எண்ணம். வசந்தம். மாற்றம்.

என்ன கொடுமை சரவணன் இது!!

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும், கணினியின் கெடுபிடி, இணையத்தின் ஆக்கிரமிப்பு என எல்லாமே மனிதனை ஒரு இயந்திரமாகவே மாற்றிப் போடும் வலிமையைப் பெற்றுள்ளது. உட்கார்ந்த இடத்திலேயே இருந்து கொண்டு உலகத்தை ஒரு முறை சுற்றிப் பார்க்கும் சாத்தியங்களை உருவாக்கிய வலிமை இணையத்திற்கு மட்டுந்தான் உண்டு.

துவிச்சக்கர வண்டிகளில் ஓடியவர்கள், இன்று துவிச்சக்கர வண்டியை பாவிப்பது அவ்வளவு நாகரிகம் இல்லை என நினைக்கும் காலம். “முறுக்க முறுக்க ஓடும் மோட்டார் சைக்கிளில்” நிறையப் பேருக்கு இன்று மோகம். கார்களும் இவற்றுக்கு இரண்டாந் தரமில்லை.

உடலை வருத்தி வேலை செய்த எமது முன்னோர்களில் காணப்படாத புதிய புதிய பெயர்களையுடைய உடலின் அசாதாரண நிலைகள் எமது தலைமுறையினரைத் தான் அதிகம் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது.

Irritable Desk Syndrome (IDS) , Mobile Phone Addiction (MPA) என தொழில்நுட்பத்தின் அதீத பாவனையால் உண்டாகும் புதிய உடலின் மற்றும் மனத்தின் அசாதாரண நிலைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். என்ன கொடுமை சரவணன் இது.

wait.gifமனிதனை இயந்திரங்கள் ஆள்கிறதா? அல்லது இயந்திரங்களை மனிதன் ஆள்கிறானா? காரணத்தோடு விடை கண்டறியப்பட வேண்டிய கேள்விகள் இவை.
இருந்தும் நான் இந்தப் பதிவில் இக்கேள்விகளுக்கு விடை காணும் பொறுப்பை உங்களிடம் விட்டு விட்டு, “மேட்டருக்கு” வர்ரேன்.

உடற்பயிற்சி பற்றி உங்களுக்கு நிறையத் தெரிந்திருக்கும். தெரிந்திருக்க வேண்டும். இன்று நான் உடற்பயிற்சிகள் பற்றி இடம்பெற்ற ஆராய்ச்சி ஒன்றின் பெறுமதியான முடிவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகின்றேன்.

மனச்சோர்வில்லாமல் எமது கருமங்களை ஆற்றுவதைச் சாத்தியப்படுத்தும் புதிய மூளைக் கலங்கள், உடற்பயிற்சி செய்வதால் எமது மூளையில் பெருகுவதாக ஓர் ஆராய்ச்சியின் பெறுபேறுகள் தெரிவிக்கின்றன. எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் போதே இந்தத் தகவல்கள் வெளியாகியு்ள்ளன.

முந்திய பல ஆராய்ச்சிகள் மூலம் உடற்பயிற்சியானது, மனச் சோர்வற்ற நிலையை உருவாக்கிறது என அறியப்பட்டிருந்தாலும், அது எதனால் ஏற்படுகிறதென இது வரையில் விஞ்ஞானிகளால் அறியப்படவில்லை.

இப்போதுதான் எலிகளைக் கொண்டு செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள், உடற்பயிற்சி செய்யும் போது, மனச்சோர்வை அகற்றும் வலிமையுடைய கலங்கள் மூளையில் உருவாகுவதாக அறியப்பட்டுள்ளது.

உடற்பயிற்சி செய்யதான் எமக்கு நேரமில்லையே என்று நீங்கள் சொல்லலாம். மனச் சோர்வு என்பது எமைவிட்டு போக வேண்டுமாயின் நாம் நேரங்களை தகுந்தாற் போல் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்யவும் நேரத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்.

நாம் தொடர்பில் நாம் கொண்டுள்ள கரிசணையிலேயே அதிகமான எம்மைப் பற்றிய விடயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

-உதய தாரகை

“என்ன கொடுமை சரவணன் இது!!” மீது ஒரு மறுமொழி

  1. Friendly Fire Avatar
    Friendly Fire

    நீங்க உடற்பயிற்சி பற்றி சொன்ன மேட்டரெல்லாம் சரிதான். ஆனால் அந்த சந்திரமுகி பேய்முழியைத் தவிர வேறு படம் கிடைக்கலையா? இன்னைக்கி ராத்திரி நான் தூங்கின மாதிரி தான்! 😳

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்