(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 14 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
நீ, அவதிகளின் தோற்றமாயிருக்கிறாய். உனக்குள் ஆயிரம் அவதிகள், அவதாரம் கேட்டுச் சண்டை போடுகின்றன. நீ அவற்றில் எதைக் கவனிப்பது என்று தெரியாமல், அவதிகள் தரும் அவதிக்குள் தொலைந்து போகிறாய்.
மகிழ்ச்சியைக் கண்ட மாத்திரத்தில், கவலை பற்றிய தேவைகள் உனக்குள் குடிகொள்வதும் அதுவே அவதியாய் ஆகிவிடுவதும் நடந்து கொண்டிருக்கிறது.
நல்லதை நேசிக்க வேண்டுமென்ற உன் மனத்தின் ஒப்பாரி, தீயதைப் பற்றி யோசிக்க வைக்கின்ற தேவையையும் உண்டு பண்ணி, உனக்குள் அவதிகளை பிரசவிக்கிறது.
அதைத் தேர்ந்தெடுப்பதா? இதைத் தேர்ந்தெடுப்பதா? என்று ஒவ்வொரு பொழுதும் உனக்குள் நடக்கின்ற போராட்டங்ள், கொண்டு தருவதெல்லாம், அவதிகள் தாம்.
உன் வாழ்வின் ஒவ்வொரு கணத்தின் நீட்சியிலும், அவதிகள் பற்றிய உன் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இதுதான் வாழ்க்கை என்பதா? மனத்திற்குள் அவதிகளைத் தருவதுதான் ஆயுளின் அடையாளமா?
கவலையைப் பற்றிக் கவலைப்படாமல், நீ மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கலாம். ஆசைகள் பற்றி அலட்டிக் கொள்ளாமல், நீ கொண்டதே நிறைவெனப் போற்றி வாழலாம். விழித்தாலே விடியலைக் காணலாம் என உணர்ந்து, தூக்கத்தை துரத்தி வைக்கலாம்.
இப்படி நீ செய்யக்கூடிய பல விடயங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொன்றும் நீ படும், அவதியின் மிச்சமாய், உன் தெரிவின் ஏற்பாடாய் தோன்றியிருப்பது மட்டுந்தான்.
கோபத்தையும் வெறுப்பையும் பயத்தையும் உன்னால் ஊட்டி வளர்க்க முடியும். உன் உணவிற்காய் இவை யாவும், போட்டி போட்டுக் கொண்டு, நாளாந்தம் உனக்குள் அவதிகளைத் தருகின்றன.
கனவுகளையும் விருப்பத்தையும் வேட்கையையும் நீ உன்னோடு கூட்டாளியாக்கிவிட முடியும். இவையும் உன் நட்பிற்காய் நாளும் போட்டி போடுகின்றன — அவையே அவதிகளாயுமாகி விடுகின்றன.
உனக்குள்ளே உன் தெரிவுக்காய் போட்டி போட்டுக் கொண்டு, இருப்பவை பற்றிக் கொஞ்சம் நீ புரிந்து கொள்ளக்கூட, நீ கொண்ட அவதிகள் அவகாசம் தராது.
ஆனாலும், நீ புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றேயொன்று தான். உனக்குள் எழும் போராட்டங்களுக்குத் தருகின்ற விடை என்பது, உனக்கு யாராலும் வழங்கப்படுவதல்ல. உன் தெரிவுகள் தான், உனக்குள்ளான போராட்டத்தின் திசையை நிர்ணயிக்கப் போகின்றன. நீதான் அதற்கான விடையை தேர்ந்தெடுக்கிறாய்.
அவதிகளை ஆராதிக்கப் பழக்க வேண்டியது, உன் தெரிவின் உட்சபட்ச இலக்காகும். உனக்குள் போராட்டத்தையும், அவதிகளையும் தருகின்ற விடயங்களில், வெற்றி பெறப் போவது, நீ ஊட்டி வளர்க்கும் தெரிவுகளே.
அவதிகளை கொண்டாட வேண்டுமென்ற அவாவோடு, தெரிவுகளைத் தீர்மானமாக்கு. உன்னை வெல்வாய் நீ; உலகை வெல்வாய்.
— தாரிக் அஸீஸ்
இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu
பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.