வுகளின் அனுபவங்கள் தான் அடுத்த வினாடியின் உணர்வின் வெளிப்பாட்டை தீர்மானிப்பதில் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்த நிலை உலகின்பால் வாழும் அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால், தலைவன் என்பவன், பின்தொடர்பவர்களைக் கொண்டவன். பின்தொடரும் தேட்டத்தைப் பலர், ஒருவன் சார்பாகக் கொண்டதனாலேயே அவன் தலைவன் ஆகிவிடுகிறான்.

தலைமைத்துவம் என்பது ஒரு கலை. அதை ஒரு மாயாஜால வித்தையென்றோ, புராணங்களின் மிச்சம் என்றோ நீ பொருந்திக் கொள்ளக்கூடாது. சாதித்த தலைவர்களின் விம்பங்களை மட்டும் ஊடகங்களில் கண்டு கொள்ளும் நீ, தலைமைத்துவம் சௌகரிகமானது என உறுதி கொள்ளக்கூடாது.

தலைமைத்துவம் அசௌகரிகமானது. அது கடினமானது. வலிகளைக் கொண்டு தரக்கூடியது.

leadership

உன்னைப் பற்றி நீ நம்பியுள்ள உண்மைகளைக்கூட, இன்னொரு தடவை மெய்தானா என கேள்வி கேட்க வைக்கக்கூடிய முரணை, தலைவனின் மனத்தை நீ கொண்டுள்ள நிலையில் பெற்றுக் கொள்வாய்.

உன் உறக்கத்தின் சொகுசைக் கூட சூறையாடிக் கொள்ளும் வலிமை அதற்குண்டு. என் நடவடிக்கைகள், என் எண்ணங்களில் ஓட்டத்தோடு ஒத்திசைகிறதா? என்னை அவர்கள் ஏற்று பின்தொடர்வார்களா? இதைச் செய்தால், அவர்கள் என்னை இப்படி நினைத்துவிடுவார்களோ? நான் பிழையான முடிவைச் சொல்லிவிட்டால், என்ன நடக்கும்? என கேள்விகள் மனதிற்குள் கோட்டை கட்டி குடிகொண்டிருக்கும்.

தலைவன் சந்திக்கின்ற சவால்களின் அளவு விசாலமானது. அவனைச் சுற்றியுள்ள அத்தனையும் “இதற்கெல்லாம் நீதான் காரணம்” என்றவாறு அவனைச் சுட்டியே பிழைக்கான காரணங்களைச் சொல்லி, பிழைத்துக் கொண்டிருப்பதை அவன் சகித்துக் கொள்ள வேண்டியுமிருக்கிறது.

எவ்வளவுதான் நெருக்கடிகள் தோன்றினாலும், அவன் எண்ணங்களை கேள்விகளால் சவாலாக்கிக் கொண்டு, காரியம் செய்கின்ற தலைவனின் மனமே ஒரு கவிதை.

அவனுக்கு தேவையானதெல்லாம், தன் தலைமையின் மூலமாக தான் காண்கின்ற, கண்ட உலகத்தின் நிலையை ஒரு படியேனும் மேலே உயர்த்திவிட வேண்டுமென்பதாகத்தான் இருக்கும்.

அவன் செய்கின்ற விடயமென்பது தலைமைத்துவம் அல்ல. அவனே தலைமைத்துவம் ஆகிவிடுகிறான்.

நீயும் அப்படியானதொரு தலைவனாய் உருவெடுக்க வேண்டும். அதற்கு நீ வாழ்கின்ற உலகம் பற்றிய புரிதலை நீ விசாலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நீ வாழ்கின்ற உலகில், தங்களால் நடக்கின்ற தவறுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராயில்லை. தங்களின் தவறை, காகித விமானம் போல், மற்றவரை நோக்கி எறிந்து விடுவதையே கௌரவமாய் கருதுகின்ற நிலையில் மனங்கள் உருவாகியிருக்கின்றன.

உன் உலகில், சின்னச் சின்னச் வெற்றிகளைக் கூட ஊதிப் பெருக்க வைக்கிறார்கள். உன் படைப்பை, தங்கள் படைப்பாய் வெளியிட்டு விருதுக்கு அனுப்புகிறார்கள். அவர்கள் இல்லாத இன்னொன்றாய் தங்களை உருவகப்படுத்திக் காட்டிக் கொள்கிறார்கள். மற்றவர்களை இழிவாகப் பார்ப்பதை வாழ்வின் அங்கம் என நம்புகிறார்கள். இத்தனையும் செய்து கொண்டு, நிம்மதியாய் நித்திரை செய்யக்கூட பழகிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட உன் உலகத்தில், நீ உண்மையான தலைவனாய் இருக்க முடியாது. இது உனக்கான உலகமே அல்ல. ஆனாலும், உன் தலைமையின் விளைவால் மக்களின் வாழ்வில் மாறுதல்களை கொண்டுவர வேண்டியிருக்கிறது. நீ, உண்மையான தலைவனாய் உருவெடுக்கின்ற நிலையில் உனக்கு சாட்டுப் போக்குச் சொல்ல நேரமிருக்காது. சாதனைகள் செய்யவே உனக்குத் தேட்டம் இருக்க வேண்டும்.

இத்தனையும் செய்ய, நீ நம்ப வேண்டும். தலைமைத்துவம் என்பது நம்பிக்கை. யாரைத்தான் நம்புவது?

நம்பிக்கை பற்றிய நிலையில், எனக்கு பிடித்தமான ஆளுமை, செத் கோடின் சொல்கின்ற ஒரு விடயத்தை பகிர்கின்றேன்.

“நம்பிக்கை எங்கிருந்து வருகிறது? சந்தோசமான நேரங்களிலோ, இலகுவான காரியங்களின் நிறைவிலோ நம்பிக்கை தோற்றம் காண்பதில்லை. அசௌகரிகமான நேரங்களில் கூட, எம்முன்னே வந்து உண்மைகளை உவப்பாய் சொன்னவர்கள் மூலமே நம்பிக்கை வாழ்கிறது. ஏனெனில், பொய்யை இலகுவாகச் சொல்லிவிட்டு அந்தத் தருணத்திலிருந்து விலகிச் சென்றுவிடக்கூட அவகாசம் இருந்தும், தங்கள் வாக்குறுதியை அவர்கள் காப்பாற்றினார்கள். ஒவ்வொரு கடினமான காலமும் துக்கமான நிலையும் உன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களை இனங்கண்டு கொள்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பை வழங்குகிறது”.

ஆக, நம்பிக்கையை கண்டுகொள்ளும் அவ்வாறான வாய்ப்பை நீ ஒருபோதும் தவறவிட்டு விடாதே!

“நீயல்லாத இன்னொன்றாக, உன்னை மாற்றிக் கொள்” என்றே தொடர்ச்சியாக உன்னை இந்த உலகம் தூண்டும், ஆனாலும் நீயெதுவோ அதுவாகவே ஆகிவிடு. உண்மையான தலைவனாக நீ வருகையில், உனக்கு இன்னொரு முகமிருக்காது. நீயே தலைமைத்துவத்தின் முகமாயிருப்பாய் – உன் எண்ணங்கள் யாவும் மக்கள் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தி, அவர்களின் உன்னத மாற்றங்களுக்கு முகம் கொடுக்கும்.

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –