நிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்

Instagram Post - 1

நிறம் வலைப்பதிவின் மூலம் உங்களைச் சந்தித்து, இந்த மாதத்தின் முதல் தினத்தோடு பதினொரு ஆண்டுகள் நிறைவாகிறது. காலச்சக்கரத்தின் வேகத்தோடு என் எண்ணங்களுக்கு வண்ணமயமான வடிவம் கொடுப்பதில் இந்த வலைப்பதிவு மிகவும் பிரதானமாகவிருந்திருக்கிறது.

வாழ்க்கை என்கின்ற அனுபவத்தை, ரசிக்கின்ற பாங்கைச் சொல்லுகின்ற ஏற்பாடாய் நிறம் வலம் வந்ததை நீங்கள் அறிவீர்கள். வாசகர்களாக நீங்கள் நிறத்தோடு காட்டுகின்ற ஆர்வம் என்னை எப்போதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

நீங்கள் அனுப்புகின்ற பின்னூட்டங்கள், மின்னஞ்சல்கள் என எல்லாவற்றையும் நான் விரும்பிப் படிப்பேன்.

எப்போதும் நான் எதை வாசிக்க விரும்புகின்றேனோ அதையே நான் எழுதுகிறேன். எனது எழுத்தில் நான் காட்டும் ஈடுபாட்டின் நீட்சிதான், வாசகர்கள் அதன் பால் கொண்டுள்ள ஈடுபாட்டிற்கும் ஆர்வத்திற்கும் ஆயுள் கொடுப்பதாக நான் நம்புகின்றேன்.

பதினொரு ஆண்டுகள் எழுத்தின் மூலமாக பயணிக்கின்ற நிலைகளில் நான் பல விடயங்களை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன்.

நான் இப்போது எதுவாக இருக்கின்றேனோ, அதனை நான் வாழ்ந்த சூழல், பழகிய மனிதர்கள், தேர்ந்தெடுத்த புத்தகங்கள் என பலதும் செதுக்கின என்றே உணர்கின்றேன்.

பரந்து விரிந்த உலகின் வியத்தகு விந்தைகளைக் கண்டு, பிரமிக்க வேண்டுமென்ற அவா என்னுள் எப்போதுமே இருப்பதுண்டு. பல நாடுகளுக்குப் பயணித்தாலும், நான் இன்னும் காணாத உலகம் விசாலமானது. அதனைக் காண வேண்டுமென்ற தேட்டம் தொடர்ச்சியாகவே இருக்கின்றது.

நான் வாழ்ந்த சூழலில் என் மீதான, என் தந்தையின் ஆதிக்கம் மிகப் பெரியது. உலகம் பற்றிய புரிதல்களை நான் பெற்றுக் கொள்ள அவர் எனக்குச் சொன்ன சம்பவங்கள், அவர் என்னை அழைத்துச் சென்ற இடங்கள், வாங்கித் தந்த புத்தகங்கள் என்பன ஆதாரமாயிருந்தன.

எனது சின்னச் சின்ன வெற்றிகளை ரசிப்பது தொட்டு, அதன் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காய் உதவுகின்ற எனது தந்தையின் அத்துணை இயல்புகளையும் நான் மனதாலே நினைவேந்துகின்றேன்.

இன்னும் நினைவிருக்கிறது, தந்தை வெளியூருக்குச் சென்று வீடு திரும்பும் போது, இனிப்புப் பண்டங்கள் வாங்கி வருகிராறோ இல்லையோ, புத்தகங்கள் வாங்கி வருவார். அதுவே, வீட்டுக்குக் கொண்டு வரும் சொத்து. இன்றும் அவரின் நினைவாக அவற்றை சேமித்து வைத்திருக்கின்றேன். தந்தை பற்றிய எனது சில நினைவுகளை இந்தப் பதிவில் நிறத்தில் ஏற்கனவே பகிர்ந்திருக்கின்றேன்.

என் தந்தையின் இயல்புகளைக் கொண்டு உருவாகின்ற அன்புத் தந்தையாக நானும் எனது மகனுக்கு இருக்க வேண்டுமென்பதில் அதிக கவனம் எடுக்கின்றேன். வாழ்க்கை அழகானது.

எழுத்து, வாழ்க்கையின் நிலை என எல்லாமுமே தொடர்ச்சியாக மாற்றங்களுக்குள்ளாகும் போதே, வசீகரத்தை கொண்டு தரும். அழகிய அனுபவங்களைச் சேர்க்கும்.

என் எழுத்திற்கு பதினொரு ஆண்டு காலமாக முகவரி கொடுத்த நிறத்திற்கும், நிறத்தோடு பயணித்த அன்புள்ளம் கொண்ட வாசகர்களாகிய உங்களுக்கும் எனது கோடி நன்றிகள்.

தொடர்ந்தும் எண்ணங்களை நிறத்தின் மூலம் பகிர்வேன். அன்புக்கு நன்றி.

தாரிக் அஸீஸ்

படைத்தலும் பகிர்தலும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  58 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

நிறமும் நிறத்தோடிணைந்த பதிவுகளும் படைத்தலின் தேவையும் அதன் இன்பத்தையும் பற்றி அடிக்கடி சொல்லியிருப்பதை நீங்கள் வாசித்திருப்பீர்கள்.

படைத்தல் என்பது பற்றிய தேவை, மனிதனின் மிகப்பெரிய தேட்டமாகவே பண்டைய காலம் தொட்டு இன்று வரைக்கும் வளர்ந்து கொண்டு வருகிறது. நானும் படைப்பதை விரும்புபவன். படைத்தலின் மூலம் தான் பரிவு பற்றிய புரிதல் கிடைக்கிறது. இங்கு நான் செய்கின்ற படைப்பாக்கங்கள் தான் என் ஆத்மாவிற்கு தீனி போடுகிறது.

படைத்தல் என்பது இப்படியிருக்க, படைத்தலில் பலன் இருக்க வேண்டும். இருக்கும் பலன் பலரிடமும் பகிரப்பட வேண்டுமென்கின்ற கருத்திலும் எனக்கு அதிக உடன்பாடு உண்டு.

நிறத்தின் பதிவுகளும் ஒரு படைப்புதான். இங்கு எழுத்துக்களை கோர்ப்பது ஒரு கலையாகும்.

கடந்து போகும் இந்த மாதத்தில் என் படைத்தலில் உருவான பலவும் வெளியாகின. அவை அவற்றுக்கேயுரித்தான தளங்களில் வெளியிடப்பட்டன. ஆனால், நிறத்தின் வாசகர்களோடும் அந்தப் படைத்தலின் சுவையை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

நான் எழுதிய நூலொன்று வெளியாகியது. “வெளிச்சம் வேண்டாம்” என்பது அதன் பெயர். Amazon இல் நூலாகவும் மின்னூலாகவும் கிடைக்கிறது.

அந்த நூல் பற்றிய காணொளி முன்னோட்டம் இது.

இம்மாதம் தொடர்ச்சியாக பல எழுத்துருக்களை நான் வெளியிட்டதோடு, இன்னும் பல எழுத்துருக்களை உருவாக்கும் பணியிலும் மும்முரமாக ஈடுபட்டேன். எழுத்துருக்கலை மீதான எனது ஆர்வம் பற்றி இன்னொரு பதிவில் நிறத்தில் சொல்ல எண்ணியிருக்கிறேன்.

இம்மாதம் வெளியான எழுத்துருக்களை கீழுள்ள இணைப்புகளில் பெறலாம்.

வெறுமை – ஆங்கில எழுத்துருபதிவிறக்க
verumai-font

Rise Star Hand – ஆங்கில எழுத்துருபதிவிறக்க
rise-star-hand

நிமிரன் – ஆங்கில எழுத்துரு — வரவிருக்கும் வசந்தம்
nimiran-font

தொடரும் எனது புதிய எழுத்துருக்கள் வெளியீடு பற்றிய விடயங்களை அறிய என்னை ட்விட்டரிலோ பேஸ்புக்கிலோ பின்தொடர்வதால் பெற்றுக் கொள்ளலாம்.

படையுங்கள். உருவாக்குவதில் தான் உணர்ச்சிகள் சேமிக்கப்படும் — பகிரப்படும். படைப்பில்தான் களிப்பு உண்டாகும்.

“வாழ்வு என்பது உன்னை நீ தேடிக் கண்டுபிடிப்பதல்ல. உன்னை நீ உருவாக்குவது.” என்று பேனார்ட் ஷா சொல்லியதை கோபாலு ஞாபகப்படுத்தச் சொன்னான்.

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

நாளை என்பது என்றும் வராது!

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

எதிர்காலம் என்பது ஒரு எண்ணக்கரு மாத்திரம். அது எங்கும் இல்லை. அப்படி எதுவும் இல்லை. யாரும் எதிர்காலத்தைக் கண்டதாய் வரலாறும் இல்லை.

இல்லாத ஒன்று பற்றியதான உன் ஆயத்தங்கள் பலவேளைகளில் புதிரையும் இன்னும் சில வேளைகளில், கேள்விகளையும் தோற்றுவிக்கிறது.

நாளை என்பது நம் கையில் இல்லை என்பது நாமறிந்த உண்மைதான். நாளை என்பது இல்லை என்பதை நாம் அறிந்து கொண்டுள்ளோமா?

this-is-now

இன்று என்பது மட்டுந்தான் உண்மையானது. நாளை என்பது கூட, இன்று ஆன போதுதான், அது உண்மையாகிறது. ஆக, நாளையும் இன்றாகுகையில் தான் உயிர்ப்புக் கொள்கிறது.

