(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 04 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
கவிஞர் கலீல் ஜிப்ரானின் எழுத்துக்களில் அழகிய உணர்வுகள் மென்மையாக பதியப்பட்டிருக்கும். கவிதையானாலும் குட்டிக்கதையானாலும், மனித இயல்பின் அம்சங்களை தொட்டுச் செல்வதாய் செய்யப்பட்டிருக்கும். 1918இல் அல்பிரட் ஏ. நொஃபினால் வெளியிடப்பட்ட கலீல் ஜிப்ரானின் “கிறுக்கன்” (The Madman) என்ற நூலில் இடம்பெற்ற அத்தனை கவிதைகளும் கதைகளும் ஆழமான விடயங்களை அழகான அழகியலாகச் சொல்லிச் செல்லும்.
வாசிக்கும் ஒவ்வொரு தருணமும் மனிதன் சார்பான அற்புதமான புரிதல்களையும் சூழல் தொடர்பான அவதானிப்புகளையும் விசாலப்படுத்திக் கொள்ளலாம்.
இன்றைய புதன் பந்தலில் சோளக்காட்டுச் சொக்கன் (Scarecrow) என்ற தலைப்பிலான கலீல் ஜிப்ரானின் கதையை பகிர்ந்து கொள்ளலாமென நினைத்தேன்.
சோளக்காட்டுச் சொக்கன் அல்லது சோளக்காட்டு பொம்மை எனச் சொல்லப்படும், பறவைகளை விரட்டுவதற்காக வயல்வெளிகளில் அல்லது பயிர்ச்செய்கை பரப்புகளில் உருவாக்கப்பட்டிருக்கும் மனிதன் போன்ற போலி அமைப்பை நீங்கள் கண்டிருக்கக்கூடும்.
“கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகா..” என்று தொடர்கின்ற மிகப்பிரபலமான பாடலொன்று நான் படிக்கின்ற காலத்தில் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் இருந்தது நினைவிருக்கிறது. கத்தரித் தோட்டத்தில் நின்ற சொக்கன் பற்றிய பாடலென்று கூடச் சொல்லலாம்.
இனி கலீல் ஜிப்ரானின் கதை:
“இந்த வயல்வெளியில் தனிமையாக நின்று கொண்டிருப்பது உனக்கு ரொம்ப கடினமாயிருக்குமல்லவா?” என்று சோளக்காட்டு சொக்கனைப் பார்த்து ஒரு தடவை நான் கேட்டேன்.
அதற்கு, “மற்றவர்களை பயமுறுத்துவதில் இருக்கும் சுகம் தனியானது. ஆழமானது. உணர வேண்டியது. நீடித்தது. அதைச் செய்வதில் எனக்கு சோர்வோ கடினமோ எப்போதும் ஏற்படாது” என்று சொக்கன் பதில் சொன்னது.
“ஆமாம். அதுவென்றால் உண்மைதான்: எனக்கும் அந்த இன்பத்தைப் பற்றி நன்றாகத் தெரியும்” என்று அதற்குப் பதில் சொன்னேன்.
“வைக்கோலால் மட்டும் செய்யப்பட்ட வெறுமையானவர்கள் மட்டுமே அந்த இன்பத்தைப் பற்றி புரிவார்கள்” என சொக்கன் பதில் சொல்லியது.
என்னை அது புகழ்ந்ததா அல்லது நையாண்டி செய்ததா என்பதை அறியாமலேயே அவ்விடம் விட்டு அகன்றேன்.
நாட்கள் நகர்ந்தன. ஒரு வருடம் கழிந்தது. அந்த நேரமாக சோளக்காட்டுச் சொக்கன், தத்துவஞானியாக உருவெடுத்திருந்தது.
அதை நான் கடந்து செல்கின்ற போது, அது அணிந்திருந்த தொப்பிக்குக் கீழே இரண்டு காகங்கள் கூடுகட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
“போலி வேடங்கள் யாருக்காக?” என்று கோபாலு கேட்கச் சொன்னான்.
– உதய தாரகை
பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.