எண்ணம். வசந்தம். மாற்றம்.

இப்போது மாற்றிவிட்டார்களா?

“மொழி” திரைப்படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களும் அருமையிலும் அருமையானவை தான். “ஆழக் கண்ணால் தமிழ் சொன்னாலே.. ஜாடை கொண்டு பாசை சொன்னாலே..” என்று தொடங்கி முடியும் ஒரு சிறிய பாடலை நீங்கள் அந்தத் திரைப்படத்தில் கேட்டிருப்பீர்கள். கண்களால் பேசும் திறமையை மிகவும் எளிமையான சொற்களால் கவிதையாக்கிச் சொல்லியிருப்பார் கவிஞர். “மெளனமே உன்னிடம் அந்த மெளனம் தானே அழகு..” என்று வரும் பாடலும் மெளனத்தின் வலிமையைச் சொல்லும்.

என்ன உதய தாரகை! “அழகிய தமிழ் மகன்” திரை விமர்சனம் எழுத வேண்டிய நேரத்தில் “மொழி” திரைப்படம் பற்றி என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது? என்றல்லவா என்னைப் பார்த்துக் கேட்கிறீர்கள்… ஆனால், இங்கு எந்தத் திரைப்படம் பற்றியும் நான் விமர்சிக்கப் போவதில்லை. மௌனம் – பேச்சு – கேட்டல் என்பனவற்றைப் பற்றி நீங்கள் காணாத கோணத்திலிருந்து பேசலாம் என நினைக்கிறேன்.

மௌனம் என்பது மகத்துவமானது தான். காகம் எந்நேரமும் கரைவதால் அதன் ஒலிக்கு மதிப்பே கிடையாது. ஆனால், வசந்த காலத்தில் மட்டும் கூவும் குயில்களின் ஓசைக்கு நிறைய மதிப்புண்டு. இனிமை உண்டு. பிரான்ஸிய மொழியில் காணப்படும் சொற்களின் கருத்துக்கள் மிகவும் நீளமானவை. சுருக்கமாகக் கதைக்க வேண்டுமென்பதை எண்ணி இப்படி சொற்களுக்கு அர்த்தங்களை நீட்டி பிரஞ்சுக் காரன் வைத்துள்ளான். எனவெல்லாம் நான் ஒரு நூலில் வாசித்த ஞாபகமுண்டு.

15.jpg

மௌனம் என்பது எமது கேட்டலுடன் தொடர்புடையதாகவே நான் கருதுகிறேன். கேட்டலின் உயர்நிலைதான் செவிமடுத்தல் என்பதாகும். செவிமடுத்தல் என்பதில் கண்களும் காதுகளும் ஒருமிக்க சங்கமிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதனால் செவிமடுத்தல் என்பது கேட்டல் என்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. செவிமடுத்தல் என்பது ஒருவர் சொல்லும் விடயத்தை கேட்பதாக மட்டுமே அமையாது. மாறாக, அவர் சொல்கின்ற விடயங்களை புரிந்து கொண்டு அதற்கேற்ப எமது நடவடிக்கைகளை அல்லது செயற்பாடுகளை அல்லது பதில்களை வழங்குதல் என்று பொருள் கொள்ளப்படல் வேண்டும்.

Gerald M. Hopkins என்ற அறிஞர் “காதுகளால் வாசியுங்கள் (Read with your ears)” என்று செவிமடுத்தலின் முக்கியத்துவத்தை ஒரு வரியிலேயே சொல்லியிருப்பார். ஒரு பூந்தோட்டத்தில் மரங்களிடையே எந்நேரமும் ஓசை பிறந்து கொண்டேயிருக்கும். அந்த ஓசையைக் கேட்பதற்கு, எமது மனம் அமைதியான நிலையில் இருப்பது அவசியமல்லவா? செவிமடுத்தல் மனதில் அமைதி நிலவும் போதே சாத்தியமாகும்.

நானறிந்த வகையில் தொடர்பாடலில் ஏற்படும் சிக்கல்களிற்கு முக்கிய காரணம் சரியான முறையில் விடயங்களை செவிமடுக்காத நிலையே ஆகும். எல்லோரும் யார் பேசுவதையும் கேட்கின்றோம். ஆனால் செவிமடுப்பதில்லை. செவிமடுப்பதில் மூலமாக நிறைய விடயங்களைக் கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். எமது நண்பர்கள், உறவினர்கள் என விரியும் பாசத்தால் பிணைக்கப்பட்ட தொடரில் இணைப்புகளின் வலிமை என்றுமே சந்தோசத்தோடு இறுகி இருப்பதற்கு செவிமடுத்தல் எனும் கலை பற்றி தெரிந்திருக்க வேண்டியது கட்டாயமானதே!

கேட்டல் என்பது வெறுமனே ஒலிகளை கேட்பதுதான். அவ்வொலிகளை வேறுபிரித்தறியும் வாய்ப்பு செவிமடுத்தலின் போது மட்டுமே தோன்றும். ஒருவர் சொல்லும் விடயத்தை எமது காட்சிப் புலனுக்குள் சிந்தனா சக்தியால் கொண்டுவருவதற்கே செவிமடுத்தல் உதவி செய்யும். செவிமடுத்தல் என்பது கவனம், அவதானம் ஆகியவற்றை வேண்டி நிற்கும் செயல் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். செவிமடுத்தலுக்கு முயற்சி தேவை. கேட்டலுக்கு எதுவுமே தேவையில்லை. இடது காதால் வாங்கி வலது காதால் விடும் செய்தி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். கேட்டல் என்பதன் வரைபிலக்கணமும் அதுவாகத்தான் இருக்க முடியும்.

ஒருவர் கதைப்பதை செவிமடுக்கின்ற போது, அதனைப் பற்றி நாம் முடிவுகளை எடுத்துக் கொண்டாலும் அவற்றை எம்முடனேயே வைத்துக் கொள்ளுதல் நலமானதென்றே நான் நம்புகிறேன். இதன்போதே கதைப்பவருக்கும் அவரின் கருத்துக்களை சொல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். அவரும் சுதந்திரத்தை உணரக்கூடியதாக இருக்கும். கதைப்பவரின் கருத்துக்கள் பற்றி நீங்கள் எடுக்கும் தீர்மானத்தை திடீரென அவருக்கு சொன்னால், அவர் கதைக்க வந்த விடயத்தை மறந்தே போய்விடுவார் என்பது உறுதியான நிலையே.

கதைப்பதை செவிமடுக்கும் போதே, கதைப்பவர் சொல்ல வரும் விடயத்தில் உள்ள உணர்ச்சி பூர்வமான விடயங்களை புரிந்து கொள்ள முடியும். உணர்வுகளோடு ஒன்றிப் போகும் போதே, ஒருவரின் வலியோ, சந்தோசமோ எமக்கு நன்றாகப் புரியத் தொடங்கும். இந்தப் புரிதலில் தான் கதைப்பவருக்கு எம்மாலான உதவிகளைச் செய்ய முடியும். உபதேசங்களைச் செய்ய முடியும்.

உங்களைப் பார்த்து யாரும் ஏதாவதொரு விடயத்தை சொல்வார்களானால், அவர்கள் நீங்கள் கேட்பதற்காக ஒரு போதும் அதனைச் சொல்ல மாட்டார்கள். நீங்கள் அவர்கள் சொல்வதை செவிமடுக்க வேண்டுமென்றே எதிர்பார்ப்பார்கள்.

செவிமடுத்தலின் போதே உணர்வுகளின் பகிர்வு நடக்கும். உயிரின் வலிமை புரியத் தொடங்கும். வலிகளைக் கலையும் தீர்வுகள் தோன்றும். சுகங்களைக் காணும் வானம் தெரியும்.

😳 என்ன உதய தாரகை இப்படி தத்துவங்களா சொல்லிக் கொண்டிருக்கிறீங்க…?? என்று தானே நீங்கள் நினைக்கிறீர்கள். இவை எதுவுமே தத்துவங்களாக முடியாது. வாழ்க்கையின் ஓட்டத்தில் நாம் காணும் நிலைகள்.

செவிமடுத்தல் என்பதன் அடிப்படையான அடையாளம் மௌனம் என்பதுதான். மௌனத்தின் மூலம் செவிமடுப்பவர் தான் கேட்கும் விடயத்தோடு ஒட்டிப் போக முடியும். செவிமடுக்கும் விடயங்கள் சில வேளைகளில் வார்த்தைகளையே சூறையாடிச் சென்று விடக்கூடும். இது உணர்வுகளின் ஒன்றிப்பால் தோன்றும் நிலையென்றே நான் உணர்கின்றேன். ஆனாலும், நாம் செவிமடுக்கும் விடயங்களுக்கு உடனடியாகவே பதில் நடவடிக்கை சொல்ல வேண்டுமென்றே எமது மனம் விரும்பும். இது ஆக்கபூர்வமான எண்ணமாக இருக்க முடியாது.

வார்த்தைகள் என்பது சில வேளைகளில் தேவைதான். ஆனாலும், மௌனம் என்ற நிலை கதைப்பவருக்கு தான் சொல்ல வந்த விடயங்களை தெளிவாக மனம் விட்டு சொல்ல வழி ஏற்படுத்திக் கொடுக்கும். எமது மௌனமே, கதைப்பவருக்கு அவர் சொல்வதை நாம் செவிமடுக்கின்றோம் என்ற நம்பிக்கையையும், அமைதியையும் கொடுக்கும். இதுவே, அவர் சொல்ல நினைத்ததை தெளிவாகச் சொல்லி முடிக்க வழியேற்படுத்தும்.

21.jpg

நாம் மற்றவர்கள் கதைப்பதை நன்றாகச் செவிமடுக்கப் பழகும் போதே, எம்மை நாமே செவிமடுப்பது தொடர்பில் இயல்பாகவே தேர்ச்சி பெறுவோம். எம்மை நாம் செவிமடுக்கும் போதே எமக்குள் பொதிந்துள்ள அற்புத சக்திகளை நாம் கண்டு கொள்ள முடியும்.

