(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 13 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
வாழ்க்கையின் அடிப்படை பற்றிய அடிநாதமாய் இருப்பது, இடறி விழுதலும் எழுந்து நிற்றலும் தான். ஆனால், நாம் வெற்றி பெறும் போது, நமக்குண்டான பலம் பற்றிய விமர்சிப்பில் எமது மதிப்பீடு மேலோங்கிச் சென்றாலும், தோல்வியுறும் சந்தர்ப்பங்களின் எம் பலம் பற்றியதான கேள்வியில், எமக்கு பலம் எதுவும் இல்லாததாய் உணர்தலே இயல்பிருப்பாயிருக்கிறது.
நம்மைப் பற்றிய மதிப்பீடுகளின் பெறுபேறுகள் தருகின்ற விளைவுகள் என்பது, இயல்பின் நிலையைக் கொஞ்சமும் பிரதிபலிப்பதாயிருப்பதில்லை என்பதை ஒருவன் உணர்வதற்குள், அடுத்த வெற்றியோ தோல்வியோ வந்து பலம் பற்றி மீண்டும் கேள்வியைக் கேட்க வந்துவிடுகிறது.
இருந்தாலும், ஒவ்வொரு தனிநபரும் தன்நிலை சார்பில் மிகப்பலமானவர்களாகவே இருக்கின்றனர். அதுதான் நிதர்சனம்.
எம் பலம் பற்றிய கேள்வி என்பது, எமது மூளைக்குள் எண்ணி வைத்துள்ள விநோத நிலையின் வாயிலாகத் தோன்றும் பயத்தினால் உருவாகிறது. மூளை நினைத்துக் கொள்கின்ற விடயங்கள் சார்பாக, நிகழ்வுகள் நடந்தேறும் என எண்ணி காரியங்கள் செய்யத் தொடங்குவதால், பயம் என்பது அந்தச் செயலோடு சிநேகம் கொள்கிறது.
மூளை கொள்கின்ற பயத்தின் பெறுதிகள், எம் வாழ்க்கையின் அசைவுகளின் ஆதிக்கம் செலுத்த விடுகின்ற போது, அடுத்த கணமென்ன, இந்தக் கணம் பற்றிய சந்தோசங்களும் தொலைக்கப்பட்டுவிடுகின்றன. அதுவே, நம் பலம் பற்றிய கேள்வியை தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருக்கும் வாய்ப்பை உருவாக்கி விடுகிறது.
இந்தப் பலம் பற்றிய கேள்விகளைத் தோற்றுவித்த, தோல்வியோ அல்லது அது போன்ற எண்ண வீச்சோ தோன்றக் காரணமாகவிருந்தது இதுதான் என நாம் பலதையும் சுட்டிக்காட்டலாம். அது வாழுகின்ற சூழலின் பிழை எனலாம். விதியின் விளையாட்டு எனலாம். அடுத்தவரின் பொறாமை எனலாம். சமூகத்தின் இயலாமை எனலாம்.
எதையும் எப்படியும் எப்போதும் எமது தோல்விக்குக் காரணமென சொல்லிச் செல்லலாம்.
அதனாலேயே, அடுத்தவர்களோடு எம்மை ஒப்பிட்டுக் கொண்டு கண்கலங்கலாம். எல்லாவற்றையும் பற்றிக் குறை கூறிக் கொண்டுதிரியலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு பொழுது பற்றியும் அழுது புலம்பி, துன்பத்தைத் துணையாக்கிக் கொள்ளலாம். அடுத்தவர்கள் பற்றி அடுத்தவர்களோடே புறம் பேசிப் புகழ் எய்தலாம். மற்றவர்கள் பற்றிய குறுகிய எண்ணத்தோடு, பொறாமையின் பொக்கிஷமாய் திகழலாம். எடுத்தெதற்கெல்லாம் முறைப்பட்டுக் கொண்டு காலம் கழிக்கலாம்.
அல்லது, வாழ்வுக்குத் தேவையான அறிவினைப் பெற்றுக் கொள்ளக் கற்கலாம். வழுக்கள் தோன்றியுள்ள நிலைகளை இனங்கண்டு திருத்தலாம். உதவிக்கரம் தேவையான இடத்தில், உதவியாய் உருவெடுக்கலாம். மகிழ்ச்சிகளை வாசிக்கின்ற எண்ணங்களுக்கு ஆயுள் கொடுக்கலாம். சின்னச் சின்ன பிள்ளைகளின் எழுத்தறிவிற்கு ஏணியாய் இருக்கலாம். தெரிந்த விடயங்களை பகிர்ந்து, சமூகத்தின் மூளையைப் போஷிக்கலாம். எண்ணந்தான் வாழ்வு என்ற இயல்பான உண்மையை எடுத்துச் சொல்லலாம்.
மேலேயுள்ள இரண்டு பந்தியிலுமுள்ள விடயங்களில், எமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டியதை, நமக்காக யாரும் தெரிவு செய்து தரப்போவதில்லை. நம்மால் மட்டுந்தான் அந்தத் தெரிவை மேற்கொள்ள முடியும்.
எப்போதும் போலவே, தெரிவு செய்வது நாம்தான்.
“எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?” – கோபாலு கேட்கச் சொன்னான்.
- உதய தாரகை
இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu