எண்ணம். வசந்தம். மாற்றம்.

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே…

நேற்று எனது பழைய கால நினைவுகளை மீட்டிக் கொள்ள ஓர் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதெப்படி? ஆம், எனது பாடசாலை நாட்களில் எனது சக மாணவத் தோழர்களோடு இணைந்து பல ஆக்கபூர்வமான விடயங்களைச் செய்த ஞாபகங்கள், பள்ளியை விட்டு போகும் போது, நண்பர்கள் குறிப்பிட்டு தந்த ஆட்டோகிராஃப் (Autograph) இனை பார்க்கையில் எழுந்தது.

அந்த குறிப்புகளை வாசிக்க வாசிக்க பசுமையான எண்ணங்கள் என் மனவானில் நிறைவாக தாலாட்டியது. நான் படிக்கின்ற காலத்தில் எமது மாணவர் கூழாமோடு சேர்ந்து விஞ்ஞான சஞ்சிகை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதில் மாணவத் தோழர்களால் வழங்கப்பட்ட மணியான, பெறுமதியான பல ஆக்கங்கள் இடம் பெற்றிருந்தன.

அவற்றிற்கிடையே சில சில பக்கங்களில் சிந்திப்பதற்காக என்ற குறிப்போடு பல பொன்மொழிகளும் பிரசுரமாகியது. அப்பொன்மொழிகளை இன்று வாசித்தாலும் ஒரு உத்வேகம் தானாகவே அலைபாயும். அப்பொன்மொழிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விளைகின்றேன்..

  • இரண்டு மொழிகள் தெரிந்தவர் இரண்டு மனிதர்களுக்குச் சமம்.
  • வெற்றி பெறுவேன் என்று சிந்தித்த யாரும் தோற்றதில்லை.
  • பொறாமைப்படுவது மற்றவர்களைவிட ஒருவன் தாழ்ந்த நிலையில் இருக்கின்றான் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
  • சுதந்திரமான சூழ்நிலையில்தான் அறிவு வளர முடியும்.
  • நீ பலமுள்ளவனாக இருக்க விரும்பினால், உனது பலவீனங்களைத் தெரிந்து கொள்.
  • ஒரு சம்பவம் நடந்த முடிந்த பிறகு விமர்சிப்பதில் முட்டாள் கூட புத்திசாலியாகிவிடுவான்.
  • உறுதியாக தீர்மானிக்கும் மனிதனின் சிறந்த ஆற்றலே உலகின் தலை சிறந்த அறிவாகும்.
  • பலருடைய தோல்விக்கு அறிவுக் குறைபாடு காரணமாக அமைவதில்லை. கவனக் குறைபாடே காரணமாகும்.
  • அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். சொல்பவரை விட நீங்கள் பயன்பெறக்கூடும்.
  • தெரிந்தவை எல்லாம் சொல்லாதே! கேட்டதை எல்லாம் நம்பாதே! முடிந்ததை எல்லாம் செய்யாதே!
  • புகழைப் பொருட்படுத்தாதீர்கள். ஆனால் புகழ் பெறுவதற்கு தகுதியுடையவர்களாக உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
  • உங்களிடமிருந்து சிறந்ததை உலகிற்கு கொடுங்கள். அப்படிச் செய்தால், உயர்ந்தவை அனைத்தும் உங்களுக்கு திரும்பி வந்துவிடும்.
  • மனிதன் பிறந்தது வெற்றி பெறுவதற்காகவே, தோல்வியின் காரணங்களைச் சொல்வதற்காக அல்ல.
  • நேரம் ஒரு ஆசிரியர். துரதிஷ்டவசமாக அது தன்னுடைய மாணவர்களைக் கொன்று விடுகிறது.
  • கற்காத முட்டாளை விட, கற்ற முட்டாளே மாபெரும் முட்டாள்.
  • ஒருவனை நன்றி கெட்டவன் என்று சொல்லிவிட்டால், அதற்குமேல் அவனைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.
  • தன்மானம், தன்னிறைவு, தன்னடக்கம் இம்மூன்றுமே வாழ்க்கையில் தலைசிறந்த ஆற்றலைத் தருபவை.
  • ஒரு செயலை நல்லதானாலும் கெட்டதானாலும் பலமுறை செய்து பழகிக்கொண்டவன் அதிலிருந்து தன்னை பிரித்துக்கொள்ளும் சக்தியை இழந்து விடுகின்றான்.
  • புத்தகங்கள் உங்களைப் புரிந்துகொள்ளவும், மற்றவர்களை அறிந்துகொள்ளவும் செய்யும்.

-உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்