எழுத்தழகியல் அனுபவம் – பாகம் ஒன்று

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  2 நிமிடமும் 49 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

ஒவ்வொரு மொழியின் எழுத்துக்களின் வடிவங்கள் தனித்துவமான தன்மைகளைக் கொண்டுள்ளன. மொழிகளின் தனித்துவத்தின் அடையாளமாக எழுத்துக்களின் வடிவங்கள் காணப்படுகின்ற நிலை முதன்மையானது.

தமிழ் மொழியின் எழுத்துக்களின் வடிவங்கள், காலங்காலமாக சின்னச் சின்ன மாறுதல்களுக்கு உட்பட்டு, மாற்றங்கள் மூலமாக வளர்ந்து வந்திருக்கிறது. பண்டைய காலத்தில் ஒரு குறிப்பிட்ட எழுத்தொன்றை எழுதும் முறை என்பது பின்னாளில் மாற்றங்கள் பலதையும் கொண்டு அக்குறித்த எழுத்து இன்னொரு வடிவமாக உருப்பெற்ற வரலாறுகளும் உண்டு.

lettering-01

மாற்றங்கள் என்பதை யாராலும் தவிர்க்க முடியாது. அதுபோலவே, மாற்றம் ஒன்று மட்டுந்தான் மாறாதது என்பதையும் நீ அறிவாய்.

எழுத்துக்கலையில் எனக்கு அதீத ஆர்வமென்பது எனது சிறுவயதிலேயே தோன்றியது என்பேன். அப்பியாசப் புத்தகங்களில் எழுதுகின்ற எழுத்துக்களைக் கூட, ஒரு வித்தியாசமான நிலையில் எழுத வேண்டுமென்கின்ற ஆர்வம் தரம் ஆறு, ஏழு கற்கின்ற நிலையின் போதே தோன்றியது.

தரம் ஆறு கற்பதற்கு முந்திய காலப்பகுதியில், எழுத்துக்களை அழகாக உருப்பமைய எழுத வேண்டுமென்ற ஆர்வம் அதீதமாய் இருந்தது. இதற்கு எனக்கு ஆசானாய் இருந்த, ஷெரீப் சேர் அவர்களின் அற்புதமான அழகிய எழுத்துக்கள் உத்வேகமாய் இருந்தன என்பதை இங்கு பதிவு செய்ய வேண்டும்.

பின்னாளில், தரம் நான்கு கற்கின்ற போது, ஆசரா டீச்சர் (எங்கள் பாடசாலையில், ஆசிரியை ஒருவரை நாங்கள் டீச்சர் என்றே அழைப்போம்), எழுத்துக்களை அழகாக எழுதுவதை எப்படிச் சாத்தியமாக்கலாம் என்பதை அவர் கோப்பு உறைகளில் மாணவர்களின் பெயர்களை, சமாந்தரமான மெல்லிய கோடுகள் வரைந்து அற்புதமாக எழுதிய விடயம் சொல்லித்தந்தது.

இவ்வாறு எழுத்துக்களை எவ்வாறு அழகாக எழுதலாம் என்கின்ற தெளிவை, நான் அடைந்த போது, என் எழுத்துக்களிலும், அழகு ஒட்டிக் கொள்ளக் கண்டேன். அது மிகவும் அற்புதமான அனுபவம்.

அழகிய எழுத்துக்களைக் எழுதுகின்ற தகவைப் பெற்றிருந்த நான் இந்நிலையில், எங்கெல்லாம் நான் எழுத வேண்டுமோ, அங்கெல்லாம் என் எழுத்துக்கள் அழகாய் இருக்க வேண்டுமென்பதில் கரிசணை காட்டினேன். எனது நண்பர்களுக்கு நான் எழுதிய “ஆட்டோகிராஃப்” பற்றி இன்றும் அவர்கள் பூரிப்படைந்து பேசுவதைக் காணும் போது, நினைவுகளின் சுகமான பக்கங்கள் சுவைக்கத் தொடங்கும்.

தமிழ் எழுத்துக்களைப் போன்றே, ஆங்கில எழுத்துக்களையும் அழகாய் எழுத வேண்டுமென்கின்ற ஆர்வமும் என்னோடு எப்போதும் இருந்தது. அது றோயல் கல்லூரியில் கல்வி கற்ற காலம், ஆங்கில பத்திரிகைகளில் அச்சாகி வருகின்ற பல எழுத்துருக்களின் வடிவங்களையும் அதுபோன்றே எழுத முயற்சிப்பேன். அந்த முயற்சியின் பெறுதிகள், என் அப்பியாசப் புத்தகத்தின் பின் பக்கங்களை அழகு செய்து கொண்டிருக்கும்.

எழுத்துக்களை அழகாக எழுத வேண்டுமென்கின்ற ஆர்வத்தின் விளைவு, எழுதுவதை தொடர்ச்சியாக பயிற்சி செய்ய வேண்டுமென்பதை இலகுவாக்கியது. ஆர்வங்கள் தான், ஒரு வெற்றியின் முக்கிய ஆயுதமாக இருக்க முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

இதற்கிடையில், 1997இல் கணினிகளில் காணப்படுகின்ற ஆங்கில எழுத்துருக்கள் பற்றிய வியப்பு என்னிடம் இருந்தது. கணினித்திரையில் அழகிய எழுத்துருக்களைக் காணும் போதெல்லாம், இது எப்படிச் சாத்தியமாகிறது? இதனை இவர்கள் எப்படி உருவாக்கின்றார்கள்? என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருப்பேன்.

இவை பற்றியும் அறிய வேண்டுமென்ற ஆர்வம் தோன்றியது. தேடினேன். அந்நாளில், Macromedia என்ற மென்பொருள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட Macromedia Fontographer என்ற மென்பொருளின் மூலமாகவே எழுத்துருக்கள் உருவாக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொண்டேன். பின்னாளில், Macromedia நிறுவனத்தை Adobe நிறுவனம் கொள்வனவு செய்ததும், ஆனாலும், Fontographer ஐ இப்போது, FontLab நிறுவனம் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

அந்த மென்பொருள் கொண்டு, மௌஸின் உதவியால் ஆங்கில எழுத்து வடிவங்களைச் செய்து, அதனை எழுத்துருவாக மாற்றி, உயர் மகிழ்ச்சி அடைந்து கொண்டேன். படைத்தலின் பின்னரான, வெற்றியின் மகிழ்ச்சியை வர்ணிக்க முடியாது என்பதையும் இங்கு சொல்லியே ஆக வேண்டும்.

அப்போதைய காலத்தில் மௌஸின் தயவால் உருவாக்கப்பட்ட அந்த எழுத்துருக்கள் அவ்வளவு அழகானதான இருக்கவில்லை. இருந்தாலும், ஈற்றில் எழுத்துருவொன்றை என்னால் உருவாக்கி அதற்கு நான் விரும்பிய பெயரை வைக்க முடியுமானது பற்றிய பூரிப்பு என் மனதில் தொடர்ச்சியாக இருந்தது.

பின்னாளில், 2002இல் எனது நண்பன் ஆமில் ஜெளஸி மூலமாக, Calligraphy பற்றிய அறிமுகம் கிடைத்தது. அதன் வாயிலாக, அவனின் அற்புதமான அழகிய ஆங்கில எழுத்துக்களைப் போன்றே நானும் எழுத வேண்டுமென்ற ஆர்வம் தோன்றியது. முயற்சித்தேன். முடிந்தது.

ஆனாலும், Calligraphy பற்றி, இன்னும் நிறைய அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் தோன்றியது, Hand lettering பற்றிய அறிவை விருத்தி செய்வதன் மீதான காதல் அதிகமாகியது. அது பற்றி நான் சில நூல்களைப் படித்தேன். இன்னும் பல இணையத்தளங்களில் காணப்படுகின்ற அது பற்றியதான விடயங்களை அறிந்து கொண்டு குறிப்பெடுத்துக் கொண்டேன். அவற்றை என் எழுத்துக்களிற்கு பிரயோகித்தேன். எழுத்தின் வடிவம் இன்னும் அழகாக மெருகேறியது.

நான் உயர் தரம் கற்கின்ற போது, ஆசிரியர்கள் எவ்வளவு வேகமாகக் குறிப்புகளைச் சொன்னாலும், அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து, எழுத்துக்களை அழகாக எழுதக் கூடிய தகவை, எழுத்துக்களை அழகாக எழுத வேண்டும் என்கின்ற ஆர்வமும் பயிற்சியும் எனக்கு வழங்கியது.

இவ்வாறாக எழுத்தழகியல் பற்றிய எனது ஆர்வம் தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டேயிருந்தது. அண்மையில், அந்த ஆர்வத்தின் வெளிப்பாடாய், பல ஆங்கில எழுத்துருக்களை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறேன். இன்னும் பல வடிவமைப்புகளிற்காக பிரத்தியேகமான எழுத்துக்களை வடிவமைத்திருக்கின்றேன். தமிழில் Unicode நிலையிலமைந்த எழுத்துருவொன்றை இந்நாளில், வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன்.

இன்னும் சொல்வேன்…

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

கவலை பற்றியதான கவலைகள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  2 நிமிடமும் 9 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

மனிதனின் இருப்பின் அழகியலாகத்தான் கவலையைக் காண வேண்டியுள்ளது. கவலைகளின் வகைகள் பலவாறாக விரிந்து சென்றாலும், மனிதன் கவலைப்படுகின்ற நிலைக்குள் எப்போதோ ஒரு தடவை வந்துவிடுகிறான். மீள்கிறான். மீண்டும் வருகின்றான்.

இப்படியே கவலைகளும் சக்கரமாய் சுழல்கின்றன.

மனிதன், கவலையே இல்லாமலிருக்க அவன் மூளைக் கலங்களில் பாதிப்பு ஏற்பட்ட புத்திசுவாதினமற்றவனாக இருக்க வேண்டுமென விஞ்ஞானம் சொல்கின்றது.

ஆக, மனிதனை — இயல்பான மனிதனாக அடையாளப்படுத்தி நிற்பது அவனோடு ஒட்டிக் கொள்ளும் கவலைகளும் தான்.

கவலைகளுக்கு வரலாறுகள் இருப்பது போன்று, வரலாறுகள் தான் பல நேரங்களில் கவலைக்கு ஆதாரமாகியும் விடுகின்றது.

நடந்த விடயமொன்றைப் பற்றி ஒருவன் அடைந்து கொள்கின்ற கவலையின் உச்சம் தான் — கவலைக்கே முகவரி தருகிறது. நடக்கப் போவது பற்றியதான கவலைகளுக்கு வேறு பெயர்களும் உண்டு. அதனால், நடந்தவைகளின் மொத்த வடிவம் கவலைகளின் பெரும் பகுதியை தனக்குள் தக்க வைத்துக் கொண்டுள்ளதென்ற முடிவுக்கு வரலாம்.

கவலைகளை எமக்குள் நாம் அனுபவித்துக் கொள்வதில் கற்பனைத்திறனின் பங்கு அளப்பரியது.

ஒரு பொருளை நீங்கள் நேற்று வாங்குவிட்டீர்கள் என வைத்துக் கொள்வோம். மூன்று தினங்கள் கழித்து உங்கள் நண்பன் அதே பொருளை குறைந்த விலையில் வாங்கியதாக சொல்கிறார். இதைக் கேட்ட கணத்தில் உங்களின் கற்பனைத் திறன், “ஓரிடண்டு நாள் பொறுத்திருந்து இதை வாங்கியிருக்கலாமே!” — “நிறையப் பணத்தைக் கொடுத்து வாங்கிவிட்டோமே!” என்றவாறான பல கோணங்களில் அமைந்த கவலைகளை அது மனதில் நடத்தும்.

இதே பொருளை, இன்னொரு நண்பன் ஒரு மாதங்களுக்கு பின்னர், குறைந்த விலையில் வாங்கிவிட்டதாக நீங்கள் அறிந்தாலும், நீங்கள் கொள்கின்ற கவலையின் அளவு, “கொஞ்சம் பொறுத்திருந்தால் நிறைய சேமித்திருக்கலாம்” என்ற மூன்று நாள் கதையில் தான் மொத்தமாக ஒட்டிக் கொண்டிருக்கும்.

இதுவொரு சின்ன உதாரணம் தான். கவலைகளின் பரப்பு — விசாலமானது. ஆழம் — சங்கீரணமானது என்பதை ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு தனி மனிதனும் உணரும் வகையில் வாழ்க்கை பல சம்பவங்களையும் அதனோடான கவலைகளையும் அவனுக்கு அளித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு ஒப்பிடும் நிலையிலுள்ள சந்தர்ப்பமும் கற்பனைத் திறனும் கலந்து கொண்டால், கவலைக்கான களம் தோன்றிவிடுகிறது.

ஆனால், மனிதனாக இருப்பதனால் நாம் கவலைப்பட்டே ஆக வேண்டும். இவ்வாறு தோன்றும் கவலைகளைப் போக்கிவிட மனிதனின் எண்ணத்தில் ஓடுகின்ற நிலைகள் மீளும் தகவுடையன.

“அதை அப்படிச் செய்திருக்கலாமே!” — “இப்படிச் செய்திருந்தால் அது அப்படியாக வந்திருக்குமே!” — “எப்படித்தான் நான் இப்படியொரு முடிவெடுத்தேனோ?” — “எனக்கே நான் அடிக்கனும் போல இருக்கு” என்ற சுய உரையாடல்களின் தொடர்ச்சியாகத்தான் கவலை போக்கும் படலங்கள் மீள மீள உருவாகிக் கொள்கின்றன.

கவலைகள் மறைந்து போக, மறந்து போக மனிதனெடுக்கின்ற பல முன்னெடுப்புகள் கவலைகளை நித்தமும் ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கான ஆதாரமாகி விடுவதை அவன் உணர்ந்து கொள்வதில்லை.

கவலையை மனிதன் அழகியலாகப் பார்க்க வேண்டிய அவசியமிருக்கிறது.

உலகில் கவலையில்லாத இயல்பான மனிதர்கள் எவரும் இல்லை. ஒவ்வொரு கணமும் கவலையோடு தான் ஒவ்வொரு வினாடியும் விரிகிறது. ஆனால், இப்படி விரியும் கவலையை எப்படி எமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளலாம்?

“எல்லோருக்கும் தானே கவலையுண்டு. எனக்கு மட்டுமில்லையே!” என்று எண்ணி அகத்திலும் முகத்திலும் புன்னகை சேர்க்கலாம்.

கவலைகளை மனத்தில் கொண்டுவருவதில் கற்பனைத்திறனின் பங்கு அதிகமென்பதால், கவலை தரும் கற்பனைத் திறன் கொண்டு, கலைகள் செய்யலாம். கவலைகளை கலைகளாக பரிவர்த்தனை செய்த கலைஞர்களின் வரலாறு உலகம் பூராக விரிந்து கிடக்கிறது.

கனவுகள் இருந்தால் இலக்குகள் இருந்தால் அவற்றை அடைகின்ற பாதையில் ஏற்படும் தடங்கல்களுக்கு நீங்கள் கட்டாயம் வலியை உணர வேண்டும்.

கவலையே இல்லாமல் வாழ்வது வாழ்க்கையே அல்ல. ஆனால், “கவலைகள் எனக்கு இருக்கே!” என்று உங்களை நீங்களே வெறுப்பது எப்படி வாழ்வின் அழகியலாக முடியும்?

எல்லோரும் தான் தடங்கல்களைச் சந்திக்கின்றனர். அந்தத் தடங்கல்கள் பல வேளைகளில் எமது தீர்மானங்களின் வருவிளைவுகளாக இருக்கின்றன. கவலைகளின் ஆதாரங்களாயும் தொடர்கின்றன. அந்தத் தீர்மானங்களை எடுத்தத்திற்காக உங்களை நீங்களே மன்னிக்க பழக வேண்டியுள்ளது. மன்னிப்பு என்பது தனிமனிதன் நிலையில் தான் கட்டாயம் தேவைப்படுகிறது.

“நாம் கொள்கின்ற கவலைகள் — நாம் பிழை செய்துவிட்டோம் எனச் சொல்வதற்காக வருவதல்ல, நாம் இன்னும் அதை விட அற்புதமாக செயலாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளோம் என ஞாபகமூட்டவே வருகிறது” என கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

உணர்விழக்கும் மொழியாடல்கள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  2 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

நாகரிகத்தின் வளர்ச்சி என்பது ஒரு சமூகத்தின் பரிணாம வளர்ச்சியின் அளவு கோளாகவே இருந்து வருகிறது. கருவியை மனிதன் கண்டுபிடித்து அதன் வாயிலாகக் கண்டு கொண்ட விசித்திரங்களை பகிர்ந்து கொள்ள, ஆவணப்படுத்த இன்னொரு கருவி தேவையென உணர்ந்து அதைக் கண்டுபிடிக்கத் தொடங்கினான்.

அவனின் கண்டுபிடிப்பின் வருவிளைவுதான் மொழி. கருவிக் கையாட்சியும் மொழியின் பயன்பாடும் தான் ஒரு சமூகத்தின் நாகரிக வளர்ச்சியின் ஆணிவேராகத் திளைத்தது.

இந்த மொழியின் தயவால் இலக்கியம் தோன்றியது, இதிகாசம் பதிவாகியது. இன்னும் பல சாத்தியங்கள் உருவாக்கம் பெற்றன. ஆயிரக்கணக்கான மொழிகள் நவீன உலகில் வழக்கத்தில் காணப்படுகின்றன.

அதேவேளை, பலமொழிகள் பாவனையிலிருந்து அழிந்தும் போய்க் கொண்டிருக்கின்றன. மொழிகள் வெறுமனே எண்ணங்களை பரிமாறிக் கொள்வதற்கான ஊடகங்களாக மட்டுமல்லாது, அம்மொழி சார்ந்த கலாச்சார, சமூக நிலைகளை வெளிப்படுத்தும் அங்கங்களாகவும் இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் பழங்குடிமக்களில், கூகு திமித்ர் என்ற மொழியை பாவிப்பவர்களின் மொழியில் இடது, வலது, முன்னால், பின்னால் என்ற சொற்கள் இல்லை. அவர்கள் இந்த நிலைகளைக் குறிப்பதற்காக திசைகாட்டியின் திசைகளைக் குறிப்பிடுவர்.

“நான், நூலகத்திற்கு வலது புறமாக நிற்கிறேன்” என்பதை, “நான், நூலகத்திற்கு தென்கிழக்காக நிற்கிறேன்” என்று அந்த பழங்குடி மக்கள் திட்டவட்டமாக திசைகளைக் குறிப்பிடுவர்.

ஒரு மொழியில் காணப்படும் பல சொற்களில் தோற்றத்தின் பின்னணியில் ஒவ்வொரு வரலாறு இருக்கும். கர்வம் இருக்கும். வீரம் இருக்கும். கலாச்சாரம் இருக்கும். சமூக அடையாளம் இருக்கும். விவேகம் இருக்கும்.

தனது சூழல் சார்ந்த உணர்வின் பதிவாகத்தான் மொழியை மனிதன் உபயோகப்படுத்தி வந்திருக்கிறான். பல சமூகங்களில் காணப்படும் உணர்வுகளுக்கான அந்த மொழிச் சொற்களுக்கு, பொருத்தமான ஒரு சொல் பல மொழிகளில் கிடைப்பதில்லை. இது அந்தச் சமூகச்சூழலின் உணர்வுச் செல்வத்தைக் காட்டுகின்ற நிலை.

ஒரு சில மொழிகளில் ஒரு சொல் சொல்கின்ற விடயத்தை, பல சொற்கள் கொண்டு மட்டுந்தான் இன்னொரு மொழியில் விளக்க முடியும். மொழியோடு ஒரு சமூகத்தின் அடையாளமே நகர்த்தப்படுகிறது. பிணைந்துவிடுகிறது.

Kyoikumama என்ற ஜப்பானிய சொல் சொல்கின்ற விடயத்தை ஒரு சொல்லில் மொழிமாற்றம் செய்ய முடியாது. “தனது பிள்ளையை, கல்வியில் அதிகம் சாதனை படைக்க வேண்டுமென்று தொடர்ச்சியாக நச்சரித்துக் கொண்டிருக்கும் தாய்” என்பதுதான் அதன் பொருள்.

இன்றைய சூழலில் மொழியின் பரிமாற்றம் எழுத்து வடிவம், ஒலி வடிவம் என பல வகைகளில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஊடகங்களின் வழியாக மொழியின் அடையாளம் மிக உன்னதமாக வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு மொழியும் அதன் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்கான தமது ஆயத்தங்களையும் ஆர்வங்களையும் இணையம், இயல்பு வாழ்வு என்பவற்றிலே விசாலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த நிலை எமது மொழி தமிழிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இணையம், அன்றாட வாழ்க்கை என்பவற்றில் இதற்கான ஆர்வங்கள் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பது சுவையான நிகழ்வே.

ஆனாலும், இந்த ஆர்வங்களின் வெளிப்பாட்டின் உள்ளடக்கத்தில் அதிக மொழியாடலுக்கான ஈடுபாடு தெரியாமலேயே தவிர்க்கப்படுகிறது என்பது போல் தோன்றுகிறது. “மொக்கை பெற்ற பெருவாழ்வு” (பாடசாலையில், “கள் பெற்ற பெருவாழ்வு” என்று பன்மையைக் குறிக்க வரும் கள் பற்றிய கட்டுரை படித்ததுண்டு) என்று பெரியதொரு கட்டுரை வரையுமளவில் “மொக்கை” என்ற சொல் அத்தனை ஊடகங்களையும் ஆட்கொண்டுவிட்டது.

உண்மையில் இந்தச் சொல்லைச் சொல்வதனால், சொல்பவர் எதைச் சொல்ல வருகிறார் என்ற கேள்வி எப்போதுமே எனக்குள் தோன்றுவதுண்டு. அதற்கு விளக்கம் கேட்டால், அதற்கான விடையும், “ஏன்ப்பா, மொக்கையா கேள்வி கேட்கிற?” என்றவாறு முடிவது கவலை.

நமது மொழியில் ஒரு விடயத்தை அப்படியே சுட்டிக் காட்ட சொற்கள் இல்லையா? ஒரு விடயத்தை பாராட்டுவதற்குக்கூட “மொக்கை போடம செய்தீங்க!” என்றவகையில் மொழியாடல் வரையறுக்கப்பட்டுள்ளது.

இங்கு சொற்களின் வறுமைக்கு என்ன காரணமென்றால், எதுவுமே அல்ல — நாம் மற்றும் நாம் வாழும் சூழல். இந்தச் சூழலில் அதிக விழுக்காடுகளை தொலைக்காட்சி, சினிமா, இணையம் என்பன நிரப்பிவிடுகின்றன.

ஒரு நிறைவான சம்பாஷணை ஒன்றை வானொலியில் கேட்க வேண்டிய ஆர்வத்தின் நிலை, ஈற்றில் “மொக்கை, மொக்கை” எனக் கேட்டுக் கொள்கின்ற மொழியின் வறுமையை உணர்வதாய் முடிந்து போய்விடுகிறது.

சங்ககால இலக்கியத் தமிழ் வேண்டாம். நவீன காலத்தில் உணர்வுகளைப் பதியச் செய்யும் ஊடகமாக மொழி இருக்கின்ற நிலையில், மொழி என்பது வெறும் “மொக்கை” என்பதாகவே மட்டுப்படுத்தப்பட்டு விட்டதா? என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.

உணர்வுகளை செழிப்பாகச் சொல்லிவிட தமிழில் பல சொற்கள் இருக்கின்றன. அவை அத்தனையும் இயல்பான சொற்கள், இலகுத் தமிழ்ச் சொற்கள். “மொக்கை” பெற்ற பெருவாழ்வு — அவற்றை மறந்து போய்விடச் செய்திருக்கலாம். ஆனால், அதுவல்ல ஒரு மொழியின் சிறப்பு.

நாம் சொல்கின்ற கருத்துக்கள், பதிவுகள் இணையமெங்கும் ஏதோவொரு வகையில் ஆவணமாகிவிடுகிறது. எதிர்காலத்தில் மொழியின் வளம் பற்றி நாளைய சந்ததியினர் இணையத்தில் தேடுகின்ற போது, வெறும் “மொக்கை” என்ற சொல்லை மட்டும் எல்லா உணர்வுகளையும் வெளிக்கொணர பாவிக்கப்பட்டதா? என்ற சந்தேகத்திற்கான உறுதிப்பாடாக மாற்றிவிடுவதா என்பதை நீங்கள் கட்டாயம் தீர்மானிக்க வேண்டும்.

“அற்புதமாயிருக்கிறது” என்பதை “மொக்கையாயில்லை” என்று சொல்வதை எப்படி ஜீரணிக்க முடியும்?

“இணையத்தில் பதியும் உங்கள் ஒவ்வொரு எழுத்தும் ஒலியும் ஒளியும் வருங்காலத்தின் வரலாறுகள். வரலாறு படைப்பதற்கான வாய்ப்பு உங்களிடம் இருக்கின்ற இந்த நிலையில் அதை விவேகமாய் பாவிக்க வேண்டியது, உங்களின் கடமை,” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

  • உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

இதுவொரு கமராவின் கதை

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 59 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

அவனொரு பிரபலமான நிழற்படப்பிடிப்பாளன். உலகப் புகழ் வாய்ந்த பல நிழற்படங்களின் சொந்தக்காரன் என்று கூட சொல்லிவிடலாம். அவனின் அற்புதமான நிழற்படங்களை நேசிப்பவர்கள், அவனோடு கொஞ்சம் பேசிவிட வேண்டுமென ஆர்வம் கொள்வர்.

அவன் வாழ்ந்த பகுதியில் வசித்த, செல்வந்தன் ஒருவன், அவனை இராப்போசனத்திற்காக அழைத்தான். அழைப்பை ஏற்று, அவனும் செல்வந்தனின் வீடு சென்றான்.

செல்வந்தனைப் போலவே, செல்வந்தனின் மனைவிக்குக் கூட, இவனின் பிரபலமான நிழற்படங்களை ரொம்பப் பிடித்திருந்தது.

அவன் அங்கு சென்றதைக் கண்டதும், உடனே சந்திக்க முந்திக் கொண்டு, “உங்களை இங்கு காண்பதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. உங்களின் அற்புதமான நிழற்படங்கள் பலதையும் பார்த்து வியந்திருக்கிறேன். அத்தனையும் என்னைக் கவர்ந்தவை” என்றாள் – அவன் அவளுக்கு புன்னகையால் பதில் சொன்னான்.

பேச்சைத் தொடர்ந்த அவள், “இவ்வளவு அழகான, அற்புதமான நிழற்படங்களை எடுக்கிறீர்கள் என்றால், உங்களிடம் கட்டாயம் விலையுயர்ந்த தரம் மிக்க கமரா இருக்கவேண்டும். உங்களின் அந்தக் கமராவின் விபரங்களைக் கொஞ்சம் சொல்வீர்களா?” என்று கேட்டு நின்றாள்.

அவனோ, பதிலுக்கு புன்னகைத்து மௌனத்திற்கு அவகாசம் கொடுத்தான்.

இராப்போசனம் முடிந்தது. அவன் வீடு செல்ல வெளியேறத் தொடங்குகையில், செல்வந்தனின் மனைவி எதிர்ப்பட்டு, மீண்டும் அதே கேள்வியைக் கேட்டாள்.

“நல்லது. உங்கள் வீட்டின் சாப்பாடு மிக மிக அற்புதமாக இருந்தது. உங்களிடம் மிக அற்புதமான நல்லதொரு அடுப்பு இருக்குமென உறுதியாக நம்புகிறேன்” என்று சொல்லிக் கொண்டு புன்னகையோடு, அகன்று சென்றான்.

மனிதனின் அன்னியோன்யம் இல்லாத கலைகள் தோன்றிய வரலாறுகளும் இல்லை. இருக்கவும் முடியாது. நுட்பங்களைப் பாவிக்கும் மனிதனை விட, நுட்பங்களின் மீதான அதீத நம்பிக்கை பலருக்கும் இங்குள்ளது. இது இயல்பிருப்பு நிலையாகிவிட்டிருப்பதும் கவலை.

மனிதனின் பாவனையில்தான் நுட்பங்களுக்கே முகவரி கிடைக்கிறது. இங்கு மக்களால் பாவிக்கப்பட்டு நேசிக்கப்பட்டு, மனித இயல்பு நிலை அம்சங்கள் நுட்பங்களோடு கலக்கும் போதே, உயரிய கலைகள், விடயங்கள் என பலதும் உருவாக்கம் செய்யப்படுகின்றன.

“கலைகளை, படைப்பாக்கங்களை வெறும் கருவிகளின் வருவிளைவுகளாக மட்டும் கருதிக் கொண்டு, அதனை உருவாக்குபவனை மறந்துவிடுகின்ற சமகாலத்தின் நிலையை என்னவென்று சொல்வது?” என கோபாலு கேட்கிறான்.

– உதய தாரகை

மறுமொழி சொல்லி ட்விட்டரில் தொடர நான் இங்கே. 🙂 –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

ஒட்டாத பசை

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 17 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

வரலாறு சொல்கின்ற பல விடயங்கள் ஆச்சரியத்தின் ஆதாரங்களாக இருப்பதுண்டு. கண்டுபிடிப்புகள் பல எண்ணங்களின் வித்தியாசமான அணுகுகையால் உண்மையான விடயங்களாகப் பரிவர்த்தனை செய்யப்பட்டதும் வரலாற்றின் அத்தியாயங்கள்.

அப்படியான வரலாற்றின் அத்தியாயமொன்றை பகிர்ந்து கொள்கிறேன்.

ஆதர் ப்ரை — 3M என்ற நிறுவனத்தின் கடதாசிப் பிரிவில் பொறியியலாளராக பணி செய்தார். 1974 இன் குளிர்காலத்தில் பசைகளைப் பற்றிய உருவாக்கத்தில் ஈடுபட்ட செல்டன் சில்வர் என்ற பொறியிலாளர் வழங்கிய உரையைக் கேட்பதற்காகச் சென்றிருந்தார். சில்வர், மிகவும் வலிமையற்ற பசையொன்றை உருவாக்கி அது பற்றி உரையைக் கேட்க வந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரால் உருவாக்கப்பட்ட பசையால், இரண்டு கடதாசிகளைக் கூட இறுக்கமாக ஒட்டிக் கொண்டிருக்கும் வகையில் செய்ய முடியவில்லை. அறையில் இருந்த அனைவர் போலவும், ப்ரையும் பொறுமையாக சில்வரின் உரையைச் செவிசாய்த்துக் கொண்டிருந்தார்.

யாராலும், குறித்த வலிமையில்லாப் பசையை உபயோகப்படுத்திக் கொள்வதற்கான பிரயோக நிலை அவதானிப்புகளை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.

“ஒட்டாத பசையால் அப்படி என்னதான் பண்ணிவிட முடியும்?” — கேட்கப்படாமலே அனைவரினதும் மனதில் தோன்றிய வினா.

ஆனால், ஒரு ஞாயிற்றுக் கிழமை, ப்ரையின் எண்ணங்களுக்குள் இந்த ஒட்டாத பசை வித்தியாசமான வகையில் ஒட்டிக் கொண்டது.

தேவாலயத்தில் ஆராதனைப் பாடல்களைப் பாடிய ப்ரை — தான் பாடவேண்டிய பாடல் காணப்படுகின்ற பக்கத்தை அடையாளப்படுத்தி வைக்க சின்னதொரு கடதாசியை புத்தகக் குறியாகப் பயன்படுத்தினார். ஆனால், துரதிஷ்டவசமாக அந்தக் கடதாசி இருந்த இடத்தை விட்டு அடிக்கடி விழுந்து கொண்டேயிருந்தது.

ஆராதனைப் பாடல்களுள்ள பக்கத்தை குறித்து வைத்துக் கொள்கின்ற வேலையை அது செய்ய மறுத்தது போல் தோன்றியதால், புத்தகம் பூராக ப்ரை பாடலை தொடர்ச்சியாகத் தேடிப் பாடிக் கொள்ள வேண்டியதாகியது.

அதுவொரு கட்டாயமாகத் திணிக்கப்பட்ட தீர்க்கப்படமுடியாத பிரச்சனையாகவே ப்ரைக்குத் தோன்றியது.

இப்படி ஆராதனைகளில் ஈடுபட்டிருந்த ப்ரைக்கு அட்டாகாசமான எண்ணமொன்று உதித்தது. ஒட்டாத பசையைக் கொண்டு, மீளப்பயன்படுத்தக்கூடிய புத்தகக் குறிகளை உண்டாக்கலாம் என எண்ணலானார்.

அந்தப் பசையின் ஒட்டுகின்ற வலிமை குறைந்து காணப்படுவதால், புத்தகத்தின் பக்கத்தில் அதனைக் கொண்டு சின்னக்கடதாசியொன்றை ஒட்டலாம். ஒட்டிய கடதாசியை அகற்றுகையில், அது ஒட்டிய பக்கத்தையும் கிழிக்காது.

இதுவே இன்று உலகளவில் அலுவலகங்களில் ஏன் வீடுகளிலும் தான் அதிகமாகப் பயன்படும் போஸ்ட்-இட் நோட்டாக (Post-it Note) உருவாகியது.

ஒட்டாத பசையோடு ஒட்டிக்கொண்ட ப்ரையின் யோசனை — அனைத்தையும் மாற்றி போட்டுவிட்டது.

“நம்மைச் சூழவுள்ள உலகத்தில் ஆயிரம் விடயங்கள் எமது புலன்களின் அவதானத்தின் கோணத்திற்குள் அகப்படாமல், வெளியாகிக் கிடக்கிறது. புலன்களுக்கு புலன் கொடுத்தல், பலன்கள் பலவற்றைப் பெற்றுத் தரலாம். உருவாக்கும் நேரம் இதுதான். நீங்கள் தயாரா?” — கோபாலு கேட்கிறான்.

போனஸ் தகவல்: போஸ்ட்-இட் நோட்ஸ் பலவற்றைப் பயன்படுத்தி 2009 ஆம் ஆண்டு, அற்புதமாக அசைவூட்ட குறுந்திரைப்படமொன்றை பேங்க்-யஓ லியோ உருவாக்கி வெளியிட்டிருந்தார் — வித்தியாசமாகவிருந்தது. அந்தக் காணொளிக்கான இணைப்பு இது.

– உதய தாரகை

மறுமொழி சொல்லியனுப்பி ட்விட்டரில் தொடர..

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

வருடாந்தக் காதல் போட்டி

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 6 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

தனிமனிதன் சார்பான உலகம் பற்றிய விசாரிப்புகளில், பலவேளை யாரும் அறிந்திராத பல விடயங்கள் உதிப்பதுண்டு. அது நடக்கும் தருணங்கள் எதிர்கூற முடியாதவை போலவே, அதன் போது தோன்றும் விடயங்களும் ஏற்கனவே அறிந்து கொள்ளப்படாதவையே.

ஆய்வுகளின் அடிப்படையில் தனிமனிதனின் நடவடிக்கை சார்ந்த புலங்கள் நோக்கப்படுவது, காலங்காலமாக நடந்துவருவது நாமறிந்த நிகழ்வுதான். ஆனால், அவ்வாறான ஆய்வுகளில் ஒரு சில மொத்தத்தில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துக் கொண்டுவிடும்.

ஸ்டான்போர்ட் புலன்வழி அறிதல் மற்றும் நரம்பியல் நிழற்படவாக்க நிலையத்தில் ஒரு அரிதான பரிசோதனை இடம்பெற்றது. “முதலாவது வருடாந்த காதல் போட்டி” என்பது தான் அந்த ஆய்விற்கான பெயர்.

அன்பு, காதல், பாசம், நேசம் என விரியும் மனிதனின் விருப்புக்குரிய உணர்வின் அளவின் தேடலில் வெற்றியாளரைத் தேர்வு செய்கின்ற ஆய்வு அது. போட்டியின் விதிகள் இவைதாம்,

  • போட்டியாளர்கள் தங்களின் அன்புக்குரியவர்கள் பற்றி, 5 நிமிடத்திற்கு உச்சளவில் நினைத்துக் கொள்ள வேண்டும், இந்தவேளையில் அவர்களின் மூளையின் செயற்பாடு fMRI யந்திரம் கொண்டு அளந்து கொள்ளப்படும்.
  • மூளையில் அன்புக்குரித்தானதாக காணப்படும் நரம்பிய வேதியல் கூறுகளின் அளவு கணித்துக் கொள்ளப்படும்.

பல்வேறு வயதுகளிலுள்ள, ஆண், பெண் ஆகிய இருபாலாரும் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியின் முடிவு ஏதோவொரு வகையில் உங்களுக்கு வியப்பைத் தரக்கூடும்.

காதலிலுள்ள வேதியலின் சாரத்தை அழகியலாய் பதினைந்து நிமிடங்களில் மிக நேர்த்தியாக திரைக்குக் கொண்டுவர இயக்குனர் பிரண்ட் ஹொப்பிற்கு முடிந்திருக்கிறது. நுட்பத்தின் வெகுவான சங்கீரணமான தன்மைகளைத் தாண்டி, அன்பின் மென்மையை அற்புதமாகக் கொண்டு வரும் கமராக்கண் — வியப்பு.

ஒவ்வொரு போட்டியாளரும் அன்பைக் காண்கின்ற விதத்தை விபரிக்கின்ற முறை — காதல். பத்து வயதுப் பையன் மைலோ, அன்பைப் பற்றிச் சொல்லும் விபரம் — உச்சம். “Love is a feeling you have for someone you have feelings about.”

உத்வேகம் தரக்கூடிய, வாழ்வின் அழகிய அனுபவங்களை ஒரு கணம் உசுப்பிவிடுகின்ற இந்த ஆய்வின் ஆவணத்தை நீங்கள் கட்டாயம் காண வேண்டும். பதினைந்து நிமிடங்கள் விரிகின்ற இந்த லாவண்யத்தை காண இதுதான் தருணம்.

.

திண்காறையாகிவிட்டவைகளும், உணர்வுகளின் ஸ்பரிசத்தில் கனமிழந்து போகின்றன. “காதல், தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது” என்ற ரட்சகன் படப்பாடல் வானொலியில் கேட்கிறது.

– உதய தாரகை —

பத்தாயிரம் மணிநேர விதி

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடமும் 47 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

கடந்த ஜுலை மாதம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற TED Global 2011 மாநாட்டில், TED மொழி இணைப்பாளராக நான் கலந்து கொண்டேன். அங்கு பல ஆளுமைகளைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

பலதுறைகளிலும் முன்னணியாக விளங்குகின்ற ஆளுமைகளுடனான சந்திப்பு, பல விடயங்களைச் சொல்லித் தந்தது. அவை பற்றியெல்லாம் விரிவாக வெவ்வேறு பதிவுகளில் சொல்லவிருக்கிறேன்.

அந்த மாநாட்டில் நான் சந்திந்த பல ஆளுமைகளுள் ஒருவர்தான் — எழுத்தாளர் மல்கம் கிலாட்வெல் (Malcolm Gladwell). 2005 ஆம் ஆண்டு TIME சஞ்சிகையின் உலகில் செல்வாக்குச் செலுத்தும் 100 பேர் பட்டியலில் இடம்பிடித்தவர். The Tipping Point, Blink மற்றும் Outliers போன்ற பல பிரபல்யமான நூல்களின் ஆசிரியர்.

பத்தாயிரம் மணிநேர விதி என்றவுடனேயே, இவரே அனைவராலும் நினைவுகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றார். தனது Outliers என்ற நூலின் மூலம் இந்த விதி தொடர்பாக சொல்லியிருப்பார்.

ஒருவர், ஒரு சிக்கலான திறனில் நிபுணத்துவம் பெற்றவராவதற்கு, அந்தத் திறனை பயிற்சி செய்வதற்காக அதனையே குறித்தான பத்தாயிரம் மணிநேர பயிற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டுமென்பதுதான் — அந்த விதி.

ஒவ்வொரு நாளும் 2 தொடக்கம் 3 மணிநேரம் தான் நிபுணத்துவம் அடைய வேண்டுமென எண்ணுகின்ற விடயத்தில் 10 வருடங்களுக்கு பயிற்சி எடுத்தால் ஒருவன் அவன் விரும்புகின்ற துறையில் நிபுணத்துவம் அடைகின்றான் என்பதே இதன் இன்னொரு வடிவம்.

பல ஆதார சம்பவங்களோடு தனது அவதானங்களை கிலாட்வெல் அந்த நூலில் விபரிப்பார்.

ஆனாலும், இந்த பத்தாயிரம் மணிநேர விதி, பலராலும் வித்தியாசமான கருத்தோடு உணரப்பட்டுள்ளதும் உண்மை. “நிபுணராவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வெறும் பத்தாயிரம் மணிநேரம் பயிற்சி செய்வதுதான்” என்பதுதான் அந்தக் கருத்து.

வெறும் பத்தாயிரம் மணிநேரங்கள், எதைத் தரமுடியும்? வெறுமையைத் தவிர.

விரும்பிய திறனில் ஒன்றிப்போய், அதுபற்றியதாய் எமது பயிற்சிகள் பத்தாயிரம் மணிநேரமாவது இருக்க வேண்டுமென்பதையே இந்த விதி சொல்கிறது. பத்தாண்டுகள் தான் தேவைப்படும் என்றில்லை — ஒன்றித்த பயிற்சியுடனான பல மணித்தியாலங்களை ஒரு நாளில் உங்களால் பயிற்சிக்காக தர முடிந்தால், ஒரு சில ஆண்டுகளிலேயே விற்பன்னர் ஆகிடலாம்.

திறமை அல்லது ஆற்றல் என்பது தோன்றி விசாலமாக்கபடுவதில் பயிற்சி, பொறுமை, தொழில்நுணுக்கங்கள் என பல காரணிகள் பங்காற்றும் என்பதும் நாம் அறிந்ததே!

மணித்தியாலங்களை எண்ணிக் கொண்டு பயிற்சி செய்வதாலோ, நிபுணத்துவம் கிட்டாது என்பதையும் நாம் உணர வேண்டியுள்ளது. ஒன்றித்த பயிற்சியில் மணித்தியாலக் கணக்கு தெரியாது — நாம் பயிற்சி செய்யும் விடயம் எதுவோ அது மட்டுமே கவனத்தில் நிற்கும்.

இந்த விதி வலியுறுத்துவதெல்லாம் பயிற்சி செய்வதனால் பலன்கள் கிடைக்கின்றது என்பதைத்தான்.

ஆனால், நிபுணர்கள் என்பவர்கள் யாவர்?

இசையில் விற்பன்னராக நினைத்து, இசையமைப்பாளர்கள் எவ்வாறு இசையமைக்கிறார்கள் என்றுணர்ந்து அதன்படி வெளிப்படுத்த எண்ணுதல், எழுத்தில் வித்தைகள் செய்ய எண்ணி எழுத்தாளர்கள் எப்படியெல்லாம் வித்தைகள் செய்கிறார்கள் என அதன்படி வெளியிட பயில்தல், சித்திரக் கலைஞனாகி சிகரங்கள் தொட மற்ற சித்திரக் கலைஞர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதையறிந்து முயல்தல் என்பதிலேயே பலரினதும் பயிற்சிகள் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ‘முயற்சிகள்’ ஒருபோதும் நிபுணராவதற்கான வாய்ப்பை வழங்காது. அசலின் இன்னொரு நகலொன்றை மட்டுமே தரும்.

கலையையோ, திறனையோ தனக்கேயுரித்தான பாணியில் சொல்லத் தெரிந்தவன் தான் நிபுணராகின்றான்.

தன்னைத் தானாகவே காட்டிக் கொள்கின்ற வித்தைகளைத் தான் நிபுணன் பயிற்சியாகப் பெறுகிறான் என்றே உணர வேண்டியுள்ளது. இது சொல்லிவிடுவது போல் லேசானதல்ல. மனதோடு ஒருமித்த பயிற்சிகள் நிறையத் தேவைப்படுகிறது.

தனது கருதுகோள்கள் பற்றிய தெளிவை புரிகின்ற வகையில் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல்தான் ஒருவனை ஒரு துறைசார்பான தெளிவுள்ளவனாகக் காட்டுகிறது.

“எனக்கிட்ட இருந்து அவங்க இதைத்தான் எதிர்பாக்கிறாங்க. அதத்தான் நான் செய்யனும்” என்றவாறான தொனியில்தான் நிறைய முயற்சிகளின் தொடக்கம் இன்றளவில் இருக்கிறது. இங்கு தன்னைத் தானாக காட்டுவதற்கான தெளிவின் துவக்கம் தேவைப்படுகிறது.

மற்ற விடயங்கள், மனிதர்களின் எண்ணங்கள் சார்பான ஆதிக்கமே எமது எண்ணங்களின் வெளிப்பாட்டின் பூட்டாகவிருக்கிறது. ஆனால், சாவி எம்மிடம் இருப்பது என்பது மகிழ்ச்சியான செய்திதான்.

எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், அனைவரும் “இது புதிசா இருக்கே!” என்றவாறான திகைப்பைத் தரக்கூடிய சந்தர்ப்பங்கள் நாளுக்கு நாள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த ஆச்சரியங்களை உருவாக்குபவர்கள்: நேரத்தை பயிற்சிகளால் அலங்கரித்து தன்னைத் தானாகவே காட்டிக் கொண்டவர்கள்.

நேரத்தை பயிற்சியில் முதலீடு செய்து தங்களைத் தயார்படுத்திக் கொண்டவர்கள் – அதிர்ஷ்டசாலிகள். செனகா என்ற உரோம தத்துவஞானி, “தயார்படுத்தல், வாய்ப்பைச் சந்திக்கும் நிலையைத்தான், அதிர்ஷ்டம் என்கிறோம்” என்று ஒரு தடவை சொல்லியிருப்பார்.

தன்னைத் தானாக வெளிப்படுத்தினால், வாய்ப்புகளுக்கு உங்களை வந்து சேரும் நிறைய வாய்ப்புகள் பிறக்கும். இங்கு அசலுக்கு நிறைய மௌசு உள்ளது எல்லோருக்கும் தெரியும்.

எழுத்தாளர் கிரிஸ்டின் ஆம்ஸ்ட்ரோங் சொன்ன ஒரு விடயத்தை பகிர்தல் பலன் தரும் என நினைத்து இங்கு இணைக்கிறேன்.

“நீங்கள் பேசிக் கொண்டிருந்த ஆனால் எப்போதுமே செய்யாத அந்த விடயங்களைச் செய்யுங்கள். எப்போது விட்டுவிடுவது, எப்போது கட்டிக் காப்பது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அவசரம் வேண்டாமே! அது அதைப் போன்றுதான் இருக்கிறது என்ற சொல்லாடலுக்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டாம். எடுத்ததற்கெல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கவும் வேண்டாம்.

முடியாது என்று சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள் — உங்கள் ‘முடியும்’ என்ற வார்த்தைக்கு அப்போது கவர்ச்சி கிடைக்கும்.

முன்னேற்றத்தில் பங்காயுள்ள நண்பர்களோடு பழகுங்கள், குழிதோண்டும் மற்றவர்களோடான அணுக்கம் தேவையில்லை. நீங்கள் செய்வதில் ஆர்வமாக இருங்கள். மற்றவர்களுக்கு ஆர்வமாக உங்களைத் தோற்றுவிக்கின்ற பாசாங்கு வேண்டாம். உங்கள் சுதந்திரத்தை மதிக்கும் வகையில் முதிர்ச்சியடைந்திருங்கள். அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்கும் வகையில் இளமையாயிருங்கள். ஈற்றில், நீங்கள் யாரோ அதுவாகவே இருங்கள்.”

குறுக்கிட்ட கோபாலு இப்படிக் சொல்கிறான், “அப்படி, இப்படி என வரவேண்டும் என்று முயற்சிப்பதை விட்டுவிட்டு, எதுவாக நீயாக வேண்டுமோ, அதையே முயற்சிக்காமல் – செய். நீ செய்வதில் தோற்றால்தான், செய்தது முயற்சி. முயற்சியில் தோற்றதை என்னவென்று சொல்வது? ஆக, எதைச் செய்ய எண்ணுகிறாயோ அதை முயற்சிக்காமல் உடனே செய்! – செய்வது தோற்றுப் போனால், அது தன்னாலே முயற்சியாகும்.”

– உதய தாரகை —

  • பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.
  • TED Global 2011 இல் மல்கம் கிலாட்வெல் வழங்கிய சொற்பொழிவு வெளியிடப்பட்டுள்ளது. TED.com இல் காணலாம்.
  • Outliers நூலில் சொல்லப்படுகின்ற இந்த விதி பற்றிய விடயத்தை சுருக்கமாக ஒருவர் காணொளியாக உருவாக்கி இருக்கிறார். YouTube இல் அதனைக் காணலாம்.

கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 22 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

மனிதனின் பொதுமைப்பாடான செம்மையற்ற நிலைகள் அவனின் தனித்துவத்தை அடையாளப்படுத்துவதாய் இருப்பது உண்மையே. இங்கு செம்மையற்ற நிலைகளை (Imperfections) ரசிக்கின்ற அளவில் பலரும் பக்குவமடைந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.

ஆனாலும், பின்வரும் இரண்டு காணொளிகளும் நாம் அறிந்த நிலையிலும் கூட, எமது கண்களையும் காதுகளையும் ஏமாற்றும் வல்லமையைக் கொண்டிருக்கிறது. இதுதான், மனிதனின் அழகிய செம்மையற்ற நிலைகள்.

கண்களை ஏமாற்றும் காணொளி

காதுகளை ஏமாற்றும் காணொளி

“கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதுவும் பொய்; தீர விசாரிப்பதே மெய்” என்று சும்மா யாரும் சொல்லி வந்திருக்கமாட்டார்கள்.

– உதய தாரகை

தொடர்புடைய பதிவு: மெய்யென நம்பியுள்ள பொய்கள்