(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடமும் 23 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
அறிவென்பதை நீ ஒரு மொழி என நினைத்துக் கொண்டால், என்னை மன்னிக்க வேண்டுகிறேன். அறிவைப் பெறுகின்ற ஒரு ஊடகமாகவே மொழியை நான் காண்கிறேன். வெறுமனே மொழிப்புலமை கொண்ட ஒருவரை அறிவுடையார் என்று நீ இனங்காட்ட முடியாது.
ஆங்கிலமென்பது, ஆங்கிலக்காரனுக்கு தாய் மொழி. தமிழ் என்பது தமிழனுக்கு தாய் மொழி. ஆங்கிலக்காரனால் சரளமாகக் ஆங்கிலம் கதைக்க முடிவது இயல்பான விடயம். அதேபோல், தமிழனால் தமிழைச் சரளமாகக் கதைக்க முடிவதும் இயல்பான விடயம். இந்த நிலைகளை அறிவின் உச்சமென்று யாரும் கணக்கிட்டுவிடக்கூடாது.
ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்த சில ஆங்கிலக்காரனால், Beautiful என்ற சொல்லிற்குண்டான, எழுத்துக்களைக் கூட்டிவிடத் தெரியாமலிருக்கிறது. அது போலத்தான் தமிழைச் சரளமாகப் பேசத் தெரிந்த சில தமிழருக்கு, “அழகு” என்ற சொல்லிற்கு எந்த “ழ” வரும் என்ற குழப்பம் இருக்கிறது.
அதேபோல் தான், ஒரு ஆங்கிலக்காரன் தமிழைச் சரளமாகக் கதைப்பதால், அறிவுடையவனாக ஆகிவிட முடியாது. ஆனால், அவனால், தமிழிலுள்ள அறிவுகளை அறிந்து தன்னகம் எடுத்துக் கொள்ள முடியுமாயிருக்கும். இது ஆங்கிலத்தை சரளமாகக் கதைக்கின்ற தமிழனுக்கும் பொருந்தும். ஆக, மொழி என்பது ஊடகம் என்பதை மனத்தில் நிலைக்கச் செய்வோம்.
நான் மேற்சொன்ன இரண்டு மொழிகளுமே தெரியாமலேயே, அறிவில் உயர்வாய் நிலைத்து நிற்கும் மனிதர்களும் உள்ளனர். அறிவென்பது, பாடசாலையில் கற்று வருகின்ற விடயமல்ல. அல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒரு தடவை சொல்லியிருப்பார், “நீ பாடசாலையை விட்டு வெளியேறி, அங்கு நீ கற்றவற்றை எல்லாம் மறந்ததன் பின்னும் உன் ஞாபகத்தில் எஞ்சி நிற்கும் விடயங்கள்தான், கல்வியாகும்”.
வெறுமனே அறிவைப் பெற்றுக் கொள்வதால் அல்லது பட்டத்தைப் பெற்றுக் கொள்வதால் யாரும் அறிவுடையவர்களாய் ஆகிவிட முடியாது. அறிவோடு சேர்ந்த அனுபவம் தான் ஒருவனின் அறிவுடைமையை தீர்மானிக்கிறது. அனுபவம் என்பது, அறிவை தகுந்த வகையில் பிரயோகிப்பதால் தோற்றம் காண்பது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். அனுபவம் மூலம்தான், அறிவைப் பெறுதல் சாத்தியமாகிறது.
மொழியை, அறிவாகக் காண்கின்ற ஒரு சமூகம் தொடர்ச்சியாக தன் பக்க நியாயங்களை முன்வைத்து, தன் தலைக்கணத்தை காட்சிப்படுத்த ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறது. மொழிப்புலமை கொண்டவனால், அறிவைப் பெற்றுக் கொள்தல் இலகுவாக்கப்படலாம் என்ற உண்மை மறுக்க முடியாவிட்டாலும், வெறுமனே மொழிப்புலமை கொண்டதன் காரணமாக, அறிவு நிலையில் உயர்ச்சி அடைந்து விட்டார் என எண்ணுவது முட்டாள்தனமாகும்.