செவிமடுத்தலில் நாம் தெளிவாக இருந்தால் பின்வரும் சந்தர்ப்பம் ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட முடியாது. அதாவது, ஒருவர் ஒரு விடயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார். அதனைக் குறுக்கிட்டு இன்னொருவர் பேசத் தொடங்குவார். இப்படியான சந்தர்ப்பங்களை நீங்கள் கண்டிருக்கக்கூடும். அல்லது, நீங்கள் சந்திந்திருக்கக்கூடும். ஏன் சிலவேளைகளில், குறுக்கிட்டு பேசும் நபராகக்கூட நீங்கள் இருந்திருக்கக்கூடும்.

ஒருவர் கதைத்து முடிக்க முன்னரையே அவர் சொல்ல வரும் விடயத்தை எம்மால் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?

செவிமடுத்தல் என்பது கிரகித்தல் என்ற பண்பை தன்னகம் கொண்ட பொறிமுறை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். யாரும் கதைக்கத் தொடங்கினால், அவர் கதைத்து முடிந்ததன் பின்னர் அவர் சொன்னவற்றை செவிமடுத்து அதற்கான உங்கள் கருத்துக்களைச் சொல்வது பொருத்தமானதே!

என்னிடம் அண்மையில் எனது நண்பரொருவர் ஒரு கதை சொன்னார். அந்தக் கதை இந்தவிடத்தில் ரொம்ப பொருந்தும் போலவே இருக்கிறது. சொல்கிறேன். கேட்கலாமா?

நண்பர்கள் பலரும் ஒன்று கூடி, ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வறுமையொழிப்பு தொடர்பான செயலமர்வொன்றை கிராமத்தின் பிரிவொன்றில் நடத்த தீர்மானித்துள்ளனர். பின்னர் அதனை அக்கிராமத்தின் பிரிவில் நடத்த அனுமதி பெறும் பொருட்டு அந்த கிராமப் பிரிவின் தலைவரைச் சந்தித்துள்ளனர்.

நண்பர் தலைவரை நோக்கி, “ஐயா, நாங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம்..” என்று தொடங்கியதுதான் மாத்திரம், உடனே குறுக்கிட்ட தலைவர் “ஆம். தெரியும். கொண்டலீஸா றைஸ்” என்றுள்ளார். நண்பருக்கோ என்னது, அமெரிக்க ராஜாங்கச் செயலாளரை இவர் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் என்கிறாரே என்று எண்ணி, “இல்லை. பான் கீ மூன் என்பவர்தான்” என்று தொடர்ந்த போது, அதனையும் குறுக்கிட்ட தலைவர், “இப்போது மாற்றிவிட்டார்களா?” என்று கேட்டாராம்.

பார்த்தீர்களா? செவிமடுத்தலில் தலைவர் இல்லை. வெறுமனே நண்பர் சொன்னதை கேட்டுக் கொண்டு மட்டுமே இருந்திருக்கிறார்.

இவ்வாறு மற்றவர் சொல்லவந்த விடயத்தை சொல்ல விடாமல் குறுக்கறுத்து விடயங்களைச் சொல்வது செவிமடுத்தலின் பண்பாக அமையவே அமையாது. மற்றவர் பேச்சை முடிக்கும் மட்டும் செவிமடுத்து (கேட்டிருந்து என்று இங்கு நான் சொல்லவில்லை) அதன் பின்னர் எமது கருத்தைக் கதைப்பதற்கு நிறையப் பொறுமை தேவைதான். பொறுமை என்பது நல்ல குணம். குணங்களில் நல்ல குணத்தை எமக்குள் கொண்டிருத்தல் எவ்வளவு பாக்கியம்.

செவிமடுத்தல் என்பது ஒரு கலையாகும். அதனைக் கற்றுணர்ந்து செயலாற்றுதல் எமக்கு அவசியம் தேவையான நல்ல குணமாகும். வாழ்தலை வாசிப்பதற்கு மற்றவர்களின் கருத்துக்களையும், எமது ஆழ்மனத்தின் கருத்துக்களையும் செவிமடுத்தல் அவசியமான செயற்பாடே!

– உதய தாரகை

“இப்போது மாற்றிவிட்டார்களா?” மீது ஒரு மறுமொழி

  1. kalyanakamala Avatar
    kalyanakamala

    மெளனம் ஒரு அழகிய மொழிதான். இதில் அணுவளவும் சந்தேகமே வேண்டாம். மெளனத்தால் வென்றவர்களின் எண்ணிக்கை பேசி ஜெயித்தவர்களைவிட அதிகம்தான்.

    ஆனால் பேசுகிறவர்களை அதிகம் மதிக்கும் பழக்கம் என்னவோ சிலர் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. காதலிலும், பாசத்திலும், அன்பிலும், துக்கத்திலும், மகிழ்ச்சியிலும் மெளனமே சிறந்த மொழி.

    சண்டை போட வேண்டுமானால் பேசுவது உதவலாம். இதற்கு மெளனமாயிருந்தே எதிர்ப்பைத் தெரிவிப்பது சிறப்பாயிருக்கும்.

    பேசுவதை விட செவிமடுப்பது மிக நல்ல பழக்கம்.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்