வெயிலில் மழை தேடுகிறான்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 44 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

பேரூந்து நிலையத்தின் வாசலில் அவனின் பயணம் தொடங்குவதற்கான ஏற்பாட்டில் பேரூந்திற்காய் காத்திருந்தான்.

அவன் கண்களுக்கு எட்டிய தூரத்தில் பூமியின் மேற்பரப்பில் நீர் நிற்பதாய் தோன்றியது. சரி, அது நீங்கள் நினைப்பது போன்று கானல் நீர் தான் என்பதைப் புரிந்தும் கொண்டான்.

சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தின் மத்தியில் அவனின் எண்ணமெல்லாம், அந்தக் கானல் நீரின் நினைவுகளோடு, மழையைத் தேடிச் செல்லலாயிற்று.

“குடை பிடித்து செருப்புமிட்டு, புத்தகமும் ஏந்தி குடுகுடுவென நடந்து வரும் குழந்தைகளே கேளீர்..” என மழை பற்றி அவன் பாடசாலையில் இரண்டாம் வகுப்பில் படித்த அறிவுரைப் பாட்டும் அவன் எண்ணத்திற்குள் வந்து தொங்கிக் கொண்டிருந்தது.

மழை என்பது இயற்கையின் அற்புதமான பரிசு என அவனிடம் பல நேரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

rain

ஆனாலும், “மழை பூமியைத் தொடாதா?” என ஏங்குபவர்கள் இருந்தாலும், “ஏன் தான் இப்படி மழை பெய்யுதோ?” என அங்கலாய்ப்பவர்கள் தொகை இங்கு அதிகமாய் இருப்பதை அவனால், ஏனென்று நியாயப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

குடையைத் தாண்டி, மழை வந்து மேனி தொட்டால், குடையோடு கடிந்து கொள்வோர் இங்கு யாருமில்லை. மழையோடே கடிந்து கொள்கின்றனர். வீழ்கின்ற ஒவ்வொரு மழைத்துளிக்கும் சோக நிறம் பூசியும் விடுகின்றனர். கவலைகளை அது தொடுமிடமெல்லாம் பரப்ப வேண்டும் என்ற ஆவலின் தேவையா இது என்று அவனுக்கு தெரியவில்லை.

மழையை, துக்கம் தரும் தூறலாகவோ — கவலை கொண்டு வரும், கருமேகத்தின் பெருதியாகவோ கண்டு கொள்ள வேண்டுமென இவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்திருக்க முடியும்?

மழை கொண்ட கலையின் அழகைக் காண இங்கு யாருக்கும் புலன்கள் திறக்கவில்லையா?

நிலத்திலுள்ள விதைகளின் காதுகளுக்குள் மழை முணுமுணுக்கும் செய்தியால் தான் அதனால், விர்ரென வளர்ந்து கொள்ள முடிகிறது.

யாருக்குமே கேட்காமல், குருதி சொட்டும் இதழ்களை விரித்துக் கொள்கின்ற அந்தச் செடியின் வனப்பும் மழையின் ஸ்பரிசலில் தான் முழுமை கொள்கிறது.

கடலைத் தொட்டு, மழை முத்தமிடுகின்ற வேளையில், கடலும் தன்னை விட்டு பிரிந்த உயிரின் பகுதியொன்று தனக்குள்ளே மீண்டும் வந்து சேர்வது பற்றி அகமகிழ்ச்சி கொள்ளும். அலைகளும் மகிழ்ச்சியை ஆடிப்பாடிக் கொண்டாடிக் கொண்டிருக்கும்.

மழை பூமிக்கு வரும்போது அதன் குரலில் கூட மெல்லிய புன்னகையின் சுவாசம் தெறிக்கும். அந்தக் குரலின் தொடர்ச்சியாய் காகிதக் கப்பல் செய்து கடல் போல பரவசமடையும் சிறுவர்களின் புன்னகையும் சேர்ந்து கொள்ளும்.

மழை, பூமி தொடுகின்ற வசந்தத்தில் அவனைச் சுற்றி என்ன நடந்தாலும் அதனை அவன் நினைவுக்குள் பூட்டிக் கொண்டு காத்துக் கொள்ள முடிகிறது. மழைக்கும் நினைவுகளுக்கு அவ்வளவு பிரியமா என்று யாரும் வியந்ததுண்டோ?

மழைக்குள்ளே சென்று மூழ்கிவிட்டால், உலகின் சந்தோசப் புலன்களின் ஸ்பரிசத்தை உணரலாம் என்ற நம்பிக்கை அவனிடம் உண்டு.

மழைக்குள் இன்னும் மூழ்கிப்பார்த்தால், உழவனின் மகிழ்ச்சி அதில் விதைக்கப்பட்டிருக்கும். வரட்சியின் கூக்குரல்கள் அங்கு அடக்கப்பட்டிருக்கும். தாகம் தொலைத்த கணத்தின் சுவாசங்களின் தொகுப்புகள் மூச்செடுத்துக் கொண்டிருக்கும்.

ஒவ்வொரு மழைத்துளியுள்ளும் ஓராயிரம் கனவுகள் நிரம்பியிருக்கின்றன. ஒரு உயிருக்காகவேனும் நாம் உதவ வேண்டும் என்றே அது ஜனனம் எடுக்கிறது. நீ பிறந்தாயா? அல்லது வானத்திலிருந்து விழுந்தாயா? என்று இனி நீங்கள் மழையைப் பார்த்துக் கேட்கலாம்.

மழைத்துளிகளின் குரலை உங்களால் கேட்க முடிவது போல், மழைத்துளிகளும் உங்களின் குரலை தனக்குள்ளே சேமித்துக் கொள்கிறது. மழைக்கு உணர்வுகளைக் காவும் திறனிருக்கிறது என்பதாக அவன் எண்ணிக் கொள்கிறான்.

வீட்டுக்குச் செல்ல வேண்டிய பேரூந்து வந்துவிட்டது. அவனும் அதில் ஏறிக் கொண்டான்.

அன்று மழை பெய்யவில்லை. ஆனால், அவன் எண்ணக்கடலுக்குள் மழை பெய்யெனப் பெய்ந்து கொண்டேயிருந்தது.

(யாவும் கற்பனையல்ல)

– உதய தாரகை

குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் பதினெட்டாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

பெட்டிக்குள்ளே ஒரு பெண்

எளிமையான விடயங்களைக் கூட மிகத் துரிதமாகச் செய்யப் போய் அதில் தோல்வி காண்பவர்களை நீங்கள் கண்டிருக்கக்கூடும். சின்னச் சின்ன விடயங்களிலும் மகிழ்ச்சியை தேடி அனுபவிப்பவர்களையும், மகிழ்ச்சியிருந்த போதும் அதனை வெறுத்து, எமக்கு மகிழ்ச்சி வேண்டாமே என கோசமிடும் புதுமையானவர்களையும் நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.

வாழ்க்கையின் மகிழ்ச்சி பற்றி நிறத்தில் நிறையக் கதைத்திருக்கிறேன். மகிழ்ச்சிதான் வாழ்க்கை. மகிழ்ச்சியை தொலைத்து நாம் நிற்பதனால், வாழ்க்கையே எம்மை விட்டு தொலை தூரமாகிவிட்டது என எண்ணத் தோன்றுகிறது. நம்மைச் சுற்றியே மகிழ்ச்சி பொதிந்து கிடக்கின்றது என்ற பழமொழி போன்ற கருத்தை வலியுறுத்த எனக்கு ஆர்வமில்லை.

தொடர்ந்து படிக்க…