தும்மலின் விஞ்ஞானம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

மனித உடலின் விசித்திரங்களின் பட்டியலை விரித்துக் கொண்டே போகலாம். உடல், தனது நிலையை ஒரு தகவில் வைத்துக் கொள்ளும் பொருட்டு, தன்னியக்கமாகவே பல விடயங்களைச் செய்வதை அவதானிக்க முடியும்.

அதில் ஒன்றுதான் தும்முதல். மனித உடலில் இடம்பெறும் சங்கீரணமான செயற்பாடாகத்தான் தும்மலைக் கண்டு கொள்ளலாம்.

“தும்மும் போது, கண் எப்போதுமே மூடித்தானிருக்கும்” என்பது ஒரு தகவல். “கண்கள் திறந்த நிலையில் உன்னால் தும்ம முடியாது” என்பது அவளிடமிருந்து கோபாலுக்கு வந்த சவால்.

உண்மையில் இந்தச் சின்னத் தகவலின் பின்னணியில் இருக்கின்ற விஞ்ஞானம் என்ன என்பதை அறிந்து கொள்ள ஆர்வப்பட்டேன். என் ஆர்வத்தின் விளைவின் உண்டான கேள்விக்கு கிடைத்த பதில்களில் விபரமான தொகுப்புதான் இப்பதிவாயிற்று.

பூமியிலுள்ள பெரும்பாலும் அத்தனை விலங்குகளும் தும்முகின்றன. “Sternutatory reflex” என்ற சொற்றொடர் மருத்துவத்தில் தும்மலைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

மூக்கின் மென்சவ்வில் நமைச்சலை உண்டுபண்ணக் கூடிய காரணி தொடுகையுறும் நிலையில், அந்தக் காரணியின் தொடுகை, மூளையின் சில பகுதிகளில் பிரதிபலிப்பை உண்டாக்கும். இந்தப் பிரதிபலிப்பின் காரணமாக இன்னும் பல நரம்பிணைப்புத் தாக்கங்கள் தொடர்ச்சியாக ஏற்படும்.

தும்முகின்ற நிலையில், உடலின் உள்ளே மிக அதிகமான அமுக்கம் பிரயோகிக்கப்படும். இதன் காரணமாக, குறிப்பிடத்தக்களவு வாயு அமுக்கம் கண்களில் பிரயோகிக்கப்படும்.

கண்களை, கண் குழிக்குளியிருந்து வெளியேற்றிவிடவோ, கண்கள் பிதுங்கி வெளியே வந்துவிடவோ இந்த அமுக்கத்தால் முடியாவிட்டாலும், கண்களிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்த இந்த அமுக்கத்தால் முடியும்.

டாக்டர். ஜி. எச். ட்ரம்ஹெல்லரின் அவதானிப்பின் படி, “கண்கள் ‘பிதிர்க்கக்‘ கூடாதென்பதற்காகவே தும்மும் போது நாம் கண்களை மூடுகின்றோம்.” எனச் சொல்கிறார்.

தும்மலின் போது கண்களில் ஏற்படக்கூடிய அமுக்கத்தின் காரணமாக, கண்ணில் அசாதரண நிலை தோன்றப்படாது என்பதற்காய் எமது உடலே தன்னியக்கமாக தற்காப்பில் ஈடுபடுவது – வடிவமைப்பின் வியப்பு விஞ்ஞானம்.

ஆனாலும், இந்தப் பெண், கண்களைத் திறந்த நிலையில் தன்னால் தும்மக்கூடியது தனது விஷேடமான திறமை என்கிறார். தும்மலின் பின் அவரின் கண்களின் பிரதிபலிப்பைக் காணொளியில் அவதானிப்பதன் மூலம், கண்களைத் தும்முகின்ற நிலையில் மூடிக் கொள்வது கட்டாயம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

“ஏன்?” என்ற கேள்விகளுக்குள் விஞ்ஞானம், வரலாறு என பல விடயங்கள் விரிந்து பரந்து கிடைக்கிறது. “ஏனெனக் கேட்பது கலை” — கோபாலு சொல்கிறான்.

– உதய தாரகை

மறுமொழிகள் சொல்லி ட்விட்டரில் தொடர..

உண்டியலும் காதலும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 19 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

உலகின் அத்தனை லாவண்யங்கள், விடயங்கள் என எல்லாவற்றிற்கும் பின்னால் கவனிக்கப்படாத கதைகள் இருப்பது வழக்கம். கவனிக்கப்பட்ட கதைகள் பலவும் கூட காலத்தோடு மறைந்து செல்வதும் இயல்பாக நடப்பதொன்றுதான்.

நிறத்தில் கதையொன்றின் வலிமை பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நாம் அறிந்திராத ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்கள் பற்றியும் அவ்வப்போது பதிவுகளாய் உங்களோடு பகிர்ந்திருக்கிறேன்.

நேற்றைய தினம், பழைய கோப்புறையொன்றை திறக்க வேண்டியேற்பட்டது. ஒரு சில வருடங்களுக்கு முன்னர் எழுதி, கிழிக்கப்படாத பக்கங்கள் பலதையும் காண வாய்ப்பு உண்டானது.

நான் அந்தப் பக்கங்களின் வெண்மைக்குள் மைசேர்த்த நாள்களின் அழகிய நினைவுகள், அவற்றைக் கண்டவுடன் என் மனத்திரை முன் விரியக் கண்டேன்.

“நினைவுகள் அழியக்கூடாதென்றா, அவர்கள் பொருள்களை சேமித்து வைக்கிறார்கள்?” என்று திடீரென கோபாலு அதற்கிடையில் கேள்வி கேட்கிறான்.

நினைவுகளின் அழகில், இந்த நிமிடத்தின் நீட்சியும் நிம்மதியும் தொடர்ந்தால் நலமே — அவன்தான் பதிலும் சொன்னான்.

கோப்புறைக்குள் கிடந்த தாள்களில் பலதையும் மெல்ல மெல்ல புரட்டிக் கொண்டு, காலத்தின் விரைவான ஓட்டத்தையும் அதனோடே நிகழ்வுகளின் பாலான எனது கண்ணோட்டத்தையும் மனதால் நோக்குகிறேன்.

ஒரு தாள் — பல மேற்கோள்களைத் தன்னகம் குறித்து வைத்திருக்கிறது. “சிலர் மழையை உணர்ந்து கொள்கிறார்கள். ஏனையோர் வெறுமனே நனைகிறார்கள் — அவ்வளவுதான்” — ஓரமாய் இருந்து கொண்டு உண்மை சொல்லியது இந்தக் கூற்று.

“எனக்கு மகிழ்ச்சி உண்டாகட்டும் என்று வாழ்த்த வேண்டாம். எல்லா நேரமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கவில்லை. அதையும் தாண்டியும் மேலானதாய் இருக்க நினைக்கிறேன். தைரியம், சக்தி, நகைச்சுவை உணர்வு என்பன என்னிடம் குடிகொள்ள ஆசியுங்கள். அதுவே எனக்கு எப்போதும் தேவைப்படும்,” என்று ஆன் மொரோவ் லின்ட்பேர்க் சொன்னதாய் குறித்துள்ளேன் அந்தத் தாளின் ஒரு புறமாக.

அந்தத் தாளில் அப்படியாக மேற்கோள்கள் வாழ்ந்திருக்க, இன்னொரு தாளில் நான் அங்குமிங்குமாய் அறிந்து கொண்ட விடயங்கள் பற்றிய குறிப்பிருந்தது.

அதிலுள்ள சில விடயங்கள் பற்றி நிறத்தில் ஓரிரு வருடங்களுக்கு முன்னர் விபரமாகச் சொல்லியிருக்கிறேன். “அத்தி பூத்தாற் போல“, “அவள் சட்டையில் ஏன் அந்தப்புறமாக பொத்தான்?” என பல பதிவுகளில் அவை இடம் பெற்றிருக்கும்.

அதன் தொடர்ச்சியாய் சில சுவாரஸ்யமான தகவல்களை இன்று சொல்லலாம் என அந்தத் தாள் தூண்டியது. அதுதான் இந்தப் பதிவு.

உண்டியல்கள் பற்றிய நினைவுகள் உங்களிடம் இருக்கலாம். றப்பரினாலான உண்டியலில் சில்லறைக்காசுகள் சேர்த்து பின்னர், கொஞ்சம் சில்லறை வேண்மென்பதற்காய் கத்தரிக்கோலை அதனுள்ளிட்டு, காசு எடுத்த ஞாபகங்கள் — மலரும் நினைவுகள்.

நீங்கள் அவதானித்துள்ள ஒரு விடயத்தை இங்கு நினைவூட்டலாம் என விளைகிறேன். வங்கியிலோ அல்லது கடையிலோ உண்டியல்கள் பெரும்பாலும் பன்றி வடிவத்திலேயே செய்யப்பட்டிருக்கும். வர்த்தக விளம்பரங்களிலும் உண்டியல்களின் வடிவமாக பன்றிதான் காணப்படும்.

பன்றிக்கும் உண்டியலுக்கும் அப்படியென்ன தொடர்பு?

அந்தக் காலத்தில் ஐரோப்பாவில் பீங்கான், பாத்திரம் என்பன செம்மஞ்சள் நிறத்தாலான ‘pygg’ என்று சொல்லப்படுகின்ற ஒரு வகை களிமண்ணால் உருவாக்கம் செய்யப்பட்டது. இந்தக் களிமண் கொண்டு செய்யப்பட்ட உண்டியல், ஆங்கிலத்தில் “pygg jar” என்று அழைக்கப்பட்டது.

Pygg என்பதன் உச்சரிப்பு பன்றியைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான Pig என்பதை ஒத்திருந்ததால், Pygg jar என்பதை Pig jar எனப் பிழையாகப் புரிந்து கொண்ட குயவன் ஒருத்தனின் வினைதான் Pygg என்ற களி, பன்றியாகி வழக்கமான சேமிப்பின் குறியீடாக மாறிவிட்டது.

அந்தத் தாளின் இன்னொரு மூலையில், காதல் பற்றிய குறிப்பொன்றும் இருந்தது. அது என்ன?

டென்னிஸ் விளையாட்டின் போது, வீரரின் புள்ளியைச் சொல்கையில், பூச்சியம் என்பதைச் சொல்லும் Zero என்ற ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தமாட்டார்கள். Love என்ற சொல்லை பயன்படுத்துவார்கள். ஆமா, Love என்றால் காதல் தான் — நீங்க சொல்வது ரொம்ப கரெக்ட்.

அப்போ, பூச்சியத்திற்கும் காதலுக்கும் என்ன தொடர்பு?

டென்னிஸின் நவீனகால ஆரம்பம் இங்கிலாந்தில் தொடர்ந்தாலும், அதன் புராதன கால ஆரம்பம் பிரான்ஸிலிருந்து தொடர்கிறது. பிரான்ஸில் பிரபல்யமாகவிருந்த டென்னிஸில், ஒருவர் புள்ளிகள் பெறாத நிலையைக் குறிப்பதற்கு வழமை போலவே பூச்சியத்தைத் தான் பயன்படுத்தினார்கள்.

புள்ளியைக் குறித்துக்காட்டும் புள்ளிப்பலகையில் பூச்சியம் எப்போதும் போலவே முட்டை போன்று தோற்றம் பெற்றிருக்கிறது. அதை, அவர்கள், அவர்களின் மொழியில் முட்டை என்று சொல்லி வந்திருக்கிறார்கள்.

பிரஞ்சு மொழியில் முட்டையை, l’oeuf என அழைப்பர். டென்னிஸ் விளையாட்டு, அமெரிக்கா சென்ற போது, இந்த முட்டைக்கான பிரஞ்சுச் சொல்லை, பிழையாக அவர்கள் உச்சரித்ததால், l’oeuf என்பது love ஆனது. அதுவே, டென்னிஸ் விளையாட்டின் புள்ளியின் காதலும் ஆனது.

இப்படித்தான், பூச்சியத்திற்கும் காதலுக்கும் டென்னிஸில் முடிச்சு விழுந்தது.

– உதய தாரகை —

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

அழகு தமிழுக்கு ஐபோனில் ஒரு App – iTamil

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 43 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

மேசையில் வைத்து, கணினிகளை ஆராதித்த காலம் தொலைந்து மடியில் கணினியை வைத்து, ஆரவாரம் செய்கின்ற காலம் தொடங்கிய நிலையை அறிவீர்கள். ஆனால், கணினியின் சாத்தியங்கள் இன்றளவில் கையடக்க தொலைபேசிக்கே வந்துவிட்ட நிலை என்பது யாருமே எளிதில் உணர்ந்து கொள்ளக்கூடிய நிலை.

தாய் மொழியில், கணினியிலோ, கையடக்கத் தொலைபேசியிலோ காரியங்கள் செய்கின்ற சாத்தியங்களை காண்கின்ற போதே, எல்லோரும் புளகாங்கிதம் அடைந்து கொள்வது தவிர்க்க முடியாததே! அந்த வகையில், iPhone இல் தமிழ் அழகாக தெரிவது அழகிலும் அழகு. மற்றும் Android பணிசெயல் முறைமைகளைக் கொண்ட கைடயக்க சாதனங்களில், தமிழ் தெரிவது இன்னும் சாத்தியமாக்கப்படவில்லை. ஆனாலும், Opera Mini இணைய உலாவியைக் கொண்டு, Android OS கொண்ட சாதனங்களிலும், அழகாய் தமிழைக் கண்டு கொள்ள முடியுமென்பது ஆறுதல்.

தொடர்ந்து படிக்க…

வாசிக்கத் தேவையான நேரம் என்ன?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 14 செக்கன்களும் தேவைப்படும்.)

அண்மையில் எனது வலைப்பதிவிற்கு நீங்கள் வருகை தந்திருப்பீர்களாயின், புதியதொரு மாற்றமொன்றை அவதானித்திருப்பீர்கள். பலரும் இந்த மாற்றத்தை அவதானித்து, இதை எப்படி செய்தீர்கள்? அருமையாய் இருக்கிறதே என்றெல்லாம் மறுமொழி, மின்னஞ்சல் என்பன மூலம் சொல்லி அனுப்பியிருந்தார்கள். அந்த புதிய விடயமென்ன? அதன் நன்மைகள் என்ன? அதனை எவ்வாறு செய்தேன்? அதற்கான காரணங்கள் என்ன? நீங்கள் அதனை உங்கள் வலைப்பதிவிற்கு எவ்வாறு செய்து கொள்ளலாம் என்பன பற்றி நாம் அலசுவோம்.

இப்போது, இந்தப் பதிவின் ஆரம்பத்திலும், இந்தப் பதிவை வாசிக்கத் தேவையான நேரம் பற்றிய குறிப்பைக் கண்டிருப்பீர்கள். இந்தப் புதிய விடயம் சார்பாகவே பலரும் ஆர்வம் வெளிப்படுத்தினார்கள். உண்மையில் வலைப்பதிவுகளில் எழுதப்படும் பதிவுகளை Scroll செய்து பார்த்துவிட்டே பலரும் வாசிக்கவே தொடங்குகின்றனர். பதிவின் நீளம் கொஞ்சம் அதிகமாகத் தோன்றினால், ஐயகோ, என்னைக் காப்பாற்றுங்கள் என்று வலைப்பக்கத்தை விட்டு, வேறு பக்கமாகிச் செல்கின்றனர்.

தொடர்ந்து படிக்க…

ஆச்சரியம் தந்த ஆளுமை

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 25 செக்கன்கள் தேவைப்படும்.)

சிலவேளைகளில் மனிதனின் சக்தி பற்றிய ஆமோதிப்புகளில் நிஜமாகவே எம்மை நாமே தொலைத்துவிடலாம். பல நாட்களுக்கு முன் TED இணையத்தளத்தில் நான் பார்த்து வியந்த ஆச்சரியம் தந்த ஆளுமை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன்.

தொடர்ந்து படிக்க…

மெய்யென நம்பியுள்ள பொய்கள்

நாம் கொண்டுள்ள நம்பிக்கைகளின் வகைகளும், நிலைகளும் ஒவ்வொருக்கு ஒருவர் வேறுபடும். நம்பிக்கை – சூழல் காரணிகளால் வலுப்படுத்தப்படலாம் அல்லது, வழு என பலரும் அதனை விட்டு நீங்கலாம். ஆனால், நம்பிக்கை – பிழையைக்கூட சரியென எண்ண வைத்துவிடும் வலிமை கொண்டது!

நம்பிக்கைகள் என்றுமே மெய்யானதாக இருந்ததுமில்லை. அதுபோலவே, என்றுமே பொய்யானதாகவும் இருந்ததில்லை. நம்பிக்கை, மெய்யுடன் கலக்கும் போது, தரம் கொள்கிறது.

தொடர்ந்து படிக்க…

மெழுகுவர்த்தியில் எனக்கு உடன்பாடில்லை

அன்றொரு நாள் மாலை வேளை, எனது நண்பனொருவனுடன் கதைத்துக் கொண்டிருந்த போது யோசித்த விடயமொன்றை அண்மையில் Forbes சஞ்சிகை ஆய்வொன்று செய்து அதன் பெறுபேறுகளை வெளியிட்டிருந்தது.

புள்ளிவிபரங்கள் பல வேளைகளில், ஒரு விடயம் சம்மந்தமான தரவுகளை விபரமாகச் சொல்வதில் வெற்றி கண்டு கொள்கின்றன. “எவ்வளவு பணத்தை இந்தப் உலகத்திலுள்ள பணக்காரர்கள் வைத்திருக்கிறார்கள், அவர்களால், உலகத்தையே வாங்கி விடமுடியும் போல..” எனது நண்பன் பணம் பற்றி வியந்து கதைக்கத் தொடங்கினான்.

தொடர்ந்து படிக்க…

ஆனைக்கு காலம் வந்தால் பூனைக்கும் காலம் வரும்

cosmic
நேற்று நான் வாசித்த Alex Tan எனும் அறிஞனின் கூற்று பற்றி நான் நிறத்தில் ஒரு பதிவைக் கட்டாயம் இட வேண்டுமென எண்ணினேன். வாழ்க்கை, மகிழ்ச்சி, இன்பம், துன்பம் என எல்லாவற்றையும் பற்றி நான் நிறத்தில் கதைத்திருக்கிறேன். அண்மையில் கூட “நான் அழுத அந்தத் தருணங்கள்” என்ற தலைப்பிலான பதிவின் மூலம் ஆண்கள் அழலாமா? என்பதை அலசியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.. (இவரு பெரிய இவரு.. அலசுராராம்.. சின்னப்புள்ளத்தனமா இல்ல…)

அண்மையில் எனது கையடக்கத் தொலைபேசிக்கு எனது ஆசிரியையிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி என்னை அழ வைத்தது. என்னை அழ வைக்க வேண்டுமென்ற எண்ணமோ, நோக்கமோ எனது ஆசிரியையிடம் இருக்கவில்லை. ஆனால் நான் அழுதேன். மழை உண்டு, மேகம் இல்லை: கண்ணீர் உண்டு, சோகம் இல்லை. (எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கில்ல.. எங்க என்று கண்டுபுடிங்க பாக்கலாம்…)
தொடர்ந்து படிக்க…