(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 19 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
பிரேசில்: எனது பயண அனுபவங்கள் [#1]
TEDGlobal 2014 மாநாட்டில் பங்கேற்கும் பொருட்டு, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவுக்கு பயணமானேன். இதுவே, தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு நாட்டில் TEDGlobal இடம்பெறும் முதற் தடவையாகும். கடந்த ஆண்டு, ஸ்கொட்லாந்தின் எடின்ப்ரா நகரில் இடம்பெற்ற TEDGlobal மாநாட்டிலும், நான் கலந்து கொண்டிருந்தேன், அப்போது, ஐக்கிய ராச்சியத்திலேயே நான் வசித்திருந்ததால், அந்த இடம் பற்றிய அனுபவங்கள் அவ்வளவு புதிதாக இருக்கவில்லை.
பிரேசிலிற்கான பயணம், தென் அமெரிக்கக் கண்டத்தில் நான் பயணிக்கும் முதல் நாடாகும். அதனாலோ என்னவோ, இந்தப் பயணம் பற்றி நான் பரவசப்பட்டிருந்தேன்.
இந்த பரவசமடைதலுக்கு, பல காரணங்கள் துணையாகி நின்றன. அதில் பிரேசிலின் மொழியே பிரதானமாகும். உலகளவில், சுமார் 190 மில்லியன் மக்கள் போர்த்துகேய மொழியை தங்கள் அன்றாட விடயங்களில் பயன்படுத்துகிறார்கள். அவர்களில், 89 சதவீதமானவர்கள் வசிப்பது பிரேசிலில் ஆகும். இதிலிருந்து, அங்கு பிரேசிலியன் போர்த்துகீஸ் (பிரேசிலின் போர்த்துக்கேய மொழி) மொழியே பிரதானமாக இருக்கிறது. ஆங்கிலம் உட்பட, ஏனைய எந்த மொழிக்கும் இடமில்லை என்பதை நான் அங்கு சென்றதும் அறிந்து கொள்வதற்கு அதிக நேரமெடுக்கவில்லை.
ஆங்கிலம் ஒரு பொது மொழி, சர்வதேச மொழி என்றெல்லாம் அந்த மொழிக்கு கொடுக்கப்படும் விளம்பரங்கள் யாவும், அங்கே எடுபட்டதாகச் சொல்ல முடியாது.
போர்த்துக்கேய மொழியிலிருந்து பிரேசிலின் போர்த்துக்கேய மொழி மாற்றங்கள் கொண்டது. அந்த மாற்றங்கள், சின்னதாய் இருந்தாலும், அவை பிரேசிலியன் போர்த்துகேய மொழியை தனித்துவமாகக் காட்ட துணை நிற்கிறது, என போர்த்துக்கல் நாட்டிலிருந்து வந்த என் நண்பன், மிகல் கப்ரால் சொன்னான்.
பிரேசிலின், சான் பவுலோ (Sao Paulo) விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். அங்கிருந்து, ஒரு மணிநேர விமானப் பயணத்தின் மூலம், ரியோ டி ஜெனிரோ செல்வதாகவிருந்தது. அந்த விமான நிலையத்திலிருந்து, ரியோவிற்கு செல்வதற்கான செல்வதற்காக, நான் உள்ளூர் விமானச் சேவை நிலைகள் அமையப் பெற்றிருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.
உள்ளூர் விமானச் சேவை (Domestic Flights) பற்றிய அறிவித்தல்கள் அங்கு எதுவுமே என் கண்ணுக்குத் தென்படவில்லை. அங்கு விமான நிலையக் காவல்துறை அதிகாரிகள் நின்றிருந்தனர். அவர்களிடம், சென்று, உள்ளூர் விமானச் சேவை Terminal ஐ அடைய எந்த வழியால் செல்ல வேண்டுமென ஆங்கிலத்தில் கேட்க, அவர்களோ, போர்த்துக்கேய மொழியில் தொடர்ச்சியாக விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தனர்.
எதுவுமே, புரியவில்லை. ஆக, அவர்களிடம் எனது கேள்வியை மெதுவாக மீண்டும் கேட்டேன்.
