உச்சரிக்க முடியாது; உணர வேண்டும்.

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 21 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

1926 ஆம் ஆண்டு வெளிவந்த கார்ட்டூன் புத்தகம் தான் வின்னி த பூஃ என்பது. மனிதனின் குணாதிசயங்கள், பண்புகள் என்பவற்றைக் கொண்ட மிருகங்களின் புனைவுக் கதைகளாக இதனை கண்டு கொள்ள முடியும். இதன் தழுவல் நிலைப் படைப்புகள் 2000களிலும் திரைப்படங்களாகக் கூட எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

ஆப்பிள் நிறுவனம் தனது iOS என்ற பணிசெயல் முறைமையில் iBooks ஐ அறிமுகப்படுத்திய போது, இந்த நூலை இலவசமாக தரவிறக்கம் செய்யும் சாத்தியத்தை வழங்கியது. ஸ்டீவ் ஜொப்ஸ் இதனை அறிமுகப்படுத்திய நிலையொரு கலை.

இந்தக் கதையாக்கத்தின் ஓட்டத்தில் நிறைய பாத்திரங்கள் வந்து சந்திக்கும். பூஃ என்பது ஒரு கரடி. அதன் நண்பர்களின் ஒருவர் தான் பிக்லட் என்பது மிகச் சிறிய இன்னொரு மிருகம். இது தன்னை வீரனாக உருவாக்க முயற்சிப்பதோடு தனது பயமெல்லாவற்றையும் தாண்டிய வாழ்வை நோக்கிய பயண வேட்கையோடும் காணப்படும்.

இந்தப் பாத்திரங்களிடையே இடம்பெறுகின்ற சம்பாஷணைகள் மிகவும் உணர்வு வலிமை நிறைந்தவை.

“அன்பை எப்படி உச்சரிப்பது?” என்று பிக்லட், பூஃவிடம் கேட்கும்.

“அது உச்சரிப்பதல்ல. உணர்ந்து கொள்வது” எனப் பதிலளிக்கும் பூஃ.

மனிதனின் அழகிய உணர்வுகளின் பயணத்தை வெளிப்படையாக இந்த மிருகங்களின் புனைவு பாத்திரங்களின் மூலம் எடுத்துத் செல்கின்ற A. A. Milne இன் கதை சொல்லும் பாணி — வியப்பு.

பண்டையக் காலத்தில் வாழ்ந்த நாட்டின் அரசனொருவன், மிகப்பெரிய ராஜசக்கரவர்த்தி ஆகிவிட வேண்டுமென்ற கனவோடு தினமும் வாழ்ந்து வந்தான்.

நாட்டின் அத்தனை விடயங்களையும் அடக்கியாள வேண்டுமென்கின்ற அவனின் வேட்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. இந்த நிலையை விரைவில் அடைந்து கொள்வதற்காய் நாட்டின் பிரபலமான ஞானியொருவரைச் சந்தித்து ஆசி பெறச் சென்றான்.

அரசன் சென்ற நேரத்தில், ஞானியோ தியானத்தில் திளைத்திருந்தார். கொஞ்சம் நேரம் காத்துக் கொண்டிருந்தான் அரசன். ஆனாலும், ஞானி, தியானத்தை நிறைவாக்கியதாகக் தெரியவில்லை.

இன்னும் கொஞ்ச நேரம் காத்துக் கொண்டிருந்தான். ஆனாலும் ஞானியின் தியானம் முடிந்த பாடில்லை.

“ஏ, நான் உலகத்தையே ஆள வேண்டுமென்ற வேட்கையில், அதற்காக உனது ஆசி பெறலாமென வந்தேன். நீ என்னுடன் கதைக்காமலா புறக்கணிக்கின்றாய்?” என்ற ஆவேசத்துடனும் கோபத்துடனும் ஞானியை நோக்கி அரசன் கத்திக் கொண்டு வெளியேற முற்பட்டான்.

திடீரென சுதாகரித்துக் கொண்ட ஞானி, “அரசே, உலகத்தை ஆள வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களால் உங்களின் ஆத்திரத்தைக் கூட அடக்க முடியாமல் இருக்கும் போது, எப்படி பிறரை அடக்கி ஆளப் போகிறீர்கள்?” என்ற அமைதியாகச் சொன்னார்.

அரசன் அவ்விடத்திலிருந்து வாழ்வின் மீதான புதிய பார்வையுடன் வெளியே சென்றான்.

“உணரந்து கொள்கின்ற அனுபவ அறிவு நிலைகள் சொல்லித்தரும் பாடங்கள் மிக உயர்வானவை. எல்லோருக்கும் அவர்கள் சார்பான நிலையில் இந்தச் சம்பவத்தின் தாக்கமிருக்கும் — உணர்ந்து கொள்ளும் வலிமையிருக்கும்” என கோபாலு கடுமையாக நம்புகிறான்.

ஈற்றில் ஒரு புதிரையும் சொல்லச் சொன்னான், கீழ்வரும் படத்தில் ஆங்கில எழுத்தான O ஒன்று இருக்கிறதாம். அது எங்கிருக்கிறது என கண்டுபிடிக்கச் சொன்னான்.

– உதய தாரகை —

*இற்றைப்படுத்துகை (14.01.2012): குறித்த புதிரில் O என்ற எழுத்து ஒரு தடவையல்ல, நிறையத் தடவைகள் காணப்படுகின்றன. ஒரு O காணப்படுகிறது என்று நான் புதிரில் குறிப்பிட்டுள்ளதால், ஒரு O ஐக் கண்டவுடன் தேடல்களை நிறைவு செய்து, விடையை பலரும் மறுமொழியாகச் சொல்லியனுப்பி இருந்தனர். முக்கோணங்களைத் தாண்டியும் யோசிக்கப் பழக வேண்டுமென்பதைச் சொல்லவே (இதை Thinking out of the triangle என்று ஆங்கிலத்தில் சொல்லலாம். Box என்று சொல்ல விருப்பமில்லை. 😉 ) இந்தப் புதிர் என கோபாலு சொல்லச் சொன்னான்.

கெய் செரா செரா

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

வெவ்வேறு விடயங்கள் தோன்றுவதும் மறைவதும் பின்னர் மீண்டும் தோன்றுவதுமாய் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். இவ்வாறு தோன்றுகின்றவைகளில் சில நிலைத்து நிற்கும், சில மறைந்து போகும், இன்னும் சிலவோ, இந்த 2011 வருடம் போல் திரும்ப வரவே வராது.

மீண்டும் வராத 2010 ஆம் ஆண்டு பற்றி நிறத்தில் சொல்லியது நேற்று போல் தோன்றுகிறது. வேகமாய் விரைந்தோடிவிட்ட பன்னிரண்டு மாதங்கள் விட்டுச் சென்ற நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன்.

எண்ணங்களால் வசந்தமான பல மாற்றங்கள், கடந்து போகின்ற ஆண்டில் அரங்கேறிய அழகைக் கண்டு மகிழ்கிறேன்.

கடந்து செல்கின்ற ஆண்டில், சந்திக்க வேண்டுமென கனவு கண்ட பலரையும் இன்னும் பல்வேறு துறைகளில் தங்களை நிலை நிறுத்திய பலரையும் சந்தித்து அவர்களது அனுபவங்களோடு பயணிக்கின்ற வாய்ப்புக் கிட்டியது.

புரிந்துகொள்கின்ற ஆத்மாக்களின் இணைப்புக் கிடைத்தலின் அனுபவம் புரிந்து கொள்ளப் படலாம் — புரியவைக்க முடியாது.

மகிழ்ச்சி, அதிர்ச்சி, சோகம், கவலை, வெறுப்பு, காத்திருப்பு, பரிவு, பச்சாதாபம் என ஒவ்வொரு நிமிடமும் வழங்கிய ஆயிரம் உணர்வுகளை எனது அனுபவங்களின் அத்தியாயங்களுக்குள் அடக்கிக் கொள்கிறேன்.

அடுத்த நிமிடம் மறைத்து வைத்திருக்கும் ஆச்சரியங்களின் வெளிப்பாடுதான், அனுபவங்களின் அத்தியாயங்களை பலவேளைகளில் நிரப்பி விடுகின்ற உண்மையும் எனக்குப் புரிகிறது.

பிரபல நடிகையும் பாடகியுமான Doris Day இன் பாடலொன்று, எதிர்காலம் எவ்வாறிருக்குமென காண்பதற்கு அது எமதுடையதல்ல என்ற பொருள்படும் வகையில் அமைந்திருக்கும்.

Que Sera Sera — கெய் செரா செரா. எது எப்படி உருவாகுமோ, அது அப்படியே உருவாகும். அந்தப் பாடலைக் காண்க.

.

அடுத்த ஆண்டு கொண்டுதரப் போகும், ஆச்சரியங்கள் பற்றிய பட்டியல் யாரிடமும் இல்லை. அடுத்த நிமிடத்தின் அழகிய நிலை, இந்த நிமிடத்தின் அறுவடையில் தான் இருக்கிறது.

இந்த நிமிடமே எல்லாமும் ஆகிறது.

பிரபல பாடலாசிரியரும் இசையமைப்பாளருமான Woody Guthrie, 1942 இல், அடுத்த ஆண்டில் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென எண்ணினாரோ அவற்றையெல்லாம் புத்தாண்டு தீர்மானங்களாக பட்டியற்படுத்தியிருந்தார்.

அந்த பொக்கிஷமான புத்தாண்டு தீர்மானப் பட்டியலின் பிரதி இணையத்தில் வெளியாகியது. பட்டியலில் காணப்படும் தீர்மானங்கள் இன்றும் பொருந்தும் வகையில் நாமெல்லோரும் ஒவ்வொரு நாளும் செய்யக்கூடிய விடயங்களைக் கொண்டிருப்பது — ஆச்சரியம்.

காலங்கள் கடந்தும், காலத்தால் அழியாத விடயங்களைத் தர முடிகின்ற கலைஞர்கள் பற்றிய நினைவு எப்போதும் எனக்கு வியப்பையும் பூரிப்பையும் தருவதுண்டு. பாரதியும் காலத்தால் அழியாத காவியம் செய்தவன் என்பேன்.

Woody Guthrie இன் பட்டியல் உங்கள் பார்வைக்காக:

நிறைய நல்ல நூல்கள் படிக்கலாம், நம்பிக்கையோடு இருக்கலாம், கனவுகளோடு கதை செய்யலாம், மனதை திடப்படுத்திக் கொள்ளலாம், எல்லோரிடமும் அன்பு காட்டலாம், மக்களைப் புரிந்து கொள்ளலாம் ஏன் பற்தீட்டி குளிக்கலாம். இந்த நிமிடத்திற்கு அழகு சேர்ப்பதென்பது நாம் தேர்ந்தெடுக்கும் அர்த்தமுள்ள செயல்களிலேயே தங்கியுள்ளது. தேர்ந்தெடுத்தல் உங்கள் கைகளில்.

“நிமிடங்கள் பல சேர்ந்தே வருடமொன்றாகிறது என்பதை நான்தான் சொல்ல வேண்டுமா?” என்று கோபாலு கேட்கிறான்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

– உதய தாரகை —

  • Que Sera Sera என்பது ஸ்பானிய மொழியிலமைந்த வாக்கியமாகும். Whatever will be, will be என்பதே அதன் ஆங்கில அர்த்தமாகும்.
  • 1956 இல் வெளியான அல்பிரட் கிட்ஸ்கொக்கின் The Man Who Knew Too Much என்ற திரைப்படத்தில் Que Sera Sera என்ற பாடல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • Woody Guthrie இன் புத்தாண்டு தீர்மானப் பட்டியலின் நிழற்பட மூலம்: List Of Note

பத்தாயிரம் மணிநேர விதி

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடமும் 47 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

கடந்த ஜுலை மாதம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற TED Global 2011 மாநாட்டில், TED மொழி இணைப்பாளராக நான் கலந்து கொண்டேன். அங்கு பல ஆளுமைகளைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

பலதுறைகளிலும் முன்னணியாக விளங்குகின்ற ஆளுமைகளுடனான சந்திப்பு, பல விடயங்களைச் சொல்லித் தந்தது. அவை பற்றியெல்லாம் விரிவாக வெவ்வேறு பதிவுகளில் சொல்லவிருக்கிறேன்.

அந்த மாநாட்டில் நான் சந்திந்த பல ஆளுமைகளுள் ஒருவர்தான் — எழுத்தாளர் மல்கம் கிலாட்வெல் (Malcolm Gladwell). 2005 ஆம் ஆண்டு TIME சஞ்சிகையின் உலகில் செல்வாக்குச் செலுத்தும் 100 பேர் பட்டியலில் இடம்பிடித்தவர். The Tipping Point, Blink மற்றும் Outliers போன்ற பல பிரபல்யமான நூல்களின் ஆசிரியர்.

பத்தாயிரம் மணிநேர விதி என்றவுடனேயே, இவரே அனைவராலும் நினைவுகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றார். தனது Outliers என்ற நூலின் மூலம் இந்த விதி தொடர்பாக சொல்லியிருப்பார்.

ஒருவர், ஒரு சிக்கலான திறனில் நிபுணத்துவம் பெற்றவராவதற்கு, அந்தத் திறனை பயிற்சி செய்வதற்காக அதனையே குறித்தான பத்தாயிரம் மணிநேர பயிற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டுமென்பதுதான் — அந்த விதி.

ஒவ்வொரு நாளும் 2 தொடக்கம் 3 மணிநேரம் தான் நிபுணத்துவம் அடைய வேண்டுமென எண்ணுகின்ற விடயத்தில் 10 வருடங்களுக்கு பயிற்சி எடுத்தால் ஒருவன் அவன் விரும்புகின்ற துறையில் நிபுணத்துவம் அடைகின்றான் என்பதே இதன் இன்னொரு வடிவம்.

பல ஆதார சம்பவங்களோடு தனது அவதானங்களை கிலாட்வெல் அந்த நூலில் விபரிப்பார்.

ஆனாலும், இந்த பத்தாயிரம் மணிநேர விதி, பலராலும் வித்தியாசமான கருத்தோடு உணரப்பட்டுள்ளதும் உண்மை. “நிபுணராவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வெறும் பத்தாயிரம் மணிநேரம் பயிற்சி செய்வதுதான்” என்பதுதான் அந்தக் கருத்து.

வெறும் பத்தாயிரம் மணிநேரங்கள், எதைத் தரமுடியும்? வெறுமையைத் தவிர.

விரும்பிய திறனில் ஒன்றிப்போய், அதுபற்றியதாய் எமது பயிற்சிகள் பத்தாயிரம் மணிநேரமாவது இருக்க வேண்டுமென்பதையே இந்த விதி சொல்கிறது. பத்தாண்டுகள் தான் தேவைப்படும் என்றில்லை — ஒன்றித்த பயிற்சியுடனான பல மணித்தியாலங்களை ஒரு நாளில் உங்களால் பயிற்சிக்காக தர முடிந்தால், ஒரு சில ஆண்டுகளிலேயே விற்பன்னர் ஆகிடலாம்.

திறமை அல்லது ஆற்றல் என்பது தோன்றி விசாலமாக்கபடுவதில் பயிற்சி, பொறுமை, தொழில்நுணுக்கங்கள் என பல காரணிகள் பங்காற்றும் என்பதும் நாம் அறிந்ததே!

மணித்தியாலங்களை எண்ணிக் கொண்டு பயிற்சி செய்வதாலோ, நிபுணத்துவம் கிட்டாது என்பதையும் நாம் உணர வேண்டியுள்ளது. ஒன்றித்த பயிற்சியில் மணித்தியாலக் கணக்கு தெரியாது — நாம் பயிற்சி செய்யும் விடயம் எதுவோ அது மட்டுமே கவனத்தில் நிற்கும்.

இந்த விதி வலியுறுத்துவதெல்லாம் பயிற்சி செய்வதனால் பலன்கள் கிடைக்கின்றது என்பதைத்தான்.

ஆனால், நிபுணர்கள் என்பவர்கள் யாவர்?

இசையில் விற்பன்னராக நினைத்து, இசையமைப்பாளர்கள் எவ்வாறு இசையமைக்கிறார்கள் என்றுணர்ந்து அதன்படி வெளிப்படுத்த எண்ணுதல், எழுத்தில் வித்தைகள் செய்ய எண்ணி எழுத்தாளர்கள் எப்படியெல்லாம் வித்தைகள் செய்கிறார்கள் என அதன்படி வெளியிட பயில்தல், சித்திரக் கலைஞனாகி சிகரங்கள் தொட மற்ற சித்திரக் கலைஞர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதையறிந்து முயல்தல் என்பதிலேயே பலரினதும் பயிற்சிகள் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ‘முயற்சிகள்’ ஒருபோதும் நிபுணராவதற்கான வாய்ப்பை வழங்காது. அசலின் இன்னொரு நகலொன்றை மட்டுமே தரும்.

கலையையோ, திறனையோ தனக்கேயுரித்தான பாணியில் சொல்லத் தெரிந்தவன் தான் நிபுணராகின்றான்.

தன்னைத் தானாகவே காட்டிக் கொள்கின்ற வித்தைகளைத் தான் நிபுணன் பயிற்சியாகப் பெறுகிறான் என்றே உணர வேண்டியுள்ளது. இது சொல்லிவிடுவது போல் லேசானதல்ல. மனதோடு ஒருமித்த பயிற்சிகள் நிறையத் தேவைப்படுகிறது.

தனது கருதுகோள்கள் பற்றிய தெளிவை புரிகின்ற வகையில் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல்தான் ஒருவனை ஒரு துறைசார்பான தெளிவுள்ளவனாகக் காட்டுகிறது.

“எனக்கிட்ட இருந்து அவங்க இதைத்தான் எதிர்பாக்கிறாங்க. அதத்தான் நான் செய்யனும்” என்றவாறான தொனியில்தான் நிறைய முயற்சிகளின் தொடக்கம் இன்றளவில் இருக்கிறது. இங்கு தன்னைத் தானாக காட்டுவதற்கான தெளிவின் துவக்கம் தேவைப்படுகிறது.

மற்ற விடயங்கள், மனிதர்களின் எண்ணங்கள் சார்பான ஆதிக்கமே எமது எண்ணங்களின் வெளிப்பாட்டின் பூட்டாகவிருக்கிறது. ஆனால், சாவி எம்மிடம் இருப்பது என்பது மகிழ்ச்சியான செய்திதான்.

எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், அனைவரும் “இது புதிசா இருக்கே!” என்றவாறான திகைப்பைத் தரக்கூடிய சந்தர்ப்பங்கள் நாளுக்கு நாள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த ஆச்சரியங்களை உருவாக்குபவர்கள்: நேரத்தை பயிற்சிகளால் அலங்கரித்து தன்னைத் தானாகவே காட்டிக் கொண்டவர்கள்.

நேரத்தை பயிற்சியில் முதலீடு செய்து தங்களைத் தயார்படுத்திக் கொண்டவர்கள் – அதிர்ஷ்டசாலிகள். செனகா என்ற உரோம தத்துவஞானி, “தயார்படுத்தல், வாய்ப்பைச் சந்திக்கும் நிலையைத்தான், அதிர்ஷ்டம் என்கிறோம்” என்று ஒரு தடவை சொல்லியிருப்பார்.

தன்னைத் தானாக வெளிப்படுத்தினால், வாய்ப்புகளுக்கு உங்களை வந்து சேரும் நிறைய வாய்ப்புகள் பிறக்கும். இங்கு அசலுக்கு நிறைய மௌசு உள்ளது எல்லோருக்கும் தெரியும்.

எழுத்தாளர் கிரிஸ்டின் ஆம்ஸ்ட்ரோங் சொன்ன ஒரு விடயத்தை பகிர்தல் பலன் தரும் என நினைத்து இங்கு இணைக்கிறேன்.

“நீங்கள் பேசிக் கொண்டிருந்த ஆனால் எப்போதுமே செய்யாத அந்த விடயங்களைச் செய்யுங்கள். எப்போது விட்டுவிடுவது, எப்போது கட்டிக் காப்பது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அவசரம் வேண்டாமே! அது அதைப் போன்றுதான் இருக்கிறது என்ற சொல்லாடலுக்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டாம். எடுத்ததற்கெல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கவும் வேண்டாம்.

முடியாது என்று சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள் — உங்கள் ‘முடியும்’ என்ற வார்த்தைக்கு அப்போது கவர்ச்சி கிடைக்கும்.

முன்னேற்றத்தில் பங்காயுள்ள நண்பர்களோடு பழகுங்கள், குழிதோண்டும் மற்றவர்களோடான அணுக்கம் தேவையில்லை. நீங்கள் செய்வதில் ஆர்வமாக இருங்கள். மற்றவர்களுக்கு ஆர்வமாக உங்களைத் தோற்றுவிக்கின்ற பாசாங்கு வேண்டாம். உங்கள் சுதந்திரத்தை மதிக்கும் வகையில் முதிர்ச்சியடைந்திருங்கள். அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்கும் வகையில் இளமையாயிருங்கள். ஈற்றில், நீங்கள் யாரோ அதுவாகவே இருங்கள்.”

குறுக்கிட்ட கோபாலு இப்படிக் சொல்கிறான், “அப்படி, இப்படி என வரவேண்டும் என்று முயற்சிப்பதை விட்டுவிட்டு, எதுவாக நீயாக வேண்டுமோ, அதையே முயற்சிக்காமல் – செய். நீ செய்வதில் தோற்றால்தான், செய்தது முயற்சி. முயற்சியில் தோற்றதை என்னவென்று சொல்வது? ஆக, எதைச் செய்ய எண்ணுகிறாயோ அதை முயற்சிக்காமல் உடனே செய்! – செய்வது தோற்றுப் போனால், அது தன்னாலே முயற்சியாகும்.”

– உதய தாரகை —

  • பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.
  • TED Global 2011 இல் மல்கம் கிலாட்வெல் வழங்கிய சொற்பொழிவு வெளியிடப்பட்டுள்ளது. TED.com இல் காணலாம்.
  • Outliers நூலில் சொல்லப்படுகின்ற இந்த விதி பற்றிய விடயத்தை சுருக்கமாக ஒருவர் காணொளியாக உருவாக்கி இருக்கிறார். YouTube இல் அதனைக் காணலாம்.

மரமேறும் மீன்கள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 36 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

“வாகை சூட வா” என்ற படத்தில் ஓர் அற்புதமான பாட்டு வரும். “சர சர சார காத்து வீசும் போதும்..” — சின்மயி உன்னதமாகப் பாடியிருப்பார்.

இந்தப் பாடல் திரையில் தோன்றுகின்ற நிலையில் படத்தின் காட்சியமைப்புகள் பிரமாதமாகவும் எளிமையாகவும் ஆக்கப்பட்டிருக்கும்.

ஒரு கட்டத்தில் காட்சிப்புலத்தில், மழைகால வெள்ளத்தில் அடிபட்டு ஊருக்குள் வருகின்ற குளத்து மீன்கள் மரத்தில் ஏற முற்படுகின்றதும் அது முடியாமல் போய் கீழே விழுகின்றதுமான காட்சிகள் காட்டப்படும். கிராமிய சூழலின் பிரிக்கமுடியாத அற்புதமான பண்புகளை திரைக்குள் பார்க்க முடியும்.

பாடசாலையில் கரைச்சல் தந்து கொண்டிருந்த அந்தக் கட்டிளம் வயது பையனுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஆதரவும் அரவணைப்பும் அறிவுரைகளும் தான். பாடசாலையில் அழகாய் அறிவுரை சொல்வதில் அனுபவமுள்ள ஆசான் மயில்வாகனத்திடம் அவன் அனுப்பி வைக்கப்பட்டான்.

இந்தப் பையன், பாடசாலையில் பல தடவைகள் நடந்து கொண்டுள்ள விதம் அவனை புனர்வாழ்வு மையத்திற்கேனும் அனுப்பித் திருத்தி எடுக்க வேண்டுமென்பதாய் பலரையும் எத்தி நின்றது.

நிறையப் பேர் அவனோடு, அவன் குணம் சார்பாகக் கதைத்து அறிவுரை பலவும் சொல்லியிருந்தனர். ஆனால், அவனை மயில்வாகனம் சார் இதுவரையில் சந்திக்கவில்லை.

“நீ, குழப்படி செய்யாத, தொந்தரவுக்குள் மாட்டிக் கொள்ளாத ஏதாவது வகுப்புகள் உண்டா?,” அந்தப் பையனிடம் மயில்வாகனம் கேட்டார்.

“நான் மைதிலி டீச்சரின் வகுப்பில் குழப்படி அதிகம் செய்வதில்லை” என்றான் அந்தப் பையன்.

“அப்படி மைதிலி டீச்சரின் வகுப்பில் என்ன வித்தியாசமிருக்கிறது?” என்று கேட்ட மயில்வாகனத்திற்குக் கிடைத்த பதில்கள் பல விடயங்களைச் சொல்லின.

“மைதிலி டீச்சர், என்னை அன்போடு வகுப்பிற்குள் வரவேற்பார். அவர் தருகின்ற பாடம் எனக்கு நன்றாக புரிகின்றதா என்பதை கவனிப்பார். எனக்குச் செய்யக் கூடியதான பாட அப்பியாசங்களையே மட்டுமே அவர் எனக்குத் தருவார்” என்று அந்தப் பையன் வித்தியாசங்களை அடுக்கிக் கொண்டிருந்தான்.

மேற்சொன்னவற்றில் ஒன்றைத் தானும் வேறு எந்த ஆசிரியரும் செய்வதில்லை என்பதையும் அவன் சொல்லிய பதில் சுட்டி நின்றது.

மற்ற ஆசிரியர்களை அணுகி, இந்த விடயங்களை தங்களின் பாடவேளைகளில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென மயில்வாகனம் சார் பரிந்துரைக்கின்றார். அவர்களும் அப்படியே செய்ய, என்ன ஆச்சரியம், அந்தப் பையன் குழப்படி ஏதும் செய்யாமல் பாடத்தில் கவனிக்க ஆரம்பிக்கின்றான்.

எதுவெல்லாம் வேலை செய்யவில்லை என்பதை அவதானிப்பதாகவே நாம் வளர்க்கப்படுகிறோம். முறைப்பாடு செய்வதிலும் முழுக் கவனம் செலுத்துகிறோம். ஆனால், “இன்று எது செயற்படுகின்றது? அதனை எவ்வாறு மேம்படுத்தி நன்றாகச் செயற்படுத்தலாம்?” என்பது பற்றிய புரிதல்கள் கொண்டவர்களாய் உருவாதலின் அழகியலை பலவேளை மறந்து விடுகிறோம்.

உங்கள் வாழ்க்கையில், வேலைத்தளத்தில் ஏன் வீட்டில் பல விடயங்களை மாற்றிக் கொள்ள நீங்கள் நினைத்து முயன்றிருப்பீர்கள். எது வேலை செய்யவில்லை என்பதைப் பற்றி எண்ணி, வேதனையை விலை கொடுத்து வாங்காமல், எது வேலை செய்கிறது, அதனை எப்படி மேம்படுத்தலாம் என்பதை அவதானித்து காரியம் செய்தலே, அழகிய மாற்றத்திற்கான ஒரேயொரு வழி.

Made to Stick என்ற நூலின் ஆசிரியர்களான ஸிப் மற்றும் டான் ஆகியோர் மாற்றம் பற்றிச் சொன்ன ஒரு விடயத்தை நிறத்தின் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணமே, இந்தப் பதிவாக உருவாயிற்று.

“எல்லோரும் மேதைகள் தாம். மீனொன்றின் ஆற்றலை அது மரத்தில் ஏறும் திறமையை வைத்து கணிப்பீடுவீர்களாயின், அந்த மீன் வாழ்நாள் முழுவதும் தன்னை முட்டாளென்றே எண்ணிக் கொள்ளும்” என்ற ஐன்ஸ்டைனின், அமுதவாக்கும் மேற்சொன்ன விடயத்திற்கு இன்னும் பலம் சேர்க்கும்.

