எண்ணம். வசந்தம். மாற்றம்.

அத்தி பூத்தாற் போல்…

நிலவு, நிலா, தண்மதி எனவெல்லாம் பெயர் கொண்டு அழைக்கப்படும், சந்திரனுக்கு நிறைய மதிப்புண்டு என்றே எண்ணத் தோன்றுகிறது. நிலவைப் பாடாத கவிஞரே இருக்க முடியாது. சங்க கால இலக்கியங்களில் கூட நிலவைப் பற்றி நிறைய கவிஞர்கள் பாடியுள்ளனர். பெண்களின் அழகை வெளிப்படுத்தும் பொருட்டு நிலா உவமையாகக் கொள்ளப்பட்டுள்ளது. “பிறைநுதல்” கொண்ட இளவரசி வந்தாள், என்று பெண்ணின் நெற்றியின் அழகை நிலவுடன் சேர்த்து, வியந்து பாடியிருப்பார் புகழேந்திப் புலவர்.

என்னது… ஒரே நிலாவைப் பற்றிக் கதைக்கிறது. என்னதான் நீங்க சொல்லப்போறீங்க..? என்றல்லவா நீங்கள் கேட்கிறீர்கள். கொஞ்சம் வித்தியாசமானது, ஆனால் சுவாரஸ்யமாக இருக்குமென நம்புகிறேன்.

சந்திரனைப் பற்றி கவிஞர்கள் வியந்து பாடுவதில் ஆயிரம் பன்மைத்துவம் இருக்கும். அல்பர்ட் ஐன்ஸ்டைனிடம் போய், கவிதாயினியான அவர் மனைவி, பெண்ணின் முகத்தை நிலவிற்கு ஒப்பிட்டுப் பாடி, ஐன்ஸ்டைனிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொண்ட விபரீதத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள். விஞ்ஞானியின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி அது. இருக்கட்டும்.

1999 ஆம் ஆண்டு ஆகாயத்தில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா?

ஆகாயத்தில் அதிசயமா? சந்திரனைச் சம்பந்தப்படுத்தி யோசித்துப் பாருங்கள்…

ஏதாவது உங்கள் நினைவுகளில் வந்து உயிர்த்தெழுந்து கொண்டதா? ஆம். அதேதான். (நாங்க அதிசயம் என்னவென்று யோசித்துக் கொண்டிருக்கிறோம் அதுக்குள்ள இவரு வந்து அதேதான் இதேதான் என்டுகிட்டு!! 🙂 )

1999 ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்கள் ஒவ்வொன்றிலும் இரு தடவை முழுநிலவு தோன்றிய நிலை அவதானிக்கப்பட்டது ஞாபகமிருக்கிறதா? பாடசாலையில் படிக்கும் காலத்தில் நான் இதை ஆர்வத்தோடு அவதானித்த ஞாபகம் எனக்கு இன்னும்
இருக்கிறது.

ஒரு மாதத்தில ரெண்டு தரம் பௌர்ணமி வந்தால் அதற்கு நாங்க என்ன செய்ய? இதுல என்ன அதிசயம் இருக்கிறது? என்றெல்லாம் கேட்கமாட்டீங்களா?

அரிதாக நடக்கும் விடயங்களைச் சொல்வதற்காக தமிழில் அதிகளவில் பயன்படுத்தப்படும் உவமைத் தொடராக “அத்தி பூத்தாற் போல்…” என்பதைக் குறிப்பிடலாம்.

என்ன உதய தாரகை ஒரே குழப்பமாயிருக்குது!!

அவசரப்படப்படாது…

எதையும் நல்லா பிளா..ன் பண்ணித்தான் சொல்லோனும்.

அரிதாக நடக்கும் விடயங்களை ஆங்கிலத்தில் “Once in a blue moon” என்ற உவமைத் தொடர் மூலம் சொல்லுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தமிழில் அத்திப் பூவைப் போல, ஆங்கிலத்தில் நீல நிலா பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய நிலா, குளிர் நிலா, வெளிச்ச நிலா என்றெல்லாம் கேட்டிருக்கிறோம். அதென்ன நீல நிலா?

blue-moon.jpg

நீல நிறத்தில் வரும் நிலவுக்குத்தான் நீல நிலா என்று சொல்வார்களோ? என்றுதான் நான் தரம் பத்து படிக்கும் வரை எண்ணியிருந்தேன். பின்னர்தான் அறிந்தேன், நீல நிலாவிற்குப் பின்னால் நிறைய கதைகள் உண்டென்பதை. அறிந்தவற்றை ஆவணப்படுத்தி வைத்தேன். இப்போது உங்களோடு பகிர்கின்றேன்.

இந்தப் பகிர்வை நான் செய்வதற்கு காரணமாகியது, இம்மாத Reader’s Digest சஞ்சிகையின் Facts of Life” பகுதியில் பிரசுரமாயிருந்த ஆக்கம் தான். அது ஒரு தகவல் தொடர்பில் இடம்பெற்ற வரலாற்றுத் தவறொன்றை சுட்டிக்காட்டியது. (சொல்லவந்த விடயத்தை சொல்லாம… சுத்தி வளைச்சிகிட்டு… Straight ஆ Matter க்கு வாங்க உதய தாரகை!)

ஆனாலும் நாங்க நெனச்சதிலயும் எதுவுமே தப்பில்ல பாருங்க. ஏன் தெரியுமா?

நீல நிறத்தில் நிலவைப் பார்க்க முடியுமென்பது அரிதான நிகழ்வுதான். ஆனாலும், வளிமண்டலத்தில் தேங்கும் புகை மற்றும் தூசு துணிக்கைகள் காரணமாக நிலா நீல நிறத்தில் தோன்றக்கூடிய வாய்ப்புண்டு. அப்படி நடந்துமிருக்கிறது.

1950 இல் சுவீடனிலும், 1951 இல் கனடாவிலும் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயின் மூலமாக நிலா நீலமாகத் தோன்றியுள்ளது. ஏன் அது மட்டுமா? 1883 ஆம் ஆண்டு Krakatoa எரிமலை வெடித்ததன் காரணமாக, சுமார் இரண்டு வருடத்திற்கு நிலா நீல நிறமாகத் தோன்றியுள்ளது. அப்போ நாங்க நெனச்சதும் சரிதானே! (போதும்… போதும்… ஏடா கூடாமா எதையோ நெனக்கிறது. பிறகு அதற்கு Justification வேற சொல்றது. ரொம்ப கொடுமையாப் போச்சுப்பா…)

நீல நிலா என்பதற்கு இரண்டு விளக்கங்கள் சொல்லப்படுகிறது. அநேகமானோர் அறிந்துள்ள விளக்கமாக, ஒரு குறிப்பிட்ட நாட்காட்டி மாதமொன்றில் தோன்றக்கூடிய இரண்டாவது முழு நிலவிற்கே நீல நிலா என்பதனைச் சொல்லலாம். ஒரு மாதத்தில் இரு பௌர்ணமி நிலா தோன்றுவதற்கு, முதலில் தோன்றும் பௌர்ணமி மாதத்தின் ஆரம்ப நிலையில் காணப்படுதல் அவசியமாகும். ஏனெனில், ஒரு முழு நிலவு தோன்றி அடுத்த முழு நிலவு தோன்றுவதற்கு இடையிலான கால இடைவெளி 29.5 நாட்களாகும்.

அது சரி, இந்த வருடமும் ஒரு நீல நிலா தோன்றியதே அவதானித்தீர்களா?

ஆம் நீங்கள் நினைப்பது சரிதான். கடந்த மே மாதம் 2ஆம் திகதியும், 31 ஆம் திகதியும் முழுநிலா வானில் தோன்றியதை அறிந்திருப்பீர்கள். இதில் 31 ஆம் திகதி தோன்றிய நிலவை Blue Moon அதாவது நீல நிலா என்று அழைப்பர். (எங்களுக்கு தெரியுமென்டு சொன்னீங்களே அதற்கு ரொம்ப நன்றிங்கோ… 🙂 )

இப்படியொரு விளக்கம் இருக்க, நீல நிலா என்பதற்கு புராதன காலத்தில் சொல்லப்பட்ட விளக்கமொன்றும் உள்ளது. இந்த விளக்கமானது, 1819 ஆம் ஆண்டளவில் வெளியான Maine Farmer’s Almanac எனும் சஞ்சிகையில் பதிவாகியுள்ளது. அதாவது, நான்கு முழுநிலவைக் கொண்ட பருவமொன்றில் தோன்றும் மூன்றாவது நிலவே நீல நிலா என்பதாகுமென அது விளக்கம் சொல்கிறது.

நான்கு முழுநிலவைக் கொண்ட பருவமொன்றை எவ்வாறு இனங்காண்பது என்ற கேள்வி எழுகிறதல்லவா? இது மிகவும் சங்கீரணமான பதிலையுடைய கேள்வியாகும். நாட்காட்டியுடன் பல கணித்தல்களைச் செய்ததன் பின்னரே இதற்கான விடையைக் கண்டறியலாம்.

ஒரு வருடத்தில் 12 முழுநிலவு தோன்றுவதற்கு பதிலாக 13 முழுநிலவு அரிதாகத் தோன்றக்கூடும். கிறிஸ்துவர்களின் ஈஸ்டர் நிகழ்வைக் குறிப்பதற்கு முழு நிலவின் வருகைகளே கருத்தில் கொள்ளப்படுகிறது. இங்கு தோன்றும் 12 முழுநிலவும் வெவ்வேறான பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றன. மேலதிகமாக வரும் 13 ஆவது, முழு நிலவிற்கு பெயரில்லை. அதற்கே நீல நிலா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதோ என்று சிலர் கருதுகின்றார்கள்.

1946 ஆம் நீல நிலா பற்றி எழுதிய எழுத்தாளர், ஒரு மாதத்தில் இரு முழுநிலவு தோன்றும் போது, அதில் இரண்டாவதாகத் தோன்றும் நிலவே நீல நிலா என்று விளக்கம் சொல்லியுள்ளார். இது தவறான செய்தியாகுமென பல ஆராய்ச்சியாளர்கள் இப்போது ஆய்ந்து அறிந்துள்ளனர்.

1829 இல் இருந்து 1937 ஆம் ஆண்டு வரை வெளியான Maine Farmer’s Almanac சஞ்சிகையிலுள்ள தகவல்களை ஆராய்ந்த Sky & Telescope சஞ்சிகை நீல நிலா என்பது ஒரு மாதத்தில் தோன்றும் இரு முழு நிலவின் இரண்டாவது முழு நிலவுக்கு சொல்லும் பெயரல்ல என முடிவு செய்துள்ளனர். இதனை ஆதாரப்படுத்தும் பதிவை இங்கே நீங்கள் காணலாம்.

blue2.jpg

நான்கு முழுநிலவைக் கொண்ட பருவமொன்றில் தோன்றும் மூன்றாவது நிலவே, நீல நிலாவாகும் என விளக்கம் சொல்லப்படுவதே உண்மையானது என இப்போது சொல்லப்படுகிறது.

எதிர்வரும் இருபது ஆண்டுகளில் இரு விளக்கங்களிற்கு ஏற்பவும் 17 தடவை நீல நிலா தோன்றுமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. 2011, 2014 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் எந்தவிதமான நீல நிலாவும் தோன்றாது எனச் சொல்லப்படுகிறது.

ஒரு மாதத்தில் இரு முழுநிலவு தோன்றுவதால், இரண்டாவதாகத் தோன்றும் நிலவை நீல நிலா எனச் சொல்வது எனப்பார்த்தால், பெப்ரவரி மாதத்தை தவிர ஏனைய அனைத்து மாதத்திலும், நீல நிலா தோன்றுவதற்கான வாய்ப்புள்ளது. ஏனெனில், பெப்ரவரி மாதம் சந்திரச் சுழற்சிக்கான காலத்தை விட குறுகிய காலத்தைக் கொண்டுள்ளது.

ஆனாலும், புராதன விளக்கத்தின் படி, நீல நிலா நான்கு நிலாவைக் கொண்ட பருவமொன்றில் தோன்றும் மூன்றாவது நிலா என அமைந்தால், பெப்ரவரி, மே, ஆகஸ்ட் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களிலேயே நீல நிலா தோன்றுவதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.

ஒரு வருடத்தில் நீல நிலா இரு தடவை தோன்றும் நிலையை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். அதுதான் 1999 ஆம் ஆண்டு இடம்பெற்றதாக நான் முதலில் கூறியிருந்தேனே! இவ்வாறு ஒரு வருடத்தில் இரு தடவை நீல நிலா தோன்றுவது, அண்ணளவாக 19 வருடங்களுக்கு ஒரு தடவை நிகழுமென அறியப்பட்டுள்ளது.

பெப்ரவரி மாதம் குறுகிய நாட்களைக் கொண்டுள்ளதால், ஒரு வருடத்தில் இரு தடவை தோன்றும் நீல நிலா ஜனவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களிலேயே அநேகமாக எப்போதும் தோன்றும்.

அரிதாக நிகழும் சம்பவங்களுக்கு blue moon என்ற சொற்கள் பாவிக்கப்படுவதற்கு முதலில் ஆங்கிலத்தில் இது வட்டார வழக்காக இருந்து வந்திருக்கிறது. Oxford English Dictionary இன் படி, 1528 ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட ஒரு பழமொழியிலிருந்தே நீல நிலா என்பதன் பாவனை முதன் முறையாக அறியப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

If they say the moon is blue,
We must believe that it is true.

என்பதே அந்தப் பழமொழியாகும். “நிலவை நீலமென அவர்கள் சொன்னால், அதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும்” என்கிறது அந்தப் பழமொழி. இந்தப் பழமொழி எதனைக் குறித்து நிற்கிறது என உங்களால் சொல்ல முடியுமா?

அத்தோடு, 19 ஆம் ஆண்டில், until a blue moon என்ற சொற்றொடர், “ஒரு போதும் இல்லை” என்பதை உணர்த்தும் பொருட்டு பாவிக்கப்பட்டுள்ளது. பின்னரே, once in a blue moon என்ற சொற்றொடர் “மிகவும் அரிதாக” என்ற கருத்தைக் கொண்ட நிலையில் பாவிக்கப்படத் தொடங்கியுள்ளது.

சபா.. இவ்வளவு பெரிய பதிவையே நிலா பற்றி அதுவும் நீல நிலா பற்றி சொல்லியிருக்கிறீங்களே… இப்படியெல்லாமா நீளமாக பதிவெழுதுவது? என்று கேட்கிறீங்களா?

ஆமாங்க, Once in a blue moon அதுதாங்க அத்தி பூத்தாற் போல இப்படி நீளமான பதிவுகளையும் போடத்தானே வேணும். இதெல்லாம் கண்டுக்கப்படாது. வாசிக்கோனும். 😆

நீல நிலா பற்றி நீங்கள் அறிந்தவற்றையும் நிறத்தோடு பகிர்ந்து கொள்ளலாமே.

– உதய தாரகை

“அத்தி பூத்தாற் போல்…” அதற்கு 2 மறுமொழிகள்

  1. kalyanakamala Avatar
    kalyanakamala

    இந்த நீலநிலா பதிப்பு அரிதான ஒன்று. வெட்டியாக எதுவும் எழுதி காலத்தை தள்ளாமல் ஒரு தகவலை எழுதியிருக்கிறீர்கள்.

    இந்த blue moon விஷயம் நம்ம இந்திய நாட்டுக்கு ஒன்றும் புதிய சமாசாரம் இல்லை. கீழை நாடுகளுக்கே புதிதாக இருக்காது. ஏனெனில், வானியலில் முதலில் பெரிய விஷயங்களைக் கண்டவர்கள் நமது கீழைய நாட்டுக்காரர்கள் தான். அது நாம் எல்லோரும் அறிந்ததுதான்.

    இந்த இரண்டு பெளர்ணமி அல்லது இரண்டு அமாவாசை வருவது நமது நாட்டில் கவனிக்கப்படும் விஷயம். இரண்டு அமாவாசை ஒரு தமிழ் மாதத்திற்குள் வந்தால் அந்த மாதத்தை மலை மாதம் என்பார்கள்.

    மலை மாதத்தில் கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்த மாட்டார்கள். இந்தத் தகவல் எல்லோருக்கும் தெரியுமா?

  2. உதய தாரகை Avatar
    உதய தாரகை

    நன்றி கமலா அம்மா,

    நல்லதொரு தகவலைச் சொன்னீர்கள். எனக்கு இப்போதுதான் இந்தத் தகவல் தெரியும்.

    தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

    உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    நன்றிகள் பல..

    – உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்