(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 14 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
இது முற்றிலும் தனிப்பட்டதொரு விடயந்தான். உலகம் பற்றி குறை சொல்வதும் அதைப் பற்றி முறைப்பட்டுக் கொள்வதும் அதன் விடயங்கள் பற்றி கண்டனம் தெரிவிப்பதுவும் உலகோடு முட்டி மோதிக் கொள்வதெல்லாம் எனது விடயங்களே அல்ல என்பதில் எனக்கு மிகப் பெரிய தெளிவு இருக்கிறது.
இது எல்லாவற்றிற்கும் முதலில் என்னை நான் முற்றாக அறிந்து கொள்ள வேண்டுமென்பதில் தெளிவாக இருக்கிறேன். எல்லாக் குழப்பங்களினதும் தோற்றுவாயாக, உனது சுயமே இருக்கின்றது, வேறெதுவுமல்ல. இந்தச் சுயம் என்பது உனக்கு இருப்பது போல், இங்கு எல்லோருக்கும் இருக்கிறது.
உலகத்தை மாற்ற யார் யோசித்தாலும், முதலில் அந்த மனிதனின் யோசனையின் அத்திவாரமாக, மாற்றத்தின் முரசொலியாக தன் சுய மாற்றமே உயர்ந்து நிற்க வேண்டும். “நீயே, நீ விரும்பும் மாற்றமாய் இரு” என்று காந்தியடிகள் சொன்னதும் இதைத்தான்.
தனிமனிதனின், சுய மாற்றத்தின் விளைவில் தான், ஆக்கபூர்வமான மாற்றங்கள் தோன்ற வழிபிறக்கும் என்ற கருத்தோடு நான் மிகவும் ஐக்கியமாய் இருக்கிறேன். உலக மாற்றத்திற்கான முதற்படி, ஒரு தனிநபரில் தொடங்காமல், உலகத்தின் பால் தொடங்குகின்றதென்றால், அது மிகப்பெரிய பொய்யாகவே இருந்துவிடும். அதில் போலி என்பது ஒட்டிக் கொள்ளும்; கோபம், கொடூர எண்ணம் என எல்லாத் தீயுணர்வுகளும் கூட்டாகச் சேர்ந்து கும்மாளம் அடிக்கும்; அதன் விளைவுகள் உலகளாவிய நிலையில், பரவத் தொடங்கியும் இருக்கும்.
ஆனால், எந்த மாற்றத்தின் நிலையும், தனிநபரின் சுய மாற்றத்தின் தொடக்கமாய் அமைகின்ற போது, அதன் நிலையில், தெளிவு கிடைக்கும்; அதனைத் தொடர்ந்து கொள்ள வேண்டுமென்ற அழைப்பும் வெளிப்படையாக மறைந்திருக்கும். எல்லாமுமே வெளிச்சம் கொண்டு விளங்கும்.
சுய மாற்றத்தின் தொடக்கத்தில், சாதாரண விடயங்களில் காண மறந்த வாழ்வின் சொச்சங்களை நீ கண்டுகொள்ள வழி பிறந்தது பற்றி உனக்கு மகிழ்ச்சி தோன்றும். நீயே மாற்றத்தின் மூலமாய் இருப்பதால், உன் எண்ணங்கள் யாவும் உன் உத்வேகமாய் உருவெடுக்கும். அந்நிலையில், வாழ்வு மீதான ரசணையை உனக்கு யாரும் சொல்லித் தர வேண்டிய அவசியம் இருக்காது. நீயே, வாழ்க்கைக்கு ரசணை சேர்ப்பாய்.
உனக்குள்ளேயே ஊற்றெடுக்கும் எண்ணப்பிரவாகத்தின், சலணங்கள் பற்றிய புரிதல்கள் எல்லாமே, உன்னிலிருந்து தொடங்கும். உலகமும் உன் உணர்வுகளை வாசிக்க ஆர்வத்தோடு அப்போது இருக்கும்.
உனக்குள் இருந்தே, நீ உலகில் காண நினைக்கும் மாற்றத்தை தொடங்குவதால், உன் செயல்கள் யாவும், படைப்பதை ஆராதிப்பதாய் இருக்கும். அழித்தல் என்கின்ற சொல் உன் எண்ண அகராதியிலும், அப்போது இடம்பிடித்திருக்காது.
– உதய தாரகை
இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu
மிகவும் சிறப்பான பதிவு, என்னாலும் படைக்கமுடியும் என்ற தன்னம்பிக்கையை தருகின்றது.