நிறம் – COLOUR என்பதுதான் எனது இவ்வலைப்பதிவின் பெயர்.
நிறம் என்ற பெயரை ஏன் நான் எனது வலைப்பதிவின் பெயராக வைக்க வேண்டு்ம் என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கலாம். இதோ நான் சொல்கிறேன் அதற்கு என்ன காரணமென்று.
காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நிறம் என்பது மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களிலும் பொருத்தமான வகையில் பாவிக்கப்படும் ஒரு ஊடகமென்று நான் சொல்வேன்.
உணர்வுகளைச் சொல்ல நிறம், மிகப் பெரியளவில் துணைபுரிகிறது. கலாசாரங்கள் மற்றும் சமயங்கள் ஆகிய நிலைகளில் நிறம் என்பது ஒரு குறித்த உணர்வின் இயல்பைச் சொல்லக்கூடிய குறியீடாகவே பயன்படுத்தப்படுகிறது.
நிறம் பற்றி நான் தயாரித்த இந்தக் காணொளி உங்கள் எண்ணங்களுக்கு விருந்தாகலாம். நேரம் தந்து காண்க.
மனிதனின் உணர்வுகள் மற்றும் நடத்தைகளில் நிறம் எவ்வாறு சம்மந்தப்படுகிறது என்பதைப் பற்றி கற்கும் கற்கைக்கு “நிற உளவியல்” (Colour psychology) என்று பெயர். ஆனால், இதற்கும் நிற குறியீட்டியலிற்கும் (Colour Symbolism) எவ்வித தொடர்புமில்லை என்பதே உண்மை.
ஏனென்று கேட்கிறீர்களா?
சிவப்பு நிறமானது தூரத்தில் காணப்பட்ட போதிலும் ஏனைய நிறங்களை விட அண்மித்த வகையிலேயே காட்சிப் புலனுக்குத் தோன்றும் ஆற்றல் கொண்டது. இதனால், நிறக் குறியீட்டியலி்ல் சிவப்பு நிறம் என்பது அபாயத்தை குறித்துக் காட்டும் குறியீடாகவே இனங் காணப்படுகிறது. இதனால் நிறங்களில் சிவப்பிற்கு அவ்வளவு ஆதிக்கம். ஆனால், நிற உளவியலில் ஆபத்தைக் குறிக்கும் நிறங்களாக முற்றிலும் வித்தியாசமாக மஞ்சளும் கருப்புமே காணப்படுகின்றன.
இது தான் நிற உளவியலும், நிற குறியீட்டியலும் முற்றிலும் வேறுபடுவதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும். இது ஏனைய நிறங்கள் தொடர்பிலும் வித்தியாசப்படுவது உண்மையானதே!
கலாசார ரீதியில் ஒவ்வொரு நிறத்திற்கும் வெவ்வேறான பின்னணிகள் தொடுத்துக் காட்டப்பட்டுகின்றன. மனிதன் வாழும் சூழல், மற்றும் நிலை என்பன நிறங்களுக்கு கொடுக்கப்படும் விளக்கங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும்.
“கருப்புத்தான் எனக்கு பிடித்த கலரு” என்றொரு திரையிசைப் பாடல் உள்ளதை கேட்டு இரசித்திருப்பீர்கள். கருப்பின் பெருமையை சொல்லும் பாடலது. “அலை பாயுதே” திரைப்படத்தில் ஒரு பாடல் வரும். அது “பச்சை நிறமே.. பச்சை நிறமே… இச்சையூட்டும் பச்சை நிறமே..” என்று ஆரம்பமாகும். அந்தப்பாடலில் பல நிறங்கள் இயற்கையில் காணப்படும் அமைவை கவிஞர் அலாதியாக உருவகித்திருப்பார். இயற்கையை இப்படியும் பார்க்கலாம் என்று சொல்லும் வரிகள் நிறையவே அமைந்த பாடலது.
ஏன் “RED” திரைப்படத்தில் சிவப்பின் பெருமையைச் சொல்லும் பாடலொன்று உள்ளதையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். இப்படி திரையிசையில் உணர்வு, எழுச்சி என விரியும் உணர்ச்சிகளை காட்சியாக்க நிறம் உதவுகின்றதென நான் சொல்வேன்.
“உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும்?” என்ற கேள்விக்கு நீங்கள் எப்போதாவது முகங் கொடுத்திருப்பீர்கள். அதற்கு உங்களை அறியாமலேயே அழகிய நிறம் ஒன்றை பதிலாகவும் சொல்லியிருப்பீர்கள். ( 😆 சிலவேளை அறிந்தும் சொல்லியிருப்பீர்கள்)
நிறங்கள் அதன் அமைவினால் எம்மையறியாமலேயே எமது மனத்தைத் தொட்டுக் கொள்கின்றன. ஒட்டி நிற்கின்றன.
ஒவ்வொரு நிறங்களும் வெவ்வேறு விடயங்களை குறிப்பதாக அனைவரும் ஏற்றுக் கொண்டாலும், நிறங்கள் குறித்து நிற்கும் விடயங்கள் கலாசாரத்திற்கு கலாசாரம் வித்தியாசமாகவே காணப்படுகின்றன.
எனக்குப் பிடித்த நிறம் பச்சையும், செம்மஞ்சளுமாகும் (செம்மஞ்சள் என்னா அதுதான் ஆரன்ஞ் – Orange கலருங்க 🙂 ). இந்த நிறங்கள் ஏன் பிடிக்குமென்று எனக்குத் தெரியாது. ஆனால், பிடிக்கும். நிறையவே பிடிக்கும்.
இவ்வாறாக நிறம் பற்றி நெடுகவே பேசிக் கொண்டிருக்கலாம்.
ஆக, என் உணர்வுகளை, உண்மைகளை, சம்பவங்களை, தகவல்களை, பாதித்தவைகளை என விரியும் அனைத்தையும் மெய்நிகர் உலகில்(Virtual World) அடுக்கிச் சொல்ல துணையாக நிற்கும் இந்த வலைப்பதிவிற்கு “நிறம்” என்ற பெயரைத் தவிர வேறு எப்பெயரும் பொருந்தாது என எண்ணினேன். வலைப்பதிவின் பெயர் “நிறம்” என்றாயிற்று.
நிறம் என்பது என்றுமே எமது வாழ்வில் பின்னிப்பிணைந்து விட்ட ஒரு விடயம் என்றால் யாரால்தான் மறுக்க முடியும். அன்றாடம் எத்தனை வகையான நிறங்களை சந்திக்கிறோம். அது தொடர்பில் சிந்தியுங்கள்.
இந்த நிறமும் அப்படித்தான்.
– உதய தாரகை
நல்ல முயற்சி