– உதய தாரகை —

அந்த ஒரேயொரு விடயம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 54 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

உலகின் பல துறைகளில் புரட்சிகள் செய்த, அண்மையில் உயிர்நீத்த ஸ்டீவ் ஜொப்ஸ் பற்றிய விடயங்கள், சாதனைகள், அணுகுகைகள் என பல விடயங்களும் இன்னும் சொல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

1994ஆம் ஆண்டு, ஸ்டீவ் ஜொப்ஸ் வழங்கிய ஒரு இன்னும் ஒளிபரப்பப்படாத பேட்டியில் வாழ்வியலின் மிக ஆழமான உண்மைகள் பலதையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

அந்தப் பேட்டியில் சொன்ன பலவற்றில் ‘அந்த ஒரு விடயத்தை’ நிறத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமென நான் நினைத்தேன். அதுவே இப்பதிவாயிற்று.

“நீங்கள் வளர்ந்து வருகின்ற போது, உலகம் இப்படித்தான் இருக்கும் அதற்குள்ளேயே நாம் வாழ வேண்டுமெனவும் தடைகளைக் கூட ஆர்வத்தோடு எதிர்கொள்ளாமல் இருக்க வேண்டுமெனவும் உங்களிடம் சொல்லப்பட்டிருக்கும். நல்லதொரு குடும்பம் அதனோடிணைந்த மகிழ்ச்சி — இன்னும் கொஞ்சம் சேமித்து வைத்த பணம் என்பவைதான் வாழ்க்கை என வரைவிலக்கணம் உங்களிடம் சொல்லப்பட்டிருக்கும்.

அது வரையறுக்கப்பட்ட வாழ்க்கை. ஆனால், ஒரேயொரு விடயத்தை நீங்கள் உணர்ந்து கொண்டால், வாழ்க்கை விசாலமானதென்பதை நீங்கள் உணர்வீர்கள்: உலகம் என்று நீங்கள் சொல்கின்ற அனைத்தும் மக்களால் உருவாக்கப்பட்டவை — உங்களைவிட அவ்வளவு திறமையில்லாமலேயே அவர்கள் உருவாக்கினார்கள். நீங்கள் அவற்றை மாற்றலாம். அவற்றில் நீங்கள் ஆதிக்கம் செலுத்தலாம். உங்களுக்குத் தேவையான மற்றவர்கள் பாவிக்கக் கூடிய வகையான விடயங்களை நீங்கள் உருவாக்கலாம்.

இதை நீங்கள் கற்றுக் கொள்கின்ற நிலையில், நீங்கள் என்றுமே புதுமைகள் செய்யும் உன்னதமானவராவீர்கள்.”

ஸ்டீவ் ஜொப்ஸ் இவற்றைச் சொல்கின்ற காணொளி இது:

.

– உதய தாரகை

இன்னொன்று

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 17 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

மாதமொன்று தொடங்கி, நிறைவாகிப் போவதற்கு எடுக்கின்ற காலம் குறைந்து கொண்டு போவது போன்ற உணர்வு எனக்குள் எழுகின்றது. பருவ காலங்கள் மாறி வரும் நிலைகளைக் கண்டு கொள்ளக்கூடிய வாய்ப்பு, இந்த ஆண்டும் கிடைத்திருக்கிறது.

மழை பெய்யும் நள்ளிரவில் நான் என்ற பதிவில் பருவ மாற்றங்களின் பார்வையில் உங்களை ஒருதரம் அழைத்துச் சென்ற ஞாபகமெனக்கிருக்கிறது.

பருவங்கள் வேகமாக மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறேன்.

மரத்தின் பாலுள்ள இலைகள் பொன்னிறமாகி, பூமியினை நாடிவிட கிளைகளை விட்டகழும் அழகியலும் இந்தக் காலத்தில்தான் நடக்கும். வெவ்வேறு நிறங்களில் இலைகள், மரத்தின் கீழான மேற்பரப்பிற்கு கம்பளம் விரித்திருக்கின்ற அழகு — இயற்கையின் கொடை.

இந்த இலையுதிர் காலத்தில் இருமருங்கிலும் மரங்கள் கொண்ட சாலையொன்றில் நடந்து செல்கின்ற அனுபவம் — கலை.

கொஞ்ச நாளில், இலைகளின் நிறங்களால் அலங்கரிக்கப்பட்ட பூமிக்கம்பளத்தைப் போர்த்திக் கொள்ள பனியும் வந்து விழும். பனிவிழும் அழகு – ஆனந்தம்.

நிறங்களையெல்லாம் போர்த்திக் கொண்டு, பரந்த பரப்புகளெல்லாம் வெள்ளை நிறத்தை தரக்கூடிய பனியின் இயல்பு — விஞ்ஞானம்.

கோடை வந்தவுடன், வெயில் பற்றிக் குறை கூறும் மனிதர்களைப் போல், பனிவிழும் நாட்கள் தொடங்கியவுடனும் பனியைப் பற்றி முறையிடுபவர்களையும் இந்த ஆண்டும் நான் சந்திப்பேன். முறைப்பாடு — அவர்களின் மூச்சு.

கனவுகளின் முகவரிகளாகவே, நான் பருவகால மாற்றத்தைக் காண்கின்றேன்.

கனவுகளின் பரிவர்த்தனையில் பல உன்னத நிலைகள் எய்தப்படுவது போல், பருவகால மாற்றங்கள் பற்றிய எமது புரிதல்களின் விரிவாக்கத்தில் மட்டுந்தான் அழகிய நாட்களை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.

எதிர்பார்ப்புகள் எதுவுமே இல்லாமல், “எனக்கு அது கிடைக்கவில்லை. இது கிடைக்கவில்லை” என்று அவள் சொல்கின்ற போதெல்லாம், கோபாலு கேலியாகச் சிரிப்பான். எதிர்பார்ப்புகளை உங்களால் சந்திக்கின்ற சக்தியில்லாவிட்டால், அதுவும் உங்களை சந்திக்காமலேயே போய்விடும்.

அடுத்த நிமிடத்தின் பருவமாற்றம், ஆயிரம் புதிய விடயங்களை சூழலுக்குத் தரலாம். ஆனால், நீ உன் சூழலில், உன் உலகத்தில் காண எண்ணுவது என்ன? என்பதை ஆராய வேண்டும். உனது கனவு — போசணைச்சத்து.

அந்தக்கனவின் உயிர்ப்பில்தான், பனியோ, வெயிலோ உன் சார்பான உலகத்தில் அர்த்தம் பெற்றுக் கொள்ளும். சூழலில் நிகழும் நிகழ்வுகளின் தொடர்ச்சியாகத்தான் நாம் எமது நிலையைத் தக்கவைத்துள்ளோம் என்பதை பலரும் விபத்துக்கள் ஏற்பட்டால் மட்டுமே அறிந்து கொள்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கனவு என ஆயிரமாயிரம் கனவுகள் நனவாகிக் கொண்டிருக்கின்றன. வாழ்வின் அழகான சின்னச் சின்ன சம்பவங்களுக்கு முக்கிய இடம் தராததால், கனியிருந்தும் காய் கவர்கின்றோம்.

மாதங்கள் வேகமாக மாறிக்கொண்டிருப்பது போல், மனிதர்களும் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறார்கள், இன்னொன்றாக.

– உதய தாரகை

பதிவில் இணைக்கப்பட்டுள்ள நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

மறந்துபோன பெறுமதி [புதன் பந்தல் – 19.10.2011] #8

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 10 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

இந்த வாரத்தின் புதன் பந்தல், மனிதன் மறந்துபோன அவனின் பெறுமதியைப் பற்றிச் சொல்கிறது.

கொஞ்ச காலத்திற்கு முன்னர், நான் கேள்விப்பட்ட ஒரு கதையோடு, பதிவை தொடரலாமென எண்ணினேன். அதுவே இப்பதிவாயிற்று.

ஒரு சுயமுன்னேற்ற பயிற்சிப் பட்டறையின் போது, ஒரு பிரபல்யமான சொற்பொழிவாளர், தனது சொற்பொழிவின் போது, திடீரென தனது சட்டைப்பைக்குள் இருந்து 100 ரூபா பெறுமதியான நோட்டை எடுத்து, அவையில் அமர்ந்திருந்தோரிடம் காட்டி, “யாருக்கு இந்த 100 ரூபா நோட்டு தேவை?” என்று கேட்டார்.

அவையிலிருந்தோர் அனைவரினதும் கைகள், உயரத் தொடங்கின.

“நான் இதை உங்களில் ஒருவருக்கு தரத்தான் போகிறேன். ஆனாலும் அதற்கு முன்னர், இதற்கு இப்படிச் செய்ய விடுங்கள்” என்ற கூறியவாறு, நோட்டை தாறு மாறாக கசக்கினார்.

“இன்னும் இதனைப் பெற உங்களில் யாருக்குத்தான் விருப்பம் உள்ளது?” என்று கேட்கலானார்.

ஆனாலும், அவையிலிருந்தோர் அனைவரினதும் கைகளும் மேலே உயர்ந்து தங்களுக்கு தேவை என்ற விடயத்தைச் சொல்லி நின்றன.

இருந்த போதிலும், சொற்பொழிவாளர் விடவேயில்லை. “நல்லது, நான் இதற்கு இப்படிச் செய்தாலுமா நீங்கள் தேவை என்பீர்கள்” என்று கேட்டவாறு, 100 ரூபா நோட்டை தரையில் போட்டு, தனது சப்பாத்தினால் மிதித்து அழுக்குப்படுத்தினார்.

“இன்னமுமா இதை நீங்கள் பெற வேண்டுமென விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்குக்கூட அவையிலிருந்தோர், எல்லோரும் தங்களுக்கு அந்த நோட்டு, தேவை என்பதை தங்கள் கைகளை உயர்த்தி சொல்லலாயினர்.

“நண்பர்களே, இப்போது நீங்கள் பெறுமதியான ஒரு வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொண்டீர்கள்.” என்றவாறு, சொற்பொழிவாளர் நடந்த நிகழ்வின் படிப்பினையை விளக்கலானார்.

“நான் இந்த 100 ரூபா நோட்டிற்கு என்னதான் செய்துவிட்ட போதிலும், அதனை நீங்கள் யாவரும் தேவை என்றே சொல்லிக் கொண்டிருந்தீர்கள். ஏனெனில், நான் எது செய்த போதிலும் அதன் பெறுமதி மாறாமலேயே இருந்தது. இப்பவும் அது 100 ரூபா பெறுமதியானதுதான்.

எமது வாழ்விலும் நாம் எடுக்கின்ற தீர்மானங்கள் மற்றும் சந்திக்கின்ற சம்பவங்கள் சில வேளைகளில், எம்மை தோற்றுப் போக வைக்கும். மற்றவர்களால் இடர்களை சந்திக்க வைக்கும். விழுந்த போதிலும் எழ முடியாதளவில் வலிகளைத் தரும்.

இப்படியெல்லாம் எமக்கு நடக்கின்ற போது, எம்மை நாமே பெறுமதியில்லாதவர்கள் போலவே உருவகித்துக் கொள்கின்றோம். இது தகுமா?” என்று வினா எழுப்பினார்.

“என்னதான் உனக்கு நடந்திருந்த போதிலும், நடக்க போவதானாலும் நீ ஒருபோதும் உன் பெறுமதியை இழக்கமாட்டாய். நீ புதிது. உன் இயல்புகள் விஷேடமானவை. நீயொரு தனித்துவமான அழகு. நீ வெற்றிகளைப் பெறப் பிறந்தவன். உன் தனித்துவமான நிலைக்கு பல வெற்றிகளைத் தர அகிலமே ஆசையோடு இருக்கிறது. உன் பெறுமதியை ஒரு போதும் மறந்துவிடாதே!” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

படிப்பித்தல் [புதன் பந்தல் – 12.10.2011] #7

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 15 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

இந்த வாரத்தின் புதன் பந்தல், கற்றலையும் கற்பித்தலையும் பொதுவான மனித உணர்வின் வெளிப்பாட்டிலிருந்து நோக்குகிறது.

காரிருள் சூழ்ந்த நிலையில், திடீரென பெய்யென பெய்யும் மழைபோலே, நாம் வாழ்கின்ற சூழல் பற்றியதான எமது பார்வைகள் விழித்துக்கொள்தல் நடைபெறுவதுண்டு. அவை எல்லாமும் நாம் சூழல் சார்பாகக் கொண்டுள்ள புரிதலின் வெளிப்பாடாக இருப்பதும் இன்னொரு அழகு.

எல்லோரிடமும் “தாங்கள் உயர்வானவர்கள்” என்ற, குறைந்தது மெல்லியதான அல்லது அதிகபட்ச விண்ணைத்தாண்டிய கர்வம் காணப்படும். இது இயல்பான மனித நிலை.

தன்னை உயர்வாக வெளிப்படுத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களின் அங்கீகாரங்கள் தான், ஒரு தனிமனிதனின் அடுத்த கட்டத்திற்கான முயற்சியின் ஆதாரமாக பலவேளைகளில் இருக்கின்றது. இதுவும் பொதுவானது தான்.

கற்றல் அல்லது கற்பித்தல் என்ற விடயத்தில் நான் இந்த “ஒரு தனிமனிதனின் தன்னைப் பற்றிய உயர்வான கர்வம்” என்ற காரணி நேரடியாக தொடர்பு கொண்டுள்ளதாய் காண்கிறேன்.

கற்பிக்கப்படும் வேளையில், கற்றுக் கொள்ளும் பிள்ளை கற்றுக் கொண்ட விடயத்தால் தான் எதையோ சாதித்துவிட்டதாக எண்ணிவிடுகின்ற அழகிய அனுபவம் தான், அந்தப் பிள்ளை தான் புதிதாக ஒரு விடயத்தை தனக்குள் சேர்த்துக் கொண்டதாய் உணர்ந்து கொள்ள ஆதாரமாயிருக்கிறது.

இதனால், தாம் முன்னிருந்த நிலையிலிருந்து, உயர்வான நிலைக்கு தன்னை கற்றல் அழைத்துச் சென்றுவிட்டதாய் உணர்ந்துவிடுகின்றான். இது அவனுக்கு அழகிய கர்வத்தை கொடுக்கிறது. தன்னைப் பற்றி தானே பெருமைப்பட்டுக் கொள்ளும் மானசீக ஆறுதலையும் வழங்குகிறது.

இந்த அழகிய அனுபவம், குறித்த பிள்ளையை அந்தப் பாடத்தை மேலும் கற்றுக் கொள்ள வேண்டுமென்கின்ற ஆர்வத்தை அலாதியாகவே அவனுள் உருவாக்கி விடுகிறது.

தான் கற்கும் ஒவ்வொரு தருணங்களிலும் அவனால் (ஒரு பிள்ளையால்) உள்வாங்கிக் கொள்ளப்படும் புரிதல்கள், அவனை உயர்ந்த நிலைக்கு கொண்டுவந்து விடுகிறது என்று அவனால் உணர்ந்து கொள்ளப்படும் அழகிய அனுபவத்தின் பிரதிபலிப்புதான் — அவனின் கற்றலின் மீதான ஆர்வத்தின் அளவுகோலாக அமைந்துவிடுகிறது.

இந்த அழகிய அனுபவத்தை வழங்குகின்ற பொறிமுறைகளாக, எமது கற்பித்தல் வழிகள் உருவாக்கப்படுதல் அவசியம் என உணர வேண்டியுள்ளது.

ஆனாலும், இங்கு கற்பித்தலோ, கற்றலோ இந்த அழகிய அனுபவத்தை வழங்குவதற்கோ பெறுவதற்கோ தயக்கம் காட்டிக் கொண்டிருக்கின்றது போன்ற எண்ணம் எனக்குள் இருக்கின்றது.

இந்த அழகிய அனுபவம் கற்பித்தல் நிலைகளில் வழங்கப்படாததால், பல பிள்ளைகள் கற்றுக் கொள்வதை கடினமென உணர்ந்து கொண்டுவிடுகிறார்கள்.

இந்த அனுபவம் வழங்கப்படுதல் மறுக்கப்படுவதுதான், பலரையும் பொதுவாகக் கூட கற்றுக் கொள்வதிலிருந்து தூரமாக்கி வைத்துவிடுகிறது.

“நீங்கள் பெற்றுக் கொள்ளும் பொதுவான அறிவும் பொது அறிவும், உங்களுக்கு, உங்களை உயர்த்திக் காட்டக்கூடிய அழகிய அனுபவத்தைத் தரும் என்கின்ற நம்பிக்கையோடு, நீங்கள் உலகளவான கல்லாததை கண்டு பயணித்து தெளிவு கொள்ளல் வேண்டும்” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை