ஈற்றில் நீ எதுவோ?

பயமில்லாத தன்மைதான் பயங்கரம் கொண்ட திரைப்படங்களைக் காண்பதற்கான தகவை உண்டுபண்ணுமென்பதில்லை. நீ, பயப்படலாம், அதற்கு எல்லைகள் கூட வைத்திருக்கலாம். உன் தெரிவில் தான் அது உயிர்ப்படைகிறது.

திறமையானவர்கள் தான் போட்டியில் ஜெயிக்க முடியும் என்பதில்லை. நீயும் ஜெயிக்கலாம். அதற்கு திறமை அல்ல, திறமையைத் தக்கவைக்கின்ற விடாமுயற்சியே போதும். வீழ்ந்தாலும் எழுவேன் என்ற வேட்கையை வேண்டும்.

சங்கீரணமான விடயங்களை  அறிந்து கொள்ளவதற்கு நீ விஞ்ஞானியாக இருக்க வேண்டுமென்பதில்லை. உன்னால் முடியுமானளவு விடயங்களைப் புரிந்து கொள்ளலாம். முயற்சி செய்து, முழுவதையும் புரிந்தும் கொள்ளலாம்.

கலையில் கொண்ட ஆர்வத்தின் உச்ச நிலைகளில் கலைஞர் எனச் சொல்வோர் யாவரும் இல்லை. ஆனால், நீ கலைஞனாய் வலம் வரலாம். ஒவ்வொரு நாளும் கலை பற்றிய உன் தேடல் அதற்கு ஆதாரமாய் வழி வகுக்கும்.

ஒரு மொழியிலுள்ள அத்தனை சொற்களையும் தெரிந்து கொண்டால் மாத்திரம் தான் எழுத்தாளனாக முடியும் என்று யாராவது சொன்னார்களா? நீ எழுத எழுத தோன்றும் எழுத்தின் வடிவநிலை வழுக்கள் தான் உன்னை எழுத்தாளனாக்கும் உளிகள்.

நீ எதுவாக வேண்டுமோ, அதற்காக எந்தப் பிழைகளுமற்ற ஒருவனாய் உருவெடுக்கத் தேவையில்லை. இங்கு யாரிடமும் குறைகள் உள்ளன. எதுவும் குறைகள் கொண்டுள்ளன.  குறைகள், தோல்விகள், பிழைகள் என்பவற்றிலிருந்து படிப்பினை பெறுகின்ற போதே, வாழ்வு வளம் பெறத் தொடங்குகின்றது.

நீ வழுக்களைக் கொண்டிருக்கலாம். நீ எல்லாவற்றையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமலிருக்கலாம். நீ எதையும் செய்யலாம்.

ஆனால், ஈற்றில் நீ எதுவோ அதுவாகவே இருப்பதன் வாயிலாகவே வெற்றி உன் விலாசம் தேடிவரும்.

தாரிக் அஸீஸ்