இந்தப் பொழுதுதான் மிக உண்மையானது. இதுதான் தருணம். என்ன செய்யப் போகிறாய்? என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

உன் எண்ணத்தில் நாளை என்பது ஒன்றில்லை என்பதை உணர்ந்தாலும், இன்று என்பது மட்டுந்தான், குறிப்பாக இந்தப் பொழுதுதான் உண்மையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

நேற்று என்பதும் இனி வராது என்பதை நீ அறிந்தாலும், நாளை என்பதும் இனி வராது என்பதையும் நீ புரிய வேண்டும். இன்று மட்டுந்தான் இருக்கும் என்பதையும் நீ அறிந்து கொள்ள வேண்டும்.

ஆனாலும், தொடர்ச்சியாக நீ நாளைக்கான ஆயத்தங்களைச் செய்யப் போய், இன்றைய இனிமையைத் தொலைத்து விடுகிறாய். இந்தக் கணம் தான் உண்மை என்பது பற்றிய புரிதலை, நாளை என்கின்ற மாயை, ஏற்றுக் கொள்ள மறுத்துக் கொண்டிருக்கிறது.

நேரம் என்பது இப்போது தான். இது தான் நேரம்.

சிதறிக் கிடக்கும் உன் கூறுகளை, ஒருமிக்கச் சேர்த்துக் கொண்டு, உன்னை நீ ஒன்றாகக் காண்கின்ற நிலை தோன்றும் போதுதான், உனக்கு முகவரி கிடைக்கிறது. அந்த நிலை, இந்தக் கணத்தில் தான் சாத்தியம். இதுதான் அதற்கான நேரம்.

நீ என்பது பிரிதொரு விடயமன்று. பிரபஞ்சமே நீதான். உன்னை, பிரபஞ்சத்தோடு ஒருமித்துக் கொள்ள வேண்டும். அதற்கும் இதுதான் நேரம்.

இந்தக் கணம் தான் உண்மை. இந்தக் கணம் பற்றிய புரிதல் இல்லாவிட்டால், எங்கேயும் போக முடியாது.

“NOW-HERE or NO-WHERE — தெரிவு உன் கையில் தான்” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

இது பூக்கவிதை

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 38 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

அறிவியலின் வழியால் பல புதிர்களை விடுவிக்க துணை நின்ற அறிவியலாளர் தான் ரிசார்ட் பைன்மேன் (Richard Feynman). தனது இயல்பான விவேகத்தின் வாயிலாக அறிவியலை அவர் அணுகிய விதம் அற்புதமானது.

புதிதாக விடயங்களை அறிந்து கொள்தல் எந்தளவில் மகிழ்ச்சியைக் கொண்டு தரும் என அற்புதமாகக் எடுத்துக்கூறிய பைன்மேனின் அழகுச்சிந்தை — கவிதை.

அழகையும் மர்மத்தையும் அவர் விளக்கிச் சொல்கின்ற அற்புதமான நிலையை நிறத்தின் வாசகர்களோடு கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென ஆர்வம் கொண்டேன். அதுவே இப்பதிவாயிற்று.

flower

இது பூவிற்கான கவிதை; பூக்கவிதை என்றும் சொல்லப்படலாம்.

காலங்கடந்து நிற்கின்ற பைன்மேனின், பூக்களின் அழகு பற்றிய விளக்கம், வாழ்க்கையின் அழகு, ஆர்வம், கனம் என அனைத்தையும் பற்றியதான உன் பார்வையை புதுப்பிக்கும்.

இந்தப் பதிவின் தேவைகருதி, பைன்மேனின் சிந்தனைக் கருத்தை, தமிழாக்கம் செய்கின்றேன்.

எனக்கொரு நண்பனிருக்கிறான். அவன் கலைஞன். சிலநேரங்களில் அவனின் அபிப்பிராயங்களை என்னால் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அவன், பூவொன்றை கையில் ஏந்திக் கொண்டு, “இந்தப் பூவைப் பார். எத்துணை அழகு — பொன்னெழில்” என்பான்; நான் ஏற்றுக் கொள்வேன். “நான் ஒரு கலைஞனாக, இதன் அத்தனை அழகையும் கண்டு கொள்ள முடிகிறது, ஆனால், நீ விஞ்ஞானியாக இருந்து கொண்டு இந்தப்பூவை மொத்தமாக பிரித்து ஆராய்வதால், இந்தப் பூவின் அழகு பொலிவிழந்து போகிறது!” என்பான். அவனொரு மூளைக்குழப்பம் உள்ளவனென்றே நினைக்கிறேன். முதலில், அவன் காண்கின்ற அந்தப் பூவின் அழகை, எல்லோராலும் கண்டு கொள்ள முடியும். என்னாலும் அதனைக் கண்டு கொள்ள முடியுமென நம்புகிறேன்.

என்னால் பூவின் அழகை மதிக்க முடிகிறது. அதேநேரத்தில், அவன் காண்கின்ற அப்பூவின் அவன் காணாத விடயங்கள் பலதையும் என்னால் காண முடிகிறது. அந்தப் பூவினுள்ளே காணப்படுகின்ற கலங்களை என்னால் எண்ணிக் கொள்ள முடியும்; அதற்குள்ளே நடக்கின்ற சங்கீரணமான செயற்பாடுகளை கற்பனை செய்து கொள்ள முடியும். இவையும் அழகைக் கொண்டவைதாம். ஒரு சென்றி மீட்டராக தெரியும் பூவின் தோற்றத்தைத் தாண்டியும், உள்ளகம் காணப்படும் மிகச் சிறிய கட்டமைப்புகளிலும் செயற்பாடுகளிலும் அற்புதமான அழகு காணப்படுகின்றன என்றே நான் சொல்கிறேன்.

பூச்சிகளைக் கவர்ந்து தன் மகரந்தச் சேர்க்கை நடைபெற வழிசெய்யவே, பூக்களில் நிறம், பரிணாமம் கண்டது என்கின்ற விடயம் எத்துணை சுவாரசியமானது. ஆக, பூச்சிகளால் நிறங்களைக் காண முடியும் என்ற முடிவுக்கு வரலாம். இது ஒரு கேள்வியை தோற்றுவிக்கிறது: இந்த அழகியல் நிலை என்பது அத்தனை நிலைகளிலும் காணப்படுகிறதா? ஏன் அது அழகியலாக இருக்க வேண்டும்? இப்படியாக பலதரப்பட்ட சுவாரசியமான கேள்விகளை, ஒரு பூவின் தோற்றத்தின் வழியே, தோன்றச் செய்யும் குதூகலமும் மர்மமும் விஞ்ஞான அறிவிற்கு மட்டுமே உரித்தானது. ஆக, விஞ்ஞானம் பூக்களுக்கு அழகு சேர்க்கிறது. அது பூக்களின் அழகை எப்போதும் அகற்றுவதில்லை.

மர்மங்களாய் பொதிந்திருக்கும் மர்மங்களின் அழகை கொண்டாடுவதும் வழக்கமில்லாத விடயங்களை அரவணைத்துக் கொண்டு அதில் அழகு காண்பதுமே வாழ்தலிற்கு அர்த்தம் சேர்க்கும்.

“கேள்விகளை வாழ்க்கையாக்கிக் கொண்டிரு. அவற்றின் பதில் காண்கின்ற போது, யாருமறியாத அழகை நீ உணர்ந்து கொள்வாய்!” என கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் இருபத்தெட்டாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

அன்புள்ள டயரிக்கு

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 43 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

அன்புள்ள டயரிக்கு,

ஒவ்வொரு நாளும் நீ, என்னைச் சந்தித்துக் கொள்ளும் உன் வழக்கத்தைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.

விடியும் ஒவ்வொரு பொழுதும் வெற்றிடமானது என்பதையும் உன்னைச் சந்திக்கும் ஒவ்வொரு போதும் உணர்ந்து கொள்வேன். உனது ஒரு நாளின் வெறுமையைப் போக்கிவிட்டால், அது விஷேடமாகிவிடும் அதிசயத்தையும் கண்டிருக்கிறேன்.

நீதான் என்னிடம், புலரும் பொழுதுகள் எல்லாமே விஷேடமாக்கப்படலாம் என்பதை ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டிருக்கிறாய்.

diary

உனக்கு அதிகம் கூச்சமிருக்க வேண்டுமென, அவன் சொல்கிறான். நீ கதைப்பதே இல்லையாம் என்பது காரணமாம். “கதைப்பது எல்லாமே கூச்சம் களைந்தனவா?” என்று நீ கேட்டதாக நான் அவனிடம் நாளை சொல்கிறேன்.

நீ மெல்ல மெல்ல முணுமுணுத்துக் கொள்ளும் ஆயிரம் அழகிய சொற்களை அவன் அறியாமல் இருப்பது பற்றி உன்னைப் போல் எனக்கும் கவலை தான்.

அன்புள்ள டயரிக்கு,

சொல்வதெல்லாவற்றையும் அமைதியாக இருந்து செவிமடுப்பதில் உன்னுடன் யாரும் இவ்வுலகில் போட்டி போட இயலாது. அதில் உனக்கு நிகர் நீ மட்டுந்தான்.

தனிமை அழிப்பது எப்படி என்று என்னிடம் யாரும் கேட்டால், நான் உன்னோடு கொஞ்சம் கதைக்கும் படி, சொல்வதுண்டு.

ஆப்ரகாம் லிங்கன் தன்னைக் கண்ணாடியில் பார்த்தால், சில நேரங்களில் அவரின் உணர்வுகளும் அவர் அணிந்துள்ள தொப்பியின் கரிய நிறத்தைப் போல் இருப்பதைக் கண்டு கொள்வார்.

ஆனால், உன்னோடு கதைத்தால், உணர்வுகள் எல்லாமே பகிரப்பட்டுவிடும். அத்தனை வேதனையையும் உணர்வுகளையும் அப்படியே மொத்தமாக சேமித்து வைப்பதற்கு எத்துணை பொறுமை உனக்கு.

நெருப்பைப் போல், தனிமையைத் தின்றுவிடும் உன் சக்தி பற்றி யாரும் உன்னிடம் சொன்னதுண்டா?

அன்புள்ளமிக்க டயரிக்கு,

நான்கு வருடங்களுக்கு முன் என்னை ஒவ்வொரு நாளும் சந்திக்கும் உன் அண்ணனை நேற்றுச் சந்திந்தேன்.

அந்தச் சந்திப்பு மிக இனிமையாவிருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் அவனிடம் நான் சொன்னவற்றை அப்படியே என்னிடம் மீளச் சொன்னான். கேட்டு வியந்து கொள்ளத்தான் முடிந்தது.

சோகமான சந்தர்ப்பங்களில் நான் அவனிடம் சொன்னவற்றைக் கூட, சுவை தரும் முன்னாளின் அனுபவமாய் அவன் மீளச் சொன்னதைக் கேட்ட போது, நேரம் வலிகளைத் தின்றுவிடும் என்பது மீண்டும் நிரூபணமாகியது.

அவன் சொன்னவைகளில் அத்துணை நிறங்கள் தோய்ந்திருந்தன.

உன் அண்ணனின் இதயத்துடிப்பைக் கேட்டுக் கொண்டே அவன் சொல்கின்ற அத்தனையையும் வெயிலின் வெப்பத்தால் வியர்வை மேனி படர செவிசாய்த்திருந்தேன்.

அவன் நான் சொன்னதை நான்கு ஆண்டுகளுக்கு முன் எப்படி அமைதியாக இருந்து கேட்டிருந்தானோ, அதே போன்றே அமைதியாக என்னிடம் மீளச் சொல்லிக் கொண்டுமிருந்தான். உன் அண்ணன் மாறவில்லை. அப்படியே இருந்தான்.

நீயும் அப்படித்தான் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். இருப்பாய் என்றும் நம்புகிறேன்.

அல்பர்ட ஐன்ஸ்டைன் சொன்னதாய் ஒரு விடயத்தை என்னிடம் உன் அண்ணன் பகிர்ந்து கொண்டான், “எம்மால் முடிந்தளவில் நாம் எமது உன்னதமான விடயங்களைச் செய்ய வேண்டும். அதுவே எமது சங்கைக்குரிய மனித பொறுப்பு ஆகும்”.

பொப்பிசைச் சக்கரவர்த்தி மைக்கல் ஜெக்ஸன் இறந்த செய்தி கேட்டு, அது உண்மையென உறுதிப்படுத்த இணையத்தில் பலரும் ஒரே நேரத்தில் தகவலை வேண்டி நின்ற போது, அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் இணையமே கதிகலங்கிய செய்தியையும் உன் அண்ணன் என்னிடம் சொன்னான்.

அன்புள்ள டயரிக்கு,

சோகம் அகற்றும் சோதரராயும் காலம் கடப்பதின் பதிவாயும் நீ எடுக்கும் பாத்திரங்கள் ஏராளம்.

ஆனாலும், இத்தனை பாத்திரங்கள் ஏற்றாலும் உன்னை மாற்றாமல் இருந்து கொண்டு, எனக்கு வாழ்க்கையை ரசிக்கும் படியும் அதில் ரசணைகளை உன்னோடு பகிரும் படியும் நீ தரும் உத்வேகம் — கவிதை.

இந்த உணர்வை எப்படி மொழியாக்கலாம் என்று திணறியிருந்த போதும், உன்னைச் சந்திக்கின்ற நிலையில் அவ்வுணர்வு மொழி கொள்வது — அழகு.

நீ ஒரு பொக்கிசம்.

அன்புடன் உன் இனிய தோழன்,
உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் இருபத்தைந்தாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

இது தண்ணீர்!

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 6 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

நீருக்குள் உல்லாசமாக உலா வந்து கொண்டிருந்தன இரண்டு வாலிப மீன்கள். இவை இடையில் எதிர்த்திசையில் வந்தவொரு வயோதிப மீனைச் சந்தித்தன.

