உச்ச எளிமையியல்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 14 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

உன்னோடிருக்கும் எல்லாமே, நீயும் உன் உணர்வுகளும் மட்டுந்தான் எனக் கற்பனை செய்து கொள். உன்னிடம் எதுவுமேயில்லை. உன் அயலிலும் எதுவுமேயில்லை. அப்போது, உன் அயல் முழுதும் இடைவெளி, மௌனம், வாய்ப்புகள் என பலதும் அமைந்திருக்கக் காண்பாய்.

ஓரிடத்தில் அதிகமான பொருள்கள் இருக்கும் நிலையில், அங்குள்ள பெறுமதியான பொருளுக்குக் கூட மதிப்புக் கிடைக்காது. அங்கு அமைதி நிலவாது, எல்லாப் பொருளும் தம்நிலையைத் தக்க வைக்க போட்டி போட்டு கொண்டிருக்க, அங்கு எதுவுமே வெல்ல முடியாது, தோற்றுக் கொண்டிருக்கும்.

பொருள்களுக்கிடையில் ஒரு வெளி இருக்கவேண்டும். இதனை ஜப்பான் காரன் “மா” என்று சொல்கிறான். “மா” என்றால் பொருள்களுக்கிடைப்பட்ட இடைவெளி, வெறுமை என பொருள்படும்.

நீ ஒருவரோடு பேசும் போது, உன் வார்த்தைகளுக்கிடையில் நீ வழங்கும் இடைவெளிதான் நீ சொல்வதை தெளிவாக புரிந்து கொள்ள வழி செய்கிறது.

குயவனால், களியினால் செய்யப்பட்ட குடத்தின் உள்ளகத்திலுள்ள வெற்றிடம் தான், குடத்தின் முகவரியாகும். ஜன்னல்கள், கதவுகள் என சுவர்களுக்கு சுவாசம் கொடுத்து மேசனால் கட்டப்படும் வீட்டிற்கு முகவரி தருவதுவும், அதன் உள்ளகத்திலுள்ள வெற்றிடம் தான்.

தாளங்களுக்கிடைப்பட்ட இடைவெளிதான் அதற்கு இசை என்ற முகவரி கொடுக்கிறது. அது போலத்தான், அதிகமான பொருள்களால் சூழ்ந்துள்ள ஓரிடம் ஓரிரு முக்கியமான தேவையான பொருள்களால் மட்டும் ஆக்கப்படுகையில், இடைவெளி பிறக்கிறது, அந்த இடமும் சிரிக்கிறது.

ஜப்பான் காரனின் “டட்டாமி” என்கின்ற அறையமைப்பு உச்ச எளிமையியலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அங்கு எதுவும் இருக்காது, ஆனால் எல்லாமும் இருக்கும். அங்கு பொருள்கள் இல்லாவிட்டாலும், உன் எண்ணங்களுக்கு சஞ்சரிக்க ஏகப்பட்ட இடமுண்டு. உன் எண்ணங்களுக்கான இடத்தை வழங்கி, அதைப் போற்றிப் புகழும் நிலையை அது தோற்றுவிக்கும்.

2886383047_37023b3c0f_z

உன் எண்ணத்திற்கு போதியளவு இடம் காணப்படுகின்ற நிலையிலேயே, மனதில் அமைதி தோன்ற வாய்ப்பு உண்டு.

வெறுமையான ஓரிடத்தில், உன் எண்ணத்தால் வினை செய்வதற்கான வாய்ப்பும் வசதியும் அதிகமாகும். வெறுமை என்பது வாய்ப்புகளின் வெளி என்பதை நீ மறக்கக்கூடாது.

உன்னிடம் எதுவுமில்லாவிட்டாலும், அதுபற்றி நீ திருப்தி கொள்ள வேண்டியிருக்கிறது. “என்னிடம் இது இல்லையே”, “ஐயகோ, என்னிடம் அதுகூட இல்லையே” என்கின்ற உன் உள்ளக்குமுறல்கள் மனதில் கவலையை மட்டுந்தான் விதைக்கும்.

“எதுவுமே உன்னிடம் இல்லாமலில்லை என்று உன் மனதால் நீ உணர்கின்ற நிலையில், முழு உலகமுமே உனக்குச் சொந்தமாகிவிடுகிறது” என்பது Lao Tzu சொன்ன அனுபவக்கூற்று.

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.