குட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 13 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

இந்த வாரத்தின் புதன் பந்தல், சௌகரிய வலயம் பற்றிய விடயத்தை குட்டி யானையொன்றின் இயல்போடு அலசுகிறது.

குட்டி யானையை, அதன் பாகன் மிகச் சிறியதொரு அளவான இடத்திலேயே பயிற்றுவிக்கத் தொடங்குகிறான். பூமிக்குள் ஆழமாக பதிக்கப்பட்ட மரத்தாலான மெல்லிய கம்பமொன்றில் யானையின் கால், கயிற்றினால் இணைத்துக் கட்டப்பட்டிருக்கும். கயிற்றின் நீளமோ, குறித்த யானையை வளர்க்க ஒதுக்கப்பட்டுள்ள இடத்தை பொருந்தும் வகையிலேயே காணப்படும். அவ்வளவு தூரம் மட்டுந்தான் யானையால் நகர முடியும் — அது தான் யானையின் சௌகரிய வலயம்.

இருந்தபோதிலும், குட்டி யானை கயிற்றை அத்துவிட முயற்சி செய்யும். ஆனாலும், குட்டி யானைக்கு அந்தக் கயிறு மிகவும் வலிமையானது. இதன் காரணமாக தன்னால் அந்தக் கயிற்றை அத்துவிட முடியாது என்ற முடிவுக்கு அது வந்துவிடும். ஆக, குறிப்பிட்ட கயிற்றின் நீளத்தை ஒத்த அந்த சிறிய பிரதேசத்திற்குள் அப்படியோ இருக்கக் கற்றுக் கொள்ளும்.

ஆனாலும், பின்னர் யானை 5 தொன் எடையுள்ள மிகப்பெரிய உருவமாக வளர்ந்த போதிலும், அந்தக் கயிற்றை அத்துவிட முயற்சி கூட செய்வதில்லை. ஏனெனில், சின்ன வயதில் தன்னால் முடியாதென்று கண்டு கொண்ட விடயம் அதனை அவ்வாறு செய்யவிடாமல் தடுத்துவிடுகிறது. இப்படியாக மிகப் பெரிய யானையொன்று, மெல்லிய கயிற்றினால் கட்டிவைத்து ஆளப்படுகிறது.

மனிதனின் இயல்பும் இது போலத்தான் அமைந்தும் விடுகிறது. இளமைக் காலத்தில் மனிதன் உள்வாங்கிக் கொண்ட மட்டுப்படுத்தும் நம்பிக்கைகள், எதிர்மறையான எண்ணங்கள் என்பனவெல்லாம், ஒரு வலயத்தைத் தாண்டி தன்னால் பயணிக்க முடியாதென்ற விம்பத்தை அவனிடம் தோற்றுவித்து விடுகின்றது. இதுவே, அவனின் சௌகரிய வலயமாக ஆகிவிடுகிறது.

சௌகரிய வலயம் என்பது தனிமனிதனால் தனக்கு விதித்துக் கொள்ளப்படும் வரையறைகள் தாம். அதனாலேயே இது நிரந்தரமானதல்ல. இது தற்காலிகமானது. மாற்றிவிடலாம்.

வாழ்க்கையின் மொத்த அழகிய அமைவை பின்வரும் வென்வரிப்படம் (தொடை) அழகாகச் சொல்லும். சற்று கூர்ந்து அவதானியுங்கள்.


மூலம்: Keri Smith – Flickr Link | வரிப்படத்தை மெருகேற்றி தமிழ்ப்படுத்தியுள்ளேன்.

நீங்கள் உங்களை எந்த வலயத்திற்குள் தங்க வைத்துக் கொண்டுள்ளீர்கள்? சௌகரிய வலயங்களில் தம்மைத் தக்க வைத்துக் கொண்டு தன்பக்க நியாயங்களை பட்டியற்படுத்திவிட எல்லோராலும் தான் முடியும். ஆனாலும், “நாம் எதுவாக ஆகவேண்டுமென்கின்ற விடயத்தை, நாம் இருப்பது போலவே இருந்து கொண்டு பெற்றுக் கொள்ள ஒருபோதும் முடியாது,” என்று அமெரிக்க எழுத்தாளர் மெக்ஸ் டி ப்ரீ சொல்லியிருப்பார்.

வரிப்படத்திலுள்ள ‘இ’ வலயம் தான், வாழ்வை வெல்ல வேண்டுமென்ற ஒவ்வொருவரும் இருக்க வேண்டிய வலயம். ‘ஆ’ வலயத்திற்குள் உங்களை இருத்திக் கொண்டிருந்தால், ‘இ’ வலயம் சென்று இமயம் தொட இதுதான் சந்தர்ப்பம்.

“புதிதாக விடயங்களை செய்யத் தொடங்கும் போதுதான், உன்னால் ஆச்சரியங்களையும், அசௌகரியங்களையும், இசைவற்ற நிலைகளையும் கண்டு கொள்ள முடியும். அங்கு தான் நீ மனிதனாக புடம் போடப்படுகின்றாய்!” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

இது போதாது எனக்கு!! [புதன் பந்தல் – 07.09.2011] #2

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 55 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

இந்த வாரத்தின் புதன் பந்தல், கொண்டு வருவது ஒரு கதையாகும்.

ஒரு ஊரில் வாழ்ந்த உழவனொருவனுக்கு அற்புதமான வாய்ப்பொன்றை அந்தவூரில் வாழ்ந்த செல்வந்தன் ஒருவன் வழங்கினான். உழவனால் தனது மிகப்பெரிய காணிக்குள் எவ்வளவு தூரம் நடந்து செல்ல முடிகிறதோ, அத்தனையையும் உழவனுக்கு வழங்கிவிடுவதாக உறுதியளித்தான். ஆனால் ஒரு நிபந்தனை, சூரியன் மறைவதற்கிடையில் ஆரம்பித்த இடத்திற்கே உழவன் வந்துவிட வேண்டுமென்பதாகும் சொல்லப்பட்டது.

காலை நேரம், விறுவிறுவென வேகமாக வயல் முழுக்க நடந்து வயல் முழுவதையும் தனதாக்கிக் கொள்ளும் எண்ணத்துடன் நடந்து சென்றான் உழவன். நேரம் செல்லச் செல்ல அவனுக்கு களைப்பு ஏற்பட்டது. மதிய நேரம் கொஞ்சம் ஓய்வெடுத்து, மீண்டும் இன்னும் அதிகமான வயலின் பகுதியை தனதாக்கிக் கொள்ள வேண்டுமென்ற அவனின் பேராசை, அவனால் முடியாதென்ற நிலையிலும் கூட இன்னும் வயலின் மேலே நோக்கி நடக்கத் தூண்டியது. களைப்பின் உச்சநிலையில் அவன், கொஞ்சம் கூட அவனால் அசைய முடியவில்லை. இருந்தும் அவனின் பயணத்தை பேராசையால் தொடர்கிறான்.

சூரியன் மறைவதற்கு முன்னர், ஆரம்பித்த இடத்திற்கு சென்றால் மட்டுமே, நடந்து தனதாக்கிக் கொண்ட வயலின் பகுதியை உறுதியாகப் பெற்றுக் கொள்ள முடியுமென்ற விடயத்தை எண்ணி, ஆரம்பித்த இடத்தை நோக்கி நடக்க முற்படுகிறான். களைப்பால் உடல் வலிமையிழந்து கிடக்க, ஓரடியேனும் உழவனால் நகர முடியவில்லை. சிரமப்பட்டு குறித்த இடத்தை நோக்கி நடக்கிறான். தன் பேராசையால் தொலைதூரம் நடந்து சென்று, பின்னர் தொடங்கிய இடத்தை நாடிச் செல்லும் வழியிலேயே முடியாமல் மூச்சுத் திணறி இறந்து விடுகிறான் உழவன்.

அனைத்து வயல் நிலத்தையும் தனதாக்கிக் கொள்ள வேண்டுமென்ற பேராசையின் காரணமாக இறந்த உழவனை, அவ்விடத்தில் வெறும் ஆறடி நிலத்தினுள் புதைத்துவிடத்தான் செல்வந்தனால் முடிந்தது.

“வாழ்வை விரும்புவதற்கும், வாழ்வின் மீது பேராசை கொள்வதற்கும் இடையில் மிக மெல்லிய வித்தியாசமே உண்டு. பார்த்து நடந்துக்கப்பு!!” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

அடுத்த வார புதன் பந்தலில் சந்திப்போம்.

– உதய தாரகை

புதன் பந்தல் – 31.08.2011 [#1]

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 20 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

புதன் பந்தல் என்ற தலைப்பில் தொடர் பதிவுகளை, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் வெளியிடலாமென ஆர்வங் கொண்டுள்ளேன். குறித்த வாரத்தில் என் கவனத்தை ஈர்த்த மற்றும் நீங்கள் அறிந்து ஆனந்தம் கொள்ள வேண்டிய விடயங்களை வித்தியாசமான முறையில் தொகுத்துத் தருவதே இந்தப் பதிவுகளின் நோக்கமாகும்.

வித்தியாசமான முறை என குறிப்பிட்டதற்கான காரணமென்னவெனில், நிழற்படங்கள் ஒன்று சேர நேர்த்தியாக அமைக்கப்பட்டு, தகவல்களும் விடயங்களும் பரிமாறிக் கொள்வதாய் திடசங்கல்பம் பூண்டுள்ளேன்.

இந்த வாரத்திலிருந்தே, புதன் பந்தல் ஆரம்பிக்கப்படுகிறது.

இந்த வாரப் புதன் பந்தலில் நாம் மூன்று விடயங்களைப் பற்றி பார்ப்போம்.

1. கடலின் அழகே உருவாய் உயர்ந்தெழும் அலைகளின் அலைவுகளை உபயோகத்திற்கு எடுத்து, நீர்ச் சறுக்கல் விளையாட்டில் ஈடுபடும் ஆர்வலர்களை பார்ப்பதில் ஆனந்தம் குடிகொள்ளும். இயற்கையின் அழகின் வியப்பையும் அப்படியே கண்டு கொள்ள முடியும். அண்மையில் இந்த நீர்ச் சறுக்கல் விளையாட்டில் நீரோடு சேர்த்து தீயையும் கொண்டு, அலைகளுக்கிடையே ஒரு வீரர் பயணம் செய்தது இணையப் பரப்பில் வியப்பாகப் பேசப்பட்டது. புதன் பந்தலில் முதலாவதாக அந்தக் காணொளி உங்கள் பார்வைக்கு.

2. “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்று ஒரு பழமொழி உண்டு. இந்த அசைவும் தகவுள்ள நிழற்படத்தை (GIF animation) பார்க்கையில், குறித்த பழமொழி என் ஞாபகத்திற்கு வந்து போனது தவிர்க்க முடியாமல் போனது. சிந்திக்காமல் செய்கின்ற விடயங்களால், குறித்த நபருக்கு கொடுமைகள் உண்டான போதும், பார்ப்பவர்களுக்கு நகைச்சுவையைத்தான் தந்துவிடுகிறது. இரண்டாவது அசையும் நிழற்படத்திற்கான இணைப்பு இது.

3. இற்றைக்கு ஒரு சில தசாப்த காலங்களுக்கு முன்னர் நாம் பயன்படுத்திய பொருள்கள் பற்றிய ஞாபகம், குறித்த பொருள்களை பாவித்தவர்களிடமே, அரிதாகிப் போவதை அண்மையில் அவதானிக்க முடிந்தது. மூன்றாவது நிழற்படத்தில் காணப்படும் இரண்டு பொருள்களுக்கும் இடையான தொடர்பு என்ன? என்ற கேள்விக்கு இந்தத் தலைமுறையைச் சேர்ந்த சிறார்களால் மிகச்சரியான பதிலைத் தரமுடியுமென எதிர்ப்பார்க்க முடியாது. நிறையப்பேருக்கு, படத்தில் இருக்கும் பென்சிலை அடையாளப்படுத்த முடிந்தாலும், கெசட்டை (Cassette) அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை. பென்சில் கொண்டு, கெசட்டின் மேலே எழுதலாம் என்பதே இதற்கிடையான தொடர்பு என்றும் ஒருவர் கூறக்கேட்டேன். இந்த விடயம் விஞ்ஞானத்தின் அடிப்படையாக இல்லாவிட்டாலும், நாம் பொருள்களை விவேகமாகப் பயன்படுத்தினோம் என்பதற்கான ஆதாரமான ஒரு விடயமாகும். இன்று பொருள்களைக் கொண்டு, மாற்றுக் கருமங்கள் ஆற்றுவதற்கான சாத்தியங்கள் உருவாக்கப்படும் நிலை வரிதாகியுள்ளது கவலையான விடயமே. ஆக, நான் இந்த இரண்டு பொருள்களுக்குமான தொடர்பை சொல்லப்போவதில்லை. உங்களுக்கு தெரியும், அதனை மறுமொழியில் சொல்லுங்கள்.

அடுத்த புதன் பந்தலில் சந்திப்போம்.

– உதய தாரகை