வாலிப மீன்களை நோக்கி, “வணக்கம் பசங்களே, எப்படி இந்தத் தண்ணீர் இருக்கிறது?” என வயோதிப மீன் கேட்டது.

இதைக் கேட்ட வாலிப மீன்கள், கொஞ்சம் தூரம் நீந்திச் சென்று, ஒரு வாலிப மீன், மற்றைய வாலிப மீனைப் பார்த்து “தண்ணீர் என்றால் என்னடா?” என்று கேட்டது.

நாம் வாழ்கின்ற உலகில் காணப்படுகின்ற பல விடயங்கள் எங்கள் புலன்களுக்குள் தங்கிக் கொண்டிருக்காவிட்டாலும், அவை தான் எமது வாழ்வின் முக்கியமான அச்சாணிகள், அத்தோடு யதார்த்தங்களின் தொடக்கங்களாக இருந்துவிடுகின்றன.

வெளிப்படையாக காணப்படும் விடயங்களைப் பற்றிய புரிதல்கள் தோன்றுவது தான் இங்கு கடினமாயிருக்கிறது.

அறிவு என்பது ஒன்றுமேயில்லை. விழிப்புணர்ச்சி என்பதுதான் சர்வமும் ஆகும்.

விழிப்புணர்ச்சியின் வினையால் தான், அறிவு வளர்க்க முடிகிறது. அறிவால் வளர முடிகிறது. ஆய்வுகள் நிகழ்த்த முடிகிறது. வாழ்கின்ற சூழலின் வெளிகளைப் பற்றிய தெளிவு உண்டாகிறது.

எமது வெற்றுக்கண் புலனின் தோற்றத்திற்கு அகப்படாமல் போயுள்ள, வெளிப்படையான விடயங்கள் பலதும் தான் நம் வாழ்தலின் ஆதாரங்கள். அவை எப்போதும் எம் பக்கமாய் இருக்கின்றது என்பதை நாம் நினைவு படுத்திக் கொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது.

“இது தண்ணீர்… இது தண்ணீர்.. இது தண்ணீர்!”

அப்போதுதான், விதிகளை வெல்ல, வினை செய்யும் களம் வெளிப்படையாக தோன்றும். அத்தருணத்தில், விழிப்புணர்ச்சி, பூத்துக் குலுங்கி புன்னகைப்பூ பூக்கும்.

water

2005 ஆம் ஆண்டு, நாவலாசிரியர் டேவிட் பொஸ்டர் வலஸ், கென்யொன் கல்லூரியின் நுண்கலை பட்டமளிப்பு விழாவில் நிகழ்த்திய சொற்பொழிவில் குறிப்பிட்ட ஒரு விடயத்தை, நிறத்தின் வாசகர்களோடு, பகிர்ந்து கொள்ள வேண்டுமென எண்ணினேன். அதுவே இப்பதிவாயிற்று.

அந்தச் சொற்பொழிவில் இடம்பெற்ற அற்புதமான பல விடயங்களைத் தொகுத்து ஒரு குறும்படமாகவும் வெளியிடப்பட்டிருந்தது. அந்தக் காணொளி உங்கள் பார்வைக்கு.

எம்மைச்சுற்றி, வெளிப்படையாகக் காணப்படுகின்ற அற்புதங்களை மறந்து, இல்லாதது பற்றிய தேடல்கள், அதனால் தோன்றும் கக்கிசங்கள் தான் பலரினதும் மகிழ்ச்சிகளைக் கொள்ளையடிக்கும் கூறாகியிருக்கிறது.

இந்தக் குறும்படத்தைப் பார்ப்பது பலனளிக்கும் என கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

மொத்த சொற்பொழிவும் எழுத்து வடிவில்: http://web.ics.purdue.edu/~drkelly/DFWKenyonAddress2005.pdf

மொத்த சொற்பொழிவும் ஒலி வடிவில்: http://www.youtube.com/watch?v=PhhC_N6Bm_s

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் இருபத்திரண்டாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

நீ காணாத அழகு

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 53 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

இங்கு பலதுமே பிழையாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அழகு என்றால் எம் தோற்றங்களுக்குச் செய்யும் ஒப்பனைகளால் உருவாவது என்ற பொய்யே பல நேரங்களில் மெய்யென நம்பப்பட்டிருக்கிறது.

இந்தப் பிழை எங்கு நடந்தது? எப்படித் தோன்றியது? என்பது மிக முக்கியமான கேள்விகள் தான்.