அதற்கு, தனது இடப்பக்கமாக கையைக் காட்டி, “சயீதா” என்று ஒரு காவல் துறை அதிகாரி சொல்ல, அதனை வழிமொழிவதாய், “சயீதா” என்று இன்னொரு காவல் துறை அதிகாரியும் அதனைத் தொடர்ந்து சொன்னார்.
அவர்கள், காட்டிய பக்கம் தான் உள்ளூர் விமான நிலைய அமைவு இருக்க வேண்டுமென்ற நம்பிக்கையோடு, நகரலானேன். “சயீதா” என்ற சொல், “Exit” என்ற சொல்லின் போர்த்துக்கேய வடிவம் என்பதைச் சொல்லியாக வேண்டும்.
வெளியே சென்றால், உள்ளூர் விமானச் சேவைகள் நிலை இருக்குமென்ற நம்பிக்கை வீண் போகவில்லை. அங்கே அது இருந்தது. மகிழ்ச்சி நிறைந்தது.
அங்கு உள்ளூர் விமானச் சேவைகளின் நிலையத்திற்குள் செல்கின்ற வழியில் பொதிகளின் கணினி கதிரியக்கப் பரிசோதனை இடம்பெற்றது. அங்கும், ஒரு விமான நிலைய காவல்துறை அதிகாரி நின்று கொண்டு, பொருள்களையும் பொதிகளையும் பரிசோதனைக்காக தட்டில் இடுமாறு போர்த்துக்கேய மொழியில் கேட்டுக் கொண்டிருந்தார்.
அங்குதான், ஆனந்தாச்சரியம் தோன்றியது. எனது பொதிகளை பரிசோதனைக்காக வழங்கும் தருணம் வந்தது. அந்தக் காவல்துறை அதிகாரி, வழமை போன்றே போர்த்துக்கேய மொழியில் அறிவுறுத்தல்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் சொன்ன அறிவுறுத்தல்களின் இடையே, இரண்டு தமிழ்ச் சொற்களும் இருந்தது தான் அந்த ஆச்சரியத்திற்குக் காரணம்.
அதனை தமிழ்ச் சொற்கள் என்பதை விட, தமிழில் சேர்ந்த திசைச் சொற்கள் என்று வழங்கலாம். பரிசோதனைக்கான தட்டில், சப்பாத்து, சாவி ஆகியவற்றைப் போடுமாறு சொல்லிக் கொண்டிருந்தார். காலணியை சப்பாத்து என்றும் திறப்பை சாவி என்றும், வழங்கும் பழக்கம் இன்றும் தமிழ்ச்சூழலில் காணப்படுகிறது. போர்த்துக்கேயர்களின் ஆட்சியால் தொற்றிக் கொண்ட, சொற்கள் வழக்கத்தில் உள்ள நிலை அப்படியிருக்க, போர்த்துக்கேயர்களின் ஆதிக்கத்தின் ஒரு சொச்சத்தை சான் போலோவில் கண்டு, அறிமுகமுள்ள விடயங்கள், அந்நியமான நிலைகளில் வாய்க்கின்ற போது தோன்றுகின்ற மகிழ்ச்சி, மனத்தில் தொற்றிக் கொண்டதை சொல்லியாக வேண்டும்.
அந்த அனுபவத்தோடு, ஒரு மணிநேர விமானப் பயணத்தின் நிறைவாக, ரியோ டி ஜெனிரோ வந்தடைந்தேன். அங்கிருந்து, எனது தங்குமிடமான Copacabana பகுதியிலுள்ள Windsor Atlantica Hotel இற்கு செல்ல, எனக்காக வந்திருந்த Taxi இல் ஏறிக்கொண்டேன்.
விமான நிலையத்திலிருந்து அந்த Taxi, விரைந்தது — விரைந்த பயணத்தின் வழியே சுவாரஸ்யங்கள் ஏராளம்.
அடுத்த பாகத்தில் இன்னும் சொல்கிறேன்.
தாரிக் அஸீஸ் (உதய தாரகை)
இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu