பொல்லாதவன் மற்றும் கெட்டவன்

தனுசின் பொல்லாதவன் மற்றும் சிம்புவின் கெட்டவன் ஆகிய வரவிருக்கும் திரைப்படங்கள் பற்றிக் நான் கதைக்கப் போகின்றேன் என நீங்கள் நினைத்தால் அது தவறு. ஒரு தனிநபரை பொல்லாதவனாகவோ, கெட்டவனாகவோ ஏன் நல்லவனாகவோ உருவாக்குவதில் உயிர் நாடியாகத் திகழும் ஒரு பண்புக் கூறு பற்றி ஆராயலாம் என நினைத்தேன். அது இப்பதிவாயிற்று.

மனமே எல்லாம் செய்யும் ஆயுதமாகி, அது கொண்ட இயல்புகளே மனிதனை புனிதனாக்குவதில் துணை நிற்கிறது. மனப்பாங்குகள் தான் மனிதனின் இயல்புகளைத் வெளியுலகிற்கு சொல்லும் தீபம் என்று சொல்லலாம்.

மனப்பாங்கு என்றவுடனேயே, அதன் தன்மை பற்றிய தெளிவு எம்மிடம் வந்துவிடும். நல்ல மனப்பாங்குகள் தாம் வாழ்வில் எமக்கு முன்னேற்றத்தின் துணையாக இருக்கும். ஆனாலும், இந்த மனப்பாங்குகள் ஆளுக்கு ஆள் வேறுபடுவதற்கு காரணம் என்ன? நாம் உண்மையில் பிறக்கும் போதே மனப்பாங்குகள் எம்மோடு இணைந்த நிலையில் பிறக்கின்றோமா? அல்லது, நாம் வளரும் போது மனப்பாங்குகளும் விருத்தி அடைகின்றனவா? என்ற கேள்விகள் விடை காணப்பட வேண்டிய கேள்விகளே.

மனிதனிடம் காணப்படும் நல்ல குணங்கள், செயல்கள் யாவும் அவனது மனப்பாங்கின் வெளிப்பாடு என்றால் யாரால் தான் மறுக்க முடியும். ஆக, நல்ல குணங்களை ஒருவன் பிறவிலேயே பெற்றுக் கொள்கின்றானா? அல்லது யாரும் அவனுக்கு அவற்றை தனது வாழ்வில் பெற்றுக் கொள்வதற்கான வழிகளைச் செய்து கொடுக்கின்றனரா? – தொடரும் கேள்விகள். மனப்பாங்கு ஒரு மனிதனில் நல்லதாக உருவாகி பெறுவதற்கு பல காரணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்ற விடயத்தை மட்டும்; தெளிவாகச் சொல்லி முடிக்கலாம். நாம் வளரும் போதே, எம்மோடு இணைந்தவாறு மனப்பாங்கு விருத்தி அடையத் தொடங்குகின்றன என்பதே இது தொடர்பில் ஆராயும் பேராசிரியர்களின் ஏகோபித்த முடிவாகும்.

எமது மனப்பாங்கைத் தீர்மானிக்கும் காரணிகளாக, சூழல் (Environment), அனுபவம் (Experience) மற்றும் கல்வி (Education) ஆகியன விளங்குவதாக இந்த ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இதனை ஆங்கிலத்தில் Triple Es எனக் குறிப்பிடுகின்றனர். இந்த மூன்று விடயங்களைப் பற்றியும் நாம் சற்று விரிவாகப் பார்ப்போம்.

சூழல் என்பது, நாம் வாழும் நிலைமைகளில் எம்முடன் இணைந்த நிலையில் துணைபுரியும் கூறுகள் என வரையறுக்கலாம். நான் சூழலை வரையறுத்த தன்மை புரியாமல் இருக்கிறதா? சூழல் என்பது பின்வரும் கூறுகளைக் கொண்டிருக்கும்.

• வீடு: நேர் மற்றும் மறையான செல்வாக்குகள்
• பாடசாலை: சமவயதுப் பிள்ளைகளின் அழுத்தங்கள்
• வேலை: ஒத்துழைக்கும் அல்லது விமர்சிக்கும் மேற்பார்வையாளர்
• ஊடகம்: தொலைக்காட்சி, செய்தித்தாள், சஞ்சிகைகள், வானொலி, திரைப்படங்கள்
• கலாசார பின்னணி
• பாரம்பரியமும் நம்பிக்கைகளும்
• சமூகச் சூழல்
• அரசியல் சூழல்

இந்த ஒவ்வொரு சூழலியல் கூறும் ஒரு குறிப்பிட்ட கலாசாரத்தை உருவாக்கிச் செல்லும் தன்மையுடையது, வீடு, அலுவலகம், நாடு என எல்லா இடங்களும் ஒவ்வொரு கலாசாரத்தைக் கொண்டுள்ளன.

நீங்கள் இதனை உங்கள் அன்றாட வாழ்க்கையின் நிலைகளின் போது, சுலபமாகவே அவதானித்துக் கொள்ள முடியும். நீங்கள் சந்திக்கும் ஒரு நபர் நல்ல இனிமையாக இருக்கும் அதேவேளை, நீங்கள் சந்திக்கும் இன்னொரு நபர் இதற்கு முற்றிலும் மாற்றமாக இருப்பதை அவதானித்திருப்பீர்கள். ஏன், சில வேளைகளில், நீங்கள் செல்லும் ஒரு வீட்டில் உள்ள பிள்ளைகள் மற்றும் பெற்றோர் யாவரும் மிகவும் இங்கிதமாக நடந்து கொள்ளும் அதேவேளை, நீங்கள் செல்லும் இன்னொரு வீட்டில் உள்ளவர்களோ, வெறுப்பேற்படுத்தும் வகையில் நாய், பூனை போன்று சண்டை பிடித்துக் கொள்வதையும் நீங்கள் சிலவேளை அவதானித்திருப்பீர்கள். இவைகளெல்லாம் ஒவ்வொரு இடத்திலும் வௌ;வேறு கலாசார சூழல் நிலவுகிறது என்பதை எடுத்துச் சொல்லும் மிகச் சிறந்த உதாரணங்கள் தாம்.

அந்நியன் திரைப்படத்தில் வரும் “அம்பி” என்ற கதாபாத்திரம் நினைவிருக்கிறதா? நேர்மையான மனிதன், ஊழல்கள் நிறைந்த கலாசாரச் சூழலில், தனது விருப்புக்களை நடைமுறைப்படுத்த அனுபவிக்கும் கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை. இதேபோலவே, முறைகேடான விடயங்களில் ஈடுபடுவனுக்கு, நேர்மையான ஆட்சிச் சூழல் என்பது, துன்பங்களைத் தரும் நரகமாகவே தோன்றும். இதனால்தான், ஊழல்கள் நிறைந்த சூழலில் நேர்மையான எண்ணங்கள் மற்றும் செயல்கள் என்பன வெளிச்சத்திற்கு வராமலே போய்விடுகின்றன. இங்கு ஊழல்களே நேர்மை என்றாகிவிட்ட துர்ப்பாக்கிய நிலைதான் காணப்படும்.

சூழலிற்கு சூழல் அவன் வாழும் நிலைகள் தான், மனிதனின் மனப்பாங்கைத் தீர்மானிப்பதாலும், மனப்பாங்கின் வெளிப்பாட்டில் சூழலின் இயல்பு புடம் போடப்படுவதாலும், மனித மனப்பாங்குகள் தாம் உலகச் சூழலின் முக்கிய கூறாக விளங்குகின்றதென்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

இதனால், நாம் வாழும் சூழலை மதிப்பிட்டுக் கொள்ள வேண்டிய தகுந்த தருணம் இதுதான். நாம் வாழும் சூழலும், நாம் பிறருக்காக உருவாக்கிக் கொடுக்கும் சூழல் நிலைமைகள் பற்றியும் மிகவும் உணர்வுபூர்வமாக ஆய்ந்தறிதல் அவசியமானதொன்றே.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நபர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றால் ஏற்படும் அனுபவங்கள் எமது நடத்தைகளில் மாற்றங்களை உண்டு பண்ணக்கூடிய வலிமை பெற்றவைகளாகும். ஒரு நபரோடு நல்ல அனுபவங்களை நாம் பெற்றிருந்திருந்தால், அவர் தொடர்பில் எமக்குள் உருவாகும் மனப்பாங்கும் நன்மையானதாகவே அமையும் என்பது வெளிப்படைதான்.

அனுபவங்கள் தான் ஒருவனை சமூகத்திற்கு பொருத்தமான வகையில் உருவாக்க துணைபுரிகிறது. “அனுபவங்கள் நல்ல ஆசான்” என சும்மாவா சொன்னார்கள்? இந்த அனுபவங்கள் பற்றி ஜேம்ஸ் அல்லன் எனும் தத்துவ அறிஞர் சொல்லும் கூற்றுகள் அழுத்தமானவை.

“மனிதன் என்பவன் அனுபவங்களினாலான ஓர் உயிர்ப்பிராணியாகவே உள்ளான். இவ்விதம் அவன் இருப்பதை அவனால் மாற்றியமைக்க இயலாது. ஆனாலும், அவனால் தன்னுடைய பழக்க வழக்கங்களை மாற்றியமைக்க முடியும். அவனால் தன்னுடைய இயற்கையை முற்றிலும் மாற்றியமைக்க முடியாது. ஆனால், அவனால் தன்னை இயற்கைச் சட்டங்களுக்கு ஏற்றவகையில் மாற்றிக் கொள்ள முடியும்”

என அவர் குறிப்பிடுகின்றார்.

“பூமியின் ஈர்ப்பு சக்தி பற்றிய விதியை யாரும் மாற்றியமைக்க விரும்புவதில்லை. எல்லோரும் அந்த விதிக்கேற்ற வகையில் நடந்து கொள்கின்றனர். அதற்கு கீழ்படிந்து நடந்து கொள்கிறார்களே தவிர, அதனை புறக்கணித்து நடக்கவில்லை. அந்த விதி தங்களுக்கேற்ற வகையில் மாறிக் கொள்ளுமென நினைத்து யாரும் சுவரில் மோதிக் கொள்வதுமில்லை. மலையின் உச்சியிலிருந்து கீழே குதிப்பதுமில்லை. எவ்வாறு மனிதனால் புவியீர்ப்பு விதியை மீறிச் செல்ல முடியாதோ அவ்வாறே அவனது அனுபவங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை மீறிச் செயலாற்ற முடியாது. ஆனால், பழக்க வழக்கங்கள் மற்றும் அனுபவங்களை அவனுக்கு ஏற்ற வகையில் ஏற்படுத்திக் கொள்ள முடியும்”

என அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

எத்துணை உண்மைகள் பொதிந்த வைர வரிகளை அவை. நாம் அனுபவங்களின் விளைவால் உருவாகிய, பழக்க வழக்கங்களின் மொத்த வடிவமாகவே உலகில் இருக்கிறோம். நாம் அனுபவங்கள் பெறுதல் தொடர்பிலும், அதன் மூலம் பழக்க வழக்கங்களை விருத்தி செய்தல் தொடர்பிலும் அதிகம் கரிசணை கொள்தல் தேவையானதே!

அடுத்து எமது மனப்பாங்கின் தன்மையில் ஆதிக்கம் செலுத்தும் காரணியான கல்வி தொடர்பில் சற்று ஆராய்வோம். கல்வி என்பது ஏட்டிலிருந்து பெறப்படும் அறிவை மட்டும் குறிக்காது என்பது முதல் விடயமாகும். முறை சாராக்கல்வியும் முக்கியமான கல்வியே. வெற்றியைத் தரக்கூடிய ஆளுமைகளை எம்மிடம் வளர்க்கும் மிகப்பெரிய விடயத்தை கல்வியால் மட்டுந்தான் செய்ய முடியும்.

நாம் தரவுகளையும் தகவல்களையும் ஒன்று சேர்த்து அதில் அறிவு எனும் சாரத்தை பெற ஆர்வங் கொண்டுள்ளோம். இந்த ஆர்வத்தின் உயரிய நிலைகளில் எமக்குக் கிடைப்பது தான் மனப்பாங்கின் புடம் போடப்பட்ட நிலை. கல்வியைக் கற்றவர்களிடத்தில் நல்ல குணம் குடி கொண்டுவிடும். ஆக, நல்ல குணம் குடிகொள்ளாத நிலையில், எவரும் கல்வி கற்றவராகக் கருதப்பட முடியாது எனலாம்.

எமது மனப்பாங்குகளை நாம் எமது வாழ்க்கையின் இலட்சியப் பயணத்தில் உச்சத்தை அடைவதற்காக இருக்கும் ஊக்கியாக எண்ணி, அவற்றை புடம் போட வழியமைத்துக் கொள்ள வேண்டும். அதையே யுகமும் எம்மிடம் எதிர்பார்க்கின்றது.

-உதய தாரகை

1 thought on “பொல்லாதவன் மற்றும் கெட்டவன்

  1. நம்மால் இயற்கையை மாற்ற முடியாது, ஆனால் இயற்கைக்கேற்ப நம்மை நாம் மாற்றிக்கொள்ள முடியும் என்பது மிகவும் சரியான கருத்து. சூழ்நிலைகள் மனிதனின் மனப்பாங்கை தீர்மானிக்கிறது என்பதை விட சூழ்நிலை எவ்வாறாயினும் அதை தமக்கு சாதகமாக, ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ளும் திறமையே ஒரு மனிதனுடைய ஆளுமையை தீர்மானிக்கிறது என்று கருதுகிறேன். அத்திறமை எங்கிருந்து வருகிறது? Genes இல் இருந்தா, அல்லது முற்பிறவி, இப்பிறவி வினைகளிலிருந்தா? பின்னதே சரி என்பது என் தனிப்பட்ட கருத்து.

    முறைசாராக் கல்வி முக்கியமானது என்பதும் உண்மை. இவ்விஷயத்தில் (சரியான வகையில் பயன்படுத்தினால்) இணையம் ஒரு வரப்பிரசாதம் எனலாம்.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s