அக்கரையில் இருப்பதெல்லாம் அழகானவை தான் என்று உலகம் உறுதிமொழி எடுத்தாகிவிட்டது. தேகங்களில் பூசப்படும் பளிங்குத் துகள்கள் தான் அழகைத் தந்துவிடுகின்ற அற்புதமான பொருள்கள் என்ற அறிவிப்பும் எல்லோரும் வாசிக்கும் மந்திரமாகிவிட்டது.

beauty

இந்த நிறத்தில் இருந்தால்தான் அழகு, அந்த நிறத்தை இந்த நிறமாக மாற்றிக் கொள்ள என்ன செய்யலாம்? “ஒரு கூடை சன் லைட், ஒரு கூடை மூன் லைட்” எல்லாம் வாங்கிக் கொள்ள வழி உண்டா? என உலக மனங்கள் கேள்விகளோடு துடித்துக் கொண்டிருக்கின்றன.

சுருக்கமற்ற தோல், நரைகளற்ற முடி என அழகுக்கு அடிப்படையான விதிகள் வேறு. யார் உருவாக்கினார்கள்?

பண்டைய நாகரீகங்களில் தோன்றிய கலைகளில் மனிதன் கண்ட இயற்கையின் வனப்பும் அவன் கண்ட உலக ஜீவன்களின் லாவண்யமும் அற்புதமாக சொல்லப்பட்டிருக்கும்.

காட்சிப்புலத்தில் தோன்றுகின்ற நிலைகளை அழகென்று கண்டு கொள்ள முடிந்த அந்தக்கால நிலைகள் மறைந்து, சுய அழகை மறைந்து காட்சிப்புலத்தில் தோன்றும் அழகென உணர்ந்ததை தன் அழகென மாற்றிக் கொள்ள நினைக்கும் அபத்தங்கள் தொடர்கின்றன.

இங்கு சுயமிழத்தல் தொழில்ரீதியாக நடந்தேறுகிறது.

ஆனால், உண்மையில் அழகென்ன?

நீதான் அழகு.

நீ எதுவோ அதுதான் அழகு. நீதான் கலப்படமற்ற அழகு. அசலழகு.

நீ மறந்து போன உன் அழகின் நிலையை அடிக்கோடிட்டுக் காட்டும் இந்தக் காணொளியை கொஞ்சம் பார்க்க வேண்டும். ஈற்றில் உலகமே உன்னில் தனித்துவமான அழகைக் காண்பதை உணர்வாய்.

“மகிழ்ச்சியைக் கொண்டு தருபவையெல்லாம் அழகு மிகுந்தவை” என கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் இரண்டாம் பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

பணமரம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 54 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

அது நவம்பர் மாதம் தொடங்கிவிட இன்னும் ஓரிரு நாட்கள் காணப்பட்ட சூழல். நெடுநாட்கள் கழித்து என்னைக் காணவந்தான் என் நண்பனொருவன்.

நெடுநாட்களின் தெரியாத சங்கதிகளை சுவை சேர்த்து குறுகிய நேரத்திற்குள் பகிர்ந்து கொண்டோம். விடைபெறும் நேரத்தில், “உனக்கொரு கிப்ஃட் கொண்டு வந்திருக்கேன்” என்றவாறு என்னிடம் ஒரு பொதியைத் தந்தான்.

பொதியைப் பெற்று, அவனையும் வழியனுப்பிவிட்டு, வீட்டினுள் வந்தேன்.

பொதியில் தந்த பரிசு என்னவாயிருக்கும் என்ற ஆர்வக்கேள்விக்கு விடை தேட, வேகமாக பொதியைப் பிரிக்கலானேன்.

treeofmoney

பொதிக்குள் ஒரு குட்டி மரம் — ஆமாம், அது பணமரம்.

இது சீனர்களின் பாரம்பரியத்தில் வருகின்ற பணமரமல்ல. இது உண்மையான பணமரம்.

அணுக்களால் பிரபஞ்சம் ஆக்கப்பட்டதல்ல, அது பணமரத்தின் கிளைகளின் நிழல்களால் தாக்கப்பட்டது என்பதாய் விசாலமாய் விரிந்து வளரத்துடித்த அந்த பணமரத்தின் கிளையொன்று சொல்லியது எனக்குப் புரிந்தது.

“விருட்சமாய் வியாபிக்க நினைக்கும் உன் கனவின் தொடக்கத்திற்கு நான் தரக்கூடியது என் ஜன்னலோரக் கண்ணாடியின் முகம்தான்” என்றவாறாய் பணமரத்திற்கு வீடு தருகிறேன்.

தொடர்ச்சியாக நீருற்றி பராமரிக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு விடயங்கள் சொல்லப்பட்டன.

காலைநேரத்தின் கதிரவனைக் காணும் என் ஜன்னல் கண்ணாடியின் தோழனாய் பணமரம் இரவோடிரவாக மாறிக் கொண்டது.

என் கரம் பற்றிக் கொண்ட போதெல்லாம், அது மெல்ல மெல்ல முளைத்துக் கொண்டுவிடுவதைக் கண்டு உவகை கொள்வேன்.

