(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 32 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
பல நாட்களுக்குப் பிறகு, கோபாலுவோடு நிறைய நேரம் கதைப்பதற்கான வாய்ப்புக் கிட்டியது. அந்தக் கதையாடலின் ஒரு பகுதி, உண்மை பற்றியதாய் அமைந்திருந்தது.
உண்மையில், உண்மை என்பது என்ன? யாரும் நம்மிடம் நம்பிவிடுமாறு சொல்லுவதுதானா உண்மை? இல்லை. நாம், நம்புகின்றவை மட்டுந்தானா உண்மை. இல்லை. உண்மை என்பது ஒரு மாயைதானா? இல்லை. நாம் நம்பி, மற்றவர்களையும் நம்பிவிடுமாறு கேட்கின்றவைதான் உண்மையா?
நீ, சிந்தித்து உணர்ந்ததை மற்றவர்களிடம் சொல்லியதன் பின், மற்றவர்கள் நீ சொன்ன விடயத்திற்கு உண்மை என்ற அடையாளத்தை அளிக்க வேண்டுமென எண்ணுகின்றாய். இதைப் போலவே, மற்றவர்களும் தாம் சிந்தித்துச் சொல்பவை பற்றிய விடயங்கள் யாவும், உண்மை என்ற குறிச் சொல்லால் இனங்காணப்பட வேண்டுமென விரும்புகின்றனர். அதிகாரத் தோரணையும் கொள்கின்றனர்.
இந்த “உண்மையை நம்பு” என்கின்ற மையப் புள்ளியைக் கொண்டதாய் உண்மைச் சக்கரம் தொடர்ந்து சுற்றிக் கொண்டேயிருக்கிறது.
இங்கு நீ சொல்வதும், அவர்களும் சொல்வதும், மொழியின் தயவில் தான் உருவம் கொள்கிறது. சொற்கள் தான், நீ நினைக்கின்ற, நம்புகின்ற உண்மைக்கு உருவம் கொடுக்கிறது. அவர்களுக்கும் அந்தச் சொற்கள் தான், தங்கள் நம்பிக்கை பற்றிய விடயங்களையோ, சொப்பனங்கள் பற்றிய புரிதல்களையோ உன்னிடம் ஒப்புவிக்க, துணையாய் நிற்கின்றன.
ஆக, சொற்கள் தான், இங்கு எல்லோர் கொண்டுள்ள அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஆதாரமாகி நிற்கின்றன.
வெறும் வார்த்தைகளில் வித்தைகளாகவோ, சொற்களின் செப்பங்களாகவோ உண்மை ஒருபோதும் உணர்ந்து கொள்ளப்படக் கூடாது.
ஏமாற்றத்தையும் போலித் தன்மைகளையும், தம்மோடு இயல்பாகப் பூசிக் கொள்வதற்கான தகவை சொற்கள் தம் பரம்பரையலகோடு சேர்த்து வைத்திருக்கின்றன. சொற்களுக்கு இங்கு எதுவாக வேண்டுமோ, அதுவாக ஆகிவிடுகின்ற வரம் உண்டு.
“புனைவு என்பது பொய். ஆனால், நல்ல புனைவு என்பது, பொய்க்குள் புதைத்திருக்கும் உண்மை” என ஸ்டீபன் கிங் ஒரு தடவை சொல்லியிருப்பார்.
உண்மை என்பது சுயத்தோடு தொடங்குவது, ஆழ்மனதின் பல கோணங்கள் பற்றிய விவாதங்களில் வெற்றி காண்பது. ஆர்வத்தின் நீட்சியில் அங்கீகாரம் பெறுவது.
உன் புலன்களின் உச்ச பண்புகளையெல்லாம், வாழ்வின் நீ அனுபவித்த விடயங்கள் வாயிலாக உணர்தலுக்கு உட்படுத்தி, அவற்றை இயல்பான விடயமாக உன்னால் கண்டுகொள்ள முடிகின்ற தருணமே, உண்மை என்ற மொழிக்குள் கூடுகட்டிக் கொள்கிறது.
கல்வி பெற்றவர்கள், படித்தவர்கள் யாவரும் உண்மையை உணரக்கூடியவர்கள் என்பதெல்லாம் மிகப் பொய்யான அனுமானங்கள். இங்கு உண்மை உணர்தலில் கல்வி அறிவை விட, ஆர்வமே ஆதாரமாகவிருக்கிறது.
ஆர்வம்.. வெறும் ஆர்வமல்ல, அதீத ஆர்வம்.
