எண்ணம். வசந்தம். மாற்றம்.

காலை உயர்த்தியதைக் கவனித்தீர்களா?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 3 நிமிடங்களும் 59 செக்கன்களும் தேவைப்படும்.)

கடந்த இரு வாரங்களாக இடம் பெற்ற இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் மிகத்துரிதமாக நடைபெற்று முடிந்து, வெற்றியணியும் தேர்வு செய்தாகிவிட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெற்ற இறுதிப் போட்டி மொத்த போட்டியினதும் சூட்டை இரசிகர்களுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் வழங்கியதெனலாம்.

இளம் வீரர்களால் நிரம்பிய இரு அணிகளும் இறுதிப்போட்டியில் ஆடிய விதம், 1996 ஆம் ஆண்டின் வில்ஸ் உலகக் கிண்ண போட்டியின் இறுதிப் போட்டியை ஞாபகப்படுத்தியதாக எனது நண்பர் ஒருவர் போட்டி பற்றிக் கதைக்கும் போது குறிப்பிட்டார். உண்மையில் 1996 இற்குப் பிறகு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகள் எதுவும் அவ்வளவு சோபிக்கவில்லை என்றே கூறவேண்டும்.

நடந்து முடிந்த இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளின் வேகம், அப்போட்டிகள் தொடர்பில் மக்கள் காட்டிய ஆர்வம் என்பன வியக்கத்தக்க வகையில் அமைந்திருந்தது. கிரிக்கெட்டின் எதிர்காலம் இருபது 20 போட்டிகள் என முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான டொனி கிரேக் கடந்த வாரம் Cricinfo எனும் இணையத்தளத்தில் குறிப்பிட்டிருந்தது எனக்கு இப்போது ஞாபகம் வருகிறது. உண்மையில் 50 ஓவர்களைக் கொண்ட போட்டியை ஒரு நாள் பூராக நடத்துவதென்பது யாருக்குத்தான் சலிப்பைத் தராது?

சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற உலகக் கிண்ண போட்டிகளை கண்டு களிக்க வந்தவர்களின் தொகை மிகவும் குறைவானதாகும். ஆனால், இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டிகளைக் கண்டு கொள்ள வந்தவர்களின் எண்ணிக்கையோ விசாலமானதாகும். தென்னாபிரிக்க அரங்குகள் யாவும் நிரம்பி வழிந்ததையே அவதானிக்க முடிந்தது. இந்த நிலைமை 50 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நாள் போட்டிகள் பற்றி பரிசீலிக்க வேண்டிய தருவாயை உண்டுபண்ணியுள்ளது என்றே குறிப்பிட வேண்டும்.

சரி.. சரி.. என்னது ரொம்பத்தான் கிரிக்கெட் பற்றி விமர்சிக்கிறீங்க? அப்படியென்று நீங்கள் எண்ணுவது போல் தோனுகிறது. விஷயத்திற்கு வர்ரேன். அப்போ.. இன்னமும் விசயம் ஆரம்பிக்கலையா? என்று மட்டும் கேட்காதீர்கள்.

அபசகுனமான எண்

நீங்கள் அநேகமாக கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கும் போது, ‘நெல்சன்’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த சொல்லின் அர்த்தம் என்னவென்று தெரியுமா? என்று உங்களிடம் கேட்டால், நீங்கள் 111 போன்று ஒரே இலக்கங்கள் தொடர்ச்சியாக வந்தால் அதுவே நெல்சன் எண் என்று மிகத் தெளிவாகக் நீங்கள் கூறக்கூடும். மேலும், கிரிக்கெட் விளையாட்டின் போது, அணியின் ஓட்ட எண்ணிக்கையானது, நெல்சன் எண்ணாக அமையும் பட்சத்தில் ஆட்டமிழப்புக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும் என்றும் நீங்கள் சொல்லுவீர்கள். நீங்கள் சொன்ன விடயங்கள் எல்லாம் உண்மைதான். ஆனால், 111 என்பது போல் வரும் எண்ணுக்கு எவ்வாறு நெல்சன் எனப்பெயர் வந்தது என்று உங்களுக்கு தெரியுமா?

பிரித்தானியாவின் புகழ்பெற்ற கடற்படை வீரராகத் திகழ்ந்த நெல்சன் என்ற வீரர் தனது இறுதிக்காலங்களில் ஒரு கண், ஒரு கை மற்றும் ஒரு கால் ஆகியவற்றை மட்டுமே கொண்டிருந்தார். இதனால், இந்த ஒன்று எனும் எண்களைச் சேர்த்து வரும் 111 என்ற எண் நெல்சன் இலக்கமாக ஆகியதாம். அதுவே, 222 என விரியும் ஏனைய இலக்கங்களும் நெல்சனாக அடையாளம் காணப்படக் காரணமாகியதாம்.

wicket_cricket.jpgஆனாலும், கிரிக்கெட் விளையாட்டில் களத்தில் நாட்டப்பட்டிருக்கும் மூன்று விக்கெட் பொல்லுகளிலும் மேலே சிறிய Bail எனப்படும் இரு துண்டுகள் காணப்படும். இது நீக்கப்பட்டால் ஆட்டமிழப்பு என்று அர்த்தப்படும். இங்கு Bail கள் நீக்கப்படுகையில் விக்கட்டினது தோற்றம் 111 என்றவாறே காட்சியளிக்கும். அதனாலேயே கிரிக்கெட்டில் 111 போன்ற நெல்சன் இலக்கங்கள் ஆட்டமிழப்பை ஏற்படுத்தக்கூடிய துரதிஷ்டமான எண்கள் என்ற மூடநம்பிக்கை நிலவி வருகின்றது.

பூச்சியத்திற்கு அதிர்ஷ்டமில்லை

நடந்து முடிந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தின் பல போட்டிகளிலும் நெல்சன் இலக்கத்தின் போது, ஆட்டமிழப்புகள் இடம்பெற்றதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். ஏன் இறுதிப்போட்டியிலும் நெல்சன் இலக்கமான 111 ஆனது, அணியின் ஓட்ட எண்ணிக்கையாக அமைந்த போது ஆட்டமிழப்பு இடம் பெற்றது. இதனால், அதிகமான ஆட்டமிழப்புகள் நெல்சன் இலக்க ஓட்டங்களின் போதே இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற நியாயமான நம்பிக்கை நிறையப் பேரிடம் காணப்படுகிறது. இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டுமென The Cricketer எனும் சஞ்சிகை 1990 ஆம் ஆண்டு ஒரு ஆய்வினை நடாத்தியது.

ஆய்வின் முடிவுகள் என்ன சொல்லியிருக்கும் என எண்ணுகிறீர்கள்?

ஆய்வு முடிவுகளின் படி, ஓட்ட எண்ணிக்கை நெல்சன் எண்ணாக அமைந்த நிலையில் ஏற்பட்டுள்ள ஆட்டமிழப்புகளிலும் பார்க்க ஓட்ட எண்ணிக்கை பூச்சியமாக இருந்த போதே அதிகமான ஆட்டமிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, பூச்சியம் தான் கிரிக்கெட் தொடர்பில் அபசகுணமான எண் என எண்ணத் தோன்றுகிறது.

ஒரேயொரு முட்டாள் நான்தான்

இது இப்படியிருக்க, கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்தில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நடுவர் ஒருவர் அடிக்கடி தனது காலை உயர்த்தியதை நீங்கள் அவதானித்துள்ளீர்களா? நீங்கள் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் ஆர்வமுள்ளவராயிருந்தால் கட்டாயம் அந்த நடுவரை அவதானித்திருப்பீர்கள்.

அந்த நடுவரின் முழுப்பெயர் David Robert Shepherd, அவர் டேவிட் செப்பர்ட் என்றே உலக கிரிக்கெட் அரங்கில் மிகப் பிரசித்தமான நடுவராகத் திகழ்ந்தவர். இப்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார். நான் இப்படி நடுவரைப் பற்றிச் சொல்லுகையில், உங்கள் மனக்கண் முன்னே டேவிட் செப்பர்ட்டினது, தொப்பை கொண்ட நிலையிலுள்ள வெள்ளை தொப்பி அணிந்த உருவம் இப்போது வந்திருக்கும். இவருக்கும் நெல்சன் எண்ணுக்கும் நிறையத் தொடர்புண்டு.

இவர் தனது சிறுபராயத்தில் கிராமத்தில் கிரிக்கெட் விளையாடுகின்ற போது, 111 என்ற எண் என்பது விளையாடுபவர்களின் பார்வையில் அதிர்ஷ்டமில்லாத எண்ணாகவே காணப்பட்டதாம். இவ்வாறு 111 மற்றும் அதன் மடங்குகளான 222, 333 போன்ற எண்களை நெல்சன் எண்களாக அடையாளப்படுத்திக் கொண்ட செப்பர்டடும் மற்றும் அவரின் நண்பர்களும் இந்த எண் ஓட்ட எண்ணிக்கையாக உள்ள நிலையில் ஏதும் விரும்பத்தகாத ஆட்டமிழப்புகள் நடந்திடக் கூடாதென்பதற்காக ஒரு உத்தியைக் கையாண்டனராம்.

அது என்ன உத்தி? என்றுதானே நீங்கள் கண் புருவம் விரிந்த நிலையில் என்னைப் பார்த்துக் கேட்கிறீர்கள்.

நெல்சன் எண்களில் ஆட்டமிழப்புகள் நடைபெறக்கூடாது என்றால் எமது கால்களை பூமியின் தொடுகையில் இருந்தும் எடுத்தலே பொருத்தமான ஒரே முன்னெடுப்பாகும் என்று அவர்கள் முடிவு செய்தனராம். விளையாடமல் ஆட்ட அரங்கினுள் இருப்பவர்கள் காலை பூமியிலிருந்து உயர்த்திக் கொள்ளுவார்களாம். மைதானத்தில் ஆட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்போர், பூமியிலிருந்து காலின் தொடுகையை நீக்கும் பொருட்டு, காலை உயரத்துவார்களாம் அல்லது துள்ளிக் குதிப்பார்களாம்.

அந்தப் பழக்கம்தான் சர்வதேச அரங்கிலும் டேவிட் செப்பர்ட், நெல்சன் இலக்கம் ஓட்ட எண்ணிக்கையாக வரும் நிலையில், காலை உயர்த்தி துள்ளிக் குதிப்பதற்கு காரணமானது. இந்த விடயத்தை அதிகமானோர் அவ்வளவாக அவதானிக்கவில்லை. அவதானித்தவர்களும் அதற்கான காரணத்தை அறிந்திருக்கவில்லை.

umpire-jumping-nelson.jpg

ஆனாலும், சீதோஷன நிலைகளுக்கேற்பவும் தனது கால்களை உயர்த்தி தான் உடற்பயிற்சியும் செய்து கொள்வதாகவும் நடுவர் தனது குறிப்பொன்றில் குறிப்பிடுகின்றார். மைதானத்தில் இறுக்கமான நிலைமைகள் இருக்கும் சந்தர்ப்பத்தில் நெல்சன் எண் ஓட்ட எண்ணிக்கையாக வந்த போதிலும் அதற்கான தனது காலை உயர்த்தி துள்ளிக் குதிக்கும் “பரிகாரத்தை” தன்னால் செய்ய முடியாமல் போனதாகவும் அவர் மேலும் நினைவு கூறுகிறார்.

“இப்படியொரு மூடநம்பிக்கையுடைய எந்த முட்டாள் நடுவரையும் என்னால் ஞாபகப்படுத்த முடியவில்லை. ஒருவேளை அந்த ஒரேயொரு முட்டாள் நான்தானோ??!!” என்று தனது சிறு வயதுப் பழக்கமாக வந்த மூடநம்பிக்கை பற்றி கருத்துத் தெரிவிக்கையில் டேவிட் செப்பர்ட் குறிப்பிடுகின்றார்.

என்னதான் இருந்தாலும், நெல்சன் எண்ணுக்குப் பின்னால் இவ்வளவு சம்பவங்களா? என்று நீங்கள் சொல்ல வருகிறீர்களா?

“Eleventy-one” – என்ன புரியவில்லையா?!

111 என்ற எண்ணின் சில முக்கியத்துவங்களைப் பற்றி நாம் இப்போது சுருக்கமாகக் கண்டு கொள்வோம்.

2004 ஆம் ஆண்டு ஆவர்த்தன அட்டவணையில் ஒரு மாற்றம் இடம் பெற்றது. அதாவது, 111 ஆம் இலக்க அணுவெண்ணுடைய மூலகமாக unununium (Uuu) என்ற தற்காலிக பெயரினால் அழைக்கப்பட்ட மூலகத்தின் பெயர் roentgenium (Rg) என்ற நிரந்தரப் பெயராக மாற்றம் செய்யப்பட்டது.

நியூஸிலாந்தில் அவசர தொலைபேசி இலக்கம் என்ன தெரியுமா? ஆமா, அந்த 111 என்ற நெல்சன் எண்தான். எமது நாட்டில் அவசர சேவை தொலைபேசி இலக்கம் 119 என்பதாகும்.

The Lord of the Rings என்ற திரைப்படத்தில் “Eleventy-one” என்ற சொல்லொன்று பாவிக்கப்படும். அது 111 என்ற வயதைக் குறிப்பிட பயன்படுத்தப்படும் சொல்லாகும்.

போதும்.. போதும்.. என்று நீங்கள் சொல்வது போல் தோனுகிறது. நீங்களும் நெல்சன் எண் தொடர்பில் உங்கள் கருத்துக்களையும் அனுபவங்களையும் நிறத்துடன் பகிர்ந்து கொள்ளலாமே!

-உதய தாரகை

“காலை உயர்த்தியதைக் கவனித்தீர்களா?” மீது ஒரு மறுமொழி

  1. hairath Avatar
    hairath

    வாசித்தேன், ரசித்தேன்

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்