வாசிப்பு: மனச்சித்திரங்களின் வானம்

“நான் வாசித்த அனைத்தினதும் ஒரு பகுதியாகவே நான் இருக்கிறேன்,” என்று தியோடர் ரூஸ்வெல்ட் சொல்கிறார்.

இன்று உலக புத்தக தினம்.

உங்கள் வாழ்வில் நூல்கள் தரக்கூடிய தாக்கம் மிக முக்கியமானது.

வாசிப்பின் தேவையை பூர்த்தி செய்கின்ற வழி நூல்கள்.

உங்கள் யோசனைகளின் தோற்றுவாயாக மனச்சித்திரங்கள் வரும்.

அந்த மனச்சித்திரங்களின் விசித்திரம், வாசிக்கின்ற நூல்கள் மூலமே நெறியாள்கை செய்யப்படுகிறது.

உங்களின் வாழ்க்கையின் வருங்கால பெறுமதியை நிர்ணயிக்கும் கூறுகளாக நீங்கள் வாசிக்கும் நூல்கள் இருக்கின்றன.

உடலுக்கு உடற்பயிற்சி எப்படி வலிமை சேர்க்கிறதோ,

மூளைக்கு வலிமை சேர்ப்பது வாசிக்கும் உங்கள் செயலாகிறது.

புத்தகங்களை வாசிக்கும் உங்களின் தேட்டம், உங்களின் ஞாபகங்கள், யோசனைகளை நெறிப்படுத்தும்.

அடுத்தவரின் கவலை, வாழ்வை அறிந்து கொண்டு அவர்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பை வாசிப்பு கொண்டு தரும்.

உங்களுக்கே உரித்தான யோசனைகளை உருவாக்க உபயமாக வருவது நீங்கள் வாசிக்கும் நூல்கள் தாம்.

உங்களின் மனத்தின் அமைதியையும் ஓர்மையையும் சாத்தியமாக்கும் தன்மை புத்தகங்களுக்கு உண்டு.

வாசிப்பது என்பது, மனச்சித்திரம் வரைவதாகும்.

புத்தகங்கள் வேண்டி நிற்பது செயலை; அவை சொல்பவற்றை மனத்தில் கொண்டுவரும் ஆற்றலை.

மனவுளைச்சலை 68 சதவீதம் குறைக்கக்கூடிய ஆற்றல், புத்தகங்களை வாசிப்பதால் தோன்றுகிறது என,

இங்கிலாந்தின் சசக்ஸ் பல்கலைக்கழக ஆய்வுகள் சொல்கின்றன.

மூளையை கட்டமைத்து, நீண்ட நாள் நினைவுகளை தேக்கி வைப்பதை, புத்தக வாசிப்பு கூர்மைப்படுத்துகிறது.

முதலாம் உலகப் போரில் பங்கேற்ற இராணுவ வீரர்களை போரின் வடுக்களிலிருந்து மீள வைப்பதற்காக,

அமெரிக்க நூலக சேவை, இராணுவ வீரர்களுக்கு புத்தகங்களை வழங்கி வாசிக்கச் செய்தது.

அந்த வீரர்களின் மனத்தில் அமைதியும், ஆர்வமும், அழகியலும் தோன்றியது என்பது வரலாறு.

ஒரு புத்தகத்தை வாசிக்க வேண்டுமென நீங்கள் எண்ணியிருக்கலாம்.

ஆனால், அதைத் தொடங்குவது உங்களால் முடியாமல் போயிருக்கலாம்.

இன்று அதற்கான நேரம், நீங்கள் விரும்பிய அந்தப் புத்தகத்தை கையில் எடுங்கள்.

ஓரிரண்டு பக்கங்கள் வாசியுங்கள்.

ஒவ்வொரு நாளும் வாசியுங்கள்.

சின்னச் சின்னதாய் தொடங்குங்கள். சிகரம் எட்டுவீர்கள்.

வாசித்தவைகளை உங்களை நேசிப்பவர்களோடு பகிருங்கள்.

உங்கள் மனத்தில் தெளிவு பிறக்கும், மூளையில் நினைவு மையம் கொள்ளும்.

நல்ல புத்தகங்களை வாங்குங்கள். அல்லது நூலகங்களில் இருந்து இரவல் எடுங்கள்.

PDF ஆய் கேட்காதீர்கள். PDF ஆக பகிராதீர்கள்.

முடிந்தால், Kindle ஒன்றை வாங்குவதில் முதலீடு செய்யுங்கள்.

எல்லாம் நெறிப்படும்.

கல்யாண்ஜியின் இந்தக் கவிதையோடு நிறைவு செய்கிறேன்.

“ஆறே
பார்க்காதவர்களை
அருவி
பார்க்காதவர்களை
கடல்
பார்க்காதவர்களை
எப்போதும்
பார்த்துவிடுகிறது
மழை.”

இந்தச் சாதாரண வரிகளை வாசிக்கின்ற போது,

உங்களில் தோன்றும் மனச்சித்திரத்தைக் கண்டு வியக்காமல் இருக்க முடியுமா?

தாரிக் அஸீஸ்
23.04.2021

வாசியுங்கள்.

நல்ல கவிதை எது?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 14 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

நல்ல கவி என்பது எங்கும் எப்போதும் ஒரே மாதிரியான தன்மைகளைக் கொண்டிருக்க முடியாது. நல்ல கவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என நல்ல கவிதைகளையும் நல்ல கவிஞர்களையும் தேடுவதாலேயே பலரும் தேடியது கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம், புதிரோடு காலம் ஓட்டுகின்றனர்.

நாம் எல்லோரும் இன்னொருவரோடு கதைக்கின்ற நிலையில், பயன்படுத்தும் மொழியின் அளவும் தன்மையும் பாங்கும் தனித்துவமானது. மிகவும் வித்தியாசமானது. இந்தப் பன்மைத்துவம்தான் ஒவ்வொருவரும் தனித்துவமானவர் என்ற உண்மையைச் சொல்லி நிற்கிறது.

நீ ஒருவரைக் கூப்பிடுவதும் அவன் ஒருவரைக் கூப்பிடுவதும் வினையில் ஒன்றானாலும், மொழியின் சொற்களில் தனித்துவமானது.

poem

நான் கவிதைகளை வாசிக்கின்ற போது, அது நல்ல கவிதையாக இருக்க வேண்டுமென்றே விரும்புவேன். சொற்களால் வசீகரிக்கும் கவிதைகளை எனக்குப் பிடிக்கும். ஆனால், இந்த வசீகரம் என்பது நபருக்கு நபர் வித்தியாசப்படும். ஆக, நான் காண்கின்ற வசீகரத்தை ஒருவேளை உன்னால் காண முடியாமல் இருக்கலாம். நீ காண்கின்ற வசீகரத்தை ஒருவேளை என்னாலும் காண முடியாமல் இருக்கலாம்.

நீ விரும்புவது ஒன்று. அவன் விரும்புவது வேறொன்று. வித்தியாசமானவற்றை தான், நாம் விரும்பிக் கொண்டிருக்கிறோம்.

சில கவிதைகள் தேநீர் போன்றது, சிலதோ நெட்டையானது, சிலதோ பால் போன்றது, சிலதோ காற்றோட்டம் நிறைந்தது, இன்னும் சிலதோ ஆவல் செறிந்தது, சிலது துணிச்சலானது, சிலதோ கொழுப்புக்கூடியது, இன்னும் சிலதோ அநாதரவானது, இன்னும் சிலது திருடுவது, சிலதோ அங்கீகாரம் கேட்பது என கவிதைகள் கொள்ளும் பாத்திரங்கள் ஏராளம்.

ஆனால், நான் கவிதைகளை வாசிக்கும் போது, அவை எங்கிருந்து வந்தன என்று ஆராய்வதே கிடையாது. ஆனால், அவை எங்கே செல்லப் போகின்றன என்பதை ஆர்வமாய் அறிய ஆவல் கொண்டிருப்பேன்.

எனக்கு அந்தக் கவிதைகள் தன்னகம் கொண்டுள்ள அழகிய நினைவுகள் என்ன, அவற்றின் பிரியமான உணவுகள் என்ன, செய்கின்ற உடற்பயிற்சிகள் என்ன, வாசிகசாலையில் அதற்கு அங்கத்துவம் இருக்கிறதா?, சந்தையில் கடைசியாக வாங்கிய காய்கறி என்ன என பலவற்றையும் அறிய ஆவல்.

நல்ல கவிதைகள் உங்கள் அருகில் உட்கார்ந்து கொண்டு, நாளின் இடம்பெற்ற அழகிய நினைவுகளை உங்கள் காதுகளுக்குள் இனிமையாய்ச் சொல்லப் பயப்படாது.

நல்ல கவிதை வீரமிக்கதாக இருக்கலாம். கோழையாகக் கூட இருக்கலாம். உங்களிடம், அதனை அறிமுகம் செய்து கொள்ள அது கூச்சமிக்கதாகக் கூட இருக்கலாம். ஆனாலும், நல்ல கவிதை, நீங்கள் ஆர்வமாய் அதனருகில் சென்று அதனோடு கதைக்கும் வாய்ப்பை உண்டுபண்ணும் வசீகரத்தை இயல்பிலேயே கொண்டது.

“நீயெழுதுவது ஒரு நல்ல கவிதையாயிருக்கலாம். நீகூட ஒரு நல்ல கவிதையாய் இருக்கலாம். உன் தெரிவு” — கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

கெய் செரா செரா

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

வெவ்வேறு விடயங்கள் தோன்றுவதும் மறைவதும் பின்னர் மீண்டும் தோன்றுவதுமாய் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். இவ்வாறு தோன்றுகின்றவைகளில் சில நிலைத்து நிற்கும், சில மறைந்து போகும், இன்னும் சிலவோ, இந்த 2011 வருடம் போல் திரும்ப வரவே வராது.

மீண்டும் வராத 2010 ஆம் ஆண்டு பற்றி நிறத்தில் சொல்லியது நேற்று போல் தோன்றுகிறது. வேகமாய் விரைந்தோடிவிட்ட பன்னிரண்டு மாதங்கள் விட்டுச் சென்ற நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன்.

எண்ணங்களால் வசந்தமான பல மாற்றங்கள், கடந்து போகின்ற ஆண்டில் அரங்கேறிய அழகைக் கண்டு மகிழ்கிறேன்.

கடந்து செல்கின்ற ஆண்டில், சந்திக்க வேண்டுமென கனவு கண்ட பலரையும் இன்னும் பல்வேறு துறைகளில் தங்களை நிலை நிறுத்திய பலரையும் சந்தித்து அவர்களது அனுபவங்களோடு பயணிக்கின்ற வாய்ப்புக் கிட்டியது.

புரிந்துகொள்கின்ற ஆத்மாக்களின் இணைப்புக் கிடைத்தலின் அனுபவம் புரிந்து கொள்ளப் படலாம் — புரியவைக்க முடியாது.

மகிழ்ச்சி, அதிர்ச்சி, சோகம், கவலை, வெறுப்பு, காத்திருப்பு, பரிவு, பச்சாதாபம் என ஒவ்வொரு நிமிடமும் வழங்கிய ஆயிரம் உணர்வுகளை எனது அனுபவங்களின் அத்தியாயங்களுக்குள் அடக்கிக் கொள்கிறேன்.

அடுத்த நிமிடம் மறைத்து வைத்திருக்கும் ஆச்சரியங்களின் வெளிப்பாடுதான், அனுபவங்களின் அத்தியாயங்களை பலவேளைகளில் நிரப்பி விடுகின்ற உண்மையும் எனக்குப் புரிகிறது.

பிரபல நடிகையும் பாடகியுமான Doris Day இன் பாடலொன்று, எதிர்காலம் எவ்வாறிருக்குமென காண்பதற்கு அது எமதுடையதல்ல என்ற பொருள்படும் வகையில் அமைந்திருக்கும்.

Que Sera Sera — கெய் செரா செரா. எது எப்படி உருவாகுமோ, அது அப்படியே உருவாகும். அந்தப் பாடலைக் காண்க.

.

அடுத்த ஆண்டு கொண்டுதரப் போகும், ஆச்சரியங்கள் பற்றிய பட்டியல் யாரிடமும் இல்லை. அடுத்த நிமிடத்தின் அழகிய நிலை, இந்த நிமிடத்தின் அறுவடையில் தான் இருக்கிறது.

இந்த நிமிடமே எல்லாமும் ஆகிறது.

பிரபல பாடலாசிரியரும் இசையமைப்பாளருமான Woody Guthrie, 1942 இல், அடுத்த ஆண்டில் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென எண்ணினாரோ அவற்றையெல்லாம் புத்தாண்டு தீர்மானங்களாக பட்டியற்படுத்தியிருந்தார்.

அந்த பொக்கிஷமான புத்தாண்டு தீர்மானப் பட்டியலின் பிரதி இணையத்தில் வெளியாகியது. பட்டியலில் காணப்படும் தீர்மானங்கள் இன்றும் பொருந்தும் வகையில் நாமெல்லோரும் ஒவ்வொரு நாளும் செய்யக்கூடிய விடயங்களைக் கொண்டிருப்பது — ஆச்சரியம்.

காலங்கள் கடந்தும், காலத்தால் அழியாத விடயங்களைத் தர முடிகின்ற கலைஞர்கள் பற்றிய நினைவு எப்போதும் எனக்கு வியப்பையும் பூரிப்பையும் தருவதுண்டு. பாரதியும் காலத்தால் அழியாத காவியம் செய்தவன் என்பேன்.

Woody Guthrie இன் பட்டியல் உங்கள் பார்வைக்காக:

நிறைய நல்ல நூல்கள் படிக்கலாம், நம்பிக்கையோடு இருக்கலாம், கனவுகளோடு கதை செய்யலாம், மனதை திடப்படுத்திக் கொள்ளலாம், எல்லோரிடமும் அன்பு காட்டலாம், மக்களைப் புரிந்து கொள்ளலாம் ஏன் பற்தீட்டி குளிக்கலாம். இந்த நிமிடத்திற்கு அழகு சேர்ப்பதென்பது நாம் தேர்ந்தெடுக்கும் அர்த்தமுள்ள செயல்களிலேயே தங்கியுள்ளது. தேர்ந்தெடுத்தல் உங்கள் கைகளில்.

“நிமிடங்கள் பல சேர்ந்தே வருடமொன்றாகிறது என்பதை நான்தான் சொல்ல வேண்டுமா?” என்று கோபாலு கேட்கிறான்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

– உதய தாரகை —

  • Que Sera Sera என்பது ஸ்பானிய மொழியிலமைந்த வாக்கியமாகும். Whatever will be, will be என்பதே அதன் ஆங்கில அர்த்தமாகும்.
  • 1956 இல் வெளியான அல்பிரட் கிட்ஸ்கொக்கின் The Man Who Knew Too Much என்ற திரைப்படத்தில் Que Sera Sera என்ற பாடல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • Woody Guthrie இன் புத்தாண்டு தீர்மானப் பட்டியலின் நிழற்பட மூலம்: List Of Note

வாசிக்கத் தேவையான நேரம் என்ன?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 14 செக்கன்களும் தேவைப்படும்.)

அண்மையில் எனது வலைப்பதிவிற்கு நீங்கள் வருகை தந்திருப்பீர்களாயின், புதியதொரு மாற்றமொன்றை அவதானித்திருப்பீர்கள். பலரும் இந்த மாற்றத்தை அவதானித்து, இதை எப்படி செய்தீர்கள்? அருமையாய் இருக்கிறதே என்றெல்லாம் மறுமொழி, மின்னஞ்சல் என்பன மூலம் சொல்லி அனுப்பியிருந்தார்கள். அந்த புதிய விடயமென்ன? அதன் நன்மைகள் என்ன? அதனை எவ்வாறு செய்தேன்? அதற்கான காரணங்கள் என்ன? நீங்கள் அதனை உங்கள் வலைப்பதிவிற்கு எவ்வாறு செய்து கொள்ளலாம் என்பன பற்றி நாம் அலசுவோம்.

இப்போது, இந்தப் பதிவின் ஆரம்பத்திலும், இந்தப் பதிவை வாசிக்கத் தேவையான நேரம் பற்றிய குறிப்பைக் கண்டிருப்பீர்கள். இந்தப் புதிய விடயம் சார்பாகவே பலரும் ஆர்வம் வெளிப்படுத்தினார்கள். உண்மையில் வலைப்பதிவுகளில் எழுதப்படும் பதிவுகளை Scroll செய்து பார்த்துவிட்டே பலரும் வாசிக்கவே தொடங்குகின்றனர். பதிவின் நீளம் கொஞ்சம் அதிகமாகத் தோன்றினால், ஐயகோ, என்னைக் காப்பாற்றுங்கள் என்று வலைப்பக்கத்தை விட்டு, வேறு பக்கமாகிச் செல்கின்றனர்.

தொடர்ந்து படிக்க…

வானவில்லின் எதிரொலிகள்: பால்ய பருவக் கனவுகளின் தொடுவானம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 4 நிமிடங்களும் 49 செக்கன்களும் தேவைப்படும்.)

மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டு செல்லும் நாழிகைகள் பற்றிய எண்ணம் எப்போதும், எல்லோருக்கும் விளங்குவதில்லை. ஒவ்வொரு தனிமனிதன் சார்பான தேவைகளுக்குள் காலம் கூட, தன்பக்க நியாயங்களைக் காட்டி வெவ்வேறு நேரங்களை வழங்க மறுப்பதில்லை. இது காலம், மனிதனுக்குச் செய்யும் கைமாறு என்று புரிந்துகொள்ளப்படக் கூடியதல்ல.

இளமைக்கால நினைவுகளில் திளைத்திருக்க, அந்த அழகிய நினைவுகளை உசுப்புவிடக்கூடிய நிகழ்வுகள் இடம்பெற வேண்டும். நிழற்படங்கள், திரைப்படங்கள் என்று விரியும் நினைவுகளின் பதிவுகள், பலவேளைகளில் பார்வையாளனை தன் நினைவுகளோடு பயணிக்கச் செய்வதுண்டு. நிழற்படங்களில் இருக்கும் மனிதர்கள் நிஜத்தில் மாறினாலும், நிழற்படத்தில் மாறாமலேயே இருப்பதால் என்னவோ என்னால் நிழற்படங்களை அதிகம் காதலிக்க முடிகிறது.

தொடர்ந்து படிக்க…

ஜெஸ்ஸியும் மக்னீஸியமும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 3 நிமிடங்களும் 11 செக்கன்களும் தேவைப்படும்.)

திரைப்படங்கள் எல்லாமே ஒவ்வொருவரிலும் அதிர்வுகளை எந்நேரமும் ஏற்படுத்துவது கிடையாது. சொல்ல வந்த விடயம், சொல்லிய விதம், அதை பார்ப்பவர்கள் விளங்கிக் கொண்ட விதம் என எல்லாமே திரைப்பட ஊடகத்தின் உயிர்நாடிகள் தாம்.

திரையில் கண்ட விடயத்தை ஒருவர் புரிந்து ரசிக்கும் விதம், மற்றவர்களாலும் அவ்வாறே ரசிக்கப்பட வேண்டுமென்கின்ற எந்த விதிமுறைகளும் கிடையாது. ஆனால், சிலவேளைகளில் பார்வையாளனை ஒரே உணர்வுகளுக்குள் கட்டிப் போடும் திரைக்காவியங்களும் தோன்றாமலில்லை.

தொடர்ந்து படிக்க…

எனது புகழும் அவளின் விபத்தும்

இணைக்கப்பட்ட உலகம், உலக உருண்டை, உலகம் ஒரு குக்கிராமம் என்றெல்லாம் தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள சாத்தியங்களை புகழ்ந்து கொள்ளாதவராக நீங்கள் இருக்க முடியாது. ஏனெனில் உலகத்தின் பாலுள்ள அனைத்து ஊடகங்களும் இதுபற்றித்தான் கதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பம் தொடர்பில் தான் சுற்றிக் கொண்டுமிருக்கிறது.

ஓரிரவில் புகழடைய முடியாது என்ற தொன்மையான கருத்தைக் கூட, தொழில்நுட்பம் பொய்யாக்கிக் கொண்டிருக்கிறது. தந்தையோடு பல்வைத்தியரிடம் சென்று பல்லை கழற்றிவிட்டு வரும் ஏழு வயதான டேவிட் என்ற பையன் தனது தந்தையிடம், ”இதுதான் வாழ்க்கை என்பதா?” (Is this real life?) என்று தனது வலி பற்றி தந்தையிடம் வினவுகிறான்.

தொடர்ந்து படிக்க…

ஒரு நாள் சிரித்தேன், மறுநாள் வெறுத்தேன்

மொழிகளின் அழகென்பது, வெறும் வார்த்தைகளின் ஒப்புதல்களால் சாத்தியமாக்கப்படுவதில்லை. அவை தகுந்த வடிவத்தில் மொழியில் வெளிப்படுத்தப்படும் போது, அழகு பெறுகின்றது. அர்த்தம் பெறுகின்றது. தனிநபரின் எண்ணங்களை ஒரு கூட்டத்திற்கு சொல்கின்ற போது, தனிநபரின் ஆளுமையின் தேவையோடு, மொழியின் பிரயோகமும் முக்கியத்துவம் பெறுகிறது.

பார்வையாளர்களின் கரகோசத்தைப் பெற்றுவிடுவதென்பது, யாராலும் இலகுவில் அடைந்து கொள்ள முடிவதில்லை. மாணவர் குழாமொன்றை தனது பேச்சினால், கட்டிப் போட்ட ஆளுமை ஸ்டீவ் ஜோப்ஸ் பற்றியும் அவர் பேச்சு பற்றியும் நிறத்தில், பசித்திரு. முட்டாளாயிரு என்ற பதிவின் மூலம் சொல்லியிருக்கிறேன்.

தொடர்ந்து படிக்க…