சமகால கல்விச் சூழல் பற்றிய அடையாளங்களுக்குள், சமூக அந்தஸ்து நிலைக்கான கல்வி, பணத்திற்கான கல்வி என கல்வியின் நிலை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது போன்றே தோன்றுகிறது. கல்வி பற்றிய புரிதல், ஒரு இடத்தை அடைவதன் தோற்றுவாயாக இருப்பது கவலையே. கல்வி என்பது வாழ்வைப் போன்றதொரு பயணம். இது பற்றிய புரிதல், தகவல்கள் மலிந்து கிடக்கின்ற இந்த யுகத்திலும் மறைந்திருப்பது சோகமே!
சமகாலத்தின் நுட்பங்களின் விசாலிப்பும் அதன் வருவிளைவுகளும், நாம் பலவற்றையும் இலகுவாக அறிந்து கொள்ள முடிவதற்கு வழிசெய்துள்ளது.
அத்தோடு அது நின்றுவிடவில்லை, ஒரு முரணாக, எல்லோராலும், தாம் நம்புகின்ற, மற்றவர்கள் நம்பி உண்மை என பரப்ப வேண்டுமென நினைக்கின்ற விடயங்களைக்கூட உலகத்தோடு இலகுவாகவும் பரப்பக்கூடிய சாத்தியங்களையும் வழங்கியிருக்கிறது.
இந்த “நீ நம்பு – நாலு பேருக்குச் சொல் – நான் சொல்கிறேன்” என்கின்ற வகையான பரப்புரை, மிகத் தீவிரமாக ஒவ்வொரு நாளும், வெவ்வேறு, நிலைகளில் நடந்து கொண்டிருக்கிறது.
இங்கு எது உண்மை? எது புனைவு? எது கட்டுக்கதை? என்றெல்லாம் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகளே — அந்தப் பரப்புரை கொண்ட சொற்களின் மிரட்சியாலும், அது கொண்ட படங்களின் கவர்ச்சியாலும் — நிராகரிக்கப்பட்டு, கண்டதெல்லாம் உண்மை என்ற தோரணையில் எல்லாமே, தொடர் பகிர்தலுக்கு உட்படுத்தப்படுகிறது. அந்தப் பகிர்தல்கள், பலரினதும், சமகாலம் பற்றிய தங்கள் அறிவின் உச்சத்தை காட்டுவதாய்ப் போன்றெல்லாம் பாவனை செய்யப்படுகின்றது.
இங்கு என்ன நடக்கிறது?
உண்மையை முதன்மைப் படுத்துகின்ற நிலையில், சொற்களின் வித்தையில் நீ தொலைந்து போய்விட வாய்ப்பேற்படாது. அதீத ஆர்வமென்பது, இங்குதான் மிக முக்கியமான ஒருவிடயமாக உருவெடுக்கின்றது.
“என்னிடம் எந்தவிதமான விஷேட திறமைகளுமில்லை. நான் அதீத ஆர்வத்துடன் பலதையும் ஆய்ந்தறிகின்றேன்” என்று அல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்ன விடயம், அதீத ஆர்வத்தின் அவசியத்தைச் சொல்லி நிற்கும்.
மற்றவர்கள் எம்மோடு பகிர்ந்து கொள்பவைகள் யாவும், பொய்யானவை அல்லது யாவும் உண்மையானவை என்ற மேலோட்டமான முடிவைத்தருகின்ற நோக்கம் இந்தப் பதிவிற்குக் கிடையாது. ஆனால், உன்னோடு, மற்றவர்கள் பகிர்ந்து கொள்கின்ற விடயங்கள் பற்றிய உண்மைத்தன்மையை உன் அதீத ஆர்வத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். அதற்கான அவகாசம் உனக்கிருக்கிறது.
உன் மனவானில், நீதான் தெரிவுகளைச் செய்கின்ற ஆளுமைக்குச் சொந்தக்காரன். உனது அனுமதியின் பின்னர்தான், உன்னாலேயே ஒரு விடயத்தை பகிரவோ, பதியவோ முடியும். இது பிரபஞ்ச உண்மை.
நீ கேட்பவை பற்றிய விடயங்கள், உன்னிடம் சொல்லப்படுபவைகள் பற்றிய குறிப்புகள் என எல்லாவற்றையும் ஆய்ந்தறிதலுக்கு உட்படுத்தித்தான் அதன் உண்மைத் தன்மையை உணர வேண்டியுள்ளது.
நீ என்ன பறப்பது ஒரு நோயென்றா நம்புகிறாய்? அது என்ன உண்மைதானா?
– உதய தாரகை
இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu