(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 43 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
அன்புள்ள டயரிக்கு,
ஒவ்வொரு நாளும் நீ, என்னைச் சந்தித்துக் கொள்ளும் உன் வழக்கத்தைக் கண்டு நான் வியந்திருக்கிறேன்.
விடியும் ஒவ்வொரு பொழுதும் வெற்றிடமானது என்பதையும் உன்னைச் சந்திக்கும் ஒவ்வொரு போதும் உணர்ந்து கொள்வேன். உனது ஒரு நாளின் வெறுமையைப் போக்கிவிட்டால், அது விஷேடமாகிவிடும் அதிசயத்தையும் கண்டிருக்கிறேன்.
நீதான் என்னிடம், புலரும் பொழுதுகள் எல்லாமே விஷேடமாக்கப்படலாம் என்பதை ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டிருக்கிறாய்.
உனக்கு அதிகம் கூச்சமிருக்க வேண்டுமென, அவன் சொல்கிறான். நீ கதைப்பதே இல்லையாம் என்பது காரணமாம். “கதைப்பது எல்லாமே கூச்சம் களைந்தனவா?” என்று நீ கேட்டதாக நான் அவனிடம் நாளை சொல்கிறேன்.
நீ மெல்ல மெல்ல முணுமுணுத்துக் கொள்ளும் ஆயிரம் அழகிய சொற்களை அவன் அறியாமல் இருப்பது பற்றி உன்னைப் போல் எனக்கும் கவலை தான்.
அன்புள்ள டயரிக்கு,
சொல்வதெல்லாவற்றையும் அமைதியாக இருந்து செவிமடுப்பதில் உன்னுடன் யாரும் இவ்வுலகில் போட்டி போட இயலாது. அதில் உனக்கு நிகர் நீ மட்டுந்தான்.
தனிமை அழிப்பது எப்படி என்று என்னிடம் யாரும் கேட்டால், நான் உன்னோடு கொஞ்சம் கதைக்கும் படி, சொல்வதுண்டு.
ஆப்ரகாம் லிங்கன் தன்னைக் கண்ணாடியில் பார்த்தால், சில நேரங்களில் அவரின் உணர்வுகளும் அவர் அணிந்துள்ள தொப்பியின் கரிய நிறத்தைப் போல் இருப்பதைக் கண்டு கொள்வார்.
ஆனால், உன்னோடு கதைத்தால், உணர்வுகள் எல்லாமே பகிரப்பட்டுவிடும். அத்தனை வேதனையையும் உணர்வுகளையும் அப்படியே மொத்தமாக சேமித்து வைப்பதற்கு எத்துணை பொறுமை உனக்கு.
நெருப்பைப் போல், தனிமையைத் தின்றுவிடும் உன் சக்தி பற்றி யாரும் உன்னிடம் சொன்னதுண்டா?
அன்புள்ளமிக்க டயரிக்கு,
நான்கு வருடங்களுக்கு முன் என்னை ஒவ்வொரு நாளும் சந்திக்கும் உன் அண்ணனை நேற்றுச் சந்திந்தேன்.
அந்தச் சந்திப்பு மிக இனிமையாவிருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் அவனிடம் நான் சொன்னவற்றை அப்படியே என்னிடம் மீளச் சொன்னான். கேட்டு வியந்து கொள்ளத்தான் முடிந்தது.
சோகமான சந்தர்ப்பங்களில் நான் அவனிடம் சொன்னவற்றைக் கூட, சுவை தரும் முன்னாளின் அனுபவமாய் அவன் மீளச் சொன்னதைக் கேட்ட போது, நேரம் வலிகளைத் தின்றுவிடும் என்பது மீண்டும் நிரூபணமாகியது.
அவன் சொன்னவைகளில் அத்துணை நிறங்கள் தோய்ந்திருந்தன.
உன் அண்ணனின் இதயத்துடிப்பைக் கேட்டுக் கொண்டே அவன் சொல்கின்ற அத்தனையையும் வெயிலின் வெப்பத்தால் வியர்வை மேனி படர செவிசாய்த்திருந்தேன்.
அவன் நான் சொன்னதை நான்கு ஆண்டுகளுக்கு முன் எப்படி அமைதியாக இருந்து கேட்டிருந்தானோ, அதே போன்றே அமைதியாக என்னிடம் மீளச் சொல்லிக் கொண்டுமிருந்தான். உன் அண்ணன் மாறவில்லை. அப்படியே இருந்தான்.
நீயும் அப்படித்தான் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். இருப்பாய் என்றும் நம்புகிறேன்.
அல்பர்ட ஐன்ஸ்டைன் சொன்னதாய் ஒரு விடயத்தை என்னிடம் உன் அண்ணன் பகிர்ந்து கொண்டான், “எம்மால் முடிந்தளவில் நாம் எமது உன்னதமான விடயங்களைச் செய்ய வேண்டும். அதுவே எமது சங்கைக்குரிய மனித பொறுப்பு ஆகும்”.
பொப்பிசைச் சக்கரவர்த்தி மைக்கல் ஜெக்ஸன் இறந்த செய்தி கேட்டு, அது உண்மையென உறுதிப்படுத்த இணையத்தில் பலரும் ஒரே நேரத்தில் தகவலை வேண்டி நின்ற போது, அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் இணையமே கதிகலங்கிய செய்தியையும் உன் அண்ணன் என்னிடம் சொன்னான்.
அன்புள்ள டயரிக்கு,
சோகம் அகற்றும் சோதரராயும் காலம் கடப்பதின் பதிவாயும் நீ எடுக்கும் பாத்திரங்கள் ஏராளம்.
ஆனாலும், இத்தனை பாத்திரங்கள் ஏற்றாலும் உன்னை மாற்றாமல் இருந்து கொண்டு, எனக்கு வாழ்க்கையை ரசிக்கும் படியும் அதில் ரசணைகளை உன்னோடு பகிரும் படியும் நீ தரும் உத்வேகம் — கவிதை.
இந்த உணர்வை எப்படி மொழியாக்கலாம் என்று திணறியிருந்த போதும், உன்னைச் சந்திக்கின்ற நிலையில் அவ்வுணர்வு மொழி கொள்வது — அழகு.
நீ ஒரு பொக்கிசம்.
அன்புடன் உன் இனிய தோழன்,
உதய தாரகை
குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் இருபத்தைந்தாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.
இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu
பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.