எழுத்து வடிவாக இருந்தாலும், ஒலி வடிவாக இருந்தாலும் மொழி என்பது, குறியீடுகளின் தொகுப்பு. ஒரு குறியீடு என்கின்ற விடயம், இன்னொரு விடயத்தை குறிக்கின்ற குறியீடாகவே இருக்கிறது. உலகிலுள்ள மொழிகள் யாவும், இதனையே செய்கின்றன.
அறிவை, மொழிகள் கடந்த ஒரு விடயமாகவே நான் காண்கின்றேன். சில நேரங்களில், மொழியின் ஆதிக்கம், பரந்துபட்ட அறிவை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புக்களை இழிவளவாக்கிவிடும் தன்மை கொண்டதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். தன் மொழியிலல்லாத குறிப்புகளை, இன்னொரு மொழியில் இருந்து பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என்ற “வித்துவக்காய்ச்சல்” கொண்ட பலரையும் நான் கண்டிருக்கிறேன்.
எந்த மொழியை தாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற சிந்தனையே இல்லாது, தமது அனுபவங்கள் மூலமாகத் திரட்டிய அறிவை, புரிகின்ற ஒரு பொதுவான மொழியில், கேட்பவர் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் பகிர எத்தணிக்கும் மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களின் ஆர்வமெல்லாம், தாம் அறிந்து கொண்ட விடயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பது தான். அவர்கள் அறிந்த மொழி என்பது அவர்களின் அறிவுப் பெறுகைக்கு ஆதாரமாய் இருந்தது என்பது மட்டுந்தான் மொழிக்கு அவர்களால் வழங்கக்கூடிய தகுதியாகும்.
பகிர்தலின் பலம் பற்றி அறிந்தவர்கள் அவர்கள். எனக்குப் படைத்தலிலும் பகிர்தலிலும் உள்ள ஆர்வம் பற்றி உங்களிடம் ஏற்கனவே, படைத்தலும் பகிர்தலும் என்ற பதிவின் மூலம் சொல்லியிருக்கிறேன்.
அறிவைப் பகிர்தல் என்பது மொழிகள் கடந்தது. பகிர்தலின் போதுதான் புதிய அனுபவங்கள் வாயிலாக அடையக்கூடிய அறிவுடைமை பற்றிய தெளிவு கிடைக்கிறது. புறச்சூழலில் காணப்படுகின்ற விடயங்கள் எமது புலன்களுக்கு தருகின்ற அடைவுகளின் மூலம், அறிவு தோற்றம் காண்கிறது. இந்த நிலையில், மொழி எந்த நிலையிலும் பங்கு கொள்ளவில்லை. அதைப் பகிர்ந்து கொள்ள, அதை ஒழுங்கமைத்துச் சொல்ல ஆதாரமான ஊடகமாக, மொழி ஈற்றில் உதவுகிறது.
அறிவின் பகிர்தலின் அவசியம் பற்றி இன்னொரு பதிவில் விரிவாகச் சொல்ல எண்ணியுள்ளேன்.
“மொழியினதும் அறிவினதும் அடையாளங்கள் பற்றிய தெளிவை நீ பெற வேண்டியிருக்கிறது. அறிவைக் கூட்டிக் கொள்ள, நீ அனுபவத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். நீ கேட்பதெல்லாம், கதைப்பதெல்லாம் அறிவன்று, அவை தகவல்கள்.
உலகத்தை ஆட்சி செய்கின்ற ஒரு பெறுமதிமிக்க நாணயமாக அண்மைக்காலமாக தகவல்கள் மாறிவருகின்றன. தகவல்கள் எம்மைச் சூழ நிறைந்து கிடக்கின்ற நிலை அற்புதமானதுதான். அவை உன் அறிவுத்தாகத்திற்கு துணையாக வரலாம். ஆனால், தகவல்களை நீ ஒருபோதும் அனுபவங்கள் என்றோ உண்மைகள் என்றோ நம்பிவிடக்கூடாது. அவற்றை அனுபவங்கள் மூலமாக ஆய்ந்தறிதலே உன் அறிவின் விருத்திக்கு ஆதாரமாய் அமையும்” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.
– உதய தாரகை
இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu
பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.