முடிவிலியின் அந்தம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 23 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

சமுத்திரங்களைக் கடப்பது போன்றுதான் வாழ்க்கையை வாழ்வது பற்றிய அமைப்புகள் இருக்கின்றன. சமுத்திரங்களைக் கடக்க யாருக்குத்தான் தேவை உண்டு?

ஆனாலும், வாழ்க்கை வாழப்பட்டுக் கொண்டே போகிறது.

அடுத்த அடியில் ஆழமாயிருக்குமோ — இன்னும் கொஞ்சம் நேரத்தில் கண்ணுக்குள் கரையின் காட்சி தோன்றிடுமோ என்ற ஆர்வம் தான் சமுத்திரங்களைக் கடக்க நினைக்கையில் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான்.

நீங்கள் நினைக்காவிட்டாலும், அது அப்படியாகவே நடந்தும் விடுகிறது.

சமுத்திரங்களைக் கடத்தல் பற்றிய விஞ்ஞானம் வித்தியாசமானது. இந்த அற்புதமான அறிவியலின் நிலையை “பை” என்ற கதாபாத்திரத்தின் வழியாக எழுத்தாளர் யான் மார்டல் தனது புனைவில் சொல்லியிருப்பார்.

சமுத்திரங்களையும் கடலையும் நீங்கள் ஒன்றாக எண்ணிவிடக்கூடாது. கடல் என்பது கரையின் கருவில் தான் முகவரி கொள்கிறது.

முடிவிலியின் அந்தம்

காற்றினால் துவம்சமாகும் கடல்கள் எழுப்பும் ஒப்பாரிகளைக் கேட்டு, சமுத்திரம் கண்ணீர் வடிப்பதை நீங்கள் கண்டதுண்டா?

சமுத்திரங்கள் பற்றிய எமது அறிவும் எம்மைப் பற்றிய சமுத்திரங்களின் அறிவும் இரு வேறு காவியங்கள். இங்கு காவியங்கள் நிறைய இருப்பதால் வாசிக்கப்படாமலேயே அவை வரலாறுகள் ஆகிவிடுகின்றன.

வானம் தொடுகின்ற சமுத்திரத்தின் அந்தத்தைக் காண முடிந்த உங்களால், சமுத்திரம் தொடுகின்ற பூமியின் ஸ்பரிசத்தை உணர முடிவதில்லை. இங்கு தோன்றலில் பிழை எதுவுமில்லை. நோக்கத்திலும் நோக்குவதிலும்தான் வழு உண்டு.

ஆனாலும், பூமியின் ஸ்பரிசத்தைக் உணர்ந்த நிலையில் உங்கள் காயத்தின் வழியாக பெரும் தண்மதியின் வெளிச்சத்தைக் காண்பீர்கள். ஆழியின் ஆழத்திற்குச் சென்றாலும், உங்கள் கண்களுக்கு ஒளி தரும் ஒரு சுவடாய் அது இருக்கும்.

வெறுப்பவர்கள் வெறுக்கட்டும். தூற்றுபவர்கள் தூற்றட்டும். கத்துபவர்கள் கத்தட்டும். ஆனால் உன்னால் எப்போதும் காண முடிகின்ற அந்த நிலவின் ஒளியை மறக்காமலிருக்க வேண்டும்.

வெறுப்பின் கோபங்களை வெறுமையாக்க, கோபத்தைச் சமுத்திரத்தோடு கலந்துவிட வேண்டியிருக்கிறது. காயமில்லாதது சமுத்திரம். அதனால் அதற்கு காயமும் வராது. உன் கோபங்கள், உன் காயத்தை காயப்படுத்திட காலத்திற்கு இடம் தரமுடியாது.

கடலோடு கடுமையாய் நடக்கலாம் — உன் ஆன்மாவோடு மென்மையாக இருக்க வேண்டியிருக்கிறது. இது சமுத்திரங்களைக் கடக்கின்ற அப்பியாசம்.

உன் அடுத்த கணத்தின் ஆரம்பம், கரையாக இருக்கலாம். களிப்பின் விளைநிலமாக விரியலாம்.

ஆனாலும், நீ வெறும் கடலைக் கடந்து செல்ல ஆர்வங் கொள்ளக்கூடாது. கடல் அமைதியானது. திசைகள் தொலைத்தது — உனக்கு திசைகளைக் கண்டிட ஆதாரமாய் இருப்பது. அந்நிலையின் நீ காண்கின்ற உனக்கே உரித்தான நிலவொளியைப் பற்றி மறந்து போயிருப்பாய். இந்த வினையில் உழைத்தல் இருக்காது. போராட்டமும் நிலைக்காது.

நீ காணும் உன் நிலவொளியோடு ஒரு திசை செய்ய வேண்டும். அது உனக்கு சமுத்திரங்கள் தாண்டிச் செல்லும் வலு சேர்க்கும்.

“உன் காயமெனும் சுக்கான் சமுத்திரம் கடப்பதா அல்லது வெறும் கடலைக் கடந்து கரைகளில் அழிந்து போகும் மணல்வீடாய் விழுவதா என்பதை நீதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.” — கோபாலு சொல்கிறான்.

நேசத்தோடு சேர்ந்து திசை செய்ய ஆசிகள்.

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

மலரே என்னை மறவாதே!!

உலகத்திலே விளம்பரங்கள் எதுவுமே இல்லாமல், இயல்பாகவே பிரபல்யமாகிவரும் சொல் என்றால் அது காதல் என்பதாகவே இருக்க வேண்டும். மக்களுக்கு காதல் மீது அவ்வளவு காதல். காதல் என்ற உணர்வில் தான் அத்துணை விடயங்களும் நடந்தேறுகின்றன. காதலைப் பாடியிறாத கவிஞனே இல்லை எனலாம்.

காதல் இவ்வாறு பிரபல்யமானதற்கு காரணம், அன்பு என்கின்ற அழகிய உணர்வின் அத்திவாரமாக அது இருப்பதுதான். திரைப்படங்களின் வெற்றியின் அச்சாணியாக காதல் என்பதே ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தப்படுகிறது என்றால் மிகையில்லை. காதல் காதலிக்கப்படவே வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமேது!

காதலாவது கத்தரிக்காயாவது என்று காதலை உதறித் தள்ளுபவர்கள் கூட தம் மனதில் காதல் கோட்டைகள் பலவற்றை கட்டிக் கொண்டிருப்பார்கள். அன்பின் அர்த்தம் காதலோடு சேர்கையில், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் மலர்வனங்களின் வழியே நடந்த சுகம் கொள்கிறது. உணர்வுகளைப் புரிந்து கொள்வதாலே நாம் மன நிம்மதி கொள்ள முடியும் என நான் சொல்வேன்.

தொடர்ந்து படிக்க..

மொழிபெயர்க்க முடியாத மெளனம்

காரணங்கள் எதுவுமே இல்லாமல் வலிகள் தரும் வேதனையை நாம் தனிமையில் மட்டும் தான் உணர முடியும். தனிமைக்கு அழகு உண்டு. வலிகளை வலிமைகளாக்கும் திறனும் உண்டு. வாழ்க்கையின் அர்த்தங்களை ஆழ்மனதின் விருப்புக்களுடன் சேர்த்து அறிந்து கொள்ளச் செய்யும் ஊடகம் தான் தனிமை என நான் சொல்வேன்.

“கூட்டமாக இருக்கும் நிலையில் உன் பேச்சிலும், தனிமையாக இருக்கும் நிலையில் உன் சிந்தனையிலும் கவனமாக இரு” என பிரபல்யமான கூற்றொன்று உள்ளது. தனிமையின் வலிமையைச் சொல்ல இந்தக் கூற்று ஒன்றே போதும். தனிமை எப்போதும் வலிகளை வழங்குவதற்காக வருவதில்லை. அது வலிமைகளை பெற்றுக்கொள்வதற்காய் தொடர்கிறது.

தொடர்ந்து படிக்க…