அதன் மெதுவான முன்னேற்றம் அதன் கிளைகளுக்கு வலிமை கொடுத்தாலும், என் எண்ணங்களுக்கு வானமும் கொடுத்தது.

பணி முடித்து பல மணிகளுக்கு பின்னர் வீடு வந்து அந்த மரத்தைக் காண்கின்ற போது, சோர்ந்து போய் இருக்கும். என் ஸ்பரிசத்தில் புத்துணர்ச்சி பெற்றுக் கொள்ளும்.

பணமரத்தின் இயல்பான வாழ்வையும் அதன் ஒவ்வொரு கிளையும் கொண்ட பிரபஞ்சத்தின் விலாசங்களையும் கண்டு வியந்திருந்திருக்கிறேன். ஒரு விஞ்ஞானமும் இந்த விலாசங்களுக்கு விலாசம் கொடுத்ததில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அது காலை வேளை, சூரியனும் அற்புதமாய் ஒளி தந்து சூழலை ரம்மியமாக்கியது. காற்று வரட்டுமே என்று ஜன்னலை திறந்து விட்டு, வெளியே சென்று விட்டேன்.

அன்று பணமரத்திற்கு மகிழ்ச்சி அலாதியாய் இருந்திருக்க வேண்டும்.

நிலைகளை மாற்றிக் கொள்வதில் காலநிலைக்கு எப்போதுமே இருக்கும் பிரியம் அன்றும் தொடர்ந்தது. பெய்யெனப் பெய்த மழை ஜன்னலையும் தாண்டி பணமரத்தையும் துவம்சம் செய்து விட்டுள்ளதை வீடு திரும்பியதும் கண்டேன்.

கவலை — மௌனம்.

விழுந்தாலும், எழுவேன் என்ற நம்பிக்கையோடு பணமரம் தரையில் ‘வியாபித்துக்’ கிடந்தது. கையில் அதனைப் பற்றிக் கொண்டு அதன் கண்ணீரைத் துடைக்கலானேன்.

“உன்னைவிட, நீ வேறொன்றை நேசித்து, பின் அதனை இழக்கும் போதே, நீ இழப்பின் உண்மையான வலியை உணர்ந்து கொள்கிறாய்” — அதன் ஒரு கிளை உரக்கச் சொல்லியது.

அதன் கிளைகள் சொல்லிய ஒவ்வொரு விடயத்தையும் கேட்டு, தூங்கிய எனக்கு எழும்பிய போதெல்லாம், அவை சொன்ன அத்தனை உணர்வுகளோடு என்னோடு ஒட்டிக் கொண்டு பயணிப்பதான உணர்வு தோன்றியது.

இந்தக் கிளைகளின் உணர்வு ஒட்டிப் போன கதையை யாரிடம் தான் சொல்லலாம். யார்தான் கேட்கப் போகிறார்கள் என்ற முடிவெடுக்கப்பட்ட அனுமானங்களின் தொடக்கங்கள் எனக்குள் நிலை கொண்டாலும், நான் கிளைகளோடு ஐக்கியமாயிருந்தேன்.

நிஜச்சூழலில் நடப்பது பற்றிய துலங்களைத் தரக்கூட எனக்கு முடியவில்லை. இந்த கிளைகளின் உணர்வுகள் அப்படி ஒட்டிக் கொண்டுவிட்டது.

ஜன்னல் கண்ணாடிக்கருகில் இருந்த பணமரத்தை நான் இப்போது, என் கைகளுக்கு எட்டிய தூரத்தில் வைத்து அழகு பார்க்கிறேன். கிளைகளோடு சிலாகித்துக் கொள்கிறேன்.

இப்போது நான் தலையணைக்கடியில் வைத்து அந்த மரத்தை வளர்க்கின்றேன். என் காதோரமாய் அது பாடும் தாலாட்டுப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. கூடவே கனவின் ஓரத்தில் பணமரம் நின்று, உதிரும் இலைகள் விழுகின்ற ஓசைகளையும் என்னால் கேட்க முடிகிறது.

பணமரங்களோடு நேசம் வைத்திருப்பது, மற்றையவற்றுடன் நேசம் வைத்திருப்பதைக் காட்டிலும் விஷேசமானது. உங்கள் கவனத்தை அதற்கு வழங்க வேண்டும். மன ஓர்மையாய் இருக்க வேண்டும். நேரத்தை அதற்காகத் தர வேண்டும். அதனோடு உன்னிப்பாக இருக்க வேண்டும். உலகத்திலே இத்தனையும் வேண்டிநிற்கும் ஒரு நேசம் பணமரத்தின் நேசமாகத்தான் இருக்க வேண்டும்.

“இந்த நேசம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

(யாவும் கற்பனை அல்ல)

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.