நுண்ணிய இடைவெளி

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 14 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

தேனீயொன்று, ஒருவரைக் கொட்ட முனைகையில், ஒரு கணம் தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். அதன் பின்னரே அது கொட்டும். அப்படி இயக்கம் நின்று போவது, மிகப் பெரியதான இடைவெளியாக இருக்காது. அது, வலிக்கும் வலியற்ற நிலைக்கும் இடைப்பட்ட மிகக் குறுகிய தொலைவு ஆகும்; ஒரு நுண்ணிய இடைவெளியாகும்.

பல்தேர்வுகள் இருக்கின்ற வாழ்க்கைச் சம்பவங்கள், எமது விடைக்காக காத்திருக்க நாம் செய்கின்ற தெரிவுக்கும், பிற தெரிவுகளுக்கும் இடையான தூரமும் இந்த நுண்ணிய இடைவெளிதான்.

ஒரு தெரிவைச் செய்கின்ற கணத்தில், மற்றத் தெரிவுகளெல்லாம், ஒரு கண் சிமிட்டலில் மறைந்து போகின்ற வலி கொடியது. இதை உயர்ந்தெழுந்த அலையொன்று திடீரென விழுந்து தொலைந்து போய்விடுகின்ற தன்மையோடு தொடர்புபடுத்தலாம்.

ஆனாலும், இந்தத் தெரிவுகள் மீண்டும் வரும் என்கின்ற நிலை, ஆறுதலானது. ஆக, இப்படியான தருணங்களில் நீங்கள் செய்த தெரிவுகள் பற்றிய கவலை வேண்டாம். இந்தத் தெரிவுகள் திரும்பத் தோன்றாது என்றிருந்தாலும், உங்களை நீங்கள் மன்னிக்க வேண்டும்.

அன்பிற்கு வலி தரவும் முடியும். வலி போக்கவும் முடியும். இந்த இரண்டும் ஒருசேர அரங்கேறுகின்ற அற்புதம் அன்பிலேயே உதிக்கிறது. இதில் செய்த தெரிவுகளின் வெறுமை பற்றி நீங்கள் கவலை கொள்ளக்கூடாது.

மாற்றங்கள் பற்றிய உங்களின் மனநிலையின் தெளிவை, உங்கள் தெரிவுகள் குழப்பி விடுகின்றதாய் அமைந்து விட்டாலும், உங்களை நீங்கள் மன்னிக்க வேண்டும்.

வாழ்க்கை எதை உணரத் தருகின்றதோ, அதனை அப்படியே உணர்வதற்கு உங்களை நீங்கள் உறுதியாக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் வலியை உணர்கின்ற போது, அந்த வலிக்குக் காரணமாக நாமே இருப்பதாக, நம்மை நாமே கடிந்து கொள்கிறோம். இந்த வலி தோன்றாமலிருக்க, அப்படி அல்லது இப்படி ஏதாவது செய்திருக்கலாம் என்று எமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். நாம்தான் இந்த வலியை நமக்குள் கொண்டு வந்தோம் என்றும் நம்பிக் கொள்கிறோம்.

சிலவேளைகளில், இந்த வலி நமக்கு ரொம்பவும் தேவையானதுதான் என நமக்கு நாமே, சொல்லிக் கொண்டு, மனத்தை நம்ப வைத்துக் கொள்கிறோம். ஆனாலும், இது எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மை நாம் மன்னிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

அப்போது, நாம் கடந்த காலம் பற்றிய கவலைகளை மனத்திலிருந்து துறக்கலாம். இன்றைய அழகிய பொழுதை, அற்புதங்கள் கொண்டு நிறைக்கலாம். அதனாலே, நாளை கற்பனைகள் தாண்டிப் பறக்கலாம்.

  • உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –