நிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்

Instagram Post - 1

நிறம் வலைப்பதிவின் மூலம் உங்களைச் சந்தித்து, இந்த மாதத்தின் முதல் தினத்தோடு பதினொரு ஆண்டுகள் நிறைவாகிறது. காலச்சக்கரத்தின் வேகத்தோடு என் எண்ணங்களுக்கு வண்ணமயமான வடிவம் கொடுப்பதில் இந்த வலைப்பதிவு மிகவும் பிரதானமாகவிருந்திருக்கிறது.

வாழ்க்கை என்கின்ற அனுபவத்தை, ரசிக்கின்ற பாங்கைச் சொல்லுகின்ற ஏற்பாடாய் நிறம் வலம் வந்ததை நீங்கள் அறிவீர்கள். வாசகர்களாக நீங்கள் நிறத்தோடு காட்டுகின்ற ஆர்வம் என்னை எப்போதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

நீங்கள் அனுப்புகின்ற பின்னூட்டங்கள், மின்னஞ்சல்கள் என எல்லாவற்றையும் நான் விரும்பிப் படிப்பேன்.

எப்போதும் நான் எதை வாசிக்க விரும்புகின்றேனோ அதையே நான் எழுதுகிறேன். எனது எழுத்தில் நான் காட்டும் ஈடுபாட்டின் நீட்சிதான், வாசகர்கள் அதன் பால் கொண்டுள்ள ஈடுபாட்டிற்கும் ஆர்வத்திற்கும் ஆயுள் கொடுப்பதாக நான் நம்புகின்றேன்.

பதினொரு ஆண்டுகள் எழுத்தின் மூலமாக பயணிக்கின்ற நிலைகளில் நான் பல விடயங்களை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன்.

நான் இப்போது எதுவாக இருக்கின்றேனோ, அதனை நான் வாழ்ந்த சூழல், பழகிய மனிதர்கள், தேர்ந்தெடுத்த புத்தகங்கள் என பலதும் செதுக்கின என்றே உணர்கின்றேன்.

பரந்து விரிந்த உலகின் வியத்தகு விந்தைகளைக் கண்டு, பிரமிக்க வேண்டுமென்ற அவா என்னுள் எப்போதுமே இருப்பதுண்டு. பல நாடுகளுக்குப் பயணித்தாலும், நான் இன்னும் காணாத உலகம் விசாலமானது. அதனைக் காண வேண்டுமென்ற தேட்டம் தொடர்ச்சியாகவே இருக்கின்றது.

நான் வாழ்ந்த சூழலில் என் மீதான, என் தந்தையின் ஆதிக்கம் மிகப் பெரியது. உலகம் பற்றிய புரிதல்களை நான் பெற்றுக் கொள்ள அவர் எனக்குச் சொன்ன சம்பவங்கள், அவர் என்னை அழைத்துச் சென்ற இடங்கள், வாங்கித் தந்த புத்தகங்கள் என்பன ஆதாரமாயிருந்தன.

எனது சின்னச் சின்ன வெற்றிகளை ரசிப்பது தொட்டு, அதன் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காய் உதவுகின்ற எனது தந்தையின் அத்துணை இயல்புகளையும் நான் மனதாலே நினைவேந்துகின்றேன்.

இன்னும் நினைவிருக்கிறது, தந்தை வெளியூருக்குச் சென்று வீடு திரும்பும் போது, இனிப்புப் பண்டங்கள் வாங்கி வருகிராறோ இல்லையோ, புத்தகங்கள் வாங்கி வருவார். அதுவே, வீட்டுக்குக் கொண்டு வரும் சொத்து. இன்றும் அவரின் நினைவாக அவற்றை சேமித்து வைத்திருக்கின்றேன். தந்தை பற்றிய எனது சில நினைவுகளை இந்தப் பதிவில் நிறத்தில் ஏற்கனவே பகிர்ந்திருக்கின்றேன்.

என் தந்தையின் இயல்புகளைக் கொண்டு உருவாகின்ற அன்புத் தந்தையாக நானும் எனது மகனுக்கு இருக்க வேண்டுமென்பதில் அதிக கவனம் எடுக்கின்றேன். வாழ்க்கை அழகானது.

எழுத்து, வாழ்க்கையின் நிலை என எல்லாமுமே தொடர்ச்சியாக மாற்றங்களுக்குள்ளாகும் போதே, வசீகரத்தை கொண்டு தரும். அழகிய அனுபவங்களைச் சேர்க்கும்.

என் எழுத்திற்கு பதினொரு ஆண்டு காலமாக முகவரி கொடுத்த நிறத்திற்கும், நிறத்தோடு பயணித்த அன்புள்ளம் கொண்ட வாசகர்களாகிய உங்களுக்கும் எனது கோடி நன்றிகள்.

தொடர்ந்தும் எண்ணங்களை நிறத்தின் மூலம் பகிர்வேன். அன்புக்கு நன்றி.

தாரிக் அஸீஸ்

நிறத்திற்கு வயது பத்து!

நான் எனதிந்த “நிறம்” வலைப்பதிவில் முதற் பதிவிட்டு, இன்றோடு பத்து வருடங்கள் பூர்த்தியாகின்றன.

வலைப்பதிவுகள் பற்றிய அறிமுகம் தொடங்கிய காலமது. எனது எண்ணங்களுக்கு முகவரி கொடுக்க வேண்டும். முகவரியை உலகறியச் செய்ய வேண்டும் என்ற ஏற்பாடுகளுக்கு வெகுவாகப் பொருந்திய ஊடகமாக வலைப்பதிவு தெரிந்தது.

எழுத்துக்களை எழிலாகச் சேர்த்து செய்கின்ற வசனங்கள், எனது எண்ணத்தின் முகவரியாகியது. எண்ணங்களையும் அனுபவங்களையும் சுமந்து வருகின்ற வசனங்கள், எனது வாசிப்புப் பசிக்கு விருந்தாகியது.

அதனை நான் தெரிவு செய்தேன்.

தொடர்ச்சியாக பத்து வருடங்கள் நிறத்தின் மூலமாக உங்களைச் சந்தித்தேன். பல்வேறு தேசங்களிலிருந்தும் குறிப்பாக மின்னஞ்சல் வாயிலாக நிறம் பற்றி நீங்கள் சொல்லியனுப்பும் செய்திகள், மட்டிலா மகிழ்ச்சியை தரும்.

இன்னும் பல நேரங்களில் “நீங்களா அந்த நிறம்?” என நேரில் கண்டு அறிமுகமாபவர்கள், நிறம் பற்றிச் சொல்லும் அழகிய நிலைகள் ஆனந்தம் தரும்.

நிறத்தின் தொடக்கம் தொட்டு, பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் நான் உங்களோடு பேசியிருக்கிறேன். எண்ணங்களை எழுத்துக்களால் செதுக்கும் போது ஈற்றில் எழும் உணர்வு பற்றி சொல்லிவிட முடியாது. அனுபவிக்க வேண்டும். இந்த வசனத்தை நான் எழுதியதும் கூட அந்த அழகிய அனுபவம் அரும்பிய நிலையில் தான்.

கோடுகள், வளைவுகள் கோர்த்துச் செய்யப்படும் எழுத்துக்களின் கோலங்கள் பற்றிய எனது வேட்கை, மனத்திற்கு இதமாகியது. எழுத்துக்களை எழிலாகச் சேர்த்து செய்கின்ற வசனங்கள், எனது எண்ணத்தின் முகவரியாகியது. எண்ணங்களையும் அனுபவங்களையும் சுமந்து வருகின்ற வசனங்கள், எனது வாசிப்புப் பசிக்கு விருந்தாகியது.

எல்லாமே எழுத்தினால்தான் ஆளுகை செய்யப்படுகின்றது என்பதை சற்று ஆழமாக எமது சூழலை அவதானித்தால் அறிந்து கொள்ள முடியும். எழுதுவதை ஒரு தியானமாகவே நான் பார்க்கின்றேன்.

நிறம் எழுத்தினால், அழகிய எண்ணங்களுக்கு வண்ணம் சேர்க்கும். அது எல்லாமும் ஒன்றாகி வாழ்க்கைக்கு வசந்தம் சேர்க்கும்.

நான் இங்கு வாசிக்க விரும்புவதை எழுதுகின்றேன். நான் விரும்பி வாசிக்கின்றவை பற்றியும் எழுதுகின்றேன். இப்படியும் எழுதலாம் என்றும் நான் பரீட்சித்துப் பார்க்கின்றேன். நிறம் என்பது அது தோன்றுகின்ற நிலையில் வெவ்வேறு பெயர்களை எடுத்துக் கொள்கிறது. இந்த நிறமும் அப்படித்தான்; வாழ்வின் அழகிய நிலைகளின் அற்புதங்கள் பற்றிய விடயங்களை ஒவ்வொரு நிறமாக இது சொல்லிக் கொண்டேயிருக்கும்.

எழுத்துக்கள் எப்போதும் இலகுவானதல்ல; வாழ்க்கை போல. கடினமாக உணர்ந்து வியர்வை சிந்தி வாழ்க்கையை வசப்படுத்தும் போது வருகின்ற அந்த அழகிய ஆறுதலையும் ஆனந்தத்தையும், எழுத்துக்கள் வசனங்களாகக் கோர்க்கப்பட்டு வாசனை தரும் போது உணர முடிகிறது.

இங்கு எல்லாமுமே சாத்தியம் தான். கொஞ்சம் முயற்சிக்க வேண்டியிருக்கிறது. முயற்சியை நமக்கு யாராலும் தர முடியாது போலவே, நாமும் அதனை எங்கும் வாங்கவும் முடியாது.

எமக்காக யாரும் முயற்சிக்க வேண்டுமாயினும் கூட அதற்கும் நாம் தான் முயற்சிக்க வேண்டும்.

பயணங்கள் முடிவதில்லை. பயணம் தொடரும். நிறத்தோடு தொடர்ந்து பயணிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நன்றி.

தாரிக் அஸீஸ் / உதய தாரகை

ஒன்பதாவது ஆண்டில் நிறம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

ஒரு பாதை – பனி மூட்டம் நிறைந்திருந்தது, கண்ணுக்கு எட்டிய தூரத்தில், தெரிவதெல்லாம் பனிமூட்டம். வேறெதுவும் தெரியவில்லை. ஒரு கார் பயணிக்கிறது, அதன் பிரதான முன் விளக்குகள் எரிகின்றன. அவற்றின் வெளிச்சம் படுகின்ற தூரமெல்லாம் பாதை தெரிகிறது. காரும் பனிமூட்டங்கள் துளைத்து பயணிக்கிறது வெளிச்சத்தின் தயவால்.

இப்படியான ஒரு அனுபவம் தான் எழுதுவதும். எழுதுவதன் அழகு கூட, அதனை தொடங்குகின்ற நேரத்தில் தான் வெளிச்சம் போட்டுக் கொள்கிறது. எழுத எழுத பாதை தெரியத் தொடங்கும். ஈற்றில், முழுமையும் வந்து சேரும்.

கடந்த 18 (18.09.2014) ஆம் திகதியோடு, நிறம் தனது எழுத்துப் பயணத்தின் எட்டாவது ஆண்டைப் பூர்த்தி செய்து, ஒன்பதாவது ஆண்டிற்குள் நுழைந்து கொண்டது.

niram-nine-01

வாழ்வின் சிதறிக் கிடக்கின்ற சின்னச் சின்ன குதூகலங்களைக் கோர்த்துச் செய்யப்பட்டது நிறம். துன்பங்களை ரசித்து ஆள வேண்டுமென்ற மனதை செதுக்க தேட்டம் கொண்டது தான் நிறம்.

இங்கு எல்லாமுமே அழகாய் இருக்கிறது. ஆனால், அவை எல்லோருக்கும் அப்படியாக இருப்பதில்லை. அவை அப்படி இருக்கவும் முடியாது.

சுவையான வாழ்வின் அழகிய தருணங்கள், எல்லோருக்கும் உள்ளன. அந்தத் தருணங்களை ஒவ்வொருவரும் நினைவில் குடிகொள்ளச் செய்கின்ற போது, வாழ்வு இனிக்கத் தொடங்கிவிடும். சாதிப்பது சாத்தியமாகிவிடும். இதை நிறம் தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டிருக்கிறது.

எதையும் தொடர்ச்சியாகச் செய்கின்ற நிலையில், அதுவாகவே நாம் ஆகிவிடுகிறோம். அப்போது அதில் தேர்ச்சியும் பெற்றிருப்போம். அது அப்போது, வெறும் செய்கை என்று சொல்லப்படாது, பழக்கமான வழக்கமாக என்றும் எம்மோடு ஒட்டிக்கொள்ளும்.

குதூகலம் தருகின்ற பழக்க நிலைகளை எமக்கு சொந்தமாக்கிக் கொள்கின்ற நிலையில், எம் நினைவுகளில் மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும்.

ஆக, இங்கு எல்லோரும் தம்மில் தாமே முதலீடு செய்ய வேண்டியது முக்கியமாகவிருக்கிறது. ஆன்மா, உடல், மனம் என முதலீட்டுத் தளங்கள் ஏராளம் உள்ளன.

படைப்புகள் சொல்கின்ற ஒரு விடயம், வாழ்க்கை எழுதப்பட்டிருக்கிறது என்பதும் இன்னும் சொல்லப்படாமல் ஆயிரம் கதைகள் அடைகாக்கப்படுகின்றன என்பதும் தான்.

வெறுங்காலோடு, ஒரு இரவுப் பொழுதில், மரத்தின் இலைகள் உதிர்ந்து பாதையெல்லாம் மூடிக் கிடக்கின்ற போது, அதன் மேல் நடக்கின்ற சுகம் பற்றி சொல்லிவிட முடியாது. வாழ்க்கையின் அரும்பு துளிர்த்தெழுதல் அங்கு நடக்கும். அது நடந்தது. இந்தச் சின்னச் சின்ன குதூகலங்களின் சேர்க்கைதான் வாழ்க்கை.

பாதங்கள், இலைகளின் நரம்புகளை வருட, துன்பங்கள் பற்றிய நினைவுகள் கூட தொலைந்து போகும். காற்றின் பூரிப்பின் ஸ்பரிசத்தில், இன்பத்தின் எல்லை தெரியத் தொடங்கும். மரத்திற்கும் மனிதனுக்கும் நிறையத் தொடர்புகள் உள்ளன. அதுபோலத்தான், எழுத்திற்கும் மரத்திற்கும் ஆயிரம் தொடர்புகள் காணப்படுகின்றன.

இந்தப் பூமியின் அழகிய நிலைகள் பற்றிய நினைவூட்டலையும் வாழ்வின் வசந்தம் பற்றிய புரிதலையும் நிறத்தின் பதிவுகள் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டேயிருக்கும். நீங்கள் தேனீர் அருந்துகின்ற போதும் கூட, அதனை உலகின் அற்புதங்களின் ஒன்றென எண்ணிக் கொண்டு சுவைத்தலே, மனவெளியின் உச்ச நிலை குதூகலமென்று நான் நம்புகின்றேன்.

ஒன்பதாவது ஆண்டில் நுழையும் நிறத்தோடு பயணிக்கின்ற அன்பான உங்களுக்கு நன்றி சொல்கின்றேன். இன்னும் சேர்ந்து நிறையப் பயணிப்போம்.

வாழ்க்கையை வாசிக்கின்ற வாய்ப்பை இந்த நிறம் உங்களுக்கு கொண்டுதரும் என்ற நம்பிக்கையை விதைத்தவனாக, இந்த எட்டாண்டு நிறைவின் குதூகலத்தையும் ஒன்பதாவது ஆண்டின் தொடக்கத்தின் திடசங்கல்ப்பத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றேன்.

நன்றிகள் கோடி.

  • உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

எட்டும் வானமும் எட்டாவது வருடமும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 47 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

எழுதுவதற்கு உசிதமான நேரம் வரவேண்டுமென காத்திருத்தல் என்பதன் வருவிளைவு, எதுவுமே எழுதாமல் வெற்றுத்தாளோடு இருக்கின்ற நிலையைத் தான் தோற்றுவிக்கும்.

எழுத வேண்டுமென்ற உத்வேகம் வருகின்ற போதுதான் எழுதலாம் என்று இருந்தால், நீ இருப்பாய் — எழுத வேண்டிய சொற்கள் அந்த நேரத்திற்காகக் காத்திருக்காது.

எழுதுவதற்கு இதுதான் தருணம். எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் எழுத வேண்டும். எழுதுவதெல்லாம் அகிலம் முழுக்க காண்பிக்க வேண்டுமென்பதில்லை, ஆனால் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.

சொற்கள், உன் பக்கம் நேசத்தோடு வந்து இருப்பிடம் கேட்க, நேரம் வரட்டும் என்று அதற்கு பதில் சொல்வது எந்த வகையில் பொருந்தும்?

எழுதுவது என்பது மந்திரம் போன்ற வித்தை. நீ, உன் வீட்டின் ஜன்னல் வழியாக காலை நேரத்தில் காணும் காட்சி, பேருந்தின் ஜன்னலோரம் போசிக்கின்ற உத்வேகம், மழை பெய்கின்ற நாளில் மழையில் நடக்கையில் தோன்றும் எண்ணம், வீட்டிற்குள் வந்து இருக்கையில் தோன்றும் நினைவு, காணும் மனிதர்கள் தரும் வாழ்வின் அடையாளம் என எழுத்தின் தோற்றுவாய்கள் ஆயிரம் உள.

காட்சிப்புலத்தின் தோன்றல்கள், மனதில் தருகின்ற தென்றலையும் புயலையும் எண்ணத்தின் நிழலாக்கி, ஒவ்வொரு சொல்லாக செதுக்கித் செய்வதுதான் எழுதும் நிலை. ஒரு சொல்லோடு சிநேகம் கொண்டு, இன்னொரு சொல் அதன் அருகே அமர்ந்து கொள்கின்ற நிலையில் உயிர் கொள்ளும் எழுத்தின் நிலை – ஆத்மா.

ஒரு வாக்கியம் பூரணம் காண்கையில் சொற்கள் அடைகின்ற மகிழ்ச்சியும், நீ அடையும் களிப்பும் இரண்டல்ல. அவை ஒன்று.

நீ, ஒரு சொல்லாய் தொடங்கியதை பல சொற்கள் கோர்த்து நிறைவு செய்கிறாய். அர்த்தம் பெற்ற சொற்கள் மகிழ்கின்றன. நீ தொடங்கியதை நிறைவு செய்ய வேண்டும். நீ, தொடங்கியதை நிறைவு செய்கின்ற போதுதான், மகிழ்ச்சியை மனதோடு பூசிக் கொள்வாய்; புதிதாய் பலதும் கற்றும் கொள்வாய்.

நீ எழுதுகின்ற எழுத்தினால் எங்கு விரும்புகிறாயோ அங்கெல்லாம் செல்லலாம். விண்ணுக்கு ஏகியதாய் ஒருவன், எழுத்தின் மூலம் சொன்னதன் விளைவுதான், மனிதன் விண்ணுக்குச் செல்கின்ற முயற்சிக்கு வித்திட்டது. உன் எழுத்தின் மூலம் எட்டாதது எதுவுமில்லை. எல்லாமே எட்டும். வானமும் வசப்படும் — வானத்தையும் நீ எட்டிப்பிடித்து விளையாடலாம்.

உன் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் அத்துணை எண்ணங்களையும் பாரபட்சமின்ற கேட்டுக் கொள்கின்ற ஆவலோடு எப்போதும் இருக்கும் யாரையும் உன்னால் ஒருபோதும் எங்கேயும் தேடிப்பிடிக்க முடியாது. முடியவே முடியாது. ஆனால், எழுத்து மட்டும், உன் எண்ணங்களை எல்லாவற்றையும் கேட்பதற்காக, உன்னோடு எப்போதும் இருக்கும்.

உன்னையும் வாசித்துக் கொண்டு, உன் எண்ணங்களையும் நேசித்துக் கொண்டு இருக்கும் ஆத்மா தான் எழுத்து.

இன்று — இப்போது நீ எதை எழுதப் போகிறாய்? — நீ சொல்! வேண்டாம். சொல்லாதே, எழுதிவிடு.

8th-year

இன்றோடு, நிறம் தனது எட்டாவது ஆண்டில் தடம் பதிக்கிறது. இந்த நிறத்தில் இருக்கும் ஒவ்வொரு பதிவும், என் எண்ணங்களுக்குள் நிழலாடும் காட்சிகளையும் கருக்களையும் ஒவ்வொரு சொல்லாகக் கோர்த்துச் செய்தது.

நான் வாசிக்க விரும்புகின்ற பதிவுகளைத்தான், நான் நிறத்தில் எழுதுவேன். உங்களுக்கும் அந்தப் பதிவுகள் பிடித்தது பற்றி பேருவகை எனக்குண்டு.

உங்கள் எண்ணங்களுக்கு, இந்தப் பதிவுகள் வசந்தம் கொண்டு தருவதாய் நான் எண்ணிக் கொள்கிறேன். எண்ணத்தில் வசந்தம் வந்தால், உங்கள் வாழ்வில் அழகிய மாற்றம் காணத் தொடங்கியிருக்கும்.

நிறத்தோடு பயணிக்கும் உங்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்தும் எண்ணங்களுக்கு நிறத்தின் மூலமாய் நான் வசந்தம் சேர்ப்பேன். அப்போதும் நீங்கள் அந்த நிறங்களை பூசிக் கொள்ள ஆர்வத்தோடு இணைவீர்கள் என நம்புகிறேன்.

நிறங்கள் பூசப்படும்…

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பிறக்காத நாள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 37 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

பிறந்த நாளில் முக்கியமான விடயம் ஒன்றைச் செய்ய வேண்டும், புது விடயம் ஒன்றைத் தொடங்க வேண்டும், அந்த நாள் மட்டுந்தான் விஷேடமான நாள் என்றெல்லாம் இங்கு எழுதப்படாத விதிகள் பலவுள்ளன.

ஆனால், இந்த நிலையை நீ மெல்ல நின்று நிதானித்து அவதானித்தால், நீ விரும்பித் தொடங்க நினைக்கின்ற காரியத்தை ஆரம்பம் செய்து கொள்ள ஒரு ஆண்டில், ஒரு நாள் மட்டுந்தானா இருக்கிறது? என்ற கேள்வி தோன்றலாம்.

52 வாரங்களாய் விரிந்துகிடக்கும் வருடமொன்றில் ஒரு நாள் மட்டுந்தான் விஷேடம் என்றால் நீ, நாட்களைக் கூடவல்லவா வறுமையாக்கி இருக்கிறாய்!

நாட்களில் சிலதை மட்டும் புனிதமான நாள் என்றும் நீ பிரித்து வைத்திருக்கின்ற நிலையைக் காணும் போது, புனிதமான நாள் எனச் சுட்டப்படாதவை யாவும் புனிதமில்லா நாளாகிவிடுமா? என்ற கேள்வி எழுவதும் நியாயம் தான்.

விடிகின்ற காலையில் கதிரவன் வருவதும், மாலையில் அவன் மறைவதும் எல்லா நாட்களிலும் தான் நடைபெறுகிறது.

எலஸ் அட்வண்ஸர்ஸ் இன் வொன்டலேன்ட் (Alice’s Adventures in Wonderland) என்கின்ற புனைவை 1865ஆம் ஆண்டில் லுவிஸ் கரோல் என்கின்ற அற்புதமான எழுத்தாளர் எழுதி வெளியிட்டார். பின்னாளில் இந்தப் புனைவு, திரைக்காவியமும் ஆகியது.

இந்தப் புனைவில் வருகின்ற ஒரு எண்ணக்கரு என்னை ரொம்பவும் கவர்ந்தது. லுவிஸ் கரோல், தனது புனைவின் மூலமாக அதனை அற்புதமாக வெளிப்படுத்துவார். அந்த எண்ணக்கருதான் பிறக்காத நாள் (un-birthday).

unbirthday-1

ஒருவன் பிறக்காத நாட்களைக் கொண்டாடுவானானால், ஒரு வருடத்தில் 364 நாட்கள் அவனால் கொண்டாட்டங்களில் திளைத்திருக்க முடியும். இது நெட்டாண்டாய் தொடரும் வருடத்தில் 365 நாட்களாகவும் மாறும்.

கொண்டாட்டங்கள் என்றவுடன், வேடிக்கை வினோத நிகழ்வுகள் என நீ நம்பிக் கொள்ளக்கூடாது.

குதூகலம் தருகின்ற விடயங்களைச் செய்கின்ற நிலையில் தான் ஒருவன் தன் வாழ்வின் வெற்றிக்கான பாதையை உருவாக்கிக் கொள்கிறான். பிறக்காத நாட்களில் புதியன படைத்தால், ஒவ்வொரு நாளும் வெவ்வேறான விடயங்கள் படைப்பதற்கான வாய்ப்புத் தோன்றும்.

அந்நிலையில், வெற்றிக்களிப்பு அந்நாட்களில், மனசோடு ஒட்டிக் கொள்ளும். அகமுழுதும் மகிழ்ச்சிப் பிரவாகம் செறியும். நாளும் விஷேடமாகும்.

இந்தக் கணத்தை விஷேடமான பொழுதாக மாற்றுவது, உன் எண்ணத்தில் தான் தங்கியிருக்கிறது. இந்த நாள் நல்ல நாள். எந்த நாளும் நல்ல நாள் தான்.

இனி, பிறக்காத நாட்களைக் கொண்டாடி, அவற்றை நீ விஷேடமாக்கு, அப்போது, நீ பிறந்த நாளில், பிறக்காத நாட்களில் நீ செய்த முயற்சிகளின் வெற்றிக்கனிகளை உன்னால் சுவைக்கலாம்.

நீ பிறக்காத, இன்றைய நாளும் புனித நாள் தான். நாளையும் ஒரு புனித நாள் வரும்.

“பிறக்காத நாட்களைப் கொண்டாடிப் பார்” என கோபாலு உன்னிடம் சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் இருபத்தேழாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

எழுத்தும் ஏழாம் வருடமும்

இந்தப் பதிவை ஒலி வடிவில் கேட்க:

iTunes இல் நிறம் Podcast Niram Podcast
(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 50 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

மண்ணிற்கு வியர்வை உண்டாகின்ற காலம் தொடங்கியிருக்கிறது. காலை நேரத்து யன்னல் கண்ணாடிகளுக்கு முகவரி கிடைக்கும் காலம் வந்திருக்கிறது.

நிறம் இன்றோடு தனது ஏழாவது ஆண்டில் தடம் பதிக்கிறது.

பருவங்கள் மாறி மாறி வருகின்ற அழகு எப்போதுமே எனக்குள் புளகாங்கிதத்தையும் புதிர்களையும் கொண்டு தரும். பருவங்களுக்கு புதிர்கள் தருவதுதான் வழக்கம் — யாரோ சொன்ன ஞாபகம் இருக்கிறது.

காலைநேர சூரியனின் குளிர்மையும் மாலை நேர நிலவின் சூட்டையும் கடதாசியில் தக்கவைத்துக் கொள்வதுதான் எழுத்தின் அற்புதம். எழுத்தின் அழகும் அதன் பிறப்பின் போதுதான் முகவரி பெறுகிறது.

எழுதுவது வலிக்கும். வலிதான் அதன் அழகு. முட்களுக்கு முத்தம் கொடுத்து ரத்தம் சிந்துகின்ற சுவை அது.

வலிக்கின்ற கணத்திலேயே விழித்துக் கொள்கின்றதாய் விடயம் சொல்லும் விந்தையும் எழுத்துத்தான். விண்மீன்களின் கண்சிமிட்டல்களின் ஒலியை எழுத்தினால்தான் கேட்க முடிகிறது.

அதனால் சூரியத்தரையில் நிலவும் மௌனத்திற்கும் மொழி தர முடிகிறது.

சால, உரு, தவ, நனி என எதுவும் வேண்டாம். எதுவோ அதுவாகவே வந்து கொண்டு இருக்கும் அழகியல் தரும் ஒரே ஒப்பனைதான் — எழுத்து.

இதமான சுட்டெரிக்கும் வெயிலையும் கொழுந்து விட்டெரியும் குளிர்ச்சியையும் உணரச் செய்ய எழுத்துக்கு முடியும். உங்களால் முடியுமா? தலைமுறையாகக் கடத்தப்படும் “மாற்றி யோசிக்கும்” எண்ணக்கருவின் தொடக்கம் எழுத்தில்தான் தோற்றம் பெற்றிருக்க வேண்டும்.

தடுக்கிவிழும் கணினித் தட்டச்சின் பிறப்பாயும் நள்ளிரவின் மௌனத்தைக் கலைக்கும் மரங்கொத்தி ஒலியாயும் தோன்றுவதுதான் இந்த எழுத்து.

இப்படியென விரியும் எழுத்தோடு நிறமும் உங்களோடு இணைந்து கொண்டது. நிறம் பூசிக் கொண்ட எழுத்துக்களின், பிரியர்களுக்கு நன்றிகள் கோடி.

நிறத்தின் எழுத்துக்களுக்கு நிறங்கள் இருப்பது போல், நிஜங்களும் இருக்கின்றன. ஆன்மாவின் சுவாசத்தின் வெப்பமும் அதனோடு சேர்ந்திருக்கிறது.

எல்லாச் சொற்களும் இருக்கின்றன. ஆனால், எழுத முடியாதுள்ளது என்கின்ற அந்த அழகிய ஆனந்தம் நிறத்தின் வெளிச்சங்கள். நிறங்கள் எங்கும் தான் உண்டு.

நிறம் தெரியாத கண்களுக்கும் நிறம் பற்றிய புரிதல் இருப்பது உயிரின் வியப்பு. நிறம் நேசிக்கப்படுகிறது — இயல்பிலேயே.

இந்த எழுத்தினால் மட்டுந்தான் ஓராயிரம் நினைவுகளைச் சேமிக்க முடிகிறது. நீயும் கூடத்தான் எழுத்துக்குள் ஒரு எழுத்தாகி எழுதப்பட்டிருக்கிறாய்.

விருப்பமில்லாத போதும், வெறுக்காமல் இருக்க உன்னால் முடிகிறதா? தனிமை என்பது கொடுமைதான் என்கின்ற கவலை இருக்கிறதா?

சொற்கள் உன்னோடு எப்போதும் வாழ்கின்ற போது, தனிமைக்கு எப்படி உன்னால் முகவரி தர முடிகிறது? எழுத்துக்கு அல்லவா நீ முகவரி தந்திருக்க வேண்டும்?

தொடரும் நிறத்தின் பயணத்தோடு நீங்கள் உங்களை இணைத்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

வார்த்தைகளின் வலிமையால் சிகரம் தொடலாம். ஏழாம் வருடத்தின் தொடக்கத்தின் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்கிறேன். அத்தோடு, டின்டின்க்கு, கேப்டன் கெட்டோக் சொன்னதை உங்களுக்குச் சொல்கிறேன்.

“உன்னை தோல்வி என்று அழைக்கும் தேட்டத்தோடு இங்கு பலர் இருப்பார்கள், அவர்கள் உன்னை தோற்றவன் எனச் சொல்லலாம். முட்டாள் என்று முந்திக் கொண்டு சொல்லலாம். நம்பிக்கையற்ற ஆன்மா என்று கூட சொல்ல முனையலாம். அதை நீ ஒருபோதும் உன்னை நோக்கி சொல்லிவிடாதே. அப்படிச் சொல்வாயாயின் நீ பிழையான சமிஞ்சையை மற்றவருக்கு வழங்குகிறாய். அதைத்தான் அவர்கள் பற்றிக் கொண்டு உன்னை அப்படி அழைக்க ஆர்வம் கொள்கின்றனர். புரிகிறதா உனக்கு?

எதைப் பற்றியாவது நீ தேவை கொண்டிருந்தால், அதற்காக உழை. சுவரில் போய் மோதுண்டால், அதைத் தள்ளிக் கொண்டு நகர முற்படு. டின்டின், தோல்வியைப் பற்றி நீ ஒரு விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும்: உன்னைத் தோற்கடித்துவிட தோல்விக்கு நீ இடம் தரக்கூடாது.”

“வானத்திலுள்ள ஒவ்வொரு தாரகைகளும் நீ வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதைச் சொல்வதற்கான காரணமாகும். ஆக, மில்லியன் என மிஞ்சி நிற்கும் ஆகாயத் தாரகைகள் போலவே, நீ வாழ்க்கையை ரசித்து வாழ மில்லியன் காரணங்கள் உள்ளன. இதுதான் உண்மை,” என கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். நான் இங்கே –>>

ஒலிவடிவத்தின் பின்னணியில் ஒலிக்கும் அற்புதமான இசையின் தோற்றுவாய்: The Pond by Chuck Berglund

ஆறாவது ஆண்டில் உங்கள் நிறம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 52 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

நேற்றைய தினம் நிறம், தனது ஆறாவது ஆண்டில் காலடியெடுத்து வைத்தது. வாழ்க்கை, வழக்கங்கள், ஆதிக்கம், ஆர்வம் என விரியும் பரந்துபட்ட விடயங்களும், வாழ்வின் அவதானிக்க மறந்துபோன அழகிய அனுபவங்கள் பற்றிய அழகிய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் உருவான நிறம், கடந்த பல ஆண்டுகளில் பலரையும் கவர்ந்திருப்பதையிட்டு புளகாங்கிதம் கொள்கிறேன்.

பதிவுகளைப் பார்வையிட்ட புள்ளவிபரங்களின் அடிப்படையில், கடந்த ஆண்டில் நிறத்தில் இடம்பெற்ற பதிவுகளில், உங்களைக் கவர்ந்த முதல் ஐந்து பதிவுகளாக பின்வருவன அமைகின்றன.

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் புதன் பந்தல் என்றொரு விசேடமான பகுதியொன்றையும், பிரதி புதன்கிழமையும் வழங்கி வருகிறேன். இந்தப் பகுதி பலரையும் கவர்ந்துள்ளதையிட்டும் பேருவகை கொள்கின்றேன்.

கடந்த ஐந்து வருடத்தில் நிறத்தின் பதிவுகள் பற்றிய உங்களின் பின்னூட்டங்கள், மின்னஞ்சல்கள் என்பன எனது பொழுதுகளின் மகிழ்ச்சிக்கும் பதிவுகளின் மெருகேற்றத்திற்கும் காரணங்களாக இருந்திருக்கிறன. இந்த அழகிய எண்ணங்களின் பயணத்தில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் நன்றிகள் பல.

பின்னூட்டம் சொல்லியனுப்பாவிட்டாலும், பதிவுகளை செய்தியோடைகள் (RSS) மூலம், நேரடியாக தளத்திற்கு வருகை தந்து பார்வையிடும் மற்றும் பதிவுகளை தங்களின் நண்பர்களிடையே சமூக வலைத்தளங்களின் மூலமாக பகிர்ந்து அன்பு வளர்க்கும் நண்பர்களுக்கும் நன்றிகளைச் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்தும் நீங்கள் நிறத்தோடு இணைவீர்கள் என்ற நம்பிக்கையோடு, நிறம் தொடரும்.

அல்பர்ட் ஐன்ஸ்டைனின் இந்த அர்த்தமுள்ள மேற்கோளை எனக்கு ரொம்பப் பிடிக்கும். வெறும் இரண்டே வரிகளில் தனிமனித ஆற்றலின் விஞ்ஞானத்தை சொல்வது ஐன்ஸ்டைனின் அழகு.

நிறத்தின் பயணத்தில் இணைந்துள்ள உங்களுக்கு, மீண்டும் நன்றிகளைச் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி.

– உதய தாரகை

ஐந்தாவது வருடமும் ஓர் அனுபவக் குறிப்பும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 31 செக்கன்களும் தேவைப்படும்.)

நாம் வாழுகின்ற இந்தக் காலம் அதிகம் அழகுடையது என்றே எண்ணத் தோன்றுகிறது. ஒவ்வொரு காலத்திற்கும் அதற்கேயுரிய தனித்துவமான பண்புகள் விரிந்து கிடப்பது போல், இந்தக் காலத்திற்கும் அடையாளங்கள் உண்டு. அந்த அடையாளங்களை தொழில்நுட்பம் மட்டுந்தான் ஏற்படுத்தித் தந்துள்ளதென்றால், அது பிழையென்று சொல்வேன்.

மாற்றங்களை நேசிப்பதற்கும், அந்த மாற்றங்களின் பால் உண்டாகும் விடயங்களை தன் சார்பான நிலையில் வைத்து கணித்து வாழ்தலின் அழகை ரசிப்பதற்கும் பழகியுள்ள மனிதர்களால் தான் இந்த நூற்றாண்டு பற்றிய தனித்துவங்களுக்கு அடையாளம் கிடைக்கிறது. சின்னச் சின்ன விடயங்களை ஒருவன் ரசிக்கும் விதம், அதனை வாழ்க்கையின் இதர விடயங்களோடு, ஒப்பிட்டு அறிந்து கொள்ளும் இயல்பு எல்லாமே ஒவ்வொரு தனிநபர் சார்பிலும் வேறுபடும்.

தொடர்ந்து படிக்க…