நிழலோடு ஒரு நிமிடம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 45 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

அண்மையில் நண்பனை சந்திப்பதற்காய் தொலைவிலிருக்கும் ஒரு நகரத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. கோடை காலம், பிரசன்னமாகத் தொடங்கியிருப்பதால் காலையில் சூரியனின் வருகையில் கூட சுணக்கமும் அன்று இருக்கவில்லை.

போகும் வழியில் கோடைக்குக் குடை பிடித்தாற் போல், ஆங்காங்கே நிமிர்ந்து நின்ற கட்டிடங்கள் அதன் அளவைத் தாண்டியும் விசாலமாய் நிலத்தில் நிழலாகி நின்று உருவம் கொண்டிருந்தது.

இதைக் கண்ட எனக்கோ, நான் வாசித்த கலீல் ஜிப்ரானின் கதையொன்று எண்ணத்திற்குள் நிழலாடத் தொடங்கியது. “நரி” என்பது தான் அந்தக் கதையின் தலைப்பு. “கிறுக்கன்” (The Madman) என்ற கலீல் ஜிப்ரானின் நூலில் இடம்பெற்றிருந்தது.

விடியற் காலையில் எழுந்த நரி தன் நிழலைப் பார்த்து, “இன்று மதியச் சாப்பாட்டுக்கு ஒரு ஒட்டகத்தை நான் வேட்டை செய்ய வேண்டும்” என தனக்குள் எண்ணிக் கொண்டு, காலை முழுக்க ஒட்டகம் தேடுகின்ற படலத்தை தொடர்ந்தது. மதியமும் ஆனது, எதேச்சையாக தன் நிழலை மீண்டும் நரி மதியத்தில் கண்டு கொண்டது. “இன்றைக்கு ஒரு எலி சாப்பாட்டுக்குப் போதும்” என்று தனக்கே சொல்லிக் கொண்டது.

மூன்று வாக்கியத்தில் நிறைவாகின்ற இந்தக் கதை சொல்கின்ற வாழ்வியல் மாற்றத்தின் அடிப்படை — மிக வியப்பு.

ரால்ப் வால்டோ எமர்சன் சொன்ன ஒரு விடயத்தை கோபாலு சொல்லச் சொன்னான். “உங்களை நீங்களல்லாது இன்னொன்றாக மாற்றிவிட தொடர்ச்சியாக முயற்சிக்கும் இந்த உலகத்தில், நீங்களாகவே உங்களைத் தக்க வைத்திருப்பது மிகப்பெரிய சாதனை.”

– உதய தாரகை

மறுமொழி சொல்லி ட்விட்டரில் தொடர நான் இங்கே. 🙂 –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

நீயல்லாத நிலைகள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 57 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

மின்காந்த நிழற்பட்டையின் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதையே உன்னால் கண்டு கொள்ள முடிகிறது. ஒலித் திருசியத்தில் காணப்படும் ஒலியின் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதையே உன்னால் கேட்க முடியும்.

இதனை நீ வாசித்துக் கொண்டிருக்கும் போது, விண்மீன் மண்டலத்தினூடாக மணிக்கு 220 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறாய். உன் உடலின் 90 சதவீதமான கலங்கள் — “நீயல்லாத” — தங்களுக்கே உரித்தான பரம்பரையலகோடு காணப்படுகின்றன. உன் உடலிலுள்ள மொத்த அணுக்களில் 99.999999 சதவீதமானவை வெறும் வெற்றிடங்கள். இவை நீ பிறந்த போது, உன்னோடு சேர்ந்து வந்தவையே அல்ல. ஒரு விண்மீனின் உதரத்திலிருந்து தோற்றம் கண்டவை.

சாதாரண உருளைக்கிழங்கில் காணப்படும் நிறமூர்த்தங்களின் எண்ணிக்கையை விட 2 நிறமூர்த்தங்கள் உன்னிடம் குறைவாக உள்ளது. 46 நிறமூர்த்தங்கள் மட்டுந்தான் உன் வசம் உள்ளன.

உன் கண்ணிலுள்ள கூம்புருவான ஒளிவாங்கிகளின் அமைவில் தான் வானவில்லின் தோற்றம் நிலைநாட்டப்படுகிறது. கூம்புருவான ஒளிவாங்கி இல்லாத விலங்குகளிற்கு வானவில் இருப்பதில்லை. ஆக, நீ வானவில்லை பார்க்கவில்லை மாறாக அதை உருவாக்குகின்றாய்.

மின்காந்த நிழற்பட்டையில் காணப்படும் நிறங்களில் 1 சதவீதமானவையே உன்னால் காணக்கூடிய அத்தனை அழகிய நிறங்களாக இருக்கின்ற நிலையில், நீ தோற்றுவிக்கும் வானவில் கொஞ்சம் அதிசயமானது தான்.

தான் பெற்றுக் கொண்ட மின்னஞ்சலில் இப்படியொரு அற்புதமான செய்தியிருந்ததாக கோபாலு என்னிடம் சொன்னான். (பதிவின் தேவை கருதி, இங்கு தமிழாக்கம் செய்துள்ளேன்.)

அதிசயமான அபூர்வ நிலைகளைக் கண்டு வியந்த நிலையோடு, “மின்னஞ்சலின் தலைப்பு என்னவாயிருந்தது” என்று கேட்டேன்.

“அடுத்தவனைப் பற்றி நீ அனுமானம் செய்து கொள்ள முன்னர் அல்லது மெய்யென நீ ஒன்றை அடித்துச் சொல்வதற்கு முன், இதைக் கொஞ்சம் கவனத்தில் எடு” என்ற கருத்து பொதிந்ததாய் இருந்தது” — கோபாலு விளக்கமாகச் சொன்னான்.

“ஒருவனைப் பார்த்து அவன் அப்படித்தான் என தீர்மானித்துக் கொண்டால், அவனிடம் அன்பு செலுத்த உங்களிடம் வாய்ப்பே தோன்றாது” என்ற அன்னை தெரேஸாவின் கூற்றும் அப்படியே இங்கு பொருந்திப் போகிறது.

– உதய தாரகை

மறுமொழி சொல்லி ட்விட்டரில் தொடர நான் இங்கே. 🙂 –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

தொடர்புடைய பதிவு: கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்

ஒட்டாத பசை

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 17 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

வரலாறு சொல்கின்ற பல விடயங்கள் ஆச்சரியத்தின் ஆதாரங்களாக இருப்பதுண்டு. கண்டுபிடிப்புகள் பல எண்ணங்களின் வித்தியாசமான அணுகுகையால் உண்மையான விடயங்களாகப் பரிவர்த்தனை செய்யப்பட்டதும் வரலாற்றின் அத்தியாயங்கள்.

அப்படியான வரலாற்றின் அத்தியாயமொன்றை பகிர்ந்து கொள்கிறேன்.

ஆதர் ப்ரை — 3M என்ற நிறுவனத்தின் கடதாசிப் பிரிவில் பொறியியலாளராக பணி செய்தார். 1974 இன் குளிர்காலத்தில் பசைகளைப் பற்றிய உருவாக்கத்தில் ஈடுபட்ட செல்டன் சில்வர் என்ற பொறியிலாளர் வழங்கிய உரையைக் கேட்பதற்காகச் சென்றிருந்தார். சில்வர், மிகவும் வலிமையற்ற பசையொன்றை உருவாக்கி அது பற்றி உரையைக் கேட்க வந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரால் உருவாக்கப்பட்ட பசையால், இரண்டு கடதாசிகளைக் கூட இறுக்கமாக ஒட்டிக் கொண்டிருக்கும் வகையில் செய்ய முடியவில்லை. அறையில் இருந்த அனைவர் போலவும், ப்ரையும் பொறுமையாக சில்வரின் உரையைச் செவிசாய்த்துக் கொண்டிருந்தார்.

யாராலும், குறித்த வலிமையில்லாப் பசையை உபயோகப்படுத்திக் கொள்வதற்கான பிரயோக நிலை அவதானிப்புகளை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.

“ஒட்டாத பசையால் அப்படி என்னதான் பண்ணிவிட முடியும்?” — கேட்கப்படாமலே அனைவரினதும் மனதில் தோன்றிய வினா.

ஆனால், ஒரு ஞாயிற்றுக் கிழமை, ப்ரையின் எண்ணங்களுக்குள் இந்த ஒட்டாத பசை வித்தியாசமான வகையில் ஒட்டிக் கொண்டது.

தேவாலயத்தில் ஆராதனைப் பாடல்களைப் பாடிய ப்ரை — தான் பாடவேண்டிய பாடல் காணப்படுகின்ற பக்கத்தை அடையாளப்படுத்தி வைக்க சின்னதொரு கடதாசியை புத்தகக் குறியாகப் பயன்படுத்தினார். ஆனால், துரதிஷ்டவசமாக அந்தக் கடதாசி இருந்த இடத்தை விட்டு அடிக்கடி விழுந்து கொண்டேயிருந்தது.

ஆராதனைப் பாடல்களுள்ள பக்கத்தை குறித்து வைத்துக் கொள்கின்ற வேலையை அது செய்ய மறுத்தது போல் தோன்றியதால், புத்தகம் பூராக ப்ரை பாடலை தொடர்ச்சியாகத் தேடிப் பாடிக் கொள்ள வேண்டியதாகியது.

அதுவொரு கட்டாயமாகத் திணிக்கப்பட்ட தீர்க்கப்படமுடியாத பிரச்சனையாகவே ப்ரைக்குத் தோன்றியது.

இப்படி ஆராதனைகளில் ஈடுபட்டிருந்த ப்ரைக்கு அட்டாகாசமான எண்ணமொன்று உதித்தது. ஒட்டாத பசையைக் கொண்டு, மீளப்பயன்படுத்தக்கூடிய புத்தகக் குறிகளை உண்டாக்கலாம் என எண்ணலானார்.

அந்தப் பசையின் ஒட்டுகின்ற வலிமை குறைந்து காணப்படுவதால், புத்தகத்தின் பக்கத்தில் அதனைக் கொண்டு சின்னக்கடதாசியொன்றை ஒட்டலாம். ஒட்டிய கடதாசியை அகற்றுகையில், அது ஒட்டிய பக்கத்தையும் கிழிக்காது.

இதுவே இன்று உலகளவில் அலுவலகங்களில் ஏன் வீடுகளிலும் தான் அதிகமாகப் பயன்படும் போஸ்ட்-இட் நோட்டாக (Post-it Note) உருவாகியது.

ஒட்டாத பசையோடு ஒட்டிக்கொண்ட ப்ரையின் யோசனை — அனைத்தையும் மாற்றி போட்டுவிட்டது.

“நம்மைச் சூழவுள்ள உலகத்தில் ஆயிரம் விடயங்கள் எமது புலன்களின் அவதானத்தின் கோணத்திற்குள் அகப்படாமல், வெளியாகிக் கிடக்கிறது. புலன்களுக்கு புலன் கொடுத்தல், பலன்கள் பலவற்றைப் பெற்றுத் தரலாம். உருவாக்கும் நேரம் இதுதான். நீங்கள் தயாரா?” — கோபாலு கேட்கிறான்.

போனஸ் தகவல்: போஸ்ட்-இட் நோட்ஸ் பலவற்றைப் பயன்படுத்தி 2009 ஆம் ஆண்டு, அற்புதமாக அசைவூட்ட குறுந்திரைப்படமொன்றை பேங்க்-யஓ லியோ உருவாக்கி வெளியிட்டிருந்தார் — வித்தியாசமாகவிருந்தது. அந்தக் காணொளிக்கான இணைப்பு இது.

– உதய தாரகை

மறுமொழி சொல்லியனுப்பி ட்விட்டரில் தொடர..

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

தும்மலின் விஞ்ஞானம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

மனித உடலின் விசித்திரங்களின் பட்டியலை விரித்துக் கொண்டே போகலாம். உடல், தனது நிலையை ஒரு தகவில் வைத்துக் கொள்ளும் பொருட்டு, தன்னியக்கமாகவே பல விடயங்களைச் செய்வதை அவதானிக்க முடியும்.

அதில் ஒன்றுதான் தும்முதல். மனித உடலில் இடம்பெறும் சங்கீரணமான செயற்பாடாகத்தான் தும்மலைக் கண்டு கொள்ளலாம்.

“தும்மும் போது, கண் எப்போதுமே மூடித்தானிருக்கும்” என்பது ஒரு தகவல். “கண்கள் திறந்த நிலையில் உன்னால் தும்ம முடியாது” என்பது அவளிடமிருந்து கோபாலுக்கு வந்த சவால்.

உண்மையில் இந்தச் சின்னத் தகவலின் பின்னணியில் இருக்கின்ற விஞ்ஞானம் என்ன என்பதை அறிந்து கொள்ள ஆர்வப்பட்டேன். என் ஆர்வத்தின் விளைவின் உண்டான கேள்விக்கு கிடைத்த பதில்களில் விபரமான தொகுப்புதான் இப்பதிவாயிற்று.

பூமியிலுள்ள பெரும்பாலும் அத்தனை விலங்குகளும் தும்முகின்றன. “Sternutatory reflex” என்ற சொற்றொடர் மருத்துவத்தில் தும்மலைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

மூக்கின் மென்சவ்வில் நமைச்சலை உண்டுபண்ணக் கூடிய காரணி தொடுகையுறும் நிலையில், அந்தக் காரணியின் தொடுகை, மூளையின் சில பகுதிகளில் பிரதிபலிப்பை உண்டாக்கும். இந்தப் பிரதிபலிப்பின் காரணமாக இன்னும் பல நரம்பிணைப்புத் தாக்கங்கள் தொடர்ச்சியாக ஏற்படும்.

தும்முகின்ற நிலையில், உடலின் உள்ளே மிக அதிகமான அமுக்கம் பிரயோகிக்கப்படும். இதன் காரணமாக, குறிப்பிடத்தக்களவு வாயு அமுக்கம் கண்களில் பிரயோகிக்கப்படும்.

கண்களை, கண் குழிக்குளியிருந்து வெளியேற்றிவிடவோ, கண்கள் பிதுங்கி வெளியே வந்துவிடவோ இந்த அமுக்கத்தால் முடியாவிட்டாலும், கண்களிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்த இந்த அமுக்கத்தால் முடியும்.

டாக்டர். ஜி. எச். ட்ரம்ஹெல்லரின் அவதானிப்பின் படி, “கண்கள் ‘பிதிர்க்கக்‘ கூடாதென்பதற்காகவே தும்மும் போது நாம் கண்களை மூடுகின்றோம்.” எனச் சொல்கிறார்.

தும்மலின் போது கண்களில் ஏற்படக்கூடிய அமுக்கத்தின் காரணமாக, கண்ணில் அசாதரண நிலை தோன்றப்படாது என்பதற்காய் எமது உடலே தன்னியக்கமாக தற்காப்பில் ஈடுபடுவது – வடிவமைப்பின் வியப்பு விஞ்ஞானம்.

ஆனாலும், இந்தப் பெண், கண்களைத் திறந்த நிலையில் தன்னால் தும்மக்கூடியது தனது விஷேடமான திறமை என்கிறார். தும்மலின் பின் அவரின் கண்களின் பிரதிபலிப்பைக் காணொளியில் அவதானிப்பதன் மூலம், கண்களைத் தும்முகின்ற நிலையில் மூடிக் கொள்வது கட்டாயம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

“ஏன்?” என்ற கேள்விகளுக்குள் விஞ்ஞானம், வரலாறு என பல விடயங்கள் விரிந்து பரந்து கிடைக்கிறது. “ஏனெனக் கேட்பது கலை” — கோபாலு சொல்கிறான்.

– உதய தாரகை

மறுமொழிகள் சொல்லி ட்விட்டரில் தொடர..

பத்தாயிரம் மணிநேர விதி

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடமும் 47 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

கடந்த ஜுலை மாதம் ஸ்கொட்லாந்தில் இடம்பெற்ற TED Global 2011 மாநாட்டில், TED மொழி இணைப்பாளராக நான் கலந்து கொண்டேன். அங்கு பல ஆளுமைகளைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

பலதுறைகளிலும் முன்னணியாக விளங்குகின்ற ஆளுமைகளுடனான சந்திப்பு, பல விடயங்களைச் சொல்லித் தந்தது. அவை பற்றியெல்லாம் விரிவாக வெவ்வேறு பதிவுகளில் சொல்லவிருக்கிறேன்.

அந்த மாநாட்டில் நான் சந்திந்த பல ஆளுமைகளுள் ஒருவர்தான் — எழுத்தாளர் மல்கம் கிலாட்வெல் (Malcolm Gladwell). 2005 ஆம் ஆண்டு TIME சஞ்சிகையின் உலகில் செல்வாக்குச் செலுத்தும் 100 பேர் பட்டியலில் இடம்பிடித்தவர். The Tipping Point, Blink மற்றும் Outliers போன்ற பல பிரபல்யமான நூல்களின் ஆசிரியர்.

பத்தாயிரம் மணிநேர விதி என்றவுடனேயே, இவரே அனைவராலும் நினைவுகளோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படுகின்றார். தனது Outliers என்ற நூலின் மூலம் இந்த விதி தொடர்பாக சொல்லியிருப்பார்.

ஒருவர், ஒரு சிக்கலான திறனில் நிபுணத்துவம் பெற்றவராவதற்கு, அந்தத் திறனை பயிற்சி செய்வதற்காக அதனையே குறித்தான பத்தாயிரம் மணிநேர பயிற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டுமென்பதுதான் — அந்த விதி.

ஒவ்வொரு நாளும் 2 தொடக்கம் 3 மணிநேரம் தான் நிபுணத்துவம் அடைய வேண்டுமென எண்ணுகின்ற விடயத்தில் 10 வருடங்களுக்கு பயிற்சி எடுத்தால் ஒருவன் அவன் விரும்புகின்ற துறையில் நிபுணத்துவம் அடைகின்றான் என்பதே இதன் இன்னொரு வடிவம்.

பல ஆதார சம்பவங்களோடு தனது அவதானங்களை கிலாட்வெல் அந்த நூலில் விபரிப்பார்.

ஆனாலும், இந்த பத்தாயிரம் மணிநேர விதி, பலராலும் வித்தியாசமான கருத்தோடு உணரப்பட்டுள்ளதும் உண்மை. “நிபுணராவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வெறும் பத்தாயிரம் மணிநேரம் பயிற்சி செய்வதுதான்” என்பதுதான் அந்தக் கருத்து.

வெறும் பத்தாயிரம் மணிநேரங்கள், எதைத் தரமுடியும்? வெறுமையைத் தவிர.

விரும்பிய திறனில் ஒன்றிப்போய், அதுபற்றியதாய் எமது பயிற்சிகள் பத்தாயிரம் மணிநேரமாவது இருக்க வேண்டுமென்பதையே இந்த விதி சொல்கிறது. பத்தாண்டுகள் தான் தேவைப்படும் என்றில்லை — ஒன்றித்த பயிற்சியுடனான பல மணித்தியாலங்களை ஒரு நாளில் உங்களால் பயிற்சிக்காக தர முடிந்தால், ஒரு சில ஆண்டுகளிலேயே விற்பன்னர் ஆகிடலாம்.

திறமை அல்லது ஆற்றல் என்பது தோன்றி விசாலமாக்கபடுவதில் பயிற்சி, பொறுமை, தொழில்நுணுக்கங்கள் என பல காரணிகள் பங்காற்றும் என்பதும் நாம் அறிந்ததே!

மணித்தியாலங்களை எண்ணிக் கொண்டு பயிற்சி செய்வதாலோ, நிபுணத்துவம் கிட்டாது என்பதையும் நாம் உணர வேண்டியுள்ளது. ஒன்றித்த பயிற்சியில் மணித்தியாலக் கணக்கு தெரியாது — நாம் பயிற்சி செய்யும் விடயம் எதுவோ அது மட்டுமே கவனத்தில் நிற்கும்.

இந்த விதி வலியுறுத்துவதெல்லாம் பயிற்சி செய்வதனால் பலன்கள் கிடைக்கின்றது என்பதைத்தான்.

ஆனால், நிபுணர்கள் என்பவர்கள் யாவர்?

இசையில் விற்பன்னராக நினைத்து, இசையமைப்பாளர்கள் எவ்வாறு இசையமைக்கிறார்கள் என்றுணர்ந்து அதன்படி வெளிப்படுத்த எண்ணுதல், எழுத்தில் வித்தைகள் செய்ய எண்ணி எழுத்தாளர்கள் எப்படியெல்லாம் வித்தைகள் செய்கிறார்கள் என அதன்படி வெளியிட பயில்தல், சித்திரக் கலைஞனாகி சிகரங்கள் தொட மற்ற சித்திரக் கலைஞர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதையறிந்து முயல்தல் என்பதிலேயே பலரினதும் பயிற்சிகள் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ‘முயற்சிகள்’ ஒருபோதும் நிபுணராவதற்கான வாய்ப்பை வழங்காது. அசலின் இன்னொரு நகலொன்றை மட்டுமே தரும்.

கலையையோ, திறனையோ தனக்கேயுரித்தான பாணியில் சொல்லத் தெரிந்தவன் தான் நிபுணராகின்றான்.

தன்னைத் தானாகவே காட்டிக் கொள்கின்ற வித்தைகளைத் தான் நிபுணன் பயிற்சியாகப் பெறுகிறான் என்றே உணர வேண்டியுள்ளது. இது சொல்லிவிடுவது போல் லேசானதல்ல. மனதோடு ஒருமித்த பயிற்சிகள் நிறையத் தேவைப்படுகிறது.

தனது கருதுகோள்கள் பற்றிய தெளிவை புரிகின்ற வகையில் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல்தான் ஒருவனை ஒரு துறைசார்பான தெளிவுள்ளவனாகக் காட்டுகிறது.

“எனக்கிட்ட இருந்து அவங்க இதைத்தான் எதிர்பாக்கிறாங்க. அதத்தான் நான் செய்யனும்” என்றவாறான தொனியில்தான் நிறைய முயற்சிகளின் தொடக்கம் இன்றளவில் இருக்கிறது. இங்கு தன்னைத் தானாக காட்டுவதற்கான தெளிவின் துவக்கம் தேவைப்படுகிறது.

மற்ற விடயங்கள், மனிதர்களின் எண்ணங்கள் சார்பான ஆதிக்கமே எமது எண்ணங்களின் வெளிப்பாட்டின் பூட்டாகவிருக்கிறது. ஆனால், சாவி எம்மிடம் இருப்பது என்பது மகிழ்ச்சியான செய்திதான்.

எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், அனைவரும் “இது புதிசா இருக்கே!” என்றவாறான திகைப்பைத் தரக்கூடிய சந்தர்ப்பங்கள் நாளுக்கு நாள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த ஆச்சரியங்களை உருவாக்குபவர்கள்: நேரத்தை பயிற்சிகளால் அலங்கரித்து தன்னைத் தானாகவே காட்டிக் கொண்டவர்கள்.

நேரத்தை பயிற்சியில் முதலீடு செய்து தங்களைத் தயார்படுத்திக் கொண்டவர்கள் – அதிர்ஷ்டசாலிகள். செனகா என்ற உரோம தத்துவஞானி, “தயார்படுத்தல், வாய்ப்பைச் சந்திக்கும் நிலையைத்தான், அதிர்ஷ்டம் என்கிறோம்” என்று ஒரு தடவை சொல்லியிருப்பார்.

தன்னைத் தானாக வெளிப்படுத்தினால், வாய்ப்புகளுக்கு உங்களை வந்து சேரும் நிறைய வாய்ப்புகள் பிறக்கும். இங்கு அசலுக்கு நிறைய மௌசு உள்ளது எல்லோருக்கும் தெரியும்.

எழுத்தாளர் கிரிஸ்டின் ஆம்ஸ்ட்ரோங் சொன்ன ஒரு விடயத்தை பகிர்தல் பலன் தரும் என நினைத்து இங்கு இணைக்கிறேன்.

“நீங்கள் பேசிக் கொண்டிருந்த ஆனால் எப்போதுமே செய்யாத அந்த விடயங்களைச் செய்யுங்கள். எப்போது விட்டுவிடுவது, எப்போது கட்டிக் காப்பது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அவசரம் வேண்டாமே! அது அதைப் போன்றுதான் இருக்கிறது என்ற சொல்லாடலுக்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டாம். எடுத்ததற்கெல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கவும் வேண்டாம்.

முடியாது என்று சொல்லக் கற்றுக் கொள்ளுங்கள் — உங்கள் ‘முடியும்’ என்ற வார்த்தைக்கு அப்போது கவர்ச்சி கிடைக்கும்.

முன்னேற்றத்தில் பங்காயுள்ள நண்பர்களோடு பழகுங்கள், குழிதோண்டும் மற்றவர்களோடான அணுக்கம் தேவையில்லை. நீங்கள் செய்வதில் ஆர்வமாக இருங்கள். மற்றவர்களுக்கு ஆர்வமாக உங்களைத் தோற்றுவிக்கின்ற பாசாங்கு வேண்டாம். உங்கள் சுதந்திரத்தை மதிக்கும் வகையில் முதிர்ச்சியடைந்திருங்கள். அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்கும் வகையில் இளமையாயிருங்கள். ஈற்றில், நீங்கள் யாரோ அதுவாகவே இருங்கள்.”

குறுக்கிட்ட கோபாலு இப்படிக் சொல்கிறான், “அப்படி, இப்படி என வரவேண்டும் என்று முயற்சிப்பதை விட்டுவிட்டு, எதுவாக நீயாக வேண்டுமோ, அதையே முயற்சிக்காமல் – செய். நீ செய்வதில் தோற்றால்தான், செய்தது முயற்சி. முயற்சியில் தோற்றதை என்னவென்று சொல்வது? ஆக, எதைச் செய்ய எண்ணுகிறாயோ அதை முயற்சிக்காமல் உடனே செய்! – செய்வது தோற்றுப் போனால், அது தன்னாலே முயற்சியாகும்.”

– உதய தாரகை —

  • பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.
  • TED Global 2011 இல் மல்கம் கிலாட்வெல் வழங்கிய சொற்பொழிவு வெளியிடப்பட்டுள்ளது. TED.com இல் காணலாம்.
  • Outliers நூலில் சொல்லப்படுகின்ற இந்த விதி பற்றிய விடயத்தை சுருக்கமாக ஒருவர் காணொளியாக உருவாக்கி இருக்கிறார். YouTube இல் அதனைக் காணலாம்.

கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 22 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

மனிதனின் பொதுமைப்பாடான செம்மையற்ற நிலைகள் அவனின் தனித்துவத்தை அடையாளப்படுத்துவதாய் இருப்பது உண்மையே. இங்கு செம்மையற்ற நிலைகளை (Imperfections) ரசிக்கின்ற அளவில் பலரும் பக்குவமடைந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.

ஆனாலும், பின்வரும் இரண்டு காணொளிகளும் நாம் அறிந்த நிலையிலும் கூட, எமது கண்களையும் காதுகளையும் ஏமாற்றும் வல்லமையைக் கொண்டிருக்கிறது. இதுதான், மனிதனின் அழகிய செம்மையற்ற நிலைகள்.

கண்களை ஏமாற்றும் காணொளி

காதுகளை ஏமாற்றும் காணொளி

“கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதுவும் பொய்; தீர விசாரிப்பதே மெய்” என்று சும்மா யாரும் சொல்லி வந்திருக்கமாட்டார்கள்.

– உதய தாரகை

தொடர்புடைய பதிவு: மெய்யென நம்பியுள்ள பொய்கள்

உதவி: அளவுகளைத் தாண்டியது [புதன் பந்தல் – 21.09.2011] #4

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 41 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

இந்த வாரத்தின் புதன் பந்தல், மாறுதல்கள் ஏற்படுத்துதல் பற்றிய விடயத்தை நட்சத்திரமீன்களின் கதையோடு ஆய்கிறது.

காலை நேரத்தின் கடற்கரைக்கு அற்புதமான தோற்றச்சூழல் கிடைக்கும். அப்படியொரு காலைப்பொழுதில் கடற்கரை வழியாக உடற்பயிற்சி செய்யும் நோக்கில் நடந்து செல்கின்றான் ஒருவன். அவன் செல்லும் வழியாக நூற்றுக்கணக்கான நட்சத்திரமீன்கள் (Star Fish) கரையொதுங்கியிருப்பதை அவதானிக்கிறான். உயிரோடு கரையொதுங்கியிருக்கும் அந்த மீன்கள், காலைநேரக் கதிரவனின் சூட்டினால் அவை இறந்துவிடக்கூடும் என்ற எண்ணம் அவனிடம் தோன்றிவிடுகிறது.

அவன் அவற்றை நோக்கி விரைந்து சென்று, அவற்றில் ஒன்றை தன்கையால் பற்றி, கடல்நீருக்குள் எரிந்து விடுகிறான். இப்படியாகத் தொடர்ச்சியாக செய்கிறான். அவன் இப்படிச் செய்வதை அவதானித்த அவனுக்கு பின்னால் நின்றவனுக்கு, அவன் செய்கின்ற இந்த விடயம் புரியாத புதிராகத் தோன்றியது.

பின்னால் நின்றவன், அவனை நெருங்கி, “என்னதான் பண்றீங்க சார்? இங்க நூற்றுக்கணக்கான நட்சத்திரமீன்கள் கரையொதுங்கிக் கிடக்குது. எத்தனைக்கு உங்களால உதவி செய்ய முடியும்? அப்படி என்னதான் மாற்றத்தைக் கொண்டு வரப்போகுது?” என்றவாறு கேள்விகளைத் தொடுத்தான். இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், இன்னொரு நட்சத்திரமீனைப் பற்றியெடுத்து கடல்நீருக்குள் எரிந்துவிட்டு, “இந்த மீனுக்கு அது மாற்றத்தைக் கொண்டு தரும்” என இயல்பாகப் பதிலளித்தான்.

என்ன மாற்றங்களை நாம் உருவாக்குகின்றோம் என்பது நமது பங்களிப்பு சிறியதா, பெரியதா என்பதில் தங்கியிராது.

“ஒவ்வொருவரும் சின்னச் சின்ன மாற்றங்களை உருவாக்கப் பங்களித்தால், ஈற்றில் அது மிகப்பெரும் அழகிய மாற்றமாய் உருவெடுக்கும் என்பது உண்மைதானே!” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

ஆறாவது ஆண்டில் உங்கள் நிறம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 52 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

நேற்றைய தினம் நிறம், தனது ஆறாவது ஆண்டில் காலடியெடுத்து வைத்தது. வாழ்க்கை, வழக்கங்கள், ஆதிக்கம், ஆர்வம் என விரியும் பரந்துபட்ட விடயங்களும், வாழ்வின் அவதானிக்க மறந்துபோன அழகிய அனுபவங்கள் பற்றிய அழகிய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் உருவான நிறம், கடந்த பல ஆண்டுகளில் பலரையும் கவர்ந்திருப்பதையிட்டு புளகாங்கிதம் கொள்கிறேன்.

பதிவுகளைப் பார்வையிட்ட புள்ளவிபரங்களின் அடிப்படையில், கடந்த ஆண்டில் நிறத்தில் இடம்பெற்ற பதிவுகளில், உங்களைக் கவர்ந்த முதல் ஐந்து பதிவுகளாக பின்வருவன அமைகின்றன.

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் புதன் பந்தல் என்றொரு விசேடமான பகுதியொன்றையும், பிரதி புதன்கிழமையும் வழங்கி வருகிறேன். இந்தப் பகுதி பலரையும் கவர்ந்துள்ளதையிட்டும் பேருவகை கொள்கின்றேன்.

கடந்த ஐந்து வருடத்தில் நிறத்தின் பதிவுகள் பற்றிய உங்களின் பின்னூட்டங்கள், மின்னஞ்சல்கள் என்பன எனது பொழுதுகளின் மகிழ்ச்சிக்கும் பதிவுகளின் மெருகேற்றத்திற்கும் காரணங்களாக இருந்திருக்கிறன. இந்த அழகிய எண்ணங்களின் பயணத்தில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் நன்றிகள் பல.

பின்னூட்டம் சொல்லியனுப்பாவிட்டாலும், பதிவுகளை செய்தியோடைகள் (RSS) மூலம், நேரடியாக தளத்திற்கு வருகை தந்து பார்வையிடும் மற்றும் பதிவுகளை தங்களின் நண்பர்களிடையே சமூக வலைத்தளங்களின் மூலமாக பகிர்ந்து அன்பு வளர்க்கும் நண்பர்களுக்கும் நன்றிகளைச் சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்தும் நீங்கள் நிறத்தோடு இணைவீர்கள் என்ற நம்பிக்கையோடு, நிறம் தொடரும்.

அல்பர்ட் ஐன்ஸ்டைனின் இந்த அர்த்தமுள்ள மேற்கோளை எனக்கு ரொம்பப் பிடிக்கும். வெறும் இரண்டே வரிகளில் தனிமனித ஆற்றலின் விஞ்ஞானத்தை சொல்வது ஐன்ஸ்டைனின் அழகு.

நிறத்தின் பயணத்தில் இணைந்துள்ள உங்களுக்கு, மீண்டும் நன்றிகளைச் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி.

– உதய தாரகை