எண்ணம். வசந்தம். மாற்றம்.

தெரியாது என்பதை தெரிந்திருத்தல்

கடந்த செவ்வாய்க்கிழமை பாதையால் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு விளம்பரப் பலகையொன்றில் ஒரு வாசகம் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். அந்த வாசகம் பல உயரிய கருத்துக்களைச் சொல்வதாக எனக்குள் தோன்றியது. ஆக, அந்த வசனத்தைக் கண்டவுடன் எனக்குள் தோன்றிய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணினேன். அது இப்பதிவாக உருவாயிற்று.

அவ்வாசகம் சிங்கள மொழியில் காணப்பட்டது. “நொதன்னா பbவ தென சிட்டீம ஞானவந்தகமக்கி” (Nodhanna Bava Dhena Sittima Gnanavanthakamaki) என்பதே அவ்வசனமாகும். உண்மையில் இதன் நேரடித் தமிழ்ப் பொருள் “தெரியாதது எதுவென தெரிந்து வைத்திருத்தலே புத்திசாலித்தனமாகும்” என்பதாகும்.

i-know-everything.jpgநாம் அன்றாடம் எதிர்நோக்கும் சிறிய ஏன் பெரியளவான சிக்கல்களுக்கும் முதன்மைக் காரணமாக அமைவது, எமக்கு எது தெரியும், எது தெரியாது என்ற தெளிவின்மையாகும் என்றே எனக்குத் தோன்றுகிறது. தெரியாதவைகள் எவை என்பதை நாம் விளங்கிக் கொள்ளும் போதே, அது பற்றி தெரிந்து கொள்ள, தெளிவடைய ஆர்வம் உண்டாகும். மாறாக, எல்லாமே தெரியும் என்ற இறுமாப்பில் இருந்தால், தெரியாதவொன்றை தெரிந்து கொள்ள எமக்கு சந்தர்ப்பங்கள் உண்டானாலும் அவை எமக்கு பயன் தராமலே போய்விடும் என்பதில் ஏது ஐயம்.

உலக விடயங்கள் நொடிக்கு நொடி மாற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டிருப்பதை நாம் யாவரும் அறிவோம். இவ்வாறு உணரப்படும் மாறுதல்கள் உடனடியாக ஏற்படுபவை மட்டுமாக இருக்காது. ஒவ்வொன்றுக்கும் தொடர்புகள் இருக்கும். இதனால், ஒரு விடயத்தில் தெளிவு பெற அவ்விடயம் தொடர்பான அத்தனை விடயங்களையும் மிகவும் கவனமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

விடயங்களைப் பற்றி கவனமாக அறிந்து, அவை பற்றி தெளிவுற எமக்கு அவ்விடயம் சார்பாக எது தெரியும், எது தெரியாது என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியந்தானே!

எமக்கு தெரியாதவைகள் எவை என்பதை தெரிந்து கொள்ளும் போதே, எமக்கு தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் எவை என்பது பற்றிய தெளிவைப் பெற முடியும்.

ஆதலால், தெரியாதவைகள் எவை என தெரிந்து கொண்டு, தெரியாதது எதுவுமில்லை என தெளிந்து கொள்வோம்.

-உதய தாரகை

“தெரியாது என்பதை தெரிந்திருத்தல்” மீது ஒரு மறுமொழி

  1. Friendly Fire Avatar
    Friendly Fire

    //தெரியாதவைகள் எவை என தெரிந்து கொண்டு, தெரியாதது எதுவுமில்லை என தெளிந்து கொள்வோம்.//

    அர்த்தமுள்ள வரிகள்! தத்துவமேதை சாக்ரடீஸ் சொன்னார், “I know nothing except the fact of my ignorance.”

    நீங்கள் எடுத்துக்கொள்ளும் விஷயங்களும் எழுதும் விதமும் ரசிக்கும்படி உள்ளது. வாழ்த்துக்கள்! 🙂

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்