வட்டத்திற்குள் வாழ்வதா?

என் கருத்துகளோடு எல்லோரும் உடன்படுகிறார்கள். யாரும் என்னோடு விவாதிக்க எண்ணவில்லை. ஏன், என் கருத்துக்களையே ஊடகங்களில் வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

இப்படி யாருக்கும் தோன்றமுடியுமா? முடியும்.

இன்று இணையத்தில் இணைந்து இருக்கின்ற அனைவரினதும் எண்ணவோட்டமும் இதுதான்.

இது எப்படிச் சாத்தியமாகிறது?

சமூக ஊடகங்களில் நாம் சொல்கின்ற கருத்துகள், போடுகின்ற லைக்குகள், பகிர்கின்ற பதிவுகள் ஆகியன நாம் யார் என்பதை இயந்திரங்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றன.

இதனைக் கொண்டு இயந்திரமோ, நீங்கள் யாரென்பதை உணர்ந்து நீங்கள் விரும்பி நம்புகின்ற எல்லைக்குள் உங்களைக் கட்டி வைக்கிறது.

அல்கோரிதத்தின் முக்கிய வேலையே இதுதான்.

நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ அறிந்தோ அறியாமலோ ஒரு வட்டத்துக்குள்ளேதான் சமூக ஊடகங்களில் நீங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளீர்கள்.

இதற்குப் பெயர்தான் ஃபில்டர் பபல் (Filter Bubble). நீங்கள் நம்புகின்ற விடயங்களை அப்படியே உங்களுக்குக் காட்டி, உங்களை ஒரு வட்டத்திற்குள்ளேயே தேக்கி வைத்துவிடும் ஏற்பாடு.

Filter bubble எந்த வகையில் Confirmation biasஇலிருந்து வேறுபடுகிறது?

Confirmation bias இல் நீங்கள் நம்பியதை உறுதிப்படுத்த, தரவுகளைத் தேட வேண்டும். Filter bubbleஇல், நம்பியதை உறுதிப்படுத்த தரவுகள் தானாகவும் தொடர்ச்சியாகவும் உங்களுக்குக் காட்டப்படும். இங்குதான் அபாயம் ஆளத் தொடங்குகிறது.

உங்கள் சமூக ஊடகத்தின் காலக்கோடு என்பது, நீங்கள் நம்பி வாழ்கின்ற மாயையான வட்டம்.இணையத்தில் நீங்கள் எல்லாவற்றையும் தேடுகிறீர்கள். சுடச்சுட செய்திகள் என்பவை பேஸ்புக் பதிவுகளாக வருகின்றன. வட்ஸ்அப் செய்திகளாக வருகின்றன.

நீங்கள் தேடியதை எல்லாம் தேக்கி வைத்துள்ள சமூக ஊடகங்கள், நீங்கள் தேடாமலேயே, உங்களுக்குக் கட்டாயம் பிடிக்கும் என்ற உறுதியான நம்பிக்கையில் ஓர் உலகத்தை உங்களுக்கு காட்டிக் கொண்டிருக்கிறது.

அந்த உலகம் உண்மையென நம்பச் செய்வதில் உங்களிடம் வெற்றியும் காண்கிறது.

ஒவ்வொரு நாளும் இது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

உங்களின் அரசியல் தெரிவு, வாழ்க்கையின் கோலம், செய்திகளின் பரிந்துரை என அனைத்தும் இயந்திரங்களால் ஆளப்படுகிறது.

நீங்கள் பேஸ்புக்கில் பிடிக்கும் சண்டைகள், காணும் சச்சரவுகள் என எல்லாம் உங்கள் உலகத்தில் மட்டுமே நிகழ்கிறது. அவை இன்னொருவரின் உலகத்தில் நிகழ்ந்தால், நீங்கள் ஒரு குழுவாக ஒரு Filter bubble க்குள் வாழ்கிறீர்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

இந்த Filter bubble இலிருந்து பாய்ந்தோட வழியேதும் உள்ளதா?

நீங்கள் யார் என்பதை, அறிந்து கொள்ள முயற்சியுங்கள். அதிகமானோர் நம்புகின்ற கருத்து எப்போதும் உண்மையானது என்கின்ற பொய்யிலிருந்து விடுபடுங்கள்.

நீங்கள் அறிந்து கொள்கின்ற செய்திகளையும் தகவல்களை வெவ்வேறு மூலங்களில் உறுதிப்படுத்த முனைப்புக் காட்டுங்கள்.

ஒரு கதையின் அத்தனை பக்கங்களையும் அறிந்து கொள்ள ஆர்வங்காட்டுங்கள்.

நண்பர் பரிந்துரை செய்தாலோ, சமூக ஊடகம் பரிந்துரை செய்தாலோ, அது பொருத்தமானதா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

உங்களின் அனுமதியில்லாமல் யாரும் உங்களின் மனதில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்ற உண்மையை நீங்கள் உணருங்கள்

இவைகளை நீங்கள் செய்கின்ற போது, நீங்கள் Filter bubbleஇற்கு வெளியே வந்து, அது மற்றவர்களை ஆட்டிப் படைப்பதைக் கண்டு திகைப்பீர்கள். உங்கள் வாழ்வு நிம்மதியாகத் தொடரும்.

தெரிவு உங்களிடம்.

தாரிக் அஸீஸ்
6.1.2021

ஒப்பிடும் கலை

உங்கள் நண்பர்கள் பகிரும் நிழற்படங்கள், செய்திகள், மகிழ்ச்சிகள் என பலதையும் சமூக ஊடகங்களில் நாளாந்தம் காண்கிறீர்கள்.

அவர்களோடு, உங்களை ஒப்பிடத் தொடங்கும் போது, உங்கள் மகிழ்ச்சியை நீங்களே தொலைக்க தொடங்குகிறீர்கள்.

நீங்கள் காண்பதெல்லாம், அவர்களின் ஒரு கணத்தின் வெளிப்பாடு மட்டுந்தான். அந்த இடத்தை அவர்கள் அடையச் செய்த விடாமுயற்சி, உழைப்பு என எதுவுமே பார்வைக்கு வராது.

உங்களின் ஆரம்பத்தை இன்னொருவரின் நிறைவான சாதனையில் நின்று ஒப்பிடுவது எந்த வகையில் முறையாகும்?

அப்படி நீங்கள் ஒப்பிட்டுத்தான் ஆக வேண்டுமென்றால், நேற்றைய உங்களோடு இன்றைய உங்களை ஒப்பிடுங்கள்.

நாளை விடியும். வாய்ப்புகள் வளரும். பாதை தெளிவாகும்.

உங்களோடு, உங்களை ஒப்பிட்டுக் கொண்டேயிருங்கள்.

செயல் என்பது பெயரல்ல. அது வினை.

தாரிக் அஸீஸ்
3.1.2021

இலக்குகள் வேண்டாம்

இலக்குகள் என்பவை மாயைகள் என்றே எண்ணுகிறேன்.

நீங்கள் இலக்கை நோக்கி பயணிக்கின்ற பாதைதான் இலக்குக்கு முகவரி கொடுக்கிறது.

இலக்கை அடைந்தேனா, அதை நோக்கி நகர்ந்தேனா, அதை விலக்கி நடந்தேனா என்பதை உங்கள் பயணமே தீர்மானிக்கிறது.

ஒவ்வொரு நாளும் இலக்கை நோக்கிச் செய்கின்ற சின்னச் சின்ன செயல்கள், நாளடைவில் பிரமாண்டமாய் உருவாவதே உண்மை.

இலக்குகளை நீங்கள் உருவாக்கத் தேவையில்லை. இலக்குகளை அடைந்து கொள்வதற்கான முறைமையே உங்களுக்கு தேவைப்படுகிறது.

நீங்கள் ஒவ்வொரு நாளும் செய்பவைதான் உங்களுக்கு முகவரி தருகிறது. செல்வத்தைத் தருகிறது. வாழ்வைத் தருகிறது. வசதியைத் தருகிறது. மனஅமைதியைத் தருகிறது.

எழுத வேண்டுமென நினைக்கிறீர்களா? நீங்கள் எழுதுவதை மற்றவர்கள் வாசிக்க வேண்டுமென துடிக்கிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எழுதுவது மட்டுந்தான்.

இங்கு செயல் தான் உங்களைச் செதுக்கும்.

ஒவ்வொரு நாளாய் உங்களைச் செதுக்குங்கள். சிற்பி செதுக்கிய சிற்பமாவீர்கள்.

ஜேம்ஸ் கிளியரின் “Atomic Habits” இலிருந்து.

கோடுகளைத் தாண்டுதல்

ஒரு விடயத்தை, நின்று நிதானமாக அவதானிக்கின்ற போது, அந்த விடயம் பாலான தெளிவு இயல்பாகவே எமக்குள் ஒட்டிக் கொள்கிறது.

மேலோட்டமாக விடயங்களை கண்டு கொள்ளுதல், எனது காலக்கோட்டில் எல்லோரும் சொல்கிறார்கள், அதனால், நானும் அதை அப்படியே சொல்ல வேண்டும் அல்லது நம்ப வேண்டும் என்ற “வடிகட்டிய குமிழி” (Filter Bubble) க்குள் அகப்படுதல், நான் நம்பியிருக்கின்ற விடயத்தினூடாக, எல்லாமும் இயைந்து இருக்க வேண்டுமென்ற உறுதியாக்கப்பட்ட பக்கச்சார்பான நிலையில் (Confirmation bias) இருத்தல் என்பவை எல்லாம் உங்களை ஒரு கோட்டையும் தாண்டி நகரவிடாது.

பலரும் ஒரு எல்லைக்கப்பால் செல்ல எத்தனிக்காமல் இருப்பதால், அவர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கின்ற சங்கிலிகளை, அவர்களால் அறிந்து கொள்ள முடிவதில்லை.


மேலுள்ள காணொளியில் உள்ள வட்டங்கள், பல்வேறு திசைகளை நோக்கி, அசைவதைப் போல் உங்களுக்குத் தோன்றலாம். அப்படியே தோன்றும்.

ஆனாலும், அதுவொரு தோற்றமயக்கம் மட்டுந்தான்.

இங்கு வட்டங்கள், அவை இருக்கின்ற இடத்திலேயே இருக்கின்றன. வெறும் அம்புக்குறிகளைக் கொண்டு மனிதனின் மூளைக் குழப்பிவிட முடிகிறது.

ஆக, ஒரு விடயம் சார்பாக காணப்படுகின்ற தகவல்களை எப்படி அறிய வேண்டும், அதன் நிமித்தம் என்ன முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதை எல்லாம் நீங்கள் மட்டுந்தான் அவதானத்துடன் தேர்வு செய்ய வேண்டும்.

நீயல்லாத இன்னொன்றாக உன்னை மாற்றிவிட, உலகம் ஒவ்வொரு நொடியும் முயலும் போது, நீயெதுவோ அதுவாகவே ஆகிவிடுவதுதான் மிகப்பெரும் சவாலாகும்.

சவாலே சமாளி.

தாரிக் அஸீஸ்
06.12.2020

தோற்றமயக்க காணொளி: @jagarikin

படைப்பதை பகிர்தல் பற்றிய குறிப்புகள்

(இந்தப் பதிவை வாசிக்க 2 நிமிடங்களும் 43 செக்கன்களும் தேவைப்படும்)

2006 ஆம் ஆண்டு தொடக்கம் நிறம் வலைப்பதிவில் பதிவுகளை எழுதி வருகிறேன். இருந்தாலும், பதிவுகளின் நீளத்தைக் கண்டு நண்பர்கள் வாசிக்காமல் கடந்து செல்கிறார்களோ என்ற கேள்வி எனக்குள் எப்போதும் ஓடிக் கொண்டிருந்தது.

வலைப்பதிவுகளில் எழுதப்படும் பதிவுகளை Scroll செய்து பார்த்துவிட்டே பலரும் வாசிக்கவே தொடங்குகின்றனர். பதிவின் நீளம் கொஞ்சம் அதிகமாகத் தோன்றினால், “ஐயகோ, என்னைக் காப்பாற்றுங்கள்” என்றவாறு வலைப்பக்கத்தை விட்டு, வேறு பக்கமாகிச் செல்கின்றனர் என்று நான் நம்பினேன்.

இது உண்மைதானா என்று பார்த்தபோது, ஜெகொப் நீல்சன் என்கின்ற இணைய பயனர்களின் வழக்கங்கள் பற்றி ஆராயும் விற்பன்னர் 2008இல் செய்த ஆய்வின் முடிவுகள், இந்த நிலை உண்மையென உறுதிப்படுத்தியது.

ஒரு வலைப்பதிவிற்கு வரும், வாசகர் அங்குள்ள பதிவொன்றின் 18 சதவீதத்தை மட்டுமே வாசிக்கிறார். எவ்வளவுதான் வலைப்பதிவர்கள் சிரமப்பட்டு எழுதி, சரி பிழை பார்த்து, தொகுத்து வெளியிடும் பதிவுகளின் முதல் இரண்டு பந்திகள் மட்டுந்தான் பொதுவாக அநேகமானோரால் வாசிக்கப்படுகின்றன என்பதே அந்த ஆய்வின் முடிவாகவிருந்தது.

அது 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடுப்பகுதி.

இந்தப் பிரச்சனையை எப்படித் தீர்க்கலாம்? என்று யோசிக்கலானேன்.

வாசகர்கள் வாசிக்காமல் கடந்து செல்ல முதன்மைக் காரணமாக பதிவின் நீளத்தைக் கண்டு அவர்கள் பயப்படுவதைச் சொல்லலாம். ஆக, இந்தப் பயத்தை வாசகர்களிடமிருந்து போக்கி, எப்படி அவர்களை 18 சதவீதத்திற்கும் அதிகமாக வாசிக்கச் செய்யலாம் என்ற கேள்விக்கு விடை காண வேண்டும் என்பதில் தேட்டம் கொண்டேன்.

ஆக, பதிவுகள் நீளமாகத் தோன்றினாலும், இந்தப் பதிவை வாசிக்க உங்களுக்கு இவ்வளவு நேரம் தான் தேவைப்படும் என்பதை வாசகருக்கு ஆரம்பத்திலேயே சொல்லிவிடும் போது, “இரண்டு நிமிடத்துக்குள் இதை வாசிக்கலாமா?” என்று தன்னை கேட்டுக் கொண்டே, எந்த அலுப்புமில்லாமல் வாசித்து முடிக்க ஆரம்பிக்கிறார்.

ஆக, வாசிக்கத் தேவையான நேரத்தை ஒவ்வொரு பதிவின் ஆரம்பத்தில் சேர்ப்பது உசிதமானது. ஆனால், வாசிக்கத் தேவையான நேரத்தை எவ்வாறு கணித்துக் கொள்வது என்ற இன்னொரு கேள்வி எழுந்தது.

அதற்கு விடைகாண வேண்டுமென்று ஆராயத் தொடங்கினேன்.

பாடசாலையில் ஆரம்பப் பிரிவில் கல்வி கற்கும் பிள்ளையொன்று வாசிக்கும் வேகத்திற்கும், பெரியோர்கள் வாசிக்கும் வேகத்திற்கு அவ்வளவு வித்தியாசமில்லை. மிகவும் வேகமாக வாசிக்கக்கூடியவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இங்கு பொதுமைப்பாடான வாசிப்பு வேகமாக நிமிடத்திற்கு 200 சொற்கள் கருதப்படுகிறது என்பதை பல உசாத்துணைகளின் உதவி கொண்டு அறிந்து கொண்டேன்.

அப்படியாயின், எமது பதிவிலுள்ள சொற்களின் எண்ணிக்கையை அந்த நியமமான அளவைக் கொண்டு கணிப்பு செய்வதால், பதிவை வாசிக்கத் தேவையான மொத்த நேரத்தையும் கண்டு கொள்ள முடியும். அப்படியானால், இதனை கணித்துக் கொள்ள ஏதாவது இலகுவான வழியுண்டா? என்ற கேள்வி எனக்குள் தோன்றியது.

வாசிக்கத் தேவையான நேரத்தைக் கணிக்கும் வகையில் நானொரு இணைய செய்நிரலொன்றை உருவாக்கினேன். எனது கணினியில் அதனைப் பயன்படுத்தி 2010 மார்ச் மாதம் முதல் எனது பதிவுகளில் வாசிக்கத் தேவையான நேரத்தை இணைத்தேன்.

எனது பதிவுகளில் இணைக்கப்பட்டுள்ள இந்த வாசிக்கத் தேவையான நேரம் பற்றி பலரும் அவதானித்து எப்படி தாங்களும் தங்கள் பதிவுகளுக்குக் கணிப்பது என்று கேட்கலானார்கள்.

ஆக, நான் பாவிக்கின்ற இந்தச் செயலி, மற்றயவர்களுக்கும் பயன்படும் என்று எண்ணி, அதன் பயனர் இடைமுகத்தை இணையச் செயலியின் பாவனை நிமித்தம் மெருகேற்றி, அனைவரும் தங்களின் பதிவுகளை வாசிக்கத் தேவையான நேரத்தை கணிக்கக் கூடிய வகையில் செய்து எனது இணையத்தளத்தில் 2010 செப்டம்பர் 4ஆம் திகதி வெளியிட்டேன். Read-o-Meter என்று அதற்கு பெயரும் வைத்தேன்.

வெளியிட்ட நாளிலிருந்து பத்து வருடங்கள் தாண்டிய நிலையிலும், இன்றும் இந்தச் செயலி பயனளிப்பதாக உலகின் பல பாகங்களிலிருந்தும் பல்வேறுபட்ட மொழிகளைப் பேசும் வெவ்வேறு தொழில்நிலைகளின் நிமித்தம் இந்தச் செயலியை பாவிக்கும் பயனர்களிடமிருந்து வரும் ட்வீட்டுகள், மின்னஞ்சல்கள் எப்போதும் ஆனந்தம் தரும் அற்புத நிகழ்வுகள்.

Read-O-Meter, உலகளவில் கொவிட்19இன் காரணமாக ஒன்லைன் வழியான கற்பித்தல் நிலைகளில் மிகவும் அதிகமாக பயன்படுவதாக, ஆசிரியர்களும் பல்கலைக்கழக பேராசியர்களும் மின்னஞ்சல் மற்றும் ட்வீட் வழியாக சொல்லியனுப்பிய போது என் மனம் மட்டற்ற மகிழ்ச்சியை அடைந்து கொண்டது.

மாணவர்களுக்கு ஓர் ஒப்படையை வழங்கும் போது, அதனை வாசிக்க எடுக்கும் நேரத்தைக் கணித்து, அதற்குத் தேவையான மொத்த நேரத்தை வழங்கும் போது, ஒன்லைன் வழிக் கற்றலில் வினைத்திறனை உண்டாக்குகின்றது என்பதே அவர்களின் அவதானிப்பு.

Read-o-meter பற்றிய இன்னும் சில முக்கியமான நிகழ்வுத் தடங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விளைகின்றேன்.

  • 21.12.2017 ஆம் திகதி அமெரிக்காவின் பிரபல நாளிதழான The Washington Post, தனது அரசியல் ஆய்வுக் கட்டுரையில் எனது செயலி Read-o-meter ஐ (http://niram.org/read) மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டிருந்தது. (https://www.washingtonpost.com/…/to-read-the-tax-bill…/)
  • நோர்வே நாட்டின் பிரபல சஞ்சிகையான The Book இன் 2014 ஒக்டோபர் பதிப்பில் எனது செயலி Read-o-meter பற்றிய குறிப்பு வழங்கப்பட்டிருந்தது. (https://twitter.com/sainagasyda…/status/524205652491911168)
  • எனது செயலி Read-o-Meter ஆல் தாங்கள் அடையும் பயன்களை பற்றிச் ஆசிரியர்கள், பேராசியர்கள், இணைய படைப்பாக்கம் உருவாக்குநர்கள் என பலதரப்பட்ட பயனர்கள், ட்விட்டர் வழியாக சொன்னவைகளை இந்தப் பக்கத்தில் தொகுத்துள்ளேன். இங்கு காண்க. (https://www.notion.so/Read-o-Meter-What-Others-Say…)

பதிவை வாசிக்கத் தேவையான நேரத்தை கணிப்பதற்கான தகவை உண்டுபண்ணி, அதற்கான செயலியை நான் பயன்படுத்தி, மற்றவர்களோடு அவர்கள் இலவசமாகவே பயன்படுத்தும் வகையில் பகிர்ந்து கொண்டதால், அதன் பயன்கள் பல வடிவங்களிலும் நன்மை பயப்பதை எண்ணும் போது, மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒரு குறிப்பிட்ட செக்கனில், இந்தச் செயலியை சராசரியாக 10-15 பயனர்கள் பாவனை செய்வதாக Google Analytics இன் Realtime (Active Users Right now) புள்ளிவிபரம் சொல்வதும் இன்னொரு மகிழ்ச்சி.

மற்றயவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் விடயங்களை உருவாக்கும் போது, மகிழ்ச்சி மனதில் நிறைந்துவிடுகிறது.

படைப்போம். படைப்பதைப் பகிர்வோம்.

தாரிக் அஸீஸ்
02.12.2020

ஆரம்பித்தலின் தொடக்கம்

நாளும் மதிநுட்பம் மேலோங்க “புதுநுட்பம்” என்கின்ற YouTube Channelஐ 2013இல் தொடங்கியிருந்தேன். புதிய காணொளிகளை தொடர்ச்சியாக வழங்க வேண்மென்ற தேட்டம், ஒரு சில வருடங்களாகத் தொடர்ந்தது. வேறு பல காரியங்கள் எனது கவனத்தை வேண்டி நின்றதால், புதுநுட்பத்தில் புதிய காணொளிகளை தொடர்ச்சியாக உருவாக்கிச் சேர்ப்பதற்கான அவகாசம் எட்டவில்லை.

ஆனாலும், நான் ஏற்கனவே உருவாக்கிப் பதிவேற்றிய காணொளிகளை நாளாந்தம் அன்பர்கள் பார்த்து, அதற்கு நன்றி சொல்லி, கருத்துச் சொல்லி அனுப்புகின்ற செய்திகளை வாசிக்கும் போது புளகாங்கிதம் அடைவேன்.

இன்றளவில் சுமார் 28,000 Subscribers, புதுநுட்பம் YouTube Channel ஐ Subsribe செய்திருக்கிறார்கள். இந்த பதிவை எழுதும் சந்தர்ப்பம் வரை, நான் உருவாக்கிப் பதிவேற்றிய காணொளிகள் 1,440,589 (1.4 மில்லியன்) தடவை பார்வையிடப்பட்டுள்ளன. மூளைக்கு வேலை என்கின்ற ஒரு காணொளி மட்டும் கிட்டத்தட்ட 6 லட்சம் தடவைகள் பார்வையிடப்பட்டுள்ளன. இந்தப் புள்ளிவிபரங்களையும் அதனால் கொண்ட மகிழ்ச்சியையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

சரியான நேரத்திற்கும் சந்தர்ப்பத்திற்கும் காத்திருப்பது நிராசையின் நீட்சியாகும். காரியங்களைத் தொடங்கி அவற்றைச் செய்வதில் திளைத்திருந்தால், சரியான நேரமும் சந்தர்ப்பமும் தானே உருவாகும். இந்தச் சந்தர்ப்பத்தைக் காண்பவர்கள், அதிர்ஷ்டம் என்பார்கள். பரவாயில்லை. கடின உழைப்பின் வருவிளைவுதான் அதிர்ஷ்டம் என்பதை நம் தொடர் வெற்றிகள் சொல்ல வேண்டும். அதற்காக நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும்.

Aristotle சொல்வது போல், “Well begun is half done.” நாம் ஒரு விடயத்தை அடைந்துவிட அதைத் தொடங்க வேண்டும்.

படைப்பதை ஆராதிப்போம்.

நிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்

Instagram Post - 1

நிறம் வலைப்பதிவின் மூலம் உங்களைச் சந்தித்து, இந்த மாதத்தின் முதல் தினத்தோடு பதினொரு ஆண்டுகள் நிறைவாகிறது. காலச்சக்கரத்தின் வேகத்தோடு என் எண்ணங்களுக்கு வண்ணமயமான வடிவம் கொடுப்பதில் இந்த வலைப்பதிவு மிகவும் பிரதானமாகவிருந்திருக்கிறது.

வாழ்க்கை என்கின்ற அனுபவத்தை, ரசிக்கின்ற பாங்கைச் சொல்லுகின்ற ஏற்பாடாய் நிறம் வலம் வந்ததை நீங்கள் அறிவீர்கள். வாசகர்களாக நீங்கள் நிறத்தோடு காட்டுகின்ற ஆர்வம் என்னை எப்போதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

நீங்கள் அனுப்புகின்ற பின்னூட்டங்கள், மின்னஞ்சல்கள் என எல்லாவற்றையும் நான் விரும்பிப் படிப்பேன்.

எப்போதும் நான் எதை வாசிக்க விரும்புகின்றேனோ அதையே நான் எழுதுகிறேன். எனது எழுத்தில் நான் காட்டும் ஈடுபாட்டின் நீட்சிதான், வாசகர்கள் அதன் பால் கொண்டுள்ள ஈடுபாட்டிற்கும் ஆர்வத்திற்கும் ஆயுள் கொடுப்பதாக நான் நம்புகின்றேன்.

பதினொரு ஆண்டுகள் எழுத்தின் மூலமாக பயணிக்கின்ற நிலைகளில் நான் பல விடயங்களை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன்.

நான் இப்போது எதுவாக இருக்கின்றேனோ, அதனை நான் வாழ்ந்த சூழல், பழகிய மனிதர்கள், தேர்ந்தெடுத்த புத்தகங்கள் என பலதும் செதுக்கின என்றே உணர்கின்றேன்.

பரந்து விரிந்த உலகின் வியத்தகு விந்தைகளைக் கண்டு, பிரமிக்க வேண்டுமென்ற அவா என்னுள் எப்போதுமே இருப்பதுண்டு. பல நாடுகளுக்குப் பயணித்தாலும், நான் இன்னும் காணாத உலகம் விசாலமானது. அதனைக் காண வேண்டுமென்ற தேட்டம் தொடர்ச்சியாகவே இருக்கின்றது.

நான் வாழ்ந்த சூழலில் என் மீதான, என் தந்தையின் ஆதிக்கம் மிகப் பெரியது. உலகம் பற்றிய புரிதல்களை நான் பெற்றுக் கொள்ள அவர் எனக்குச் சொன்ன சம்பவங்கள், அவர் என்னை அழைத்துச் சென்ற இடங்கள், வாங்கித் தந்த புத்தகங்கள் என்பன ஆதாரமாயிருந்தன.

எனது சின்னச் சின்ன வெற்றிகளை ரசிப்பது தொட்டு, அதன் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காய் உதவுகின்ற எனது தந்தையின் அத்துணை இயல்புகளையும் நான் மனதாலே நினைவேந்துகின்றேன்.

இன்னும் நினைவிருக்கிறது, தந்தை வெளியூருக்குச் சென்று வீடு திரும்பும் போது, இனிப்புப் பண்டங்கள் வாங்கி வருகிராறோ இல்லையோ, புத்தகங்கள் வாங்கி வருவார். அதுவே, வீட்டுக்குக் கொண்டு வரும் சொத்து. இன்றும் அவரின் நினைவாக அவற்றை சேமித்து வைத்திருக்கின்றேன். தந்தை பற்றிய எனது சில நினைவுகளை இந்தப் பதிவில் நிறத்தில் ஏற்கனவே பகிர்ந்திருக்கின்றேன்.

என் தந்தையின் இயல்புகளைக் கொண்டு உருவாகின்ற அன்புத் தந்தையாக நானும் எனது மகனுக்கு இருக்க வேண்டுமென்பதில் அதிக கவனம் எடுக்கின்றேன். வாழ்க்கை அழகானது.

எழுத்து, வாழ்க்கையின் நிலை என எல்லாமுமே தொடர்ச்சியாக மாற்றங்களுக்குள்ளாகும் போதே, வசீகரத்தை கொண்டு தரும். அழகிய அனுபவங்களைச் சேர்க்கும்.

என் எழுத்திற்கு பதினொரு ஆண்டு காலமாக முகவரி கொடுத்த நிறத்திற்கும், நிறத்தோடு பயணித்த அன்புள்ளம் கொண்ட வாசகர்களாகிய உங்களுக்கும் எனது கோடி நன்றிகள்.

தொடர்ந்தும் எண்ணங்களை நிறத்தின் மூலம் பகிர்வேன். அன்புக்கு நன்றி.

தாரிக் அஸீஸ்

உன்னால் முடியுமா?

நாம் வாழ்கின்ற சூழலில் தொடர்ச்சியாக,”உன்னால் முடியாது”, “உனக்குத் தேவையில்லாதது”, “நீ அதைச் செய்ய வேண்டுமென நான் நினைக்கவில்லை”,  “அது உனக்குப் பொருந்தாது” என்பது போன்ற அழகிய அறிவுரைகள் எமக்குச் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

இந்த அழகிய அறிவுரைகளைச் சொல்பவர்கள் அந்நியர்கள் அல்லர். எம்மை அதிகம் நேசிக்கின்ற உறவினர், சுற்றத்தார் என பட்டியல் நீளும். ஆக, எம் மீது கொண்ட அன்பால், “உன்னால் இது முடியாது” என உரிமையுடன் சொல்லிவிட்டு கடந்து செல்கின்றனர்.

கடைசியாக உங்களிடம் யாராவது, “உன்னால் இது முடியும்” என ஊக்குவித்த தருணங்களை நினைவுகூற முடிகிறதா?

எம்மைச் சூழவுள்ளவர்களால், எந்தளவிற்கு நாம் ஊக்கப்படுத்தப்படுகிறோம்?

நீங்கள் கடைசியாக, யாரையாவது ஊக்குவித்த தருணங்கள் நினைவில் இருக்கிறதா? “உன்னால் முடியும்”, “உன்னை முழுமையாக நம்பு” என்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறீர்களா?

இதுதான் சரியான தருணம், உங்களைச் சூழவுள்ளவர்களை ஊக்கப்படுத்த. அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் ஆர்வங்களுக்கு ஆயுள் கொடுப்பதை நீங்கள் ஒரு சவாலாக எடுத்து செய்ய வேண்டியிருக்கிறது.

உங்கள் மாணவர்களிடம் “உங்களால் முடியும்” என்ற நம்பிக்கையை விதையுங்கள். நண்பனிடம், அவன் பல காலமாக செய்ய வேண்டுமென நினைத்துள்ள வணிக நிலை வெற்றி பெறும் என அவனை ஊக்கப்படுத்துங்கள்.

நீங்கள் ஊக்கப்படுத்துவதனால், ஒருவருடைய வாழ்க்கை அழகிய சோலையாக பரிவர்த்தனை செய்யப்படலாம். இதுதான் தருணம். உடனே சென்று, ஊக்குவிப்புப் படலத்தை விரைவுபடுத்துங்கள். நாளை எல்லோருக்கும் விடியட்டும்.

தாரிக் அஸீஸ்