எழுத்தழகியல் அனுபவம் – பாகம் ஒன்று

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  2 நிமிடமும் 49 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

ஒவ்வொரு மொழியின் எழுத்துக்களின் வடிவங்கள் தனித்துவமான தன்மைகளைக் கொண்டுள்ளன. மொழிகளின் தனித்துவத்தின் அடையாளமாக எழுத்துக்களின் வடிவங்கள் காணப்படுகின்ற நிலை முதன்மையானது.

தமிழ் மொழியின் எழுத்துக்களின் வடிவங்கள், காலங்காலமாக சின்னச் சின்ன மாறுதல்களுக்கு உட்பட்டு, மாற்றங்கள் மூலமாக வளர்ந்து வந்திருக்கிறது. பண்டைய காலத்தில் ஒரு குறிப்பிட்ட எழுத்தொன்றை எழுதும் முறை என்பது பின்னாளில் மாற்றங்கள் பலதையும் கொண்டு அக்குறித்த எழுத்து இன்னொரு வடிவமாக உருப்பெற்ற வரலாறுகளும் உண்டு.

lettering-01

மாற்றங்கள் என்பதை யாராலும் தவிர்க்க முடியாது. அதுபோலவே, மாற்றம் ஒன்று மட்டுந்தான் மாறாதது என்பதையும் நீ அறிவாய்.

எழுத்துக்கலையில் எனக்கு அதீத ஆர்வமென்பது எனது சிறுவயதிலேயே தோன்றியது என்பேன். அப்பியாசப் புத்தகங்களில் எழுதுகின்ற எழுத்துக்களைக் கூட, ஒரு வித்தியாசமான நிலையில் எழுத வேண்டுமென்கின்ற ஆர்வம் தரம் ஆறு, ஏழு கற்கின்ற நிலையின் போதே தோன்றியது.

தரம் ஆறு கற்பதற்கு முந்திய காலப்பகுதியில், எழுத்துக்களை அழகாக உருப்பமைய எழுத வேண்டுமென்ற ஆர்வம் அதீதமாய் இருந்தது. இதற்கு எனக்கு ஆசானாய் இருந்த, ஷெரீப் சேர் அவர்களின் அற்புதமான அழகிய எழுத்துக்கள் உத்வேகமாய் இருந்தன என்பதை இங்கு பதிவு செய்ய வேண்டும்.

பின்னாளில், தரம் நான்கு கற்கின்ற போது, ஆசரா டீச்சர் (எங்கள் பாடசாலையில், ஆசிரியை ஒருவரை நாங்கள் டீச்சர் என்றே அழைப்போம்), எழுத்துக்களை அழகாக எழுதுவதை எப்படிச் சாத்தியமாக்கலாம் என்பதை அவர் கோப்பு உறைகளில் மாணவர்களின் பெயர்களை, சமாந்தரமான மெல்லிய கோடுகள் வரைந்து அற்புதமாக எழுதிய விடயம் சொல்லித்தந்தது.

இவ்வாறு எழுத்துக்களை எவ்வாறு அழகாக எழுதலாம் என்கின்ற தெளிவை, நான் அடைந்த போது, என் எழுத்துக்களிலும், அழகு ஒட்டிக் கொள்ளக் கண்டேன். அது மிகவும் அற்புதமான அனுபவம்.

அழகிய எழுத்துக்களைக் எழுதுகின்ற தகவைப் பெற்றிருந்த நான் இந்நிலையில், எங்கெல்லாம் நான் எழுத வேண்டுமோ, அங்கெல்லாம் என் எழுத்துக்கள் அழகாய் இருக்க வேண்டுமென்பதில் கரிசணை காட்டினேன். எனது நண்பர்களுக்கு நான் எழுதிய “ஆட்டோகிராஃப்” பற்றி இன்றும் அவர்கள் பூரிப்படைந்து பேசுவதைக் காணும் போது, நினைவுகளின் சுகமான பக்கங்கள் சுவைக்கத் தொடங்கும்.

தமிழ் எழுத்துக்களைப் போன்றே, ஆங்கில எழுத்துக்களையும் அழகாய் எழுத வேண்டுமென்கின்ற ஆர்வமும் என்னோடு எப்போதும் இருந்தது. அது றோயல் கல்லூரியில் கல்வி கற்ற காலம், ஆங்கில பத்திரிகைகளில் அச்சாகி வருகின்ற பல எழுத்துருக்களின் வடிவங்களையும் அதுபோன்றே எழுத முயற்சிப்பேன். அந்த முயற்சியின் பெறுதிகள், என் அப்பியாசப் புத்தகத்தின் பின் பக்கங்களை அழகு செய்து கொண்டிருக்கும்.

எழுத்துக்களை அழகாக எழுத வேண்டுமென்கின்ற ஆர்வத்தின் விளைவு, எழுதுவதை தொடர்ச்சியாக பயிற்சி செய்ய வேண்டுமென்பதை இலகுவாக்கியது. ஆர்வங்கள் தான், ஒரு வெற்றியின் முக்கிய ஆயுதமாக இருக்க முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

இதற்கிடையில், 1997இல் கணினிகளில் காணப்படுகின்ற ஆங்கில எழுத்துருக்கள் பற்றிய வியப்பு என்னிடம் இருந்தது. கணினித்திரையில் அழகிய எழுத்துருக்களைக் காணும் போதெல்லாம், இது எப்படிச் சாத்தியமாகிறது? இதனை இவர்கள் எப்படி உருவாக்கின்றார்கள்? என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருப்பேன்.

இவை பற்றியும் அறிய வேண்டுமென்ற ஆர்வம் தோன்றியது. தேடினேன். அந்நாளில், Macromedia என்ற மென்பொருள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட Macromedia Fontographer என்ற மென்பொருளின் மூலமாகவே எழுத்துருக்கள் உருவாக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொண்டேன். பின்னாளில், Macromedia நிறுவனத்தை Adobe நிறுவனம் கொள்வனவு செய்ததும், ஆனாலும், Fontographer ஐ இப்போது, FontLab நிறுவனம் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

அந்த மென்பொருள் கொண்டு, மௌஸின் உதவியால் ஆங்கில எழுத்து வடிவங்களைச் செய்து, அதனை எழுத்துருவாக மாற்றி, உயர் மகிழ்ச்சி அடைந்து கொண்டேன். படைத்தலின் பின்னரான, வெற்றியின் மகிழ்ச்சியை வர்ணிக்க முடியாது என்பதையும் இங்கு சொல்லியே ஆக வேண்டும்.

அப்போதைய காலத்தில் மௌஸின் தயவால் உருவாக்கப்பட்ட அந்த எழுத்துருக்கள் அவ்வளவு அழகானதான இருக்கவில்லை. இருந்தாலும், ஈற்றில் எழுத்துருவொன்றை என்னால் உருவாக்கி அதற்கு நான் விரும்பிய பெயரை வைக்க முடியுமானது பற்றிய பூரிப்பு என் மனதில் தொடர்ச்சியாக இருந்தது.

பின்னாளில், 2002இல் எனது நண்பன் ஆமில் ஜெளஸி மூலமாக, Calligraphy பற்றிய அறிமுகம் கிடைத்தது. அதன் வாயிலாக, அவனின் அற்புதமான அழகிய ஆங்கில எழுத்துக்களைப் போன்றே நானும் எழுத வேண்டுமென்ற ஆர்வம் தோன்றியது. முயற்சித்தேன். முடிந்தது.

ஆனாலும், Calligraphy பற்றி, இன்னும் நிறைய அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் தோன்றியது, Hand lettering பற்றிய அறிவை விருத்தி செய்வதன் மீதான காதல் அதிகமாகியது. அது பற்றி நான் சில நூல்களைப் படித்தேன். இன்னும் பல இணையத்தளங்களில் காணப்படுகின்ற அது பற்றியதான விடயங்களை அறிந்து கொண்டு குறிப்பெடுத்துக் கொண்டேன். அவற்றை என் எழுத்துக்களிற்கு பிரயோகித்தேன். எழுத்தின் வடிவம் இன்னும் அழகாக மெருகேறியது.

நான் உயர் தரம் கற்கின்ற போது, ஆசிரியர்கள் எவ்வளவு வேகமாகக் குறிப்புகளைச் சொன்னாலும், அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து, எழுத்துக்களை அழகாக எழுதக் கூடிய தகவை, எழுத்துக்களை அழகாக எழுத வேண்டும் என்கின்ற ஆர்வமும் பயிற்சியும் எனக்கு வழங்கியது.

இவ்வாறாக எழுத்தழகியல் பற்றிய எனது ஆர்வம் தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டேயிருந்தது. அண்மையில், அந்த ஆர்வத்தின் வெளிப்பாடாய், பல ஆங்கில எழுத்துருக்களை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறேன். இன்னும் பல வடிவமைப்புகளிற்காக பிரத்தியேகமான எழுத்துக்களை வடிவமைத்திருக்கின்றேன். தமிழில் Unicode நிலையிலமைந்த எழுத்துருவொன்றை இந்நாளில், வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன்.

இன்னும் சொல்வேன்…

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

வளராத மூங்கிலும் நானும்

cosmic1
அதுவொரு வெள்ளிக்கிழமை ஆனந்தமான மாலை நேரம். பகல் சாப்பாட்டை அருந்திய பின்னர், குடும்பத்தினர் எல்லோரும் குதூகலித்து அளவளாவிக் கொண்டிருந்த பொழுது. எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அப்போது எனக்கு வயது எட்டு ஆகும். (ஆமா.. உதய தாரகை தொடங்கிட்டாரு பழைய புராணங்களைச் சொல்றதுக்கு..!!)அந்தத் தினத்தில் எனது உறவினர்கள் சிலர் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர்.

தனது பிள்ளை கதைக்கப்பழகிவிட்டால் அம்மழலை மொழியை மற்றவர்களிடம் சொல்லிக் காட்டி ஆனந்தம் அடையாத பெற்றோர்கள் இந்த அவனியிலேயே (அதுதான் பூமி என்பதற்கு ஒத்த கருத்துச் சொல்.. இது எங்களுக்கும் தெரியுமில்ல…) இருக்கமாட்டார்கள். அப்படித்தான் நானும் அப்போது, சின்னச் சின்னச் பாடல்களை எல்லாம் படிப்பேன். (அட நீங்க வேற.. பாடல் என்றால், ‘நிலா நிலா ஓடி வா.. நில்லாமல் ஓடி வா.. மலை மேலே ஏறி வா.. மல்லிகைப் பூ கொண்டு வா… இது தாங்க…)

தொடர்ந்து படிக்க…

ஆனைக்கு காலம் வந்தால் பூனைக்கும் காலம் வரும்

cosmic
நேற்று நான் வாசித்த Alex Tan எனும் அறிஞனின் கூற்று பற்றி நான் நிறத்தில் ஒரு பதிவைக் கட்டாயம் இட வேண்டுமென எண்ணினேன். வாழ்க்கை, மகிழ்ச்சி, இன்பம், துன்பம் என எல்லாவற்றையும் பற்றி நான் நிறத்தில் கதைத்திருக்கிறேன். அண்மையில் கூட “நான் அழுத அந்தத் தருணங்கள்” என்ற தலைப்பிலான பதிவின் மூலம் ஆண்கள் அழலாமா? என்பதை அலசியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.. (இவரு பெரிய இவரு.. அலசுராராம்.. சின்னப்புள்ளத்தனமா இல்ல…)

அண்மையில் எனது கையடக்கத் தொலைபேசிக்கு எனது ஆசிரியையிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி என்னை அழ வைத்தது. என்னை அழ வைக்க வேண்டுமென்ற எண்ணமோ, நோக்கமோ எனது ஆசிரியையிடம் இருக்கவில்லை. ஆனால் நான் அழுதேன். மழை உண்டு, மேகம் இல்லை: கண்ணீர் உண்டு, சோகம் இல்லை. (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கில்ல.. எங்க என்று கண்டுபுடிங்க பாக்கலாம்…)
தொடர்ந்து படிக்க…

தலைப்பில்லாமல் ஒரு பதிவு

நிறம் வலைப்பதிவின் “இன்னொரு பிரபஞ்சம்” தொடரின் நான்காவது பதிவுயிது. யாரும் பார்க்காத உதய தாரகையின் வானம் என்ற சொல்வாக்குடன் தொடங்கிய இப்பதிவுத் தொடர் எனது வாழ்க்கை அனுபவங்களையும் சம்பவங்களையும் அர்த்தத்துடன் சொல்லிக் கொண்டு வருகின்றதாய் அமைந்துள்ளதென நம்புகிறேன்.

எனது எண்ணங்களையும் நினைவுகளையும் சொல்லிக் கொள்ள நிறையத் தகவல்கள் என்னிடம் இருந்தாலும் நேரம் இருப்பதில்லை எல்லாவற்றையும் பதிவாக்கி நிறத்தில் பதிப்பிக்க (ஏன் உதய தாரகை இப்படியெல்லாம் பில்ட் அப் எப்போதுமே ஏற்படுத்திக் கொள்றீங்க..?..)

தொடர்ந்து படிக்க…

எனது முதலாவது காதலி

தலைப்பைக் கண்டு உஷாராகிவிட்டீர்கள் போலும். ‘முதலாவது காதலி’ என்றால் அப்போ, உதய தாரகை உங்களுக்கு இரண்டாவது மூன்றாவது என்று பல காதலிகள் உண்டா என்றல்லவா நீங்கள் கேட்கத்துடிக்கிறீர்கள். எப்படிங்க உங்களால மட்டும் இப்படியெல்லாம் வயலண்டா யோசிக்க முடியுது…? (இருக்கோட்டும்.. இருக்கோட்டும்…)

என்ன உதய தாரகை! ஒரே காதலி பேச்சாக்கிடக்குது.. என்ன விசயம் என்றுதானே கேட்கிறீங்க…? எல்லாவற்றையும் தெளிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். இப்போது உங்களுடன்… இன்னொரு பிரபஞ்சம் என்ற தொடரின் மூலம் ‘யாரும் பார்க்காத உதய தாரகையின் வானம்’ என்ற அடிக்குறிப்போடு உங்களைச் சந்தித்த நான், அத்தொடரில் தொடர்பதிவுகளை இட முடியாமல் போனது பற்றி எனக்கும் கவலைதான். என்ன செய்ய… ஒன்றா.. இரண்டா.. பல மாதங்கள் தொடரிலமைந்த எந்தப் பதிவையும் பிரசுரிக்க முடியவில்லை. கொஞ்சம் வேலைப்பளு கூடியதால் முறையாக இன்னொரு பிரபஞ்சத்தை சமைக்க முடியவில்லை. (பார்ரா… பிரபஞ்சத்தை சமைக்கப் போறாராம்.. ரொம்ப நக்கலாப் போச்சு…)

தொடர்ந்து படிக்க…

பட்டம் பறக்கும் இரகசியம்

cosmic1.jpg

இன்னொரு பிரபஞ்சம் என்றொரு தொடரை தொடர் முன்னோட்டம், துணைத் தலைப்பு என விடயங்களை அட்டகாசமாக வழங்கி ஆரம்பித்து வைத்தேன். உங்களுக்கு ஞாபகமிருக்கும். ஆனாலும், தொடரின் முதல் பதிவை இன்றே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தத் தொடரில் நான் சந்தித்த அனுபவங்கள், சம்பவங்கள், பாத்திரங்கள் என விரிந்து செல்லும் விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென நினைத்துள்ளேன் என்பது பற்றி ஏற்கனவே சொல்லியுள்ளேன். இதோ விரிகிறது என் நினைவுகளில் இருந்தும் அகலாத சம்பவமொன்று.

தொடர்ந்து படிக்க…

நிறத்தின் இன்னொரு பிரபஞ்சம்

தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு முதலில் தோன்றியது என்ன? நிறங்களின் மீடிறன்களின் எல்லையில்லாத் தன்மையை நான் சொல்லப் போவதாகவா நீங்கள் நினைத்தீர்கள்? அல்லது இந்த வலைப்பதிவின் ஏதாவது சாதனையை நான் சொல்லப்போவதாகவா நீங்கள் நினைத்தீர்கள்?

நீங்கள் என்னதான் நினைத்தாலும் நான் சொல்லப் போகும் விடயமோ கொஞ்சம் வித்தியாசமானது. ஆனால், சுவையாக இருக்குமென நம்புகிறேன். அப்படியென்ன நான் சொல்லப்போகிறேன். (வியப்பு உஙகள் கண்களி்ல் தெரிகிறது!! 🙂 )

தொடர்ந்